வானவில் பூக்கள்!


இது வானவில் பூக்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம்!  

வானவில்போல திடீரெனத் தோன்றி, எழில் வர்ணம் காட்டி, இதயத்தை வருடி, இரசனையைத் தூண்டி, இரசிக்கும்போதே மாய்ந்துபோனதால் இவை, வானவில் பூக்கள்!

 வண்டின் கரம் பிடித்து உடன் வாருங்கள்! வாசம் வீசும் அந்த சோலைக்குள் ஓர் உலா போய் வரலாம்! அங்கே ஒரு ‘பூ’ உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கு, உங்களை வரவேற்கும் ஆர்வத்தால் பூத்திருக்கு….! 

   

 =======================================

சில்வண்டின்,

வானவில் பூக்கள்

                                [சங்கமி ‘பூ’]

 =======================================



டிரிங்ங்ங்! டிரிங்ங்!


வழக்கமா அலறும் தொலைபேசி அன்னிக்கு அதிசயமா சிணுங்குது.


எடுத்தேன்.


"ஹலோ?" 


 'ஹல்ல்ல்லோ!" 

            - ங்குது ஒரு பெண்குரல். அந்தக் குரல் எனக்கு பழக்கப்பட்ட குரல்தான். அதனால ரொம்ப குழம்பாம அது யாரோட குரலுங்கறத கண்டுபிடிச்சிட்டேன்.


"ஏய், நீயா?"

 

"நானேதான்!"

 

"இது என்ன வேற நம்பர்ல இருந்து வருது?"

 

"ஆமா! இனிமே இதுதான் என் நம்பர். நான் செல்போன் வாங்கிட்டேனே!"

 

"அட, எப்போ வாங்கினே, என்கிட்டே சொல்லவே இல்லையே?"

 

"அதை சொல்றதுக்குதானே கூப்பிட்டிருக்கேன். இதோ, இப்பதான் அஞ்சு நிமிஷம் கூட முழுசா ஆகல. இன்னும் கடைய விட்டு வெளியே கூட போகல. முதல் கால் உங்களுக்குதான்."


"ம்..., வெரிகுட்!"

 

இந்த public phoneஐ தேடி இனிமே அலையவேண்டாம் பாருங்க, தவிர தோணும்போது உடனே கூப்பிடலாம். எப்படி, நாங்களும் modern ஆயிட்டோம்ல!”

 

Congratulations! புதிய ஃபோனுக்கு இனிய வாழ்த்துக்கள்!”

 

"நன்றி, நன்றி! ஆமா ஒரு சந்தேகம், டெலிபோனுக்கு தொலைபேசின்னு சொல்லலாம், செல்போனுக்கு தமிழ்ல என்ன சொல்லறது? செல்பேசியா?!"

 

"அப்படியும் சொல்லறாங்க, கைபேசியின்னும் சொல்லறாங்க. அத்தனை ஆராய்ச்சி எதுக்கு, நீ அதை 'செல்' ன்னு சொல்லாம 'செல்லு' ன்னு, ‘லு’ சேத்து சொல்லு, அது தமிழ்ச்சுவையை கலந்து அந்த வார்த்தையை தமிழாக்கிடும்!"

 

"ஆஹா அற்புதம்! இப்படியெல்லாம் யோசிக்க உங்களால மட்டும்தான் முடியும். ஆனா நண்பரே, பொதுவா ஒரு வார்த்தையில ‘லு’ சேத்தா அது தெலுகு சுவையத்தானே கலக்கும்? அது எப்படி தமிழ்ச்சுவையை கூட்டும்?"

 

அதானே?! அது எப்படி தமிழ்ச்சுவையை கூட்டும்? சரி விடுங்க, நான் ஏதோ உலகத்துல உலவிட்டிருக்கற ஒரு கருத்த கடன் வாங்கி சொல்லிட்டேன். இதுக்கெல்லாம் இப்படி எதிர் கேள்வி கேட்டு திணற அடிச்சா எப்படி?

 

"ஹஹ்ஹா! சரி நண்பரே, இந்த நம்பரை சேமித்து வைக்கவும்!"


"சேமித்து வைக்கணுமா? ஏனம்மா? வட்டி ஏதும் கிட்டுமா?"


"Save பண்ணறதுக்கு தமிழ்ல சேமிக்கறதுன்னுதானே சொல்வாங்க?"

 

"கிழிஞ்சது கிருஷ்ணகிரி! Save பண்ணறதைத்தான் இப்படி சொன்னீங்களா தோழி?”

 

ஹிஹி! ஆமா நண்பரே, அதத்தான் தமிழ்ல சொல்ல நெனச்சேன். தப்பாயிடுச்சா?”

 

தெரியலயே! பணம் காசை சேமிக்க சொல்லலாம், செல்போன் நம்பரை சேமிக்கச் சொல்லறது சரியான வார்த்தைப் பிரயோகமான்னு தெரியலீங்களே!"

 

"அப்போ நம்பரை எப்படி தமிழ்ல Save பண்றது?"

 

"கவலைப்படாதீங்க, நான் உங்க எண்ணை பதிஞ்சுக்கறேன்!?"

 

"ஆங், அது! ஆனா நண்பரே, இந்த களேபரங்களுக்கிடையிலே கிருஷ்ணகிரி ஏன் கிழிஞ்சது?"

 

"என்னது?"

 

"இல்ல, நீங்க ‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி’ நு சொன்னீங்களே?"

 

ஓஹ் அதுவா? அது ஏன்னு தெரியல, கொஞ்ச காலமாவே எதுக்கெடுத்தாலும் இந்த கிருஷ்ணகிரிதான் கிழிஞ்சிட்டிருக்கு. ஒருவேளை, 'கி' ங்கற எழுத்துல ஆரம்பிக்கற பிரபலமான ஊர் அதுமட்டும்தானோ? அதுனாலதான் ‘கி’னா வுக்கு ‘கி’யன்னா பொருந்திப்போக இப்படி காலங்காலமா கிழிஞ்சிட்டிருக்கோ?"

 

"யார் சொன்னா? எங்க சிங்கார சென்னைல கூட ‘கி' -ல ஆரம்பிக்கற பிரபலமான ஊர் இருக்கே, ‘கிண்டி’!"

 

"அஹ்! அதுவும் சரிதான். அப்போ உன் சௌகரியத்துக்கு இனிமேல் நீ அதையே கிழிக்கலாம்."

 

"கரெக்ட்! கிழிஞ்சது கிண்டி!"

 

"ஐயய்யோ! அம்மா தாயே, போதுமம்மா விட்டிடு! உன் தமிழ் கிட்டத்தட்ட அபாய எல்லையைத் தொட்டிடுச்சு. இத்தோட சமரசம் செஞ்சுக்குவோம்!

 

"சரி. எனக்கும் நேரம் ஆச்சு. நம்பர பதிஞ்சுக்கோங்க. இனிமே என்னை நீங்க எப்ப வேணும்னாலும் இந்த நம்பர்ல reach பண்ணலாம்!"

 

ஆகட்டும் தோழி!!"

 

"ம்.... வெரிகுட்!" – ன்னு சொல்லி, அந்த அழகான குரல் தொலைபேசித் தொடர்பைத் துண்டிக்குது.


ஃபோனை வச்சிட்ட பிறகும் அந்த உரையாடல் உண்டாக்கியிருந்த உற்சாகம் மனசுலயிருந்து உதிராமாத்தான் இருக்கு. அந்தக் குரலோடு பேசத் துவங்கினப்போ பூத்த புன்முறுவல் கூட இன்னும் மறையல.

 

அலறும் என் தொலைபேசி கூட சிணுங்கிடும் விதம் அந்தக் குரல் பதம், அது உண்டாக்கிப்போகும் உணர்வுல அத்தனை இதம்!

 

இந்த உலகத்துல நடக்குற ஒவ்வொரு விஷயமும் ஏதோ விதத்துல ஒன்னுக்கொன்னு தொடர்புடையதாமே? இப்போ வந்துச்சுச்சே இந்த தொலைபேசி அழைப்புக்கு கூட ஒரு முன் தொடர்பு இருக்கு. இன்னிக்கு வந்த இந்த ஃபோன் காலுக்கு ஆதாரமா அமஞ்சது அன்னிக்கு ஒரு நாள் எனக்கு வந்த ஃபோன் கால்!




கிர்ர்ர்ர்ர்! கிர்ர்ர்ர்ர்ர்!"

-- றுன்னு வைப்ரேட் மோடுல இருந்த என் செல்ஃபோன் சிறு சிறு அதிர்வுகளை உண்டாக்கி என்னை கிளுகிளுப்பாக்குது!

 

Weekdays எல்லாம் Weekend -க்காய் ஏங்கித்தவிக்கும் பழக்கம் இந்த அமெரிக்காவுக்கு வந்த பொறவுதான் துவங்குச்சு. இந்தியால வேலை பாத்திட்டு இருந்தப்பல்லாம் ஞாயித்துக்கிழமை வாரதுக்கு அப்படியொன்னும் காத்துக் கெடந்ததா எனக்கு ஞாபகம் இல்ல.

 

சனி, ஞாயிறு ரெண்டு நாள் லீவுங்கற உற்சாகம் வியாழக்கிழமை இராத்திரியே மனச குதூகலமாக்க ஆரம்பிச்சிடும். வெள்ளிக்கிழமை பெரும்பாலும் office-ல வேலை relaxed ஆகத்தான் இருக்கும். மதியானம் lunch-க்கு எந்த restaurant க்கு போகாலாங்கற discussion தான் top priority-ல ஓடும்!

 

Buffet இருக்கும் restaurant ல வயிறு முட்ட ஒரு பிடி பிடிச்சிட்டு ஆபீஸுக்கு வந்து சீட்ல சாஞ்சா, சாயங்காலம் வரைக்கும் உண்ட மயக்கமும், தூக்க கிறக்கமும் சேந்து ஒருமாதிரி மப்பும் மந்தாரமுமா இருக்கும். வேலையும் நத்தை வேகத்துலதான் நகரும்.

 

அன்னிக்கும் அப்படி அரைத்தூக்கத்துல கிறங்கிக் கெடந்தப்பத்தான் என் செல்ஃபோன் கிர்ர்ர்ர்….றுன்னு எனக்கு கிளுகிளுப்பூட்டுது!

    
ஃபோனை எடுத்து "ஹலோ!." ங்கறேன்!

 

மச்சீ, வேலை போயிடுச்சுடா” ன்னு எடுத்த எடுப்புலேயே சொல்லி என்னை பதறவச்சு என் தூக்கத்தை கலைச்சான் என் நண்பன் மஹேந்திரன். சுருக்கமா இந்தர்!

 

"என்ன மச்சான் சொல்றே?"

 

"ஆமா மச்சி! இன்னைக்கு மத்தியானம் மீட்டிங்னு சொல்லி கூப்பிட்டாங்கடா. போனா, எங்கள கூண்டோட வீட்டுக்குப் போகச்சொல்லிட்டாங்கடா!”

 

அய்யோ! ஏன்டா திடீர்னு இப்படி?”

 

எக்கானமி தான்! பட்ஜெட் இல்லையாம், கம்பெனி நஷ்ட்டத்துல போகுதாம். இதுதானே இப்ப எல்லாரும் சொல்லற காரணம்!"

 

"அடப்பாவமே. என்னடா இது? எப்போ last day? இன்றே கடைசியா?”

 

ஆமாடா மச்சி! ஆல்ரெடி ஆட்டம் க்ளோஸ்! இந்த நிமிஷத்துலயிருந்து வேலையில்லை.” 


கன்சல்டண்ட் அப்படீங்கற பேர்ல வேலை பாக்கும் எங்களை மாதிரி தினக்கூலி கம்ப்யூட்டர் புலிகளை அடிக்கடி தாக்கற பிரச்சினைதான் இப்போ என் நண்பனையும் தாக்கியிருக்கு.

 

இதுல இன்னொரு பிரச்சினையும் இருக்குடா. இப்ப நான் தங்கியிருக்கற apartment டோட லீசு ரெண்டு வாரத்துல முடியப்போகுது. இங்கேல்லாம் Lease extend பண்ணனும்னா கொறஞ்சது ஒரு வருஷத்துக்கு extend பண்ணனும். அடுத்த project எங்கே கிடைக்கும்னு தெரியாம எப்படி extend பண்றது? வேலை பிரச்சினை, வீடு பிரச்சினைன்னு எல்லாமே ஒரே நேரத்துல போட்டு அமுக்குது மச்சான்!!”


"அடக்கொடுமையே! இப்ப என்னடா பண்ணப்போறே?"

 

"அதுதான் தெரியல. ஏதாவது வழி கண்டுபிடிக்கணும். நல்லவேளை வீட்ல எல்லாரும் வெக்கேஷனுக்கு இந்தியா போயிருக்காங்க. இப்ப நான் மட்டும்தான் இருக்கேன். வீட்டு சாமான்களை பப்ளிக் ஸ்டோரேஜ்ல போட்டிட்டு எனக்கு மட்டும்  எங்கேயாவது accommodation பாக்கவேண்டியதுதான்!"

 

"ஓஹ்! நீ மட்டும் தனியாத்தான் இருக்கியா? அப்ப கவலைய விடு மச்சான், நீ கிளம்பி எங்கிட்டே வாடா! இங்கே என்னோட தாராளமா தங்கிக்கலாம்."

 

"நான் அதை யோசிக்காம இல்ல, ஆனா, உன்னோட ரூம்மேட்ஸுக்கு ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு நினைச்சுதான் கேட்க சங்கடப்படறேன். உனக்கு தொந்தரவா இருக்கக் கூடாதுல்ல….!"

 

"சேச்சே! அதெல்லாம் எந்த தொந்தரவும் இல்ல. ஆனா, எதுக்கும் மரியாதைக்காக நான் என் ரூம்மேட்ஸை கேட்டுட்டு உனக்கு சொல்றேன். சரியா? நீ கவலைப்படாதே! "

 

"சரிடா.. மச்சான்!”

 

"சரிடா.. அப்புறம் பேசலாம்!"

            -ன்னு சொல்லி ஃபோனை வைக்கிறேன். மந்தகதியான மத்தியான நேரம் இந்தர் புண்ணியத்தால துரிதகதி ஆகிப்போச்சு!

 

நான் என் ரூம்மேட்ஸுக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொன்னேன். இந்தர் எங்க ரூம்ல வந்து தங்கறதுக்கு அவங்க சம்மதத்த கேக்கறேன். அவங்க நான் எதிர்பார்த்ததுபோலவே பொன்மனத்தோடும், இன்முகத்தோடும் பச்சைக்கொடி காட்டி என் கோரிக்கைக்கு சம்மதம் தாராங்க, அதை உடனடியா இந்தர்க்கு தெரியப்படுத்த அவனை கூப்பிடறேன்,

 

"சொல்லு மச்சான்!"

 

"மச்சான், என் ரூம்மேட்ஸ் ok சொல்லிட்டாங்கடா! எந்த ஆட்சேபனையும் இல்லை. நீ தாராளமா வந்து இங்கேயே தங்கிக்கலாம்!"

 

"ஓஹ் ரொம்ப தேங்ஸ்டா! வாடகையும் சாப்பாட்டு செலவையும் நான் share பண்ணிக்கறேன் மச்சி!"

 

"அதல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். என்கிட்டே நீ வந்திட்டா அப்புறம் நீ என் பொறுப்பு. நீ வேலை தேடுறதபத்தி மட்டும் இப்போதைக்கு கவலைப்படு!"

 

"இல்ல மச்சான், அது நல்லாயிருக்காதுடா. "

 

"அதை நான் முடிவுபண்ணிக்கறேன்டா. நாளபின்ன ஒருவேளை எனக்கு இந்த மாதிரி நிலைமை வந்தா நீ உதவி செய்வியா மாட்டியா?"

 

அத செய்யாம இருப்பனா மச்சி?”

 

இல்ல, வாடகைய குடு, சாப்பாட்டு செலவ share பண்ணிக்க அப்பத்தான் help பண்ண முடியும்னு சொல்லுவியா?”

 

சேச்சே! அப்படி சொல்லுவேனா மச்சான்?”

 

சொல்லமாட்டேல்ல, அப்ப மேற்கொண்டு எதுவும் பேசாத. பேசாம கிளம்பி வா!”

 

"சரிடா.. இதுக்கு மேலே நான் ஏதும் பேசல! உன் ரூம்மேட்ஸ் கிட்டே ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு மச்சி!"

 

"கண்டிப்பா சொல்றேன்! சரி, எப்போ கிளம்பறே?"

 

இங்கே கொஞ்சம் வேலை இருக்கு, storage பாக்கணும், lease settle பண்ணனும். இதையெல்லாம் முடிக்க ஒன்னு ரெண்டு வாரம் ஆகும்டா. ரெண்டு வாரத்துல வரேன்னு வச்சுக்கயேன்!"

 

"சரிடா, உன் சௌகரியம் போல வா. அப்ப பாக்கலாம்!" – ன்னு சொல்லி ஃபோனை வைக்கிறோம்.

 

இந்த சம்பவம் நடந்த அடுத்த வாரம். இந்தர் என் வீட்டுக்கு வாரதுக்கு முன்னமே என் கம்பெனியிலும் ஒரு மீட்டிங் போட்டாங்க!

 

எக்கானமி ரொம்ப மோசமான நிலைமைல இருக்குன்னும், அதனால இப்போ செஞ்சுகிட்டிருக்கற பிராஜெக்ட்ஸ் எல்லாம் இத்தோட நிறுத்தப்படுமின்னும், அதனால அந்த பிராஜெக்ட்ஸ்ல வேலை பாத்திட்டிருக்கும் என்னைப்போல consultants-ன் contracts எல்லாம் cancel செய்யப்படுமின்னும், அதுக்காக மேனேஜ்மென்ட் ரொம்ப வருத்தப்படுதுன்னும், ஆனாலும் நாங்க செஞ்ச வேலைகள் எல்லாம் ரொம்ப மகத்தானதுன்னும், எங்கள் திறமையெல்லாம் அற்புதமின்னும், எங்களுக்கெல்லாம் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்குன்னெல்லாம், வேலைய பறிச்சு எங்க வயித்துல அடிச்சிட்டு, அந்த மீட்டிங்ல மைல் கணக்கா வாயளக்கறாங்க.

 

எதிர்பாராதவிதமா இப்படி ஒரு திருப்பம் வந்து “பல்லே... பல்லே...!” ன்னு ஒத்த காலை தூக்கிக்கிட்டு, என் முன்னாடி பஞ்சாபி டான்ஸ் ஆடுது. எதிர்பாராத இந்தத் திருப்பம் என்னைத் “திரு திரு” ன்னு முழிக்கவைக்குது.

 

எனக்கு இப்படி ஒரு நிலமை வந்தால் நீ எனக்கு உதவி செய்வியா மாட்டியா?”

- ன்னு இந்தரை சென்ட்டிமென்ட்டாகத் தாக்க கேட்டாலும் கேட்டேன்,  உண்மையிலேயே என் நிலமையும் அப்படியே ஆயிட்டது!

 

  

 

ந்தர் வந்தான்.

 

ஹலோ, ஐயாம் மஹேந்திரன், நீங்க என்னை இந்தர்னு கூப்பிடலாம். நான் இங்கே கொஞ்ச நாள் தங்கிக்க அனுமதி தந்ததுக்கு ரொம்ப தாங்ஸ்..!” – ன்னு என் ரூம்மேட்ஸ் கிட்டே அறிமுகம் ஆன விதத்துலயே அவனை என் ரூம்மேட்சுக்கும் பிடிச்சு போகுது! எனக்கு வேலை போயிடுச்சுங்கற விஷயம் தெரியவந்ததும் இந்தர் ரொம்ம அதிர்ச்சி ஆகுறான். வருத்தத்தோ என்கிட்டே,

 

மச்சீ ஏன்டா என்கிட்டே சொல்லல? நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணியிருப்பேன்ல!” – ங்கறான்.

 

நீ அப்படி வேற ஏற்பாடு எதுவும் செஞ்சிடக்கூடாதுன்னுதான் நான் சொல்லலே!” – ன்னு சொல்லி சிரிக்கறேன். அவன் விட்டபாடில்லை,

 

இல்ல மச்சி, இந்த நிலமைல இது உனக்கு தேவையில்லாத சிரமம்தானே?”

 

சிரமம் எல்லாம் எந்த மன்னாங்கட்டியும் இல்ல. ரெண்டுபேத்துக்கும் வேலை இல்ல, ஒன்னா சேந்து வேலை தேடலாம்! வீட்ல வெட்டியா இருக்கறதுக்கும் ஒரு company ஆச்சு! முக்கியமா, வேலையில்லாம இருக்கற இந்த நேரத்துல நீ என் கூட இருக்கறது எனக்கு பெரிய தெம்பா இருக்கும் மச்சான்.” -ன்னு நான் சொன்னதும் என்னை ஆரத்தழுவறான் என் அன்பு நண்பன்.


உண்மையாவே, இந்தர் கூட இருக்கறது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஏதாவது சொல்லி சிரிக்கவச்சுகிட்டே இருப்பான். அவன் சிரிக்கறதும் பாக்க அவ்வளோ அழகா இருக்கும். அவனோட செய்கைகளும் சிரிப்புதான் வரும். எப்பவும் கலகலன்னு இருக்கும் எங்க வீடு இந்தர் வரவும் இன்னும் அதிகமா கலகலப்பாகுது. என் ரூம்மேட்சும் அவன்கிட்டே நெருங்கி பழகறாங்க.

 

இந்தர தூக்கத்திலருந்து எழுப்பி, Call for you! ன்னு சொல்லி ரிஸீவரை குடுத்து கலாட்டா பண்ணுவோம். வராத காலுக்கு கண்ணை கூட முழுசா தொறக்காம,

 

ஹலோ ஹவ் ஆர் யூ? திஸ் இஸ் மஹேந்தர் ஸ்பீக்கிங்!” – னு அர்த்தசிரத்தையா சொல்லுவான்.

 

அந்த ஹவ் ஆர் யூ?” அப்படியே மண்டைய கவ்வறது மாதிரி இருக்கும். வேலையில்லாத அந்த நாட்கள்ல வேலை தேடி மெயில் அனுப்பறதும், மிடில்மேனுக்கு இண்ட்டெர்வியூ கொடுக்கறதும்கூட சுவராஸ்யமா இருக்கு. முக்கியமா, நான் சோர்ந்துபோகாம இருக்கேன்.  

 

சமையல்லயும் அவன் மன்னன். அவன் சமைக்கற ஆட்டிறைச்சி குழம்பை இரசிக்க இரசிக்க ருசிக்கறோம். ருசிக்க ருசிக்க இரசிக்கறோம்.

 

வெளிப்பார்வைக்கு எதப்பத்தியும் கவலையே இல்லாதவன் மாதிரிதான் தெரிவான். ஆனா, ஆழ்ந்த அனுபவம் மிக்கவன். அவன் பேச்சில வெளிப்படாது ஆனா ரொம்ப பக்குவமானவன். தத்துவார்த்தமாய் வாழ்க்கையை நடத்துறாங்கறது அவனுக்கே தெரியாது. இது, இந்தர்கிட்டே நெருங்கி பழகினதுல நான் பல தடவை உணர்ந்த விஷயம்.

 

இந்தர் என்மேல பாசமா இருப்பான். ரொம்ப அக்கறை எடுத்துப்பான். எனக்கு சாப்பாடு ஊட்டிவிடுவான், தலைக்கு எண்ணை போட்டு மசாஜ் பண்ணி விடுவான். சமயத்துல என் தோழிகளுக்கு அண்ணணா மாறி அவங்க சார்பா என்கிட்டே சம்மந்தம் கூட பேசுவான். இதையெல்லாம் நானும் ரொம்ப ரசிச்சபடி இருப்பேன்.

 

ஏதேது? இந்த இந்திரனும் உன் நந்தவனத்து ‘பூ’ வுல ஒன்னா? இதயத்தை வருடி வசந்தத்த பொழிய வச்ச உன் வானவில் பூக்களை உள்ளடக்கிய நந்தவனத்துல ஆண் ‘பூ’ வும் பூத்திருக்கா? இப்ப அதைப்பத்திதான் சொல்லிட்டிருக்கியா?’”       

        – ங்கறமாதிரி தப்பான அர்த்தப் பார்வைய என் மேல வீசாதீங்க. நான் அப்படிப்பட்டவன் இல்ல, என் நண்பனும் அப்படிப்பட்டவன் இல்ல.



 

கிணி கிணி கிணி கிணிண்ணிணி…..

 

Land line மணி அடிக்குது. எடுக்கறேன்!

 

"ஹலோ?"

 

'Hello, Can I talk to Inter?"

        -- இனிமையான பெண் குரல் ஒன்னு இந்தரை Interனு படுகொலை செய்யுது. அந்த ஆங்கில தொணியில இந்திய வாசம்.

 

"Inter? Sure, wait a sec!"  - ன்னு அந்த குரல்கிட்ட சொல்லிட்டு, அந்த குரலுக்கு கேட்டிடக்கூடாதுன்னு ரிஸீவர்ல பேசற பக்கத்த கையால பொத்தி பிடிச்சுகிட்டு,

 

"டேய் Inter உனக்கு call டா!" – ன்னு நானும் இந்தரை Inter ஆக்கி, கான்வெண்ட் பொண்ணுங்க டமிள் பேசறமாதிரி கேலியா கூப்பிடறேன்.

 

"யாருடா?" – ன்னு கேட்டபடியே இந்தர் வந்தான். நான் ஏன் அவன Inter னு கூப்பிட்டேங்கற குழப்பம் அவன் முகத்துல தெரிஞ்சாலும் அதப்பத்தி ஏதும் கேக்கல.

 

"ஏதோ ஒரு லேடி பீட்டர்டா!"

 

"பீட்டரா? யாருடா?" – ன்னு கேட்டுகிட்டே என்கிட்டேயிருந்து ரிஸீவரை வாங்கி,

 

ஹலோ” ங்கறான். எதிர்பக்கத்து குரல் கேட்டதும் அவன் முகம் மலருது,

 

ஓஹ், நீயா? சொல்லுமா” ன்னு தமிழ்ல பேசினபடியே ரிஸீவரை எடுத்துட்டு ரூமுக்குள்ளே போறான். போற போக்குல என்னை மொறச்சு பாத்துட்டு போறான். அந்தப் பொண்ண ‘லேடி பீட்டர்’ ன்னு சொன்னதுக்கா முறைக்கறான்? மவனே பேசி முடிச்சிட்டு வரட்டும் கேட்டிடவேண்டியதுதான் கேட்டு!

 

கிட்டத்தட்ட அரைமணி நேரம் அந்த பொண்ணுகிட்ட பேசி முடிச்சிட்டு ஹாலுக்கு வந்து ரிஸீவரை base ல வைக்கறான்.

 

அவன் வந்ததும் வராததுமா, "யாருடா அந்த லேடி பீட்டரு?" – ன்னு கேட்டு என் குறுக்கு விசாரணைய ஆரம்பிக்கறேன்.

 

"என் கன்ஸல்டிங் கம்பெனில என்னை மாதிரி வேலை தேடிட்டிருக்கும் கன்சல்டண்ட் மச்சான். தமிழ் தான் பொண்ணு!"

 

"அவ தமிழச்சின்னு நீ அவகிட்டே தமிழ்ல பேசினப்பவே தெரிஞ்சது, ஆனா, இப்படி ஒரு கேர்ள் ப்ரெண்டு உனக்கு இருக்காங்கற விஷயத்தை இதுநாள் வரைக்கும் நீ என்கிட்டே சொல்லாமலே மறச்சிட்டியே?!”  – ன்னு நான் சொல்லவும்,

 

"கேர்ள் பிரெண்டா?” –ன்னு அதிர்ச்சி பைத்தியமா மாறி ஷாக்குல கேட்டவன். கிட்டத்தட்ட கைய கூப்பி கெஞ்சுற தொணியில, “மச்சான் டேய், வேணாம்டா! பொண்டாட்டி ஊருக்கு போயிருக்கற நேரத்துல இப்படி ஒரு வதந்திய கொளுத்திப்போட்டு குளிர்காயாதடா, நான் புள்ளக்குட்டிகாரன் பொழச்சு போறேன் விட்டிடுடா!” –ங்கறான்.

 

‘”அப்ப உண்மைய சொல்லு. எவ அவ?”

 

“நான் தான் சொன்னேனே அவ என் கம்பெனில என்னை மாதிரி வேலை தேடிட்டிருக்கற பொண்ணுன்னு.”

 

“அவ எதுக்கு உனக்கு ஃபோன் பண்ணறா? அரைமணி நேரமா என்ன கடலை போட்டிட்டிருந்தீங்க?”

 

“அவ இன்னிக்கு காலையில ஒரு இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ணினா மச்சான், அதே கிளையண்ட்கிட்டே எனக்கு இன்னைக்கு சாயந்திரம் இண்டெர்வியூ இருக்கு, அதனால, அவ கிட்டே என்ன கேள்வியெல்லாம் கேட்டாங்கன்னு என்கிட்டே சொல்லறதுக்காக கூப்பிட்டா அவ்வளவுதான்."

 

"அத ஏன் அவ உன்கிட்டே சொல்லனும்?"

 

"எங்க கன்ஸல்டிங் கம்பெனி பாலிஸி மச்சான். அப்படித்தான் அது. ஒரே வேலைக்கு bench-ல இருக்கற எல்லாத்தோட resume-ஐயும் அனுப்பி வைப்பாங்கடா. ஒருத்தர்க்கு இண்ட்டெர்வியூ முடிஞ்சதுன்னா, அந்த இண்ட்டெர்வியூல என்னல்லாம் கேட்டாங்கன்னு அதே கிளையண்ட் கிட்ட இண்ட்டெர்வியூ schedule ஆகியிருக்கற மத்த consultants கிட்டே share பண்ணணும். அப்போ யாருக்காவது ஒருத்தருக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்குல்ல, யாருக்கு கெடச்சாலும் கம்பெனிக்கு லாபம்தானே?"

 

ஓஹ்! அதுசரி. ஆமா அவளும் தமிழு நீயும் தமிழு அப்புறம் எதுக்கு அவ அந்த பீட்டர் விடுறா?”

 

நான் தமிழன்னு அவளுக்கு தெரியும் ஆனா ஃபோன அட்டெண்ட் பண்ணற பேர்வழியும் தமிழன்னு அவளுக்கு தெரியாதில்லையா அதுனால இங்லீஷ்ல கேட்டிருப்பா விடுடா!”

 

சரி அத விட்டுறுவோம். எப்படியிருப்பா இந்த பீட்டரு?”

 

"அதெல்லாம் யாருக்குத் தெரியும்?"

 

"யாருக்குத் தெரியுமா? ஏன் நீ பாத்ததில்லே?"

 

"நான் எங்கே பாத்திருக்கேன்? போன்ல பேசிக்குவோம் அது மட்டும்தான். அவ எங்கேயோ இருக்கா நான் எங்கேயோ இருக்கேன்!"

 

"அப்புறம் என்னமோ ரொம்ப பழக்கம் மாதிரி வாம்மா போம்மான்னு கொஞ்சிட்டு கிடந்தே!"


"எல்லாம் போன்ல பேசி வளந்த பழக்கம்தான். நம்ம ஊர் பொண்ணுங்கறதுன்னால மரியாதையா வாம்மா போம்மான்னு பேசிக்கறதுதான்!"

 

"ஓஹ்! எத்தனை நாளா பழக்கம்?"

 

"வேலை போனதுலயிருந்துதான். என்ன ஒரு ரெண்டு மூணு வாரம் இருக்குமா?"

 

"ரெண்டு மூணு வாரமா? ஏண்டா, மூணு வாரமா அவ உனக்கு Questions எல்லாத்தையும் leak செஞ்சுமா நீ இன்னும் ஒரு இண்ட்டர்வியூ கூட கிளியர் பண்ணாம இருக்கே?"

 

"அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு மச்சான். Interview-ல கேட்ட கேள்விய share பண்றதுக்கு பதிலா வெவரமா, கேக்காத கேள்விய கேட்டதா சொல்லி share பண்ணறாணுங்களோ?!"

 

அத விடு மச்சான். இப்போ அதுவா முக்கியம். நீ அந்த பொண்ண பத்தி செல்லு, இங்கே US-ல எங்கே இருக்கா அந்த பொண்ணு?”

 

"வெர்ஜீனியா ன்னு சொன்னமாதிரி ஞாபகம் மச்சான்!"

 

"ஓஹ்! வெர்ஜீனியாதானா? அப்போ ரொம்ப தூரம் இல்ல, என்ன ஒரு மூணு மூணரை மணிநேர driving distance தான்!”

 

“ஆமா மச்சான். ரொம்ப தூரம் இல்ல.” –ன்னு சொன்னவன் குரலை தாழ்த்தி இரகசியமா “அப்ப போய் பாக்கலாங்கறியா?" –ன்னு கேக்கறான்.

 

அதுக்கு நான், "இப்பதான், நான் புள்ளக்குட்டிகாரன், குடும்ப இஸ்த்திரி ன்னெல்லாம் senti-யா டயலாக் அடிச்ச. அதுக்குள்ள அதையெல்லாம் மறந்துட்டு இப்படி கேக்கறியேடா மச்சான்?” –ன்னு ரொம்ப கவலையா மூஞ்சிய மாத்திட்டு கேக்கவும்,

 

“சேச்சே! நான் எனக்காக சொல்லலடா, உனக்காக சொன்னேன் மச்சீ! உனக்கு பாக்கணும்னு ஆசையா இருந்தா வேணும்னா போய் பாக்கலாமான்னு கேட்டேன், அவ்வளவுதான்.” –ன்னு சொல்லி ஜகா வாங்கறான்.

 

"உன் ஆர்வத்த பாத்தா அப்படி தெரியலையே.!” –ன்னு சொல்லி நான் அவனை சந்தேகக் கண்ணோட மேலேயும் கீழேயும் பாக்க,

 

“அப்படியெல்லாம் இல்ல மச்சான். நான் நெஜத்துக்குமே உனக்காகத்தான்டா ஆர்வப்பட்டேன்!” –ன்னு எனக்குமேல அப்பாவியா மூஞ்சிய வச்சிட்டு சொல்றான்.

 

அதுக்கு நான், "கண்ணா... ஆர்வத்தே அனை கட்டு, இல்லேயின்னா அது ஆல்லயே அசிங்கப்படுத்திடும்...!” -ன்னு ரஜினிஸ்டைல்ல சொல்ல, என் கன்னத்தை கிள்ளி கொஞ்சற மாதிரி செஞ்சுட்டு, “குசும்புடா உனக்கு!” ங்கறான் நண்பன்!

 

அவன் கொஞ்சல்ல சிக்காம, திரும்ப நான் டாபிக்குக்கு வந்து ஆமா, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" –ன்னு கேட்டதும் திடீருன்னு வில்லன் பி.எஸ்.வீரப்பாவா மாறி அட்டஹிச்சு சிரிக்கறான் இந்திரன்,

 

என்னடா வாலைத்தூக்குன மாடு இன்னும் காரியத்த சாதிக்கலையேன்னு பாத்திட்டிருந்தேன்! அடிச்சாம்பாரு சர்ர்ர்ருன்னு.” –ன்னு சொல்லி, அவன் சொன்ன உவமைய அவனே இரசிச்சு இன்னும் அதிகமா சிரிக்கறான்.

 

சிரிச்சுகிட்டே, இந்த கேள்விய கேக்கத்தானே மச்சி இத்தனை கேள்விய கேட்டிட்டிருந்தே!” –ன்னு கேக்கறான்.

 

அட, கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டியே, எப்படி மச்சான்?!” –ன்னு sarcastic-ஆ கேட்டிட்டு  “சரி சொல்லு, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” -ன்னு நான் திரும்ப கேக்கவும்,

 

அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் யாரைப்பத்தியும், அதுவும் முக்கியமா  பொண்ணுங்க கிட்டே எந்த பெர்சனல் கேள்வியையும் கேக்கறதில்ல!”-ன்னு சொல்லி பிகு பண்ணறான்.

 

அதுக்கு நான், நானும் அப்படித்தான்டா. பொண்ணுங்ககிட்டே எந்த பெர்சனல் விஷயத்தையும் கேக்க மாட்டேன், அதையெல்லாம் அவங்க friends கிட்டதான் கேட்டு தெரிஞ்சுப்பேன். அதனாலதான் உன் கிட்டே கேக்கறேன்!” -ன்னு சொல்லவும் சிரிப்பு வருது அவனுக்கு. சிரிச்சுகிட்டே சாந்தமா,

 

உண்மையிலேயே எனக்கு தெரியாது மச்சான். ஆகியிருக்க வாய்ப்பு இல்லைன்னுதான் எனக்கு தோணுது. ஜஸ்ட், தோணுது அவ்வளோதான்!” – ன்னு அவன் சொல்ல,

 

சரி விடு! அவ பேராவது தெரியுமா, இல்ல அதுவும் பெர்சனல்னு கேக்காம விட்டுட்டேன்னு சொல்லபோறியா?" – ன்னு நான் கேட்டதுக்கு,

 

”ரொம்ப விசித்திரமான பேருடா அவளுக்கு” -ங்கறான் இந்தர்.

 

“என்ன விசித்திரலட்சுமியா?”

 

இல்லடா, Xang Ami”

 

Xang Ami யா? என்னடா இது? தமிழ் பொண்ணுக்கு சைனா பேர வச்சிருக்கீங்க?Indo-China baby யாடா?” 

            – ன்னு, நான் இப்போ அதிர்ச்சி பைத்தியமா மாறி கேக்க,

 

நானும் அப்படித்தான் நெனச்சேன் மச்சான்! கம்பெனில இப்படித்தான்டா அவள கூப்பிடறாங்க்க! அவ பேரு, ‘சங்கமித்ரா’! அந்த அழகான தமிழ் பேரை சுருக்கி ‘சங்கமி’ ஆக்கி, அதையும் நாடு கடத்தி “Xang Ami” ஆக்கியிருக்கானுங்கடா!” – ன்னு சொல்லறான் நண்பன் மஹேந்திரன்.

 

“சங்கமித்ரா!”


நல்லாதான் இருக்கு இந்த பேரு, சரித்திர நாவல்ல வரும் இளவரசிங்களோட பேரைப்போல! அதனாலதானோ ஏனோ, இந்த பேருக்கு ஏத்த உருவமா என் மனசு வரையுற கற்பனை பிம்பமும் அப்படித்தான் இருக்கு, ஒரு இளவரசி மாதிரி.

 

‘சங்கமித்ரா’ ங்கற அந்த பேருக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு. அது என்னையும் ஈர்க்குது, அந்த ஈர்ப்பு அந்த பேருக்கு சொந்தமான அந்த பொண்ணு மேலயும் படருது. முகம் தெரியாது, ஆனாலும் மனசு ஈர்க்குது!

 

இது மனுஷனோட வினோதமான இயல்பு. இதுக்கு விளக்கமே கிடையாது. சிலபேத்த காரணமே இல்லாம ரொம்ப பிடிச்சு போகும். சிலபேத்த அறவே பிடிக்காமலும் போகும். காரணம் இருக்காது, ஏன், எதனாலன்னும் புரியாது. இது மனசு ஆடுற ஒருவகை கூத்து!

 

என் மனசு கூத்தாடுதா, இல்ல குத்தாட்டம் போடுதான்னு தெரியல, முன்ன பின்ன பார்த்தேயிராத அந்த பொண்ணுகூட எனக்கு பலவருஷம் பழக்கங்கறமாதிரி ஒரு நெருக்கம் feel ஆகுது. அவளை கேலிசெய்யவும், வம்பிழுக்கவும், வெறுமனே சீண்டவும் தோணுது.

 

தோணினா செஞ்சிடணும்தானே? சங்கமித்ராவோட ஃபோன்கால் வந்து அதை நான் அட்டெண்ட் பண்ணறமாதிரி அமஞ்சா, அவ தமிழ் பொண்ணுன்னு எனக்கு தெரியாதது மாதிரி,

 

"டேய்! இண்ட்டர், மயிலு கூப்பிடுதுடா...!",

 

"மச்சான். டேய், நேத்து கூப்பிட்ட அதே ஆட்டுக்கார அலமேலுடா…“,

 

“லைன்ல அபிதகுஜலாம்பாள் வெயிட்டிங் டா!”,

 

“தேனி குஞ்சாரம்மா காலிங்டா…”

 

- அப்படீன்னெல்லாம், ரிஸீவர்ல பேசற பக்கத்த கையால பொத்தாம, கொஞ்சம் தள்ளினாப்படி பிடிச்சுகிட்டு சொல்லறதுண்டு!

 

வேணுமின்னே, அவளுக்கு கேக்கணுங்கறதுக்காகவே!

 

 

 

ந்தரை தொந்தரவு செய்யறதும் வம்பிழுக்கறதும் எனக்கு ரொம்ப பிடிச்ச பொழுதுபோக்கு.

 

அவன் ரொம்ப சீரியஸா ஏதாவது செஞ்சிட்டிருந்தா வேணும்னே போய் ஏதாவது இடஞ்சல் செஞ்சிட்டிருப்பேன். அவனுக்கு கோவம் வரும்தான், ஆனா, என்னை கோவிக்கமாட்டான். அப்படியே அவன அறியாம கோவப்பட்டிட்டாலும் சிரிச்சுகிட்டே மழுப்புவான். அத இரசிக்கணுங்கறதுக்காகவே அவனை அடிக்கடி சீண்டிட்டிருப்பேன்.

  

அன்னிக்கு அவன் ரூம்ல, கம்ப்யூட்டர்ல என்னமோ மும்முரமா செஞ்சிட்டிருக்க, நான் தடாலடியா ரூமுக்குள்ல நுழைஞ்சு,

 

"மச்சான் இதக்கொஞ்சம் கவனியேன்.." – ன்னு சொல்லி ஒரு பாட்டை பாடறேன்!


வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்!

கை விரலில் ஒரு வேகம்! கண்ணசைவில் ஒரு தாகம்!

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்!

ஜீவ நதி நெஞ்சினிலே!

ஆடும், ஓடும், மோதும் புதிய அனுபவம்!”

                         

            - ன்னு மெய்மறந்து பாடறதுபோல கண்ணையெல்லாம் மூடிட்டு பாடி முடிச்சு கண்ணை தொறந்து,

 

"சூப்பர்ல?" –னு கேக்கறேன். அவன் என்னை முறைக்கறான்.

 

என்ன மச்சான்? உயிரக்குடுத்து பாடி இருக்கேன் பாராட்ட மாட்டேங்கற?"–ன்னு திரும்பவும் கேக்கவும்,

 

"பாட்டு ரொம்ப நல்லா இருந்தது! உங்க friend-ஆ இந்தர்? ரொம்ப அருமையா பாடறாரே" - ன்னு ஒரு பெண் குரல் கேட்க நான் ஏகப்பட்ட குழப்பத்தோட இந்தரை பாக்கறேன்!

 

அவன் டெலிபோன் ரிஸீவரை எடுத்து எனக்கு காட்டறான், அதுல Speaker Icon பக்கத்துல இருந்த light எரிஞ்சுகிட்டிருக்கு!

 

"ஆமா! என் friend-டு தான்மா!" –ன்னு இந்தர் பதில் சொல்லிட்டு திரும்பவும் என்னை முறைக்கறான்.

 

"ரொம்ப நல்லா பாடறீங்க!" –ங்கறது திரும்பவும் அதே பெண் குரல்!

 

"சங்கமியா?!" - இந்தர்கிட்டே இரகசியமா கேக்கறேன். ஆமாம் னு தலையாட்டறான் அவன்.

 

நான் தலையில அடிச்சுக்கறேன்!

 

"Thank you. You guys please carryon!" ன்னு நன்றி சொல்லி அசடு வழிஞ்சுகிட்டே இடத்தை காலி செய்யறேன்.

  

கொஞ்சநேரத்துல வாயெல்லாம் பல்ல காட்டிகிட்டு இந்தர் வெளியே வந்தான். அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தா ஒரு காலை கொஞ்சம் அழுத்தி ஊன்றி கொஞ்சம் துள்ளினாப்பல நடப்பான். இப்பவும் அந்த துள்ளல் நடை போட்டுதான் வந்திட்டிருக்கான். நான் அந்த பொண்ணுகிட்டே மாட்டினதுல அத்தனை சந்தோஷம் அவனுக்கு.

 

அவன் என் பக்கத்துல வந்து உக்காரவும், "ஏய் லூசு, சொல்லலாம்ல ஸ்பீக்கர்ல இருக்கேன்னு. இப்படி வாங்கிட்டியே மானத்த?" -ன்னு கோவமா கேட்டா, 


அவன், “என்ன மச்சான்? திடீர்னு தமிழ்ல டப்பிங் செஞ்ச ஹிந்தி சீரியல்ல பேசற மாதிரி ஜூனூன் தமிழ்ல பேச ஆரம்பிச்சுட்டே? எங்கே சரியா கேளு பாக்கலாம்? ஏய் லூசு, என் மானத்த இப்படி வாங்கிட்டியே, ஸ்பீக்கர்ல இருக்கேன்னு சொல்லியிருக்கலாம்ல?” 

-ன்னு என் கோவத்தை ஒரு பொருட்டாவே மதிக்காம எகத்தாளமா கேலி பேசறான். நான் அவனை முறைக்கவும், அவன் அடிச்ச ஜோக்கை நான் இரசிக்கலைங்கறத புரிஞ்சுகிட்டு subject க்கு வந்தான்,

 

"நீ எங்கேடா சொல்ல விட்டே? ரூமுக்குள்ள நீபாட்டுக்கு வந்தே, வந்ததும் வராததுமா பெரிய இவன் மாதிரி பாட ஆரம்பிச்சுட்டே? அதும் கண்ண மூடிக்கிட்டு, லயிச்சு பாடறானாம்! புடுங்கி!"


"ஏன்டா? Mute-ல யாவது போட்டிருக்கலாம்ல?"

 

"நான் என்னத்த கண்டேன் நீ பாடப்போறேன்னு? நீதான் எல்லாத்தையும் மின்னல் வேகத்துல அரங்கேத்திட்டியே! அதுவும் ஏதாவது நல்ல பாட்டா இருந்தா கூட பரவாயில்ல, என்னமோ மேனி, தீனி, குரல்ல தாகம், மனசுல மோகம், சபலம், சல்லாபம், பலாத்காரம்னு, கன்றாவி….!"

 

பலாத்காரமா? அடப்பாவி, ஏண்டா இல்லாத வரிய எல்லாம் சேத்து அந்த பாட்ட இப்படி ஆபாசப்படுத்துறே?"

 

"நான் ஆபாசப்படுத்தறேனா? இந்த மாதிரி டபுள் மீனிங் உள்ள பாட்டை நீ தான் ஆபாசமா ஒரு பொண்ண பாத்து பாடியிருக்கே! அந்தப் பொண்ணு என்ன நெனச்சிருக்கும்?!"

 

நான் எங்கேடா அவளை பாத்து பாடினேன்? நான் உங்கிட்ட தானே பாடி காட்டினேன்?”

 

அது எனக்கு தெரியும், ஃபோன்ல கேட்டிட்டிருக்கற அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்? அது என்ன நெனச்சிருக்குமோ என்னமோ?”

 

"அது என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல. அது உனக்குதான் friend எனக்கில்ல. அது தப்பா நெனச்சா எனக்கென்னடா வெண்ண?"

 

ஒனக்கில்லடா வெண்ண, எனக்குதான் சொல்றேன். இப்படி கொச்சையா பாடற கொச்ச பசங்ககிட்டயா friendship வச்சிருக்காருன்னு என்னைப் பத்தி தப்பா நினைக்குமா இல்லியா? எந்த தைரியத்துல இனிமே எனக்கு ஃபோன் பண்ணும்? கட்டி வளத்த impression எல்லாம் தவிடு பொடி ஆயிடுச்சு!”- ன்னெல்லாம் என்னை வம்புக்கிழுக்கற நோக்கத்துல அவன்பாட்டுக்கு அடுக்கிட்டிருக்கான்.

 

நான் இந்த விளையாட்டை இரசிக்கர நிலையிலே இப்ப இல்ல.

 

சங்கமித்ரா கிட்ட பாட்டு பாடி மாட்டிகிட்டு அசடு வழிஞ்சது திரும்ப திரும்ப என் மனச போட்டு அலட்டுது. எனக்கு என்மேலேயே கோவம் வருது. அவளை கேலியும் கிண்டலும் செஞ்சுட்டு கெத்தா திரிஞ்சிட்டிருந்த நான், அவ முன்னாடி கேலிப்பொருளா ஆயிட்டது மனசுல பெரிய காயத்த உண்டாக்குது. சங்கமித்ரா மேலயும், கொஞ்சம் இந்தர் மேல கூட கோவம் கோவமா வருது.

 

இதுவும் மனசு ஆடற ஒருவித கூத்துதான்!





கிணி கிணி கிணி கிணிண்ணிணி…..

 

கங்கண கணவென கிங்கிணி மணி முழக்குது எங்க வீட்டு லேண்ட் லைன்.

 

அன்னைக்கு வீட்ல யாரும் இல்லை. நான் மட்டும் தனியா இருக்கேன். மத்த ரூம்மேட்ஸ் எல்லாரும் ஆபீஸ் போயிருக்க, இந்தரும் ஒரு இண்ட்டெர்வியூ விஷயமா வெளியே போயிருக்கான்.

 

நான் ஃபோனை எடுத்து எடுத்து “ஹலோ” ங்கறேன்.

 

எதிர்முனையில சங்கமித்ராவோட குரல், “இந்தர் கிட்டே பேசமுடியுமா?” ன்னு இங்லீஷ்ல கேக்குது.

 

கூப்பிட்டது சங்கமித்ரான்னு தெரிஞ்சதும் ஒருவித சங்கோஜமும் பதட்டமும் என்னை ஆக்கிரமிக்குது. நான் அவசரகதியில,

 

இந்தர் வீட்ல இல்ல, வெளியே போயிருக்கார். வர தாமதமாகும்” – ன்னு ஒத்த வாக்கியத்துல இங்லீஷ்லயே பதில் சொல்லிட்டு, ஃபோனை வச்சிட்டு நழுவிடலாம்னு நினைச்ச நேரத்துல,

 

“Are you Indher’s Tamil friend?” ன்னு கேக்குறா சங்கமித்ரா.

 

“Yes, who is this?” ன்னு கேக்கறேன் நான். அது யாருன்னே தெரியாததுபோல!

 

ஹாய், நான் சங்கமித்ரா! நீங்கதானே அன்னிக்கு பாடினது?”

 

பாடினேனா? என்னிக்கு எங்கே?” எப்படி சாமாளிக்கறதுன்னு யோசிச்சிட்டே மழுப்பறேன்.

 

அன்னிக்கு நாங்க ஃபோன்ல conference call-ல இருந்தப்ப பாடினீங்களே, இந்தரோட friend, நீங்கதானே அது?”

 

இனிமே மழுப்பி பிரயோஜனம் இல்லைன்னு உண்மைய ஒத்துக்கிட்டேன்.

 

ஓஹ் அதுவா? ஆமாங்க, அது நான் தான். சாரி, நான் இந்தரை கலாட்டா பண்றதுக்காக அப்படி செஞ்சேன். இந்தர் ஃபோன்ல இருக்கார்னு கவனிக்கல Sorry!”

 

No No, Sorry எல்லாம் எதுக்கு சொல்லறீங்க்க? We all enjoyed it! எங்க எல்லாருக்குமே பிடிச்சிருந்தது!”

 

உங்க எல்லாத்துக்கும் பிடிச்சிருந்ததா? உங்களைத்தவிர வேறயும் யாராவது ஃபோன்ல அன்னிக்கு இருந்தாங்களா?” –ன்னு ஒருவித பரிதவிப்போடு நான் கேக்கறேன்.

 

ஹஹ்ஹா…!” –ன்னு பெருசா சிரிக்கிறா! தொடர்ந்து, “ஆமா. இந்தர் சொல்லலியா? என்னைத்தவிர இன்னும் ரெண்டு பேர் இருந்தாங்க. அவங்களும் தமிழ்தான்! They liked it too…!” ன்னு சொல்லுறா.

 

அவ இப்படி சொல்லக்கேட்டதும் எனக்கு இன்னும் கொஞ்சம் சங்கோஜம் ஆயிடுச்சு. என்னையே நான் நொந்துகிட்டேன்.

 

இல்லை, இந்தர் சொல்லலை. ரொம்ப சாரிங்க! -ங்கறேன்.

 

அதுக்கு அவ, அடடா! எதுக்கு இத்தனை சாரி சொல்லறீங்க? - ன்னு கேக்கறா.

 

இல்ல நீங்க எல்லாரும் ஏதாவது முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ண conference call-ல இருந்திருப்பீங்க. நான் விளையாட்டுதனமா disturb செஞ்சுட்டேன்”

 

“இல்லேங்க, நாங்க சும்மா கதைபேசிட்டுததான் இருந்தோம். நீங்க பாடினது நல்லாயிருந்திச்சு. நல்லா பாடறீங்க!” -ன்னு அவ சொன்னாலும், எனக்கு ஏனோ ரொம்ப uncomfortable feel ஆகுது. எப்படியாவது ஃபோன வச்சா போதும்னு தோணுது. அதனால மேற்கொண்டு பேச்ச வளர்க்க இடம் கொடுக்காம,

 

“சரிங்க, நான் இந்தர் வந்ததும் கூப்பிடச் சொல்றேன்!” – ன்னு சொல்லவும்.

 

“Sure! Otherwise I can call in the evening…” -ன்னு சொல்லுற அவ குரல்ல திகைப்பும், குழப்பமும் இருந்ததை என்னால உணரமுடியுது. மேற்கொண்டு பதிலேதும் சொல்லாம ஃபோனை கட் செய்யறேன்.

 

கட் செஞ்ச மறுநிமிஷம் abrupt cut பண்னிட்டேனோன்னு தோணுது. அப்படி செஞ்சிருக்கக்கூடாதோ? வெளிப்படையா அதிருப்திய காட்டினமாதிரி ஆயிடுச்சோ? ன்னெல்லாம் ஒரே குழப்பம். ரொம்ப Casual-ஆ பேச ஆரம்பிச்ச சங்கமித்ராவை சங்கடப்படுத்திட்டோமோன்னு வருத்தமா போச்சு. ஆனாலும், அவ முன்னாடி கேலிப்பொருளா ஆகிப்போன வேதனையும் மாறாமத்தான் இருக்கு.

 

அன்னைலயிருந்து ஃபோன் மணி அடிச்சா நான் அந்த பக்கமா கூட போறதில்ல. இந்தர் சங்கமித்ரா கூட பேசிட்டு இருந்தா அந்த இடத்தவிட்டு காத தூரம் தள்ளியே இருக்கிறேன். ஆனாலும், லைன்ல சங்கமித்ரா இருக்கான்னு தெரிஞ்சா மனசு என்னவோ பண்ணுது. அவ மனச நோகச்செஞ்சிட்டதா ஒரு குற்றவுணர்வு என்னை ஆக்கிரமிக்குது. அது அவகிட்டே மன்னிப்பு கேக்க சொல்லி ஆர்ப்பரிக்குது.

 

மன்னிப்பு கேக்கலாம் தப்பில்ல. ஆனா எப்படி கேக்கறது? ஒன்னு நான் அவளுக்கு ஃபோன் செய்யணும் இல்ல இந்தர் பேசும்போது தரசொல்லி பேசணும். இதல்லாம் செய்ய தயக்கமா இருக்கு. தவிர, என்னன்னு சொல்லி மன்னிப்பு கேக்கறது? அன்னிக்கு abrupt ஆ கட் பண்ணியதுக்கு சாரின்னு சொல்றதா? அதெல்லாம் சரிவராது.

 

நம்மால சரி பண்ண முடியாத காரியத்த காலத்துகிட்டே ஒப்படைச்சிடனும். காலம் அதுக்கு சரியான பதில் தந்து உதவும். இந்த விஷயத்தையும் நான் அப்படியே காலத்தோட கையிலே ஒப்ப்டைக்கிறேன்.

 

காலம் ஒருநாள் கை கூடுது!

 

ன்னை ஓரக்கண்ணால பாத்துகிட்டே இந்தர் அன்னிக்கு சங்கமிகிட்டே ஃபோன் பேசிட்டு இருக்கான். நான் அதை கவனிச்சும் கவனிக்காதவன் மாதிரி டி.வி ய அர்த்தசிரத்தையோட பாத்திட்டிருக்கேன். இந்தர் என்னை முறைச்சுகிட்டே என் பக்கத்துல உக்கார்ந்தான்.

 

ஆங், ஓகே மா! தேங்க்ஸ் மா!” – ன்னெல்லாம் சொல்ல, அவன் பேசி முடிச்சு ஃபோன வைக்கப்போறான்னு புரியுது ஆனா ஏன் என்னை இன்னும் ஒரு வியப்போட, முறைக்கற மாதிரி ஓரக்கண்ணால அப்பப்ப பாக்கறான்னுதான் புரிஞ்சபாடில்ல!

 

பேசிட்டிருந்தவன், “ஆங், இருக்கான்மா! இதோ குடுக்கறேன்!” – னு சொல்லி ரிஸீவரை பனியன்ல ரெண்டு தடவ தேச்சு துடைச்சிட்டு என் பக்கம் நீட்டறான்.

 

நான் கண்ணை இடுக்கி புருவத்தை உயர்த்தி கேள்விக்குறி ஆக்கி “என்ன?” ங்கறமாதிரி சைகையில கேக்கறேன்.

 

உன் கிட்டே பேசணுமாம்!” –ன்னு சந்தேகக் கடுப்புல பதில் சொல்றான்.

 

யாரு?” ங்கறேன், யாருன்னு தெரியாத மாதிரி! அவன் என்னைவிட பெரிய காதகன் அவனா நம்புவான் யார் லைன்ல இருக்காங்கன்னு எனக்கு தெரியாதுன்னு? என் கேள்விக்கு பதில் ஒன்னும் சொல்லாம ரிஸீவரை என் கையிலே அழுத்தி தந்திட்டு

 

“பேசுடா!” -ங்கறான்.

 

நான், ஃபோனை காதுல வச்சு, “ஹலோ!” -ங்கறேன்.

 

ஹலோ! நான் தான் லேடி பீட்டரு!” – ங்கறா எதிர்முனையில சங்கமித்ரா.

 

சங்கமித்ராவா?” -ன்னு ஒரு சம்பாஷனை சம்பிரதாயத்துக்காக கேக்கப்போக,

 

ஆங்! அப்ப என்னைத்தான் லேடி பீட்டர்னு கூப்பிடறீங்க, இப்ப கன்பர்ம் ஆயிடுச்சு!” - ன்னு சொல்லி கலகலன்னு சிரிக்கிறா. நான் கொஞ்சம் லேசானேன்.

 

சேச்சே, இல்லங்க நான் குரல வச்சு guess பண்ணினேன்!” -ங்கறேன்.

 

சரி சரி நம்பிட்டேன்.” –ன்னு சொல்லி மீண்டும் கலகலன்னு சிரிக்கறா.

 

எப்படி இருக்கீங்க?” -ன்னு ரெண்டுபேரும் ஒரே நேரத்துல கேட்கவும்,

 

அட! என்ன ஒத்துமை?” -ன்னு ஆச்சர்யப்பட்டிட்டு அவளே பதில் சொல்லறா,

 

நான் நல்லா இருக்கேன், இதோ, சிரிச்சுகிட்டே… ஜாலியா! ஜோலிதான் இல்ல. நீங்க எப்படி இருக்கீங்க?” –ன்னு என்னை கேக்கறா.

 

இங்கேயும் அதே கதைதான்!”

 

லாஸ்ட் டைம் பேசினப்போ நான் உங்களை கேலி செய்யறேன்னு நீங்க தப்பா நெனச்சிட்டீங்களோன்னு எனக்கொரு சந்தேகம். நீங்க அப்செட் ஆன மாதிரி எனக்கு தோணுச்சு, அதை உங்க கிட்டே பேசி க்ளியர் பண்ணனும்னு நெனச்சிட்டிருந்தேன், அதான் உங்க கிட்டே ஃபோன் குடுக்க முடியுமான்னு இந்தர் கிட்டே கேட்டேன். நீங்க அப்படி ஏதும் நெனச்சிருந்தீங்கன்னா, I am really sorry!” ன்னு அவ சொல்லவும் நான் அவசரமா,

 

அடடா, அப்படியெல்லாம் இல்லீங்க. சொல்லப்போனா நான் தான் அன்னிக்கு abrupt ஆ ஃபோன வச்சுட்டேன்னு நினைக்கறேன்…” -ன்னு சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே,

 

நினைக்கவெல்லாம் வேண்டாம், உண்மையாவே abrupt-ஆ தான் போனை வச்சீங்க அன்னிக்கு” – ங்கறா.

 

ஆமாங்க, phone-ஐ வச்ச உடனே நானும் அதை realize பண்ணினேன். ரொம்ப ரொம்ப sorry ங்க.” ன்னு உண்மையான வருத்தத்தோட சொல்லறேன்.

 

இல்ல பரவாயில்ல, சாரியெல்லாம் சொல்லவேண்டாம். தப்பு என்பேர்லதான். நீங்க பேசற மூட்ல இருக்கீங்களா என்ன ஏதுன்னு எதுவுமே யோசிக்காம நான் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன். இந்தர் உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கார். உங்க கூட பேசணும்னு நானும் நெனச்சிட்டேயிருந்தேன் அன்னைக்கு நீங்கதான் எதிர்முனையில பேசறீங்கன்னு தெரிஞ்சதும் நான் பாட்டுக்கு லொட லொடன்னு பேச ஆரம்பிச்சுட்டேன்.”

 

சங்கமித்ராகிட்டே இப்படி நான் பேசிட்டிருக்கும்போது, இந்தர் என் பக்கத்துலயே உக்காந்திருக்கான். நாங்க என்ன பேசிக்கறோங்கறதுல பெரிய அக்கறை இல்லாதவன் மாதிரி அவன் டி.வி யில கண்ணை பதிச்சிருந்தாலும், காதையும் கவனத்தையும் எங்க மேல தான் படரவிட்டிருக்கான். அதனால, நான் மெல்ல எழுந்து ரூமுக்குப்போய் மேற்கொண்டு பேச ஆரம்பிக்கறேன்!

 

இந்தரா, என்னைப்பத்தியா? என்னைப்பத்தி சொல்ல என்னங்க இருக்கு? அவன் ஏதாவது கேலியா சொல்லியிருப்பான்!” ங்கவும்,

 

நோ நோ, நீங்க அவருக்கு செஞ்ச ஹெல்ப்பை எல்லாம் சொல்லியிருக்கார். எப்பவுமே உங்களைபத்தி பேசுவார். உங்க வேலை போன பிறகும் அவருக்கு தங்க இடம் கொடுத்திருக்கீங்கன்னு அடிக்கடி சொல்லுவார், உன் நிலமைல நான் இருந்தா என்னை பாத்துக்கமாட்டியான்னு கேட்டீங்களாமே, அடுத்தவங்க படற கஷ்ட்டம் நமக்கும் வரலாம்னு பொதுவா யாரும் நினைக்கறதுயில்லையே, ஒரு பண்பட்ட மனசாலதான் அப்படி நினைக்க முடியும். நீங்க simply great! Indher is lucky to have you as his friend…


இப்படியெல்லாம் சங்கமித்ரா சொல்ல சொல்ல நான் என் தலைக்கு பின்னால ஒளிவட்டத்த உண்டாக்கி, ரெண்டு சிறகு எனக்கு முளைச்சதா நம்பிக்கிட்டு வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டேன். நல்லவேளையா ரொம்ப உயரே போறதுக்கு முன்னமே எதார்த்தம் உறைக்க சிறகை மடக்கி, ஒளியை கெடுத்தி தரையிறங்கி பூமிக்கு வந்து சங்கமித்ராகிட்ட சொன்னேன்,

 

என்னப்பத்தி இந்தர் கொஞ்சம் அதிமாகவே உங்க கிட்டே புகழ்ந்திட்டான்னு நினைக்கறேன். அடுத்தவங்க கஷ்ட்டம் நமக்கும் வரும் அப்படீங்கற பக்குவபட்ட மனசோடல்லாம் ‘எனக்கு இந்த நிலமை வந்தா நீ பாத்துக்குவியான்னு’ நான் கேக்கல. அந்த நேரத்துல அவன் சொன்ன ஏதோ விஷயத்துக்கு நான் பதிலா கேட்ட ஒரு கேள்விதான் அது. சொல்லப்போனா ஒரு தமாஷ், கேலி அப்படீங்கற கேட்டகரில சொன்ன வெறும் டயலாக் அவ்வளவுதான். அதனால நீங்க பாராட்டும் அளவுக்கெல்லாம் ஏதுமில்ல.”

 

ஆனா நீங்க அவர் கிட்டே சொன்னதுபோலவே வாடகை எதுவும் வாங்கலியே?”

 

அங்கதான் உங்க பாராட்டுக்கு உண்மையிலேயே அருகதையான ரெண்டு பேர் இருக்காங்க. நான் இந்தர்க்கு ஹெல்ப் பண்றதா நீங்க சொன்னீங்க. உண்மையிலேயே இந்தர்க்கும், ஏன் இப்ப எனக்கும் கூட ஹெல்ப் பண்ணிட்டு இருக்கறது என்னோட room mates தான்! இந்தர் எனக்குதான் friend, நான் அவன்கிட்டே வாடகை வேண்டாம்னு சொன்னது ok. ஆனா, என் ரூம்மேட்ஸ் என் கிட்டேயும், இந்தர் என் friend ங்கறதால அவன்கிட்டேயும் வாடகை மட்டுமில்ல, மத்த செலவுகள்ல எங்க பங்கையும் கூட வாங்கிக்கல. வேலை இல்லாம இருக்கற நேரத்துல அதபத்தியெல்லாம் பேசவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க!”

 

Really?” ன்னு கேட்டு ஆச்சரியப்படறா சங்கமித்ரா.

 

யாரு பண்ணுவாங்க இந்த காலத்துல? எனக்கும், நான் வாக்கு குடுத்தேங்கற ஒரே காரணத்துக்காக என் friend க்கும் சேர்த்து இன்னிக்கு அவங்கதான் சோறு போட்டிட்டு இருக்காங்க. ஆனா, இம்மியளவு கூட பழகறதுல எந்த வித்தியாசமும் இல்ல மித்ரா. வெள்ளிக்கிழமை டின்னருக்கு வெளியே போறதாகட்டும், சினிமாக்கு போறதாகட்டும் எல்லாம் வழக்கம்போல இப்பவும் நடக்குது. நாங்க தயங்கினாலும் அவங்க விடறதில்ல. எல்லா செலவையும் அவங்கதான் பண்ணறாங்க, வேலையில்லாம இருக்கறமாதிரியே இல்ல, சொகுசா இருக்கோம்! நான் தான் lucky to get such kind of friends…!”

 

Yes. I agree!ங்கறா சங்கமித்ரா. அவளே தொடர்ந்து. “உங்க room mates பேர் என்னன்னு சொல்லலியே?” ன்னு கேக்கறா.

 

ஒருத்தர் கண்ணன், இன்னொருத்தர் வேலு! என்னோட ஆண் தேவதைகள்! இவங்க இல்லாட்டி என்னால இந்த அமெரிக்கால இத்தனை காலம் தாக்குபிடிக்க முடிஞ்சிருக்குமாங்கறதுகூட சந்தேகம்தான்!”

 

இந்த அளவுக்கு understandingஆன room mates அமையறது அபூர்வம்தான். நீங்க சொன்னது சரிதான், நீங்க அதிர்ஷ்டசாலிதான் for having such kind of amazing friends. இந்த காலத்துலயும் இவ்வளோ நல்லவங்க இருக்காங்களான்னு ஆச்சரியப்படத் தோணுது.”

 

“எல்லா காலத்துலயும் நல்லவங்க இருந்திருக்காங்க மித்ரா, இனி வரும் காலத்துலயும் இருப்பாங்க. சொல்லப்போனா, முழுசா நல்லவங்கன்னோ, முழுசா கெட்டவங்கன்னோ யாருமே கிடையாது, எல்லார்கிட்டேயும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். என்னை நல்லவன்னு நீங்க சொல்றீங்க, ஏன்னா அதை மட்டும் ஹைலைட் பண்ணி இந்தர் உங்ககிட்டே என்னை புரெஜக்ட் பண்ணியிருக்கான். ஆனா என் மனசுல எத்தனை அழுக்கு இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அதை அடுத்தவங்க உணராதவரைக்கும் அவங்களுக்கு நான் நல்லவன் தான். அதுமாதிரி, நாம பழகரவங்ககிட்ட அவங்களோட கெட்டதை தள்ளிட்டு நல்லதை மட்டும் எடுத்துகிட்டா நமக்கு அவங்க நல்லவங்களாதான் இருக்க முடியும்! அவங்க அப்படி நல்லவங்களா இருக்கும்போது, எந்த துவேஷமும் இல்லாம நாம அவங்ககிட்டே நல்லவிதமா பழக முடியும். நாம நல்லவிதமா பழகினா, அவங்களும் கண்டிப்பா நல்லவிதமாதான் திரும்ப பழகுவாங்க. எல்லாம் நல்லவிதமா போகும். As simple as that! இதைத்தான் நாங்களும் செய்யறோம்னு நினைக்கறேன். அடுத்ததவங்களோட குறைபாடுகளை பொருட்படுத்தறதில்ல...!

 - ன்னு சொல்லிட்டிருக்கும்போதே இந்தர் ருமூக்கு வந்து கையில கட்டியிருக்கும் வாட்சை சுட்டிக்காட்டி, “என்னடா இது?” ங்கறமாதிரி சைகை செஞ்சு நானும் சங்கமித்ராவும் பேசத்துடங்கி ரொம்ப நேரம் ஆகிட்டதை உணர்த்தறான்.

 

அதனால, “சாரிங்க, நான் பாட்டுக்கு ஏதேதோ சொல்லி இவ்வளோ நேரமா உங்களை bore அடிச்சுட்டேன்னு நினைக்கறேன்!” -ன்னு சொல்லவும்,

 

No no, it was interesting! In fact, inspiring! சந்தோஷமா இருக்கு, நல்ல நல்ல மனுஷங்களைப்பத்தி நல்ல நல்ல விஷயங்களை கேக்கறது” -ன்னு சொல்லறா சங்கமித்ரா.

 

ரெண்டு பேரும் பரஸ்பரம் விடை வாங்கிகிட்டு ஃபோனை வைச்சோம்.

 

இந்தர் என்னை வியப்போடவும், குழப்பத்தோடவும் பாத்துக்கிட்டிருக்கான். நான் அவன் பக்கம் போய் ரிஸீவரை அவன் கையில் குடுத்தேன். அதை கையில வாங்கிக்கிட்டு எதுவும் பேசாம என்னையே அழுத்தமா பாக்கறான்.

 

நான் அவன் கைகளை இறுக்கப்பிடிச்சுகிட்டு, அவன் கண்ணோடு கண் கோர்த்து,


வேணாம், எதுவும் யோசிக்க வேணாம்! யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்ல. இது நீ நினைக்கறதுதானான்னு எனக்கும் தெரியாது! நீ இதைப்பத்தி என்ன கேட்டாலும், எப்படி கேட்டாலும், உன்னை குழப்பாத பதில என்னால தர முடியும்னும் எனக்குத் தோணல! ஆனா ஒன்னு மட்டும் இப்போதைக்கு உண்மை.”- ன்னு சொல்லி நிறுத்தி, 10 seconds pause குடுத்து அவன் ஆர்வத்தை எகிற விட்டு, ஹஸ்க்கி வாய்ஸ்ல “எனக்கு பசிக்குது!” -ன்னு சொல்லி அந்த “பசிக்குது” ங்கறத ஏத்த எறக்கத்தோட சொல்லிட்டு அங்கிருந்து நழுவி, ஆயிட்டேன் Great Escape!.

 

 


ங்க மூணுபேத்துல சங்கமித்ராக்குதான் மொதல்ல வேலை கிடைக்குது. அதை இந்தருக்கு சொல்ல அவ ஃபோன் செஞ்சப்போ நான் தான் எடுத்தேன்.

 

ஹலோ, சங்கமித்ரா பேசறேன். ஒரு குட் நியூஸ், இந்தரை கூப்பிட்டு ஃபோன்ல ஸ்பீக்கர போடுங்க”  – ன்னு பரபரப்பா சொல்லுறா. நானும் அதுபோலவே செஞ்சேன்.

 

குட் நியூஸ்! இண்ட்டர்வியூ க்ளியர் ஆயிடுச்சு. I got the project. இங்கே D.C லதான் க்ளையன்ட்!”

 

வெரிகுட், வெரிகுட்!” நாங்களும் சந்தோஷப்பட்டோம். “Congratulations” - ன்னு வாழ்த்துக்கள் சொன்னோம்.

 

ஆனா ஒரு சின்ன பிராப்ளம். இது Java project. Interview எப்படியோ clear பண்ணிட்டேன். ஆனா Java ல பெருசா work செஞ்சதில்ல. அதுதான் பெரிய டென்ஷனா இருக்கு. பேசாம risk எடுக்காம இந்த offer அ வேணாம்னு சொல்லிட்டு கொஞ்சம் wait பண்ணி தெரிஞ்ச skillset லயே ஏதாவது வருதான்னு பாக்கலாமா?” – ன்னு அவ கேக்கவும்,

 

அடடா, அப்படியெல்லாம் யோசிக்காத மா, Java கத்துக்க இது உனக்கு நல்ல opportunity. இப்படித்தான் நாம புதுசா ஏதாவது கத்துக்க முடியும். உனக்கு programming experience இருக்கு, technology மட்டும்தானே புதுசு, அத easy யா கத்துக்கலாம். எப்படியும் புது project-ல மெஷின் எல்லாம் செட் ஆகி work ஆரம்பிக்கறதுக்கு one or two weeks ஆகும். அதுக்குள்ள பிக்கப் பண்ணிடலாம், தைரியமா project join பண்ணு” –  ன்னு இந்தர் தைரியம் கொடுக்கறான். இந்த மாதிரி தைரியம் குடுத்து ஊக்குவிக்கறதுல இவனுக்கு நிகர் இவன் மட்டும்தான்.

 

அதத்தான் உங்க கிட்டே கேக்கணும்னு நெனச்சேன். உங்களுக்கு டைம் இருந்தா ஒரு அரைமணி நேரம் தினமும், one or two weeks க்கு எனக்கு coaching தர முடியுமா?” - ன்னு அவ கேட்டு முடிக்கறதுக்கு முன்னாடியே,

 

ஓஹ், தாராளமா. கண்டிப்பா தரேன்மா” - ன்னு சம்மதம் சொல்லறான் இந்தர்.

 

இந்தர், சங்கமித்ராக்கு Java சொல்லிக்கொடுக்கும்போது நானும் உக்காந்து கவனிக்க ஆரம்பிக்கறேன். அதுல எனக்கும் கொஞ்சம் Java வேட concepts புரியுது.

 

ங்கமித்ராக்கு வேலை கிடைச்சு பத்து நாளுக்கு மேலே ஆச்சு. இன்னும் எங்க ரெண்டு பேத்துக்கும் வேலை கிடைக்கல. வேலை இல்லாம இருந்த மூணுபேத்துல ஒருத்தர்க்கு வேலை கிடைச்சதும் கொஞ்சம் பதட்டம் கூடுது. நமக்கு இன்னும் கிடைக்கலியேன்னு ஒரு எண்ணம், பயத்தயும் கூட்டுது. நானும் இந்தரும் மும்முரமா வேலைய தேட ஆரம்பிக்கறோம்.

 

இன்னைக்கு இந்தர்க்கு ஒரு Interview. அதுக்காக அவன் காலையிலேயே New York க்கு போயிட்டான். இந்தர்க்கு Java-experience இருக்கறதால நிறைய interviews செட் ஆகுது. அதுல பாதிக்கும் கம்மியாதான் என்னோட skillset க்கு வருது.

 

இந்தர் சங்கமித்ராக்கு Java சொல்லிக்கொடுத்ததை ஒட்டு கேட்டதை வச்சு இப்போ ஓரளவுக்கு Java தெரிஞ்சிருக்கறதால, Java வை Resume -update பண்ணிட்டு Java interviews சும் attend பண்ணினா என்ன? ஒருவேளை Project கிடைச்சிட்டா, எப்படியாவது முட்டி மோதி கத்துக்கலாம். மித்ரா அதைத்தானே பண்ணப்போறா, அதையே நாமளும் பண்ணினா என்னன்னு ஒரு யோசனை வருது.

 

Java -வ Resume -ல போடலாமா, வேண்டாமான்னு குழப்பத்தோட தயக்கத்தோட யோசனைல இருக்கும்போது,

 

‘கிக் கிக் கிக் கிக்.... கிக் கிக் கிகிகிக்

 

ஃபோன் மணி அடிக்குது. சங்கமித்ராதான் பேசுறா. கொஞ்சம் டென்ஷனா படபடப்பா பேசுறா.

 

இந்தர் இருக்காரா? எனக்கு கொஞ்சம் help தேவைப்படுது. இந்தர் கிட்டே குடுக்கறீங்களா?” - ன்னு கேக்கறா.

 

ஐயோ! இந்தர் இல்லையே, New York போயிருக்கான். ஒரு Interview!”

 

எப்போ வருவாரு?”

 

தெரியலியே evening ஆயிடும்னு நினைக்கறேன்!” - ன்னு சொன்னதும் இன்னும் அதிகமா பதட்டப்படறா.

 

அய்யோ! ஓரு module ல இன்னிக்கு complete பண்ணி review-க்கு அனுப்பனும். என் work இன்னும் முடியல, ஏதோ recursive, recursion எல்லாம் use பண்ணனும். Evening-க்குள்ல முடிக்கறேன்னு வேற சொல்லிட்டேன். காலையிலயிருந்து try பண்ணிட்டிருக்கேன் ஒரு solution-ம் கிடைக்கல. என்ன பண்ணறதுன்னே தெரியல!”  ன்னு தழுதழுத்த குரல்ல அவ சொல்ல சொல்ல என்னையும் பதட்டம் தொத்திக்குது.

 

முட்டுச்சந்துல மாட்டிகிட்ட மாதிரி இவ அனுபவிக்கும் இந்த இக்கட்டான அவஸ்த்தைய நான் நிறையதடவ அனுபவிச்சிருக்கேன். எப்படியாவது help பண்ணணும்னு தோணுது. அதனால, ஒரு குருட்டு தைரியத்துல,

 

டென்ஷன் ஆகாதீங்க, எனக்கு details mail பண்ணுங்க. நான் try பண்ணறேன். இந்தர் ஒருவேளை interview முடிச்சிட்டு call பண்ணினா அவனை உடனே உங்க office number -க்கு call பண்ண சொல்றேன்” -ன்னு நான் சொல்லவும். சங்கமித்ரா ஓரளவுக்கு சமாதானம் ஆகுறா.

 

சரிங்க, Thanks!” -ன்னு சொல்லி ஃபோனை வைக்கிறா.

 

கொஞ்ச நேரத்துல அவ details ஸையும் code டையும்  மெயில்ல அனுப்புறா. அதைப்படிச்ச எனக்கு தலையும் புரியல, வாலும் புரியல. சொல்லப்போனா அவளுக்கு தெரிஞ்ச அளவுகூட எனக்கு Java தெரியாது. அப்படியிருக்க,  எந்த அர்த்தத்துல “நான் try பண்ணறேன்” னு சொன்னேன்னும் எனக்கு புரியல. இப்படித்தான் ஏதாவது ஏடாகூடங்கள்ல என்னை நானே சிக்கவச்சுகிட்டு பேந்த பேந்த முழிச்சிட்டிருப்பேன். பெருசா சமாதானம் சொல்லி, டென்ஷன்ல இருந்த சங்கமித்ராவ சமாதானப்படுத்திட்டு இப்போ நான் திருவிளையாடல் தருமி மாதிரி புலம்பிட்டிருக்கேன்.

 

கொஞ்சம் தண்ணீ குடிச்சா தேவலாம் போல தோணுது. ஜில்லுன்னு ஒரு தம்ளர் தண்ணீர் குடிச்சுட்டு பொறுமையா திரும்ப ஒருதடவ அவ மெயில்ல அனுப்பின details-ஐ படிக்கறேன். அவ என்ன implement பண்ண try பண்ணறாங்கறது புரியுது. இந்தர் ஏற்கனவே சொல்லித்தந்திருந்த விஷயங்களும், internet ல கொஞ்சம் search செஞ்சும் சங்கமித்ராவோட code-update செஞ்சு அனுப்பறேன்.

 

கொஞ்ச நேரத்துல, It’s working! Thanks a bunch!” ன்னு reply வருது.

 

அதைப்பாத்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. சரியான solution கண்டுபிடிக்க முடிஞ்சதுல, அதுவும் எனக்கு சுத்தமா தெரியாத Java ல, சங்கமித்ராவுக்கு உதவ முடிஞ்சதுல பெரிய சந்தோஷம்.

 

இந்தர் வந்த உடனே அவன் கிட்டே இதையெல்லாம் சொல்லறேன். அவளோட மெயிலையும் காட்டி, நான் அனுப்பின code ஐயும் காட்டினேன். நான் செஞ்சிருந்த method Ok ன்னும் அதைவிட better ஆ அதை செய்யமுடியும்ணும் னு சொல்லி அது எப்படீன்னும் சொல்லித்தந்தான் இந்தர்.

 

இது just another way of doing it அவ்வளோதான். நீ அனுப்பினதும் சரியானதுதான். Work ஆகும்.”

 

“தேங்க்ஸ் மச்சான்!”

 

அதெல்லாம் இருக்கட்டும், அது எப்படி டா ஒரு பொண்ணுக்குன்னா மட்டும் சுத்தமா தெரியாத விஷயமா இருந்தாலும் record time-ல கத்துகிட்டு help எல்லாம் பண்ண முடியுது?” – ன்னு கேக்கறான் இந்தர்.

 

இந்த விஷத்த வச்சு அவன் என்னை கேலி செய்ய நிறைய சாத்தியக்கூறு இருக்குன்னு நான் ஏற்கெனவே எதிர்பாத்துதான் இருந்தேன்.

    

"ஹ! அது மச்சான், அவங்க உன் தோழி இல்லையா?"

 

"அதுக்கு?"

 


"அவங்க எதிர்பார்ப்பு சிதறிடக் கூடாதுல்ல..."

 

"என்ன எதிர்பார்ப்பு?"

 

"இல்ல, நீ இருப்பேன்னு நெனச்சுதானே மச்சான் கூப்பிட்டாங்க. நீ இல்லையன்னதும் எப்படி டென்ஷன் ஆயிட்டாங்கன்னு தெரியுமா?"

 

"சரி..!"

 

"இல்ல மச்சான். உன் பிரண்ட் எனக்கும் பிரண்ட் இல்லையா?"

 

"இல்ல….!"

 

"அதில்ல மச்சான், ஏண்டா என் பிரண்டு உதவி கேட்டு நீ எதுவும் செய்யலேன்னு நாளபின்ன நீ என்னை கேட்டுடக்கூடாதில்ல!"

 

"வேணாம்…..!"

 

"அந்த பொண்ணும், என்ன இது? இந்தரோட பிரெண்டுக்கு எதுவுமே தெரியலையே அப்படீன்னு நினைக்கக்கூடாதுல்ல!”

 

போதும் இத்தோட நிறுத்திக்கலாம்…!”

 

இல்லடா, அப்படி அவ எனக்கு எதுவும் தெரியலேன்னு நினைச்சிட்டா அத உன்னால தாங்கிக்க முடியாதுல்ல!"

 

“என்னை மன்னிச்சிடு! தெரியாம கேடடுட்டேன் விட்டிடு! உன் மீசைல மண் ஒட்டல ஓடிடு!” -ன்னு கையெடுத்து கும்பிட்டபடி இந்தர் சொல்லிட்டிருக்கும்போது லேண்ட் லைன் மணி அடிக்குது. யாரா இருக்கும்னு யோசிச்சுகிட்டே ஃபோனை எடுக்கறேன்.

    

"ஹலோ! நான் தான் சங்கமித்ரா பேசறேன். ரொம்ப தேங்ஸ், ரொம்ப ரொம்ப தேங்ஸ்! எனக்கு இருந்த டென்ஷன்ல அழுகையே வந்திடுச்சு. இந்தர் இல்லைன்னதும் எனக்கு கண்ணெல்லாம் இருட்டிட்டது. நல்லவேளையா நீங்க உதவி செஞ்சீங்க. ஆபீஸ் ல ரொம்ப வேலை இருந்தது. லேட் ஆயிடுச்சு, ஆறுமணி பஸ் பிடிக்க ஓட வேண்டியிருந்தது, இப்ப கூட மெட்ரோ பிடிக்கதான் ஓடிட்டிருக்கேன் வழியிலே இந்த டெலிபோன் பூத்தை பார்த்தேன். அதான் தேங்க்ஸ் சொல்லிடலாம் னு கூப்பிட்டேன். திரும்பவும் சொல்றேன் ரொம்ப தேங்க்ஸ். ரயில் வர நேரம் ஆச்சு நான் ஓடுறேன்!" - ன்னு மூச்சிறைக்க ஒரே மூச்சுல பேசிட்டு போனை வச்சா சங்கமித்ரா.

 

எனக்கு என்னன்னு விவரிக்க முடியாத ஒரு பரவச நிலை. யூனிவர்சிட்டி பர்ஸ்ட் னு கோல்ட் மெடல் வாங்கி மேடையிலே நின்னு டாடா காமிக்கறமாதிரி ஒரு feel. அதே feel லோட, தயக்கம் இல்லாம, குழப்பம் இல்லாம, தைரியமா, தன்னம்பிக்கையோட Java-வ போட்டு வைக்கறேன் என் Resume-ல!


 

கொடுக்கற தெய்வம் இந்தருக்கு கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குது.

 

அன்னிக்கு நியூயார்க்ல அவன் அட்டெண்ட் பண்ணின இண்ட்டெர்வியூ சக்ஸஸ் ஆகி அடுத்த வாரத்திலயிருந்து அந்த project-Join பண்ணனுங்கற நிலமைல இருக்கும்போது Chicago-ல இன்னொரு project-ம் கிடைக்குது. இந்த ரெண்டு project-ல எத select பண்ணறதுன்னு பெரிய குழப்பத்துல இருக்கான் இந்தர்.


நீண்ட குழப்பத்துக்கப்புறம் Chicago project தான் best-ன்னு முடிவு செய்தவன் சிகாகோ போறதுக்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்கறான். ஒருபக்கம் அவனுக்காக சந்தோஷப்பட்டாலும், இன்னொரு பக்கம் மெல்லிசான சோகம் என்னை வந்து அப்பிக்குது. அதை நான் வெளியே காட்டிக்காட்டியும், “என்னை விட்டிட்டு போற, என்னை விட்டிட்டு போற!” ன்னு அடிக்கடி இந்தரை சீண்டிட்டே இருக்கேன். அவனும், “மச்சி, நான் உன்னை விட்டிட்டு போனாலும் என் மனச உன்கிட்டேதான் விட்டிட்டு போறேன்”-னு டயலாக் அடிச்சிட்டே கிளம்பிட்டான்.

 

இந்தரை ஏர்ப்போர்ல drop பண்ணி Chicago க்கு வழியனுப்பி வச்சிட்டு வீட்டுக்கு திரும்ப வந்திட்டிருக்கேன். ரொம்ப dull-லா feel ஆகுது. மனசுல என்னல்லாமோ எண்ணங்கள் ஓடுது.


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு ஓரு பாட்டுல வரும். நல்ல மனைவி அமையறது மட்டுமில்ல, நல்ல ரூம்மேட்ஸ் அமையறதும் இறைவன் கொடுக்கற வரம்தான். அப்படி இறைவன் கொடுத்த நல்வரம் போலத்தான் என்னோட ரூம்மேட்சும் இருக்காங்க. ஒன்னா இருக்கறது மட்டுமில்ல மனசால ஒன்றியும் இருக்கோம். இப்படி ஒன்றி இருக்கறதாலதான் ஒரு குடும்பம் மாதிரி feel ஆகுது.

 

குடும்பம் மாதிரின்னு, ஏதோ சொல்லழகுக்கு சொல்லறதில்ல, எங்க வீடு ஒரு குடும்பத்துக்கான எல்லா குணங்களையும் கொண்டிருக்கு. எல்லோரும் ஒன்னாதான் சாப்பிடறோம். ஒருத்தர் ஆபீஸ்ல இருந்து வர லேட் ஆச்சுன்னாலும் அவர் வரும் வரைக்கும் மத்தவங்க எல்லாரும் சாப்பிடாம காத்து இருக்கோம். சினிமாக்கோ, Grocery store-க்கோ எல்லாரும் சேந்தேதான் போறோம். ஏதோ ஒரு sentimental bond எங்களை இணைச்சு போட்டிருக்கு!

 

அன்னைக்கு சங்கமித்ரா கிட்டே சொன்ன மாதிரிதான். வேலை போனதுலயிருந்து இன்னைக்கு வரைக்கும் வாடகையும் வாங்கல, மத்த செலவுகள்ல ஆகற share அ கூட என்கிட்டேயிருந்து இவங்க வாங்கல. ஒரு குடும்பமா இருக்கறதுனாலதானே அவங்களால காசு பணம் கணக்கு பாக்காம இப்படி பாசத்தயும் ஆதரவையும் மட்டும் காட்ட முடியுது? இந்தர் மாதிரி எனக்கும் தூரமா எங்கேயாவது project கிடைச்சா இந்த உறவுகளை விட்டு பிரியவேண்டி வருங்கற எதார்த்தம் என் மனச ரொம்ப கஷ்ட்டப்படுது.

 

என் வாழ்க்கையின் ஒரு அற்புதமான அத்தியாயம் எழுதப்பட்டு அது முடிவுக்கும் வருதுங்கறத என்னால உணர முடியுது. இந்த கண்ணனும், இந்த வேலுவும் என் பெருமை. சந்தோஷமும், சிரிப்பும், கலகலப்புமா இவங்களோட இருந்த நாட்கள், என் மேல இவங்க காட்டின அன்பு, வேலை இல்லாத சோதனையான காலத்துல இவங்க தந்திட்டிருக்கற ஆதரவு, அரவணைப்பு இதெல்லாம் என் வாழ்நாள் முழுக்க என் ஞாபகத்துல எப்பவும் இருக்கும். எப்போ யோசிச்சாலும் இந்த ஞாபகங்கள் என் கண்ணை ஈரமாக்கி என்னை உணர்ச்சிவசப்படவைக்கும்.

  

ந்தர் Chicago போய் ரெண்டு வாரத்துக்கு மேல ஆகுது. இன்னும் எனக்கு project எதுவும் அமையல. இது எனக்கு பெரிய மன அழுத்தத்தை உண்டாக்குது. இந்தர் இருந்தவரைக்கும் தெரியல, இப்போ டென்ஷனாவும், பதட்டமாவும் இருக்கு. ரூம்மேட்ஸ் எல்லாரும் ஆபீஸ் போனதுக்கப்புறம் சாயந்திரம் அவங்க வரும் வரைக்கும் என்னை சூழ்ந்திருக்கிற அமைதியும், தனிமையும் என்னை ரொம்ப கஷ்ட்டப்படுத்துது. ஏதோ பாலைவனத்துல மத்தியான வெயில்ல தண்ணி இல்லாம தாகத்தோட அவதிப்பட்டிட்டிருக்கறமாதிரி!

 

அன்னிக்கும் அப்படித்தான், படிக்கவும் mood இல்லாம, சாப்பிடவும் பிடிக்காம, சரி கொஞ்சம் தூங்கி எழுந்து fresh ஆகலாம்னு படுத்தா தூக்கமும் வராம ஒரு uneasy feeling ல எரிச்சலா பொரண்டு பொரண்டு படுத்திட்டிருக்க,

 

கிகிக் கிகிக்…. கிக் கிகிக் கிகிக்…” – ன்னு ஃபோன் மணி அடிக்குது.

 

ஏதாவது interview call லா இருக்கும்னு படுக்கைல இருந்து பாஞ்சு ஓடிப்போய் போன் எடுக்கறேன்.

 

"ஹலோ!"

 

"ஹலோ! சங்கமித்ரா பேசறேன்! ஞாபகம் இருக்கா, மறந்திட்டீங்களா?"

 

"ஹாய் சங்கமித்ரா! What a surprise? எப்படி இருக்கீங்க? நீங்க மறந்துட்டீங்கன்னுல்ல நான் நினைச்சிட்டிருந்தேன். இந்தர் போனதுக்கப்புறம் ஆளையும் காணும், call -ஐயும் காணோம்?!"

 

அய்யோ இந்தர் போனதுலயிருந்து நெனச்சுட்டுதான் இருக்கேன் உங்களை கூப்பிடணும்னு. இந்த பக்கிங்க Office phone-use பண்ண ஏகப்பட்ட restrictions போட்டு வச்சிருக்குதுங்க. ஆபீஸ் பக்கத்துல public phone ஏதும் கண்ணுல படவும் இல்ல அதான் call பண்ண முடியல!”

 

இப்போ எப்படி call பண்றீங்க? ஆபிசர மாத்திட்டீங்களா இல்ல ஆபீசையயே மாத்திட்டீங்களா?”

 

இன்னிக்கு இங்கே பக்கத்துல ஒரு mall- food court-க்கு வந்தோம். ஒரு public phone கண்ணுல பட்டுச்சு டக்குன்னு கூப்பிட்டிட்டேன்!”

 

ஓஹ், ரொம்ப சிரமம் எடுத்து call பண்ணியிருக்கீங்க, ரொம்ப தேங்க்ஸ்!”

 

இதுல என்ன சிரமம்? ஆஹ், ஒரு சிரமம் இருந்துச்சு. இந்த ஃபோன்ல போடறதுக்கு சில்லறைய கூட்டறது கொஞ்சம் கஷ்ட்டமா இருந்திச்சு!”

 

அது ஏங்க கஷ்ட்டமா இருந்துச்சு? கணக்கு வராதா? அப்புறம் எப்படி கூட்டினீங்க? Calculator use பண்ணிணீங்களா?”

 

Calculator-ஆ என்ன சொல்றீங்க?.”

 

நீங்கதானே சொன்னீங்க சில்லறைய கூட்ட கஷ்ட்டமா இருந்துச்சுன்னு?”

 

ஐயோ, கூட்டறதுன்னா கூட்டறதில்ல, add செய்யறதில்ல!”

 

“பின்னே?”

 

“குமிக்கறது!’

 

“ஓஹ்!”

 

“ஐயோ, எப்படி சொல்றதுன்னு தெரியலையே.!” ன்னு சொல்லி பரிதவிக்கறா சங்கமித்ரா. ஃபோன்ல போடறதுக்கு சில்லறை இல்லாம அவதிப்பட்டதை சொல்ல இப்படி அவதிப்பட்டிட்டிருக்கா. சரி ரொம்பவும் கஷ்ட்டப்படுத்த வேண்டாம்னு நான் புரியாத மாதிரி நடிக்கறத நிப்பாட்டிட்டு,

 

‘கஷ்ட்டப்படாதீங்க, புரிஞ்சுகிட்டேன். அப்புறம் எப்படி சில்லறை கிடைச்சது?” ன்னு கேட்டேன், அதுக்கு,

 

“நோட்டை உடைச்சேன்’ ன்னு சொல்லுறா. “இங்கே ஒரு convenient store இருந்தது அங்கே போய் நோட்டை உடைச்சேன்’ ங்கறா. சில்லறை மாத்தியிருக்கா! அதைத்தான் இப்படி சொல்லறா, அவ சொன்னதைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாளல, நான் சிரிக்கறத கேட்டு குழப்பத்துல பாவமா,

 

“என்னங்க இப்படி சிரிக்கறீங்க? ஏதாவது தப்பாயிடுச்சா?” ன்னு கேக்கறா.

 

‘சேச்சே, நோட்டை அடிச்சாதான் தப்பு, ஒடச்சா தப்பில்ல!ன்னு சொல்லி திரும்பவும் சிரிக்கறேன். அவளுக்கு ஏதோ அவ தப்பா சொல்லப்போக அத வச்சு கேலி செய்யறேன்னு புரிஞ்சுபோச்சு. ஏதும் பேசாம மௌனமா இருக்கா.

 

“சில்லறை மாத்தினேன்னு சொல்லணும். நோட்டை அடிச்சேன், convenient store கல்லாபெட்டிய ஒடச்சேன்னெல்லாம் சொல்லக்கூடாது!”  

 

“ஓஹ், நீங்க சிரிச்சப்பவே தோணுச்சு ஏதோ தப்பா சொல்றேன்னு. What to do? இங்கிலீஷ் மீடியம், வீட்ல பேசறது கன்னடம், என் தமிழ் கொஞ்சம் டக்கர் பண்ணும்...”


you mean to say, மக்கர் பண்ணும்?”

 

Yes, அதுதான்!”

 

“கவலைப்படாதீங்க, கன்னடத்துப் பைங்கிளிகள் பேசற கொஞ்சும் தமிழை சரோஜாதேவி காலத்துலயிருந்து தமிழ்நாடு கேட்டு இரசிச்சிட்டுதான் இருக்கு. நீங்க பேசற மக்கர் தமிழும் டக்கர்தான்! தும்பா சென்னாகீதா இருக்கும்!”

 

“அப்படீங்கறீங்க! மிக்க நன்றி. அப்புறம் இந்தர் எப்படி இருக்கார்? Call பண்ணினாரா?”

 

ம்ம், ரெண்டு நாள் முன்னாடி call செஞ்சான். Project நல்லா போயிட்டிருக்குன்னு சொன்னான். உங்களுக்கு call பண்ணினானா?”

 

போய் join பண்ணினப்போ call செஞ்சார். அப்புறம் ஒரு தடவ நான் அனுப்பின மெயிலுக்கு reply செஞ்சார். Orientation அது இதுன்னு ரொம்ப busy-ன்னு சொன்னார். நானும் அப்புறம் work-ல கொஞ்சம் busy ஆயிட்டேன். Call பண்ண முடியல!” -ன்னு சங்கமித்ரா சொன்னப்போ, எல்லாரும் ஆபீசுக்கு போய் busy யா இருக்காங்க. நான் மட்டும் வேலை இல்லாம வெட்டியா வீட்ல உக்காந்திருக்கேன்னு ஒரு எண்ணம் வந்தத என்னால தடுக்க முடியல! 


அப்போ திடீருன்னு! கவலைப்படாதீங்க!” –ங்கறா சங்கமித்ரா!

 

கவலையா? எதுக்குங்க?” –ங்கறேன் குழப்பத்தோட!

 

"இல்ல, என்னடா நமக்கு மட்டும் இன்னும் project எதுவும் அமையலயேன்னு யோசிச்சு கவலைப்படாதீங்க.” ன்னு சொல்லறா, கரெக்ட்டா நான் என் மனசுல தோணின எண்ணத்துக்கு ஆறுதல் சொல்லற மாதிரி சொல்லலறா. ஒருவேளை, என் மூஞ்சி காட்டி குடுத்திருக்குமோ? இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்காம,

 

சேச்சே, அப்படியெல்லாம் யோசிக்கறதில்லைங்க. உங்க concern -க்கு ரொம்ப Thanks! ஆனா, ஓரு சின்ன சந்தேகம் கேக்கலாமா?”

 

தாராளமா கேக்கலாமே! மன்னருக்கு என்ன சந்தேகம், எதில் சந்தேகம்?”

 

“இல்ல, எனக்கு project கிடைச்சதா இல்லையான்னு கேக்காமலே ஆறுதல் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களே, எனக்கு கண்டிப்பா project கிடைச்சிருக்க வாய்ப்பே இல்லைன்னு எப்படி முடிவு செஞ்சீங்க?” –ன்னு நான் கேட்டதும் கலகலன்னு சிரிக்கறா சங்கமித்ரா!

  

அதை எதுக்குங்க கேட்டு தெரிஞ்சிக்கணும். நான் call செஞ்சது உங்க land line number -க்கு. உங்களுக்கு project கிடைச்சிருந்தா என் call-attend பண்ண வீட்ல இருந்திருக்க மாட்டீங்க, ஆபீஸ்ல இருந்திருப்பீங்க. இதுல எதுக்கு formality க்காக அதைப்பத்தி கேட்டு உங்க வாயாலயே ‘இன்னும் எதுவும் அமையல’ ன்னு சொல்ல வைக்கணும்?” ன்னு கேக்கறா.

 

அட, செம sharp-ங்க நீங்க. உண்மைய சொல்லணும்னா உங்க call வந்த அந்த நொடி வரைக்கும் நான் project பத்திதான் யோசிச்சு கவலைப்பட்டிட்டிருந்தேன்!” -ன்னு நான் சொல்லவும்,

 

“தெரியும்! நானும் கொஞ்சநாள் வேலையில்லாம இருந்தேன்ல. எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். இந்தர் இருந்தவரைக்கும் நீங்க பெருசா இதைப்பத்தி கவலைப்பட்டிருக்க மாட்டீங்க. அவர் உங்களை கவலைபட்டிருக்க விட்டிருக்க மாட்டாரு. இப்போ, தனியா இருக்கும்போது ரொம்ப யோசிப்பீங்க, கவலைப்படுவீங்க...!” -ன்னு சொன்னவ, தொடர்ந்து,

 

“நான் அடிக்கடி break down ஆயிடுவேன். சில நேரங்கள்ல பெரிய பயம் ஆயிடும். இந்தர் கிட்டே புலம்புவேன். அவர் எப்பவுமே positive -ஆ இருப்பார். தைரியம் குடுப்பார். அதுபோல நீங்களும் எனக்கு ரொம்ப help பண்ணியிருக்கீங்க...”-ன்னு சொல்லறா,

 

“நானா, நான் என்னங்க பண்ணினேன்?” -ஆச்சரியத்தோட கேக்கறேன்.

 

“சிரிக்க வச்சிருக்கீங்க, அது போறாதா? நீங்க ரூம்ல பண்ணற கலாட்டா பத்தியெல்லாம் இந்தர் அப்பப்போ சொல்லுவார். அப்புறம் பாத்தா நீங்க என்னையே கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டீங்க. எனக்கு தமிழ் புரியாதுன்னு நெனச்சிட்டு எப்படியெல்லாம் என்னை கேலி செய்வீங்க? எனக்கு கேக்காதுன்னு நெனச்சிட்டு ஃபோன்ல எத்தன பேர் வச்சீங்க எனக்கு? ஆட்டுக்கார அலமேலு, பரவை முனியம்மா, என்னது அது, அபிதகுஜலாம்பாள்....! Very funny!!  எனக்கு ஒரே சிரிப்பா இருக்கும்,”

 

அந்த ஒரே சிரிப்ப அப்படியே maintain பண்ணுங்க. நான் ஒரு உண்மைய உங்ககிட்டே சொல்லியாகனும்”

 

“உண்மையா? என்னது?”

 

‘இல்ல, நான் உங்களை கேலி செஞ்சதெல்லாம் உங்களுக்கு தமிழ் புரியாதுன்னு நெனச்சு செஞ்சதில்ல. நீங்க தமிழ் பொண்ணுன்னு தெரிஞ்சு செஞ்சதுதான், அந்த பேரைச்சொல்லி கூப்பிட்டதுகூட வேணுமின்னே! உங்களுக்கு கேக்கணும்னே கூப்பிட்டதுதான்!”

 

“அடப்பாவி....”

 

“இல்லங்க நான் அப்பாவி! எனக்கு Telepathy சொல்லுச்சு, வேலையில்லாத நேரத்துல அந்த பொண்ணு ரொம்ப கவலைப்படுது, நீ கவலைப்படாம இந்தர் உன்னை பாத்துக்கறான். அந்த தமிழ் பொண்ணு கவலைக்கு யார் ஆறுதல்? யார் ஆறுதல்? யார் ஆறுதல்? னு அசரீரி வேற ஒவ்வொரு வார்த்தையையும் மூணு தடவ ரிப்பீட் பண்ணி echo effect -ல கேட்டிட்டிருந்திச்சு. அதான் ஆபத்துக்கு பாவமில்லைன்னு....!”

 

“களவானிப் பயலே, நல்லா கதை கட்டறீங்க!”

 

“ஆமாங்க, தியரி பேப்பர்ல எல்லாம் நிறைய மார்க் வாங்கியிருக்கேன்!” -ன்னு நான் சொன்னதுக்கு சிரிக்கறா சிரிக்கறா அப்படி சிரிக்கறா.

 

“OK ங்க, இந்த பஞ்சாயத்தை இப்போதைக்கு ஒத்தி போடுவோம். என் colleagues கிளம்பறாங்க, என்னை கூப்பிடறாங்க. நான் போகட்டுமா?” -ன்னு கேட்டு விடைவாங்கி ஃபோனை வைக்கறா சங்கமித்ரா.

 

பாலைவனத்துல தாகத்துல வாடி வதங்கிட்டிருந்தவனுக்கு பாலைவனச்சோலையா அமைஞ்சது சங்கமித்ராவோட இந்த ஃபோன் கால். நான் உற்சாகத்தில் இருக்கறத என்னால உணர முடியுது. மனசு லேசானது. கவலைகள் மாயுது. நம்பிக்கை கூடுது.

 

திடீருன்னு திரும்பவும் ஃபோன் மணி அடிக்குது. திரும்பவும் சங்கமித்ராவான்னு சந்தேகத்தோட ஃபோனை எடுத்தா, அது ஒரு இண்ட்டெர்வியூ கால்!

 

ரொம்ப கேஷுவலா, பதட்டமே இல்லாம, positive attend செய்யறேன். 2nd round interview இருக்குன்னும் அடுத்தநாள் அதுக்காக கூப்பிடறதாவும் சொல்லி phone ஐ வச்சாங்க. இந்த இண்ட்டெர்வியூ கண்டிப்பா கிளியர் ஆயிடும்னும் ஒரு நம்பிக்கை பொறக்குது. இந்த project கிடைச்சதுன்னா கண்டிப்பா சங்கமித்ராக்குதான் நன்றி சொல்லணும். அவகிட்டே பேசறதுக்கு முன்ன இருந்த negative mood attend பண்ணியிருந்தா ஒருவேளை இவ்வளோ நல்லா பண்ணியிருக்க முடிஞ்சிருக்காது.

  

அன்னைக்கு சாயந்திரம் சங்கமித்ராகிட்டேயிருந்து திரும்பவும் ஃபோன் வந்தது.

 

எடுத்ததும்,

Hello நான் தான்! சங்கமித்ரா. என் Metro miss ஆயிடுச்சு, அடுத்த Metro க்கு இன்னும் அரைமணி நேரம் wait பண்ணனும். என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டே இருந்தேன். இந்த public phone கண்ணுல பட்டுச்சா, உங்க ஞாபகம் வந்துச்சு. சரி கூப்பிட்டு பாக்கலாமேன்னு கூப்பிட்டேன்! தொந்தரவுக்கு மன்னிக்கவும்!”

 “அடடா! இதுல என்னங்க தொந்தரவு? நீங்க எத்தனவ தடவ கூப்பிட்டாலும் சந்தோஷம்தான்.”

 

ஓஹ், ரொம்ப தேங்க்ஸ்!”

 

Actual -ஆ, I have a news to share with you. எப்படி தெரியப்படுத்தறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன் கரெக்ட்டா call செஞ்சுட்டீங்க!”

 

ஆங்.. பாத்தீங்களா. எனக்கும் Telepathy சொல்லுச்சு. என்னமோ விஷயம் இருக்குன்னு, அதான் Call செஞ்சேன். சொல்லுங்க, சொல்லுங்க, என்ன விஷயம்?”

 

நீங்க மத்தியானம் கூப்பிட்டு வச்ச கொஞ்ச நேரத்துல ஒரு interview call வந்தது. Frist round clear பண்ணியாச்சு, நாளைக்கு இன்னொரு round இருக்கு!”

 

அட, வெரிகுட்! Congratulations!”

 

இருங்க இருங்க, அவசரப்படாதீங்க, இன்னும் interview clear ஆகல, இன்னொரு   round இன்னும் பாக்கி இருக்குது!”

 

அதெல்லாம் நீங்க clear பண்ணிடுவீங்க. இந்த project உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கத்தான் போகுது தைரியமா அடுத்த round attend பண்ணுங்க!"

 

சொல்லிட்டீங்கல்ல? தைரியமா attend பண்ணிடலாம்!”

 

"ஒருவேளை மனசுல தைரியம் குறையற மாதிரி இருந்தா என்னை நினைச்சுக்கோங்க..." - ன்னு சங்கமித்ரா சொன்னத கேட்டதும் உச்சிலருந்து உள்ளங்கால் வரைக்கும் மின்சாரம் பாயுறமாதிரி புரியாத ஓர் உணர்வு ஜிவ்வ்....வுங்குது! பதில் ஏதும் சொல்ல வார்த்தை வராம விக்குது.

 

அது அவளுக்கும் தெரியவந்ததோ என்னவோ, இல்ல, சங்கமித்ராவுக்கே வேலை கிடைச்சிருக்கு எனக்கு கிடைக்காதான்னு நினைச்சுக்கோங்க. தைரியம் வரும்!" ன்னு விளக்கம் உரைக்கறா!.

 

ஆனாலும், என்னல சட்டுன்னு இயல்பு நிலைக்கு திரும்ப முடியல. பரிதவிப்புல என்ன பதில் சொல்லறதுன்னும் தெரியல. என் மௌனம் எங்க ரெண்டு பேத்தையுமே தர்மசங்கடத்துல ஆழ்த்துது.

 

"சரிபா! ரயிலுக்கு நேரமாச்சு நான் ஓடுறேன்! Good luck for tomorrow" ன்னு சொல்லி போன வைக்கறா.

 

திரும்பவும் தாக்குது ஜிவ்வ்வ்வ் feeling! நெஞ்சு சும்மா ஜில்ல்ல்லுங்குது. புதுசா ‘சரிபா’ ங்கறா. "ங்க" மாறி "பா" ஆகுது. இது, நெருக்கத்த கூட்டுது இடைவெளிய குறைக்குது.

 

இந்த ‘ஜிவ்’ வையும் ‘ஜில்’ லையும் முழுசா இரசிக்க ஆசை இருந்தாலும் ஒருவேளை இதெல்லாம் பேச்சு வாக்குல எதார்த்தமா வந்து விழுந்ததாக்கூட இருந்திருக்கலாங்கற சந்தேகத்துக்கும் இடம்கொடுத்து கொஞ்சம் ஜாக்கிரதையா கட்டுக்கோப்பா, கட்டுப்பாட்டோட நிக்கேன்!

 

அடுத்த நாள், மதியமே கூப்பிட்டாள்!

 

சொல்லுங்க, How was the Interview?”

 

“Interview… clear ஆயிடுச்சு…!”

 

வெரிகுட், Congratulations! எனக்கு தெரியும், எனக்கு நம்பிக்கை இருந்துச்சு, நான் நேத்தே சொன்னேனே நீங்க இந்த இண்ட்டெர்வியூ க்ளியர் பண்ணிடுவீங்கன்னு, எப்போ start ஆகுது project? எப்போ join பண்ணணும்?”

 

Join பண்ணறதப்பத்தி யோசிச்சிட்டிருக்கேன். இன்னும் முடிவு பண்ணல?”


ஏன் என்ன ஆச்சு? குரல்லயும் உற்சாகம் miss ஆகுதே! என்ன விஷயம்?”

 

HR பேசினாங்க. Rate ரொம்பவும் கொறவா சொல்லறாங்க மித்ரா!”

 

ஓஹ்…”

 

Ohio-ல ஏதோ Wooster ங்கற இடமாம். Cost of living லாம் ரொம்ப கம்மியாம். அந்த area-வ பொறுத்தவரைக்கும், இப்ப அவங்க offer பண்ணறது best rate-ஆம். ஆனா, அது நான் வாங்கிட்டிருந்ததை விட ரொம்ப கம்மி. ஒரே குழப்பமா இருக்கு. இப்போதைக்கு இந்த offer-ஐ எடுத்துட்டு அப்புறமா வேற நல்லதா தேடலாமா என்ன பண்ணலாம்னு ஒரே யோசனையா இருக்கு…”

 

யோசிக்கவே வேண்டாம். No சொல்லிடுங்க!” – ன்னு பட்டுன்னு சொல்லறா சங்கமித்ரா. நான் திடுக்கிட்டுப்போறேன். அவங்க சொன்ன rate உங்களுக்கு கம்மின்னு தோணுச்சுன்னா ஏன் யோசிக்கணும்?”

 

இல்ல, இத்தனை நாளா வேலையே இல்லாம இருந்திட்டு இப்போ கிடைச்ச வேலையில Rate கம்மின்னு யோசிக்கறதெல்லாம் சரிதானான்னு தெரியல!”

 

அதுல என்ன தப்பு? உங்க தகுதிக்கு சரியான salary இல்லைன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா வேணாம்னு சொல்லறதுல்ல தப்பேதும் இருக்கறதா எனக்கு தோணல. வேணும்னா, clarity க்கு இன்னும் கொஞ்சம் ஆழமா detailed-ஆ எல்லா aspects ஐயும் include பண்ணி Pros n cons லாம் list out செஞ்சு analyze பண்ணி பாருங்க, சரியான முடிவு கிடைக்கும்.”

 

அதையெல்லாம் செஞ்சுட்டேன். அந்த Analysis-ன் படி இந்த offer இவங்க சொல்ற rate-க்கு ஒத்துககறதுல்ல அர்த்தமில்ல.”

 

‘அப்புறம் என்ன?”

 

“ஆனா இந்த situation-ல அப்படி ஒரு முடிவு எடுக்கறது சரியா இருக்குமாங்கற சந்தேகத்துக்கு பதில் தேடறதுதான் challenging-ஆ இருக்கு!”

  

அது challenging தான். அந்த challenge-ஐ சமாளிக்கறதுக்குதான் நம்பிக்கையும், தைரியமும், உறுதியும் அவசியம். எல்லா factors-ஐயும் consider பண்ணுங்க. Market is getting better. Interviews இப்போ வர ஆரம்பிச்சிருக்கு, இதைவிட better-ஆன offers வரவும் வாய்ப்பிருக்கு...”

 

அது சரிதான். ஆனா உங்களுக்கே தெரியும்ல, ஒத்த ரூவா கூட குடுக்காம இங்கே தங்கிட்டிருக்கேன். கொஞ்ச நாள்னா பரவாயில்ல இப்பவே பல மாசங்கள் ஆயிடுச்சு. இந்த situation-ல வந்த வேலைய வேணாம்னு எப்படி சொல்லறது?”

 

உண்மைதான், ஆனா, உங்க Room mates உங்ககிட்டே ஒத்த ரூவா கூட வாங்காததால, under compulsion நீங்க இந்த low rate job-க்கு ஒத்துக்கறீங்கன்னா, அவங்க இத்தனை நாள் உங்களை support பண்ணினதுக்கு அர்த்தம் இல்லாம போயிடாதா? அவங்க support பண்ணறதுதான் இந்த low rate job ஐ ஒத்துக்க உங்களை compel செய்யுதுன்னா, அவங்க பண்ணறது support இல்லையே, நெருக்கடிதானே! அப்படித்தானே அது அர்த்தம் ஆகும்? நம்ம மனசுக்கு திருப்தியான முடிவ நம்மால எடுக்க முடியலேங்கறதுக்காக பழிய அவங்கமேல போடறது நியாயம்தானான்னு யோசிச்சு பாருங்க!”

  

நீங்க சொல்லறது புரியுது. நான் யோசிக்கறேன்.”

 

யோசிங்க. நான் சொன்னதெல்லாம் என்னோட பார்வைதான். சில situations- க்கு பொறுமையோட வளைஞ்சு குடுத்து போறது அவசியம். சில situation-ஐ தைரியத்தோடயும், நம்பிக்கையோடயும் எதிர்த்து நின்னு சமாளிக்கறது அவசியம். உங்க situation என்னன்னு உங்களுக்குதான் முழுசா தெரியும். யோசிச்சு தெளிவான முடிவா, நல்ல முடிவா எடுங்க. I will call you tomorrow!” ன்னு சொல்லி ஃபோனை வைக்கறா சங்கமித்ரா.

 

அவ சொன்னதயெல்லாம் திரும்பவும் அசை போடறேன். அது என்னை இதுவரை யோசிக்காத கோணத்துல விஷயங்களை யோசிக்க வைக்குது. இத்தனை நாள் ஆனது ஆயாச்சு, மனசு தளர்ந்து கிடைச்சத எடுக்கறத விட, மனச தளரவிடாம உறுதியா நின்னு நல்ல ரேட்ல நல்ல வேலை வாங்கறதுதான் சரியானதுன்னு முடிவு செய்யறேன்.

 

அடுத்தநாள்!

 

மத்தியானம் சங்கமித்ரா கூப்பிடுவான்னு காத்திருந்தேன். ஃபோன் ஏதும் வரல. சாயந்திரம் வழக்கமா கூப்பிடர நேரம் கடந்தும் அவ கால் வராததுனால கொஞ்சம் dull லா feel ஆகுது. வழக்கத்தைவிட ரொம்ப தாமதமா போன் செய்யறா சங்கமித்ரா. படபடத்த குரல்ல பேசறா!

 

"சாரிபா! இன்னைக்கு காலையில இருந்து ஒரு production problem-த்தோட மாரடிக்க வேண்டியதா போச்சு. சாயங்காலம் இந்த பஸ் காரன் வேற லேட் பண்ணிட்டான். என் friend விமலா இருக்கால்ல, அவளுக்கு எங்கேயோ போணுமாம். எனக்காக காத்திட்டிருக்கா. அடுத்த அஞ்சு நிமிஷத்துல இன்னொரு பஸ் பிடிச்சு போகனும். அதுக்குள்ல உங்ககிட்டே பேசிட்டு போயிடலாம் நு போன் பண்ணேன். சீக்கிரம் சொல்லுங்க, யோசிச்சீங்களா? என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?"

 

"நீங்க சொன்னமாதிரி நல்ல முடிவு தான் எடுத்திருக்கேன். Wait பண்ணி வேற நல்ல project-join பண்ணலாம். இந்த Ohio project வேண்டாம்!"

 

“Very good! நல்ல முடிவு! I am happy. Don’t worry இந்த முடிவு எடுத்ததுக்கு நிச்சியமா நீங்க வருத்தப்படமாட்டீங்க!”

 

சங்கமித்ரா இப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் தெம்பளிக்குது. சரியான முடிவைத்தான் எடுத்திருக்கோம்னு திருப்தியும் வருது. சரியான முடிவு எடுக்க எனக்கு பெரிய help செஞ்சிருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ் சங்கமி!”–ன்னு நன்றி சொன்னேன்.

  

நான் சொன்னதை consider செஞ்சதுக்கு உங்களுக்கும் Thanks.’–ன்னு சொன்னவ திடீர்ன்னு பரபரப்பாகி, “சரிபா, பஸ் வருது நான் ஓடறேன். Have a good weekend. நான் Monday call பண்ணறேன்” –ன்னு சொல்லி ஃபோன வைக்கறா.

 

அடுத்த ரெண்டு நாள் சனி, ஞாயிறுங்கறதே எனக்கு அப்பதான் ஞாபகம் வருது. இனி ரெண்டு நாள் கழிச்சுதான் சங்கமித்ராகிட்டே பேசமுடியுங்கற எண்ணம் மெல்லிசா ஒரு சோகத்தை மனசுல உண்டாக்குது. அந்த சனியும், ஞாயிறும் சங்கமித்ரா கிட்டே பேச முடியாட்டியும், அவளைப் பத்தின விஷயங்கள்தான் மொத்த மனசையும் முழுசா ஆக்கிரமிச்சிருக்கு. கேலியும், கிண்டலுமா பேசிட்டிருந்த பொண்ணு, என்னோட சிக்கலான தருணத்துல, இவ்வளோ பக்குவமா ஆலோசனை சொன்னதை நினைக்கும்போது ஆச்சரியமா இருக்கு. Very interesting character-ன்னு தோணுது.

 

சங்கமித்ராவ பத்தி நினைக்கறப்பல்லாம் ஒரு “ஜில்’ feeling ஜிவ்” வுன்னு மனசு பூரா பரவறத என்னால உணரமுடியுது. இந்த மனம் ஒரு கூறு கெட்ட குரங்கு, அது இப்படித்தான் காரணம் இல்லாம கரணம் போட்டிட்டு கிடக்கும்னு கடந்து போக நெனச்சாலும், அது கொக்குமாதிரி ஒத்தக்கால்ல, அதே இடத்துல, ஆணி அடிச்சாப்ல, நின்னு தொலைக்குது. அவ கிட்டே பேச முடியாத இந்த ரெண்டு நாளும் நத்தைய விட மெல்லமாத்தான் நகர்ந்தும் போகுது.

 

இந்த ஜிவ்’ -வையும், ஜில்’ -லையும் இரகசியமா இரசிக்கலாம்! ஆனா இதைச்சொல்லி ரொம்ப எதார்த்தமா பழகிட்டிருக்கற சங்கமித்ராவை குழப்பிடக்கூடாது. அது எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிடும், அவளோடான நட்பே பாழாகிடும். தப்பாயிடும்! திங்கள் கிழமை அவ call பண்ணும்போது ஜாக்கிரதையா பேசணும். அவளை இப்படி miss பண்ணின விஷயத்தை உளறிக்கொட்டக்கூடாதுன்னு உறுதி எடுத்துக்கிட்டேன். 


திங்கள் காலையில இருந்தே என் காத்திருப்பு தொடங்குது. சங்கமித்ரா வழக்கம்போல சாயந்திரம் கூப்பிடறா, "ஹலோ!" – ன்னு சொன்னவ, மேற்கொண்டு பேச முடியாம மூச்சு வாங்கறா!

 

"என்னங்க இப்படி மூச்சு வாங்குது?"

 

"ஓடிவந்தேன்! இன்னைக்கும் பஸ்காரன் லேட் பண்ணிட்டான். வழக்கமா நான் பேசற போன்ல எவனோ ஒரு பக்கி பேசிட்டிருக்கான். இந்த phone கொஞ்சம் தூரமா இருக்கு அதான் ஓடி வந்தேன்…!" –ன்னு சொல்லிட்டு இன்னும் அதிகமா மூச்சு வாங்கறா.

 

"அடடா! இதுக்காக ஏன் சிரமப்படறீங்க? இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு பேசினாப்போகுது!"

 

"நீங்க வேற, இந்த evening calls addiction மாதிரி ஆயிடுச்சுன்னு நினைக்கறேன். ரெண்டு நாளா call பண்ண முடியாம எதையோ பறிகுடுத்த மாதிரி இருந்துச்சு. ஐயய்யோ, weekend முடியுதே Monday வருதே office போகனுமேன்னு இருந்தது போய், எப்படா Monday வரும்னு காத்திருக்க வேண்டியதாயிடுச்சு!” -ன்னு அவ சொன்னதை கேட்டதும் எனக்கு மூச்சு வாங்க ஆரம்பிக்குது. அவளே தொடர்ந்து,

 

"ஏன் கேக்கறீங்க, Office-க்கு போனாலும் வேலை ஓடமாட்டேங்குது. எப்படா சாயந்தரம் ஆகும் போன் பண்ணலாம்னு மனசுல ஒரே பரபரப்பு. College time-ல கூட இப்படியெல்லாம் ஆனதில்ல, வித்தியாசமா இருக்கு இந்த feel! ஒரு மாதிரி Thrilling ஆ இருக்கு. நல்லாயிருக்கு. I am just enjoying it!" -ன்னு சங்கமித்ரா சொல்ல, சொல்ல என்னை திரும்பவும் ஆக்கிரமிக்குது அதே ஜில்’ ஜிவ்’ feelings. இந்த தடவ கூடுதல் ‘ஜில்’! ஒருமாதிரி freezing ஜில்’! அதுல நான் உறஞ்சு நிக்க,

 

அப்புறம் சொல்லுங்க, how was your day? புது interview ஏதும் வந்ததா?” -ன்னு இயல்பா கேக்கறா சங்கமித்ரா.

 

நான் பயணிச்ச உணர்வுகள்லதான் அவளும் பயணிச்சிருக்கா. அதை வெளிப்படையா தயக்கமில்லாம சொல்லிட்டு இயல்பா இருக்கா. நான் தான், ஜாக்கிரதையா இருக்கணும், குழம்பிடக்கூடாது, குழப்பிடக்கூடாதுன்னு over hype குடுத்துட்டு இயல்பு நிலைக்கு வரமுடியாம உறைஞ்சுபோய் நிக்கறேன்.

 

ஹலோ! என்ன பதிலை காணோம்? Interview ஏதாவது வந்துச்சான்னு கேட்டேன். கேக்குதா?” – ன்னு திரும்பவும் அவ கேட்க,

 

ம், ஆமா. ரெண்டு interview இருந்துச்சு. அதுல ஒன்னு promising-ஆ இருக்கு. நாளைக்கு நேர்ல வர சொல்லியிருக்காங்க!” - ன்னு பதில் சொல்லறேன்.

 

“oh! very good. எங்கே client? பக்கமா தூரமா?”

 

ரொம்ப தூரம் இல்ல, Connecticut தான். என்ன ஒரு ரெண்டு மணிநேரம் drive அவ்வளோதான்.”

 

அப்ப பரவாயில்ல, உங்க friends-அ விட்டு ரொம்பதூரம் போகவேண்டாம் நினைச்சா வந்து பாக்கற தூரம்தான்.”

 

ஆமாங்க, அது ஒரு ஆறுதல். நான் உங்களுக்குதான் பெரிய thanks சொல்லணும். இல்லாட்டி இந்நேரம் Ohio-ல உக்காந்து அழுதிட்டிருந்திருப்பேன்.”-ன்னு சொல்லவும்,

 

அப்படி உங்களை அழ விட்டிடுவோமா? நாங்கள்லாம் பின்னே எதுக்கு இருக்கோம்?” - ன்னு சொன்னவ “சரிபா, Metro-க்கு time ஆகுது. நான் திரும்ப ஓடணும். Good luck for tomorrow! வைக்கட்டுமா? நாளைக்கு கூப்பிடறேன்!” - ன்னு சொல்லி ஃபோனை வைக்கறா.

 

இன்னைக்கு பேசினதுல நிறைய விஷயங்கள் சிந்திக்க வேண்டியிருக்குன்னு மேல் மனசு சொன்னாலும், எதையும் எதைப்பத்தியும் சிந்திக்கத் தேவையில்லை, சங்கமித்ராபோல just enjoy this feeling ன்னு உள்மனசு முன்மொழிய, அதுதான் சரின்னு நானும் அதையே ஆமோதிச்சு வழிமொழியறேன்.

 



ரு தேக்கத்துக்கப்புறம் எல்லாம் சீராகுது. எதிர்பார்த்த மாதிரியே அந்த Connecticut project கிடைக்குது. பொறந்த வீட்ட விட்டு புகுந்த வீட்டுக்குப் போற முந்தைய காலத்து மணப்பெண்களின் மனநிலைல ஏகப்பட்ட சோகத்தோட என் உயிர் நட்புகளை பிரிஞ்சு போறேன்.

 

அந்த அந்தி மயங்கும் நேரத்து கார் பயணம் முழுக்க மனசுல பாரமும் கண்ணுல ஈரமுமாத்தான் இருக்கு. புது இடம், புது வேலை, புது friends ன்னு எல்லாமே புதுசு. ஒரே ஆறுதல் Weekend வந்து போகலாங்கறது மட்டும்தான்.

 

புது இடத்துல, பொட்டி படுக்கையெல்லாம் வச்சிட்டு, புது Room mates கிட்டே பேசிட்டு இருக்கும்போது வேலுவும் கண்ணனும் ஃபோன் செய்யறாங்க. எடுத்து ‘ஹலோ” ன்னு சொல்லும்போதே குரல் தழுதழுக்குது. அரும்பாடுபட்டு அழுகைய கட்டுப்படுத்திட்டு பேசறேன். “சாப்பிட்டாச்சா” ன்னு கேக்கறாங்க. “இன்னும் இல்ல, சாப்பிடத் தோணல அதனால சாப்பிட்டுதான் வந்தேன்” னு சொல்லிட்டேன்னு சொல்லவும், “ஏன் அப்படி சொன்னீங்க? எத்தனை நாளைக்கு சாப்பிடாம இருப்பீங்க, போய் சாப்பிடுங்க” ன்னு வேலு சொன்னத கேட்டு என் கண்ணெல்லாம் நெறம்பி வழியுது.  

 

அவங்ககிட்டே பேசிட்டு, பால்கனியில எதையோ யோசிச்சபடியே எங்கேயோ வெறிச்சுபாத்ததபடி நின்னிட்டிருந்தப்போ இன்னொரு call வந்தது. சங்கமித்ரா கிட்டேயிருந்து!

 

இந்நேரத்துக்கு எங்கேயிருந்து call செய்யறீங்க? நீங்க நாளைக்குதான் கூப்பிடுவீங்கன்னுல நெனச்சேன்?”

 

விமலாவும் நானும் சும்மா ஒரு walk போலாம்னு வெளியே வந்தோம். சரி, நீங்க reach ஆயிட்டீங்களா என்ன ஏதுன்னு call பண்ணி கேட்டிடலாம்னு தோணுச்சு, கூப்பிட்டேன். எப்படி இருக்கு புது ஊர், புது இடம்”? 


ம், பரவாயில்ல. தமிழ் பசங்க, மணிவண்ணன், முருகன்னு ரெண்டு பேர் இருக்காங்க. ரொம்ப formal-ஆ ‘Hello’, ‘hai’ ன்னு அறிமுகம் நடந்துச்சு, rules எல்லாம் சொன்னாங்க. ஒரு bathroom தானாம், அதனால நான் காலையிலே ஆறு மணிக்கு முன்னாடியே ரெடி ஆகி bathroom-free பண்ணி குடுத்திடனுமாம். வாரத்துல ஒரு நாள் நான் சமைக்கணுமாம். புதன்கிழமைய எனக்கு ஒதுக்கியிருக்காங்க. இப்படி schedule போட்டு rule போட்டெல்லாம் இதுவரைக்கும் நாங்க இருந்ததில்ல. ஒரு வீடுங்கற feel-லே வரமாட்டேங்குது மித்ரா!”

 

வந்து மூணு மணிநேரத்துக்கு மேல ஆகியும் நீங்க இன்னும் முழுசா இங்க வந்து சேரல. அதுதான் பிரச்சினை. அங்க மாதிரியே இங்க இருக்காதுல்ல, ஆரம்பத்துல எல்லாம் இப்படி formal-ஆ தான் இருப்பாங்க. நாளாக ஆக பழகும்போது இந்த feel எல்லாம் மாறும். இந்த பசங்களும் சீக்கிரமாவே உங்ககிட்டே ரொம்ப close ஆயிடுவாங்க. அதுவரைக்கும் நீங்க homesick ஆகாம நான் பாத்துக்கறேன்.” – ங்கறா. 

 

சொன்னதோட நிக்கல, சொன்னதை செயல்படுத்தவும் செய்யறா. ஒருநாளைக்கு மூணு நாலு தடவ கூப்பிடறா. Public phone use பண்ண change ஐ ரெடி பண்ணறதே பெரிய challenge ஆகிப்போனதால செல்ஃபோனும் வாங்கினா.

 

என்னோட ஒருநாள்ல நடக்கற ஒவ்வொரு விஷயத்தையும் அவகிட்டே பகிர்ந்துகிட்டிருக்கேன். அதையெல்லாம் ரசிச்சு ரசிச்சு கேப்பா,


 ஏய் இன்னிக்கு சமையல் உங்க turn-ல? என்ன சமைச்சீங்க?”

 

சாம்பாரும், முட்டைகோஸ் பொரியலும் செஞ்சேன் மித்ரா. ரெம்ப காரமா இருக்குன்னு feel பண்ணாங்க. Next time, காரத்தை கொஞ்சம் குறைக்க சொல்லியிருக்காங்க. எனக்கு ரொம்ப கஷ்ட்டமா போச்சு.”

 

Bachelor ரா இருந்து room மாத்தி போறதே உங்களுக்கு இத்தனை கஷ்ட்டமா இருக்கே, நாங்கல்லாம் கல்யாணம் ஆகி மொத்தமா வேற இடத்துக்கு போகும்போது எப்படி இருக்கும்?”

 

ஐயோ, உண்மையிலேயே அதைத்தான் நானும் நினைச்சேன் மித்ரா. உண்மையிலேயே அது பெரிய விஷயம்தான். பெண்கள் மேல உண்மையிலேயே பெரிய மதிப்பு வருது. என்னாலல்லாம் முடியவே முடியாது!”

 

ம்ம், உங்களுக்கு கல்யாணம் ஆகும்போது இப்ப நீங்க படற அவஸ்த்தைய ஞாபகம் வச்சுக்கோங்க. வரப்போற பொண்ணுக்கு ஆதரவா, அனுசரணையா இருங்க…”

 

ஆகட்டும் தாயே!”

 

அடுத்த வாரம் நான் help பண்ணறேன். வித்தியாசமா ஏதாவது செஞ்சு அசத்திடலாம்!”

 

சங்கமித்ரா சொல்லித்தந்த recipe ல நான் சமைச்ச Mushroom kidney beans curry யும், அவ சொல்லித்தந்த method ல வச்ச சாம்பாரும் எல்லோருக்கும் பிடிக்குது. அவங்களுக்கு மட்டுமில்ல, எனக்குமே ரொம்ப பிடிச்சிருக்குது. என் சமையலுக்கு ரூம்மேட்ஸ் கிட்டேயிருந்து பாராட்டும் கிடைக்குது.

 

என்னோட ஒவ்வொரு செயல்லயும், செயல்பாட்டுலயும் ஏதோ ஒரு விதத்துல சங்கமித்ராவோட அக்கறை உள்ளடங்கியிருக்கு.  அதீத அக்கறையும், அதிக ஈடுபாடும் சிலநேரங்கள்ல குறுக்கீடா மாறிடும் அபாயம் இருக்கு. ஆனா, சங்கமித்ராவோட அக்கறையும் ஈடுபாடும் எனக்கு குறுக்கீடா தோணல. ஏன்னா, எதுல அக்கறை காட்டணும் அதுல எவ்வளவு அக்கறை காட்டணுங்கற தெளிவு அவகிட்டே இருக்கு.

 

அவ சொன்னதுபோலவே, மணியும் முருகனும் என்கிட்டே நெருக்கமா பழகறாங்க. இந்த வீடும் எனக்கு இப்போ “வீடு” போல தோண ஆரம்பிக்குது. சில formalities தானாகவே உடைஞ்சு மறைஞ்சு போகுது. ரூம்மேட்ஸ் கிட்டே மட்டும் இல்ல, சங்கமித்ராகிட்டேயும்தான். அவளை உரிமையோட ‘நீ’, ‘வா’, ‘போ’ ன்னு ஒருமையிலே கூப்பிட ஆரம்பிச்சேன். இந்த மாற்றம் இயல்பா நடக்குது.

 

உங்களுக்கு நான் ஒரு பேர் வைக்கட்டுமா?” -ஒருநாள் கேட்டா சங்கமித்ரா!

 

ஏன் இப்போ இருக்கற பேர் பிடிக்கலையா?”

 

அப்படியில்ல, எனக்கு ரொம்ப close ஆ இருக்கறவங்களுக்கு நான் ஒரு பேர் வைப்பேன். உங்களுக்கும் அப்படி ஒரு பேர் வைக்கணும்னு தோணுது. வைக்கட்டுமா?”

 

Close ஆ இருக்கறவங்க ஏதாவது கேட்டா No சொல்லக்கூடாதுன்னு பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கண்ட கண்ட இடத்துலல்லாம் சொல்லியிருக்காங்க. அதனால நானும் No சொல்ல முடியாது. வச்சுக்கோ!”

 

மாதவன்!”

 

மாதவனா? ஏதோ modern-short-sweet-ஆ, stylish-ஆ ஒரு பேரை வைப்பேன்னு பாத்தா ரொம்ப common-ஆன பேரை வச்சுட்டியே!”

 

எனக்கென்னமோ இந்த பேர் உங்களுக்கு ரொம்ப பொருந்தும்னு தோணுது. நான் உங்களை மாதவ்’னு கூப்பிடுவேன். அது short-sweet-ஆ, stylish-ஆ இருக்கும். Ok வா?”

 

அதான், short, sweet, stylish ன்னெல்லாம் சொல்லி மார்க்கெட் பண்ணிட்டியே. அப்புறம் என்ன double okay….!”

 

எனக்கு ‘மாதவ்’ -னு பேர் சூட்டறா!

 

நெருக்கமா இருக்கறவங்ககிட்டே ஒளிவு மறைவு தேவையில்லைன்னு சொல்லுவா. நல்லதோ, கெட்டதோ, சரியோ, தப்போ எதையும் வெளிப்படையா பேசிட்டா பிரச்சினை இல்லைன்னு சொல்லுவா. அவளும் வெளிப்படையாவே பேசுவா!



மாதவ்…”

 

ம்ம்…”


 என் விமலா இருக்கால்ல, அவ இன்னிக்கு என்கிட்டே ஒரு விஷயம் கேட்டா!”

 

நம்ம ரெண்டு பேரும் வெறும் friends தானா? இல்ல நமக்குள்ல வேற ஏதாவதான்னு கேட்டாளா?”

 

அட, அது எப்படி உங்களுக்கு தெரியும்?”

 

இது பொதுவாவே எல்லாருக்கும் வரக்கூடிய சந்தேகம்தானே? விமலா ஒரு விஷயத்தை உன்கிட்டே கேட்டு அதை நீ என்கிட்டே சொல்லணும்னா அது இதுவா இருக்கலாங்கறது ஈஸியா guess பண்ணக்கூடிய விஷயம்தான்!”

 

ம்! ஆனா, ஏன் அப்படி சந்தேகப்படனும்?!”

 

அதெல்லாம் அப்படித்தான். ஏன் அப்படி? ன்னெல்லாம் கேக்க முடியாது. கேட்டாலும் பதில் வராது. சொல்லப்போனா இதுக்கு பதிலே கிடையாது. நீ வேணும்னா விமலாட்ட கேட்டுப்பாரேன், அவளுக்கும் சொல்லத்தெரியாது. எனக்கும் இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வந்திருக்கு. அதும் மத்தவங்க மேல கூட இல்ல, என்னை நானே சந்தேகப்பட்டிருக்கேன்னா பாத்துக்கயேன். இதெல்லாம் மனுஷனுக்கு இயல்பாவே இருக்கக்கூடிய basic curiosity! இந்த curiosity தான் மனுஷன் முன்னேறுறதுக்கும், அவனோட பரிணாம வளர்ச்சிக்கும் உதவற முக்கிய கருவி. ஆனா, unfortunately இதுக்கு அடுத்தவங்க பிரச்சினைல மூக்கை நுழைக்கற இந்த மாதிரியான downside-ம் இருக்கு. Sideeffect-ன்னு வச்சுக்கயேன்!”

 

ஒரே குழப்பமா இருக்கு மாதவ்!”


 

என்ன குழப்பம்?”

 

சில நேரங்கள்ல confuse ஆகுது!”

 

ஏன் English-confuse பண்ணி தமிழ்ல குழப்பிக்கற?”

 

எனக்கு சில ஆசைகள் இருக்கு. என் சம்பாத்தியத்துல எங்க அப்பா அம்மாக்கு ஏதாவது பண்ணணும். அவங்க ரெண்டுபேரையும் இங்கே கூட்டிவந்து கொஞ்சநாள் என்னோட வச்சு பாத்துக்கணும்.”

 

நல்ல ஆசைகள்தான். ஆனா ஏன் கொஞ்சநாள்னு கஞ்சம் புடிக்கற? காலம்பூரா பாத்துக்கலாமே! நீ நல்ல வேலையில இருக்க, சம்பாதிக்கற, அப்புறம் என்ன?”

 

நான் கஞ்சம் புடிக்கல. கொஞ்சநாளாவது என்னால பாத்துக்க முடிஞ்சதுன்னா அதுவே பெரிய விஷயம்தான். பசங்கமாதிரி எங்களுக்கு பெரிய previleges-லாம் இல்ல. இருக்கற கொஞ்ச நஞ்சமும் கல்யாணம் வரைக்கும்தான். இதுல எப்படி காலமெல்லாம்  பாத்துக்கறது? கல்யாணத்த விடுங்க, அதுக்கு முன்னாடியே என் தம்பி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டான்னா அந்த சின்ன வாய்ப்பும் பறி போயிடும்!”

 

ஏன் பறிபோக விடறே, உன் உரிமைக்காக போராடு!”

 

ஹஹ்ஹா! இதெல்லாம் பேச நல்லாயிருக்கும் நண்பரே! Practically not possible, ரொம்ப கஷ்ட்டம். யார்கிட்டே போராடறது? யாரை எதிர்த்து போராடறது? எங்க அப்பா அம்மாவை எதிர்த்தா? அப்படீன்னா, பெத்தவங்க மனசு நோகறமாதிரி நடந்துக்கக்கூடாதுங்கற என் சபதம் என்னத்துக்கு ஆகறது?”

 

அப்படீன்னா டபால்னு போராட்டத்தை கைவிட்டிட்டு தொபுக்கடீர்னு கால்ல விழுந்து கெஞ்ச ஆரம்பிச்சிட வேண்டியதுதான்!”

 

ஐயோ…! நான் சீரியஸா பேசிட்டிருக்கேன். இந்தமாதிரி ஏதாவது சொல்லி என்னை சிரிக்கவைக்காதீங்க!”

 

ஏதாவது சொல்லி சிந்திக்கவச்சாதான் பிரச்சினை! சிந்திச்சு குழம்பனும். சிரிக்கதானே வைக்கறேன், யோசிக்காம சிரிச்சிடு குழப்பமும் இருக்காது, Confuse-ம்  ஆகமாட்ட!”

 

அதில்ல…”


பின்ன?”

 

நம்மள்து அழகான friendship!”

 

ஆமா, அதுல no confusion!”

 

இந்த friendship-ல ஒரு thrilling aspect இருக்கறத feel பண்ணியிருக்கீங்களா?”

 

கத்திமேல நடக்கறமாதிரி, காத்துல ஆடற தொங்கு பாலத்துல ஆத்த கடக்கறமாதிரி, கரணம் தப்பினா மரணம்ங்கற நிலையில மயிரிழை கூட பாதை விலகாம பயணிக்கற இந்த பயணத்துல இருக்கற thrill-அ தானே சொல்லறே? அதை நல்லாவே feel பண்ணியிருக்கேன்.”

 

Yes, அந்த Thrilling aspect தான் நம்ம friendship-ஐ அழகாக்குது. அந்த Thrill எப்பவும் நம்ம friendship-ல வேணும், அதுக்கு நம்ம friendship எப்பவுமே friendship ஆதான் இருக்கணும்!”

 

ஆமா, அதுல குழம்பிட்டா அப்புறம் confuse ஆயிடும்!”

 

கரெக்ட். ஆனா, சில நேரங்கள்ல இயல்பாவே மனசுல நெருக்கம் தோணும்…”

 

உண்மைதான் தோணியிருக்கு…”

 

ஆனா நாம குழம்பக் கூடாது…”

 

ஒருத்தரை ஒருத்தர் குழப்பவும் கூடாது…”

 

இந்த விஷயத்துல நம்மளை தவிர வேற யாருமே நமக்கு help பண்ணவும் முடியாது.”

 

Agreed! நாம தான் நமக்கு help பண்ணிக்கணும்…”

 

Yes, நான் தடுமாறுனா நீங்க strong ஆ இருக்கணும். நீங்க தடுமாறுனா நான் strong ஆ இருப்பேன்.”


 

We’ll help each other to help ourselves!”

 

“Wow, அழகா சொன்னீங்க!”

 

அவசரப்பட்டு பாராட்டிடாத, இது சுட்டபழம். ஒரு Bank கோட பழைய tagline, We help you to help yourselves!”

 

மாதவ்..”

 

ம்?”

 

இப்போ எனக்கு எந்த பயமும் இல்ல. நான் சொன்ன, என் ஆசைகள நிறைவேத்தறதுல ஏதாவது தடங்கல் வந்திடுமோங்கற குழப்பமும் இல்ல. நம்ம friendship-ல இருக்கற thrill-ஐயும் என்னால முழுசா இரசிக்க முடியும். ரொம்ப free யா relaxed டா feel பண்ணறேன்.  இப்போ, எந்த குழப்பமும் இல்ல.”

 

குழப்பம் இல்ல சரி, what about confusion?”

 

ஹா.. ஹா! அதுவும் இல்ல! In fact, I am thankful, என் குழப்பத்தையும் பயத்தையும் உங்ககிட்டே எப்படி சொல்லறது? சரியா சொல்லி புரியவைக்க முடியுமா? நீங்க புரிஞ்சுக்குவீங்களான் எனக்கு சந்தேகமாவே இருந்திச்சு. ஆனா, நீங்க ரொம்ப அழகா புரிஞ்சுகிட்டீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!”

 

நீ மனசுல எதையும் மறைக்காம வெளிப்படையா பேசறே. ஒளிவு மறைவு இல்லாம மனசு சொல்லறத பேசறே. எதையுமே நீ அழகா புரியவைக்கறே அதனால அழகா புரிஞ்சுக்கறேன். எப்படி பாத்தாலும் கிரெடிட் உனக்குதான்!”’

 

புகழறீங்க...”

 

ஆமா, தெரியாம பண்ணிட்டேன், மன்னிச்சுக்கோ!” - ன்னு நான் சொன்னதை கேட்டு கலகலன்னு சிரிக்கறா சங்கமித்ரா!

 

அவ புகழ்ச்சிக்கு உரியவள்தான்.

 

ஒரு விஷயத்தை அணுகும் விதம், ஒளிவு மறைவில்லாத, நேரடியான, வெளிப்படையான பேச்சு. எதையும் தெளிவா ஆராயக்கூடிய தன்மை, இதையெல்லாம் பாத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கேன். மொத்தத்துல, மொத்தமா மனச ஆக்கிரமிச்சிருக்கா சங்கமித்ரா. அவ பேச்சு, அவ சிரிப்பு, அவ காட்டுற அன்பு, அக்கறைன்னு எல்லாத்திலயும் அவ தன் முத்திரையை பதிச்சிருக்கா. அவளோடான நட்பு அற்புதமானது.

 

அப்பப்போ, குறுகுறுப்பும், பரபரப்பும், நெஞ்சை இடிக்கும் படபடப்பும் ஆனந்தம் தந்தாலும், மனச தடுமாற வச்சாலும், நட்பைத்தாண்டி எந்த உறவும் இத்தனை சந்தோஷத்த தராதுங்கறத ரெண்டுபேருமே உணர்ந்திருந்ததாலயும், ரெண்டு பேருமே சர்வ ஜாக்கிரதையா இருக்கோம்.

 

அதேநேரத்துல அந்த ஜில்’லையும், ஜிவ்’வையும், அதான், சங்கமித்ரா சொன்ன அந்த thrilling aspects-ஐயும் இரசிச்சிட்டிருக்கோம்.

 

இப்படி தொடர்ந்திட்டிருந்த எங்க பயணத்துல, அந்த தொலைபேசி அழைப்பு ஒரு turbulence-ஐ உண்டாக்குது!

 

 

 

"மாதவ்"

 

"சொல்லு சங்கமி!"

 

"ஒரு bad news பா!"

 

"என்ன ஆச்சு?"

 

"Work contract முடியுது. விசா எக்ஸ்டென்ஷன்ல என்னமோ பிரச்சினையாம்."

 

"என்ன பிரச்சினை?"

 

"என் consulting company என்னமோ சொதப்பியிருக்கு. அவனுங்க சொல்றது ஒன்னும் எனக்கு புரியல!"

 

"என்ன பிரச்சினை? நான் வேணும்னா பேசட்டுமா?"

 

"வேண்டாம். விமலாவோட அண்ணன் வந்து பேசினார். அவனுங்க கம்பெனியே மூடப்போறாங்க போல. அதனால, எல்லா contract டும் கேன்ஸல் பண்றானுங்க."

 

"ஓஹ்! நீ பயப்படாத, நாம வேற கம்பெனி வழியா புது விசாக்கு முயற்சி பண்ணலாம்."

 

"பண்ணலாம், ஆனா வேண்டாம் பா! நான் திரும்ப ஊருக்குப் போற மனநிலைக்கு வந்திட்டேன்!"

 

"Frustrate ஆகாதே! வேற வழி இருக்கும். இப்போ நீ கொஞ்சம் அமைதியா இரு! அவசரப்பட்டு முடிவு எடுக்காதே!"

 

"நல்லா யோசிச்சிட்டேன் மாதவ், நான் ஊருக்கு போறதுதான் சரியாயிருக்கும்”

 

"கல்யாணத்துக்கு முன்னாடி உன் சம்பாத்யத்துல அப்பா அம்மாக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்லியிருந்தியே!"

 

"அதை ஊர்ல இருந்தாலும் பண்ணலாமே! ஊர்ல வேலைக்கு போனா போறது!"

 

"அவங்களை இங்கே கூட்டிட்டு வரணும், உன் கூட கொஞ்சநாள் தங்கவச்சு அவங்களை கவனிச்சுக்கணும்னென்லாம் சொன்னியே...!"

 

அதெல்லாம் நடக்காது மாதவ், ஊர்ல அப்பாவும் என்னை வர சொல்லிட்டாங்க. பையன் பாக்க ஆரம்பிக்கப்போறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு எங்க அப்பா அம்மாவோட கொஞ்ச நாள் இருக்கணும்."

  

"அப்போ, போறதுன்னே முடிவு பண்ணிட்டியா?"

 

"ம்!"

 

"சரி, உன்னை வற்புறுத்தல, ஒருத்தரை ஒருத்தர் குழப்பக்கூடாதுங்கறதுதானே நம்ம agreement? இருந்தாலும், நான் சொன்னதையும் மனசுல வச்சுக்கோ. இன்னொரு விசா வேற கம்பெனி வழியா வாங்கலாம் அது ஒன்னும் பெரிய கஷ்ட்டம் இல்ல."

 

"வேண்டாம்பா.. நான் போறேன்!"

 

"........." - என்ன சொல்லறதுன்னு தெரியாததால, எதுவும் சொல்லாம அமைதியா இருக்கேன். சங்கமித்ராவும் எதுவும் பேசாம அமைதியாவே இருக்கா. ஆனா, எங்க மனசு ரெண்டும் அமைதியா இருந்திருக்க வாய்ப்பில்ல!

 

வழக்கத்துக்கு மாறான நீண்ட அமைதிக்கப்புறம். சங்கமித்ராவே பேசறா, "வருவீங்களா? என்னை பாக்க?" ன்னு கேக்கறா.

 

"வரணும். ஒருதடவயாவது உன்னை நேர்ல பாக்கணுமே. கண்டிப்பா வருவேன்!" -ன்னு அவ கேட்டதுக்கு பதில் சொல்லறேன்.

 

மனசு உற்சாகத்த இழந்துபோச்சு. சர்வத்திலும் கூட இருந்த தோழி திடீருன்னு இப்போ விட்டிட்டுப்போறதால மனசு ரொம்ப சங்கடப்படுது.


உண்மைய சொல்லப்போனா ஒருவித கோவமும் அவமேல எனக்கு வருது. என்னை இப்படி நட்டாத்துல விட்டிட்டு போறாளே! என்னைப்பத்தி யோசிக்கலையே, ஊருக்கு போறதைப்பத்தி கூட முடிவைத்தான் சொன்னாளே தவிர என்கிட்டே கலந்தாலோசிக்கலையே! நானா இருந்தா இப்படியா செஞ்சிருப்பேன்? அவகிட்டேதானே மொதல்ல யோசனை கேட்டிருப்பேன்? அப்படீன்னெல்லாம் அர்த்தமில்லாத பைத்தியக்காரத்தனமான கோவம் வந்து மாயுது!

 

சங்கமித்ரா ஊருக்கு புறப்படும் நாள் அதிவேகமா நெருங்கிட்டிருக்கு. அவ பயணத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பிச்சுட்டா. நாங்க தொடர்ந்து ஃபோன்ல பேசிட்டிருக்கோம்தான். ஆனா, முன்னமாதிரி கலகலப்பு இல்ல. என் வருத்தத்த வெளிக்காட்டாம நானும், அவ வருத்தத்த வெளிக்காட்டாம அவளும் பேசிட்டு இருக்கோம். நான் வலுக்கட்டாயமா ஏதாவது ஜோக் அடிச்சு வைச்சா, வராத சிரிப்ப வரவழைச்சு சம்பிரதாயத்துக்கு அவளும் சிரிச்சு வைக்கறா.

 

சங்கமித்ராவ நேர்ல பாக்க கண்டிப்பா வருவேன்னு அவ கிட்டே சொல்லியிருந்தேன் தான். எனக்கும் அவளை நேர்ல பாக்கணும்ங்கற ஆசையும் இருக்குதான்! ஆனாலும், ஏதோ ஒரு தயக்கம் எனக்கு தடை போடுது. அவளை பார்க்கப் போக மனசு முழு ஒப்புதல் தரமாட்டேங்குது. எந்த உந்துதலும் இல்ல, உத்வேகமும் வரல. இது ஏன் இப்படின்னு எனக்கும் புரியல.

 

"ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சது மாதவ். இனி பேக்கிங் முடிச்சு ரெண்டு நாள்ல கிளம்பனும்!"

 

"ம்ம்ம்...!"

 

இப்பல்லாம் எங்க ஃபோன் conversation முன்னமாதிரி சரளமா அமையறதில்ல. தேவையில்லாத சம்பிரதாய கேள்விகள், ஒத்தை வாக்கிய பதில்கள்னு அப்பப்போ formal ஆயிடுது. ஒரு டாப்பிக் முடிஞ்சுச்சின்னா அடுத்து என்ன கேக்கலாம், பேசலாங்கறத யோசிக்கறதுக்குள்ல பெரிய gap ஆயிடுது. இதோ, இப்போகூட, கிட்டத்தட்ட ஒரு நிமிஷத்துக்கும் மேல ரெண்டுபேருமே ஃபோனை கையில வச்சுக்கிட்டு, எதுவும் பேசாம மௌனமா இருக்கோம். மேற்கொண்டு என்ன பேசறதுன்னு தெரியல, எதைப் பேசறதுன்னும் புரியல.

 

மவுனத்த கலைச்சு சங்கமி கேக்கறா, "வர மாட்டீங்க இல்ல? என்னை பாக்க?"

 

அவ இப்படி கேட்டதும், என் கண்ணுல கண்ணீர் நெறஞ்சு தளும்புது. அவமேல வைச்சிருக்கும் பாசமும், அவ ஊரைவிட்டே போகப்போறாங்கற துக்கமும் சேந்து பொத்துகிட்டு வந்து தொண்டைய அடைக்குது, மனசு விம்முது, வாய திறந்து ஏதும் பேசினா இது தெரிஞ்சிடுமேன்னு ஏதும் பேசாம அழுகைய கட்டுப்படுத்த பிரம்ப பிரயர்த்தனம் பண்னிட்டிருக்கேன்.

 

என்னோட இந்த நிலை அவளுக்கு புரிஞ்சிருக்கணும், "பரவாயில்ல மாதவ், நீங்க வருத்தப்படாதீங்க!" ன்னு ஆறுதல் சொல்லுறா. அவ குரலும் தழுதழுக்குது.

 

"எனக்கு தெரியல மித்ரா. எனக்குள்ளேயே நான் போராடிட்டு இருக்கேன்! உன்னை பாக்க வரணும்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனா காரணமே இல்லாம ஏதோ ஒன்னு என்னை தடுக்குது. என்னன்னும் தெரியல, ஏன்னும் புரியல!"


என்னால புரிஞ்சுக்க முடியுது மாதவ், நீங்க பண்ணறதுதான் சரி. நாம சந்திக்கக் கூடாது. அது சரிவராது. முதல் முதலா நீங்க என்ன பாக்க வரும்போது நான் ஊருக்குப் போக தயாரா இருப்பேன். அதுக்கப்புறம் பாக்கறது கஷ்ட்டம். தொடர்ந்து பாக்க முடியாத சூழ்நிலையிலே சந்திக்கறது சந்தோஷத்தை விட வேதனையைத்தான் தரும். நாம பாக்காமலே இருப்போம். அதுதான் சரியா இருக்கும்.’ ன்னு சொல்லறா.


நான் ஏதும் பேசல, பேச என்னால முடியல. ரெண்டு பேருமே எதுவும் பேசாம மௌனமா இருக்கோம். தன்னை ஆசுவாசப்படுத்திகிட்டு அவளே தொடர்ந்து,

 

நம்ம ரெண்டு பேத்துக்கும் இருக்கறது ஒரு அற்புதமான friendship. அதுல எந்த தடுமாற்றமும் வரக்கூடாதுங்கறது நாம ரெண்டு பேருமே ஜாக்கிரதையா இருக்கற விஷயம் தானே? நேர்ல சந்திக்கறதுங்கறது ஃபோன்ல பேசறமாதிரி இல்ல, ஒருவேளை emotions- handle பண்ணமுடியாம போயிட்டா எல்லாமே குழம்பிப்போய் பெரிய சிக்கல் ஆயிடும். உங்க தயக்கத்துக்கு காரணம் இருக்கு மாதவ்! நாம தடுமாறாம இருக்க நமக்கு நாமதானே help பண்ணிக்கணும்? அதுதானே நம்ம agreement? நாம பாக்காமலே பிரிவோம்! அதுதான் நமக்கு நல்லது!” – ங்கறா.

 

"இல்ல மித்ரா, பார்ப்போம்! இப்ப இல்லாட்டியும் எப்பவாவது, இங்கே இல்லாட்டியும் வேற எங்கயாவது கண்டிப்பா பார்ப்போம். அந்த நம்பிக்கைலதான் நான் இப்ப வராம இருக்கேன். நம்ம சந்திப்பு நமக்குள்ளே எந்த தடுமாற்றத்தையும் உண்டாக்காத ஒரு காலம் வரும். அன்னைக்கு சந்திக்கலாம். நான் இந்தியாக்கு வரும்போதும் உன்னை வந்து பாக்கலாமே!” - ன்னு நான் சொன்னதை ஆமோதிக்கறா. 


விமலா கூப்பிடறான்னும், வெளியே எங்கேயோ போகத்தயாராகனும்மின்னும் சொல்லி ஃபோனை வைக்கறா. சங்கமித்ராகிட்டே எப்போ பேசினாலும் ஃபோனை வைச்சதுக்கு அப்புறம் மனசு லேசாவும், சந்தோஷமாவும்தான் இருக்கும். அத்தனை கேலியும், கலாட்டாவும், சிரிப்பும், சீண்டலுமா இருக்கும் எங்க phone conversation. இத்தனை வருத்தத்தோட, இவ்வளவு சோகமா பேசும்படியான சூழல் வரும்னு நாங்க கனவுல கூட நினைச்சதில்ல. மனசு ரொம்ப பாரமா இருக்கு. எதுவுமே பிடிக்காத ஒருவித தவிப்பு நிலையில தவிக்குது!

 

சங்கமித்ரா புறப்படும் நாள் வருது.

 

ஏர்ப்போர்ல Check-In எல்லாம் முடிச்சிட்டு Boarding ங்குக்கு காத்திருக்கும்போது call பண்ணறா!

 

All set மாதவ்! இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த நாட்டுக்கு பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடப்போறேன், சந்தோஷமா பறக்கப்போறேன். இந்த Client, Consultant, Donut, Bagel, ஆளில்லாத ரோடு, ஆரவாரம் இல்லத ஊருன்னு சொரண கெட்ட எல்லாத்தையும் விட்டொழிஞ்சிட்டு, Filter Coffee, கமகமக்கும் சாம்பார், அம்மா மடி, அப்பாவோட அரவணைப்பு, தம்பியோட சண்டை ன்னு சுவராஸ்யமான உலகத்துக்கு போகப்போறேன். I am very Happy for taking this decision!” ங்கறா.

 

அவ சந்தோஷமா பேசறது என்னை ஆசுவாசப்படுத்துது, நல்லவேளை, நானும், நம்ம friendship-பும் அந்த சொரணகெட்ட லிஸ்ட்ல இல்ல! அடுத்து எங்கே அத சொல்லப்போறயோன்னு பயந்திட்டு இருந்தேன்!” னு நான் சொல்லவும்,

 

சேச்சே, இங்கேயிருந்து நான் எடுத்துட்டுப்போற ஒரே சுவராஸ்யம் நம்ம நட்பின் நினைவுகள்தான். இன்னிக்கு flight ல எனக்கு entertainment டே full rewind of those memories தான்!”ன்னு சொல்லறா.

 

நானும்தான், இன்னிக்கு பூராவும் நானும் அதையெல்லாம்தான் யோசிச்சிட்டிருக்கப் போறேன்.”

 

மாதவ், நான் ஒன்னு கேக்கட்டுமா?’

  

தாராளமா கேளு, என்ன?”

 

எப்பவாவது நம்மோட இந்த friendship-அ கதையா எழுதுவீங்களா?”

 

தெரியலயே, எழுதனுமா?”

 

Yes, நீங்க எழுதனும் I am sure இதை கதையா எழுதினா ரொம்ப நல்லா வரும். உடனடியா தேவையில்ல, எப்பவாவது, ஒரு வருஷம் கழிச்சோ இல்ல பல வருஷங்கள் கழிச்சோ, உங்களுக்கு எப்போ தோணுதோ அப்ப எழுதுங்க.”

 

ஏன்? கதையா எழுதுற அளவுக்கு அப்படி என்ன இருக்கு இதுல?”

 

அது தெரியல, ஆனா நல்லாயிருக்கும்னு தோணுது. இந்த ending எனக்கு பிடிச்சிருக்கு. பாக்காமலேயே பிரியரது ஒரு கதை மாதிரிதான் இருக்கு. You know what, this should be the real ending, நாம இனிமே சந்திக்கக்கூடாது. நீங்க இந்தியா வரும்போதும் என்னை வந்து பாக்கக்கூடாது, அதுல சுவராஸ்யம் இல்ல. சந்திக்காம இருக்கற வரைக்கும்தான் இந்த உறவு உயிர்ப்போட இருக்கும். அப்படித்தான் எனக்கு தோணுது!”

 

சரி, ஆனா எத்தேச்சையா எங்கேயாவது சந்திக்க நேர்ந்தா என்ன பண்றது? அத நாம தடுக்க முடியாதுல்ல? ஒரு இரயில் பயணத்துல, ஏதாவது ஏர்போர்ட்ல, ஷாப்பிங் மால்ல…!”

 

எத்தேச்சையா சந்திக்கறத தடுக்க முடியாதுதான். அப்படி நடந்தா அது இன்னும் பெரிய சுவராஸ்யமா இருக்கும்! ஆனா அப்படியெல்லாம் நடக்குமா என்ன?”

 

தெரியலையே, நடக்குதான்னு பாப்போம், நடக்கும்னு நம்புவோம்! அந்த நம்பிக்கை முக்கியமில்லையா?”

 

Yes! இந்த எதிர்பார்ப்புதான் best ending, உங்க கதைக்கும், நம்ம உறவுக்கும்! இந்த எதிர்பார்ப்பு மாதவ் பத்தி சங்கமித்ராவையும், சங்கமித்ரா பத்தி மாதவையும் எப்பவும் யோசிக்கவைக்கும். மாதவ், நீங்க கண்டிப்பா இதை கதையா எழுதணும்!’

 

‘பாக்கலாம், முயற்சி பண்ணறேன்!”

 

‘Ok பா, boarding call பண்ணிட்டான். Flight ஏறி seat-settle ஆயிட்டு கூப்பிடறேன்” – ன்னு சொல்லி ஃபோனை வைக்கறா.

 

அந்த நொடியில என்னை ஒரு வெறுமை சூழ்ந்துக்குது. Blank-ஆ இருக்கு. உணர்வற்று மரத்துப்போனது மாதிரியான feel. ஃபோனை கையிலேயே வச்சுகிட்டு எங்கேயோ வெறிச்சு பாத்தமேனிக்கு உக்காந்திருக்கேன்.

 

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... கிர்ர்ர்ர்ர்ர்ர்.....! - அதிருது என் செல்போன். சங்கமித்ராதான் கூப்பிடறா!

 

பிளைன் ஏறிட்டேன். பக்கத்து சீட்ல ஒரு வயசான அம்மா, சென்னைக்குதான் போறாங்க, அழகான மடிசார் மாமி, மங்களகரமா இருக்கா. என்னை ஊருக்கு கூட்டிட்டு போக வந்த தேவதை மாதிரி!”

 

வெரிகுட். உன்னோட முடிவு சரியானதுன்னு ஆண்டவன் அந்த தேவதைய அனுப்பியிருக்கான்னு நெனச்சுக்கோ. அந்த தேவதைய பத்திரமா பாத்துக்கோ!”

 

திரும்பவும் மௌனம். மேற்கொண்டு பேச முடியாம எனக்கு நா வறண்டு தொண்டை அடைக்குது.

 

ஏய் மாதவ்!”

 

ம்?”

 

"அழுகை வருதா?”

 

இல்லையே! அழனுமா?”

 

வேணாம் அழாதீங்க, எனக்கும் அழுகை வரல!"

 

நாம பழக ஆரம்பிச்சது, பேசினது எல்லாமே சந்தோஷமான விஷயங்கள்தானே சங்கமி? நிறைய சிரிக்கத்தானே செஞ்சிருக்கோம், அதையெல்லாம் எப்போ யோசிச்சாலும் சிரிப்பும் சந்தோஷமும்தான் வரணும், அழுகை வரக்கூடாது!”

 

உண்மைதான். நிறைய இருக்கு, யோசிச்சு சிரிக்க!’

 

“சத்தம்போட்டு சிரிச்சு அந்த தேவதை பாட்டிய பயமுறுத்திடாத. அவங்க கிட்டே பேசிட்டிரு. எதையும் யோசிச்சு மனச குழப்பிக்காத. அப்பா அம்மா கிட்டே போறதவிட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கு? சந்தோஷமா போயிட்டு வா.”

 

சரிபா, நீங்களும் சந்தோஷமா இருங்க.. ஃபோனை switch off பண்ண சொல்றாங்க. வைக்கட்டுமா?”

 

ம்…”

 

மாதவ், ஞாபகம் இருக்கா, இந்த செல்போன் வாங்கி முதல் கால் உங்களத்தான் கூப்பிட்டேன்”

 

அதை மறக்க முடியுமா? 'கிழிஞ்சது கிண்டி'!”

 

இப்போ இந்த phone-ல கடைசி காலும் உங்களுக்குத்தான்.’ -ன்னு அவ சொன்னதும் என் கண்ணுல கண்ணீர் தேங்குது! எத்தனை முயற்சி செஞ்சும் பலனில்லாம கன்னத்துல கோடு போட்டு அது வழியுது.

  

“சரிபா, Flight எடுத்துட்டாங்க. அந்த ஏர்ஹோஸ்டஸ் முறைக்கறா. நான் வைக்கட்டுமா?!”

 

ம்.”

 

சரி! வைக்கறேன்!” -ன்னு சொல்லி Call- கட் செய்யறா!

 

தொடர்பு துண்டிக்கப்படுது!  

  

 [இன்னும் நுகர்வேன்]




====================================================================





சில்வண்டு

[ஆகஸ்ட் 19, 2023]  

Contact: sillvandu@gmail.com


====================================================================





Comments

Popular posts from this blog

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?