மூக்குகுத்திப்'பூ'!

'சொத்' தென்று, என் மூக்கில் பலமாய் விழுந்தது குத்து ஒன்று!

குத்து விழுந்த வேகத்தில், பளீரென ஓர் வெளிச்சக்கீற்று மின்னல்போல் தோன்றி மறைய, அதைத்தொடர்ந்து பல வண்ணங்களில் நட்சத்திரங்களும் மின்னி மறைய, நான் நிலைகுலைந்து, தள்ளாடி, அருகிலிருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டு, சுவரோடு சுவராக சாய்ந்து நின்று கொண்டிருந்தேன்.

குத்து விழுந்த இடத்தில் அடர்ந்து பரவுகிறது நுட்பமாய் ஒரு வெப்பம். என் உதட்டின் மீது ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதாகத் தோன்ற, "என்ன அது?" என்று, அதை எடுத்துக்களைய எத்தனித்தால் என் கைகளுக்குள் சிக்காமல் நழுவுகிறது அது. அதைத் தொட்ட விரல்களில் பிசுபிசுப்பு! நிறமோ கருஞ்சிவப்பு! சுவையோ ஒருவிதத் துவர்ப்பு. அடடே!! குருதி?

அருவி போல் குருதி ஒழுகிக்கொண்டிருக்க, மூக்கும் மூக்கும் சார்ந்த இடங்களும் உணர்வற்ற நிலையில் மரத்துப்போய் இருக்கிறது "மெத்" தென்று. நான் தலைகிறங்கி, தரையில் விழுந்தேன் 'தொப்' பென்று.

என் இமைகள் தானாக மூடிக்கொள்ள, இரு விழிகளுக்குள்ளும் பரவி விரிகிறது கரிய இருட்டு. என்ன முயற்சித்தும், இருட்டினை விரட்டிட விழிகளைத் திறக்க இயலவில்லை. பெரும் சுமையாகக் கனக்கிறது இமை!

கண்களை திறக்க இயலாவிட்டாலும், வீழ்ந்து கிடக்கும் என்னைச் சுற்றி ஓர் பரபரப்பு உண்டாகியிருப்பதை என்னால் உணர முடிகிறது. யாரோ ஒருவர் என்னை இழுத்து அவர் மடியில் கிடத்தியிருக்க, யாரோ துணி கொண்டு வழிந்தோடும் என் குருதியைத் துடைத்திருக்க, யாரோ ஒருவர், "காற்று வரட்டும் வழி விலகுங்கள், யாரேனும் போய்த் தண்ணீர் கொண்டாருங்கள்" என்று கத்திக்கொண்டிருக்க, கேட்பதற்கு சற்றும்கூட சகிக்க இயலாதவாறு "ஙொய்ய்.." என்றொரு பேரிரைச்சல் என் மண்டைக்குள் பெருமுழக்கமிட்டது!

எனக்குள் ஓர் கறுப்பு வட்டம் உருவாகி அது கரும்புள்ளி ஒன்றை மையமாக்கிச் சுழலுகிறது. கரு மையம் என்னை அதன்பால் இழுத்துச் செல்லப்பார்க்கிறது. சர்வமும் கருப்புமயம். ஆனால், நல்லவேளையாக யாரோ குளிர்ந்த தண்ணீரை என் முகத்தில் அடித்துத் தெளிக்க, இழுக்கும் இருள் மையத்தைத் தவிர்த்து, நழுவி, இருந்த சக்தியெல்லாம் ஒன்று திரட்டி சுமையான இமையைக் கொஞ்சமாகத் திறந்தேன். என்னைச் சுற்றி இதற்குள் பெரும் கூட்டமே கூடியிருக்க, கூடியிருப்பவர்கள் ஒவ்வொருத்தரையும் நான் பேந்தப் பேந்த விழித்தவாறு பார்த்துக்கொண் டிருந்தபோது தான் என் கண்ணில் தென்பட்டது 'பூ' ஒன்று.

அப் 'பூ', ஓர் பெண் 'பூ'!

அப் 'பூ', தன் அழகான நீண்ட மூக்கில் எடுப்பாக ஒற்றைக்கல் மூக்குத்தியினை அணிந்திருக்கும் காரணத்தால் மூக்குத்திப் 'பூ'!

இப்பூவினைப் பார்த்ததும், என் வலி மறைந்தது. நடந்திட்ட சம்பவத்தை நினைத்து நினைத்து எனக்கு அடக்கமாட்டாது சிரிப்பும் வருகிறது. ஆனால் சிரிக்கத்தான் முடியவில்லை,

மூக்கு வலிக்கிறது!

~~~ 0 ~~~

வர் வாழ்விலும் ஆனந்தத்தை அள்ளி வீசும் கல்லூரிக்காலம் அது!

ஜூனியர்களை, நண்பன் ஒருவன் ஆக்ரோஷமாக ரேகிங் செய்துகொண்டிருந்தான். ஆர்வமாக நான் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஓரு பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு எனும் வரைமுறைக்குள் உட்பட்டுதான் எங்கள் கல்லூரியில் ரேகிங் நடக்கும். வன்முறைக்குள் போகாமல் வரைமுறைக்குள் அடங்கும் ரேகிங்கும் வேடிக்கையானதே!

"பெயர் என்ன?" சீனியர்கள் கேட்பார்கள். ஜூனியர்கள் பெயர் சொல்வார்கள்.

"எந்த ஸ்கூல்?" எனும் கேள்விக்கு ஜூனியர்கள் அவர்கள் படித்த பள்ளியின் பெயரைச் சொல்வார்கள்.

"இங்கலீஷ் மீடியமா?" என்று எழும் அடுத்த கேள்விக்கு 'ஆம்' என்பவர்கள் தொலைந்தார்கள். ஏனென்றால், அதற்கடுத்த கேள்வி இப்படி அமையும்.

"ஒரு தமிழ் வாக்கியம் சொல்கிறேன். அதை இங்கலீஷில் மொழி பெயர்த்து சொல்லுவியா?"

'சொல்கிறேன்' என்பதைத்தவிர வேறு பதில் சொல்ல ஜுனியர்களுக்கு உரிமையில்லை. ஆதலால், "சரி" என்பார்கள்.

" 'ஒரு பாம்பு படம் எடுக்கிறது' இதுதான் வாக்கியம். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுங்கள்" என்பார்கள் சீனியர்கள். முழிப்பார்கள் ஜூனியர்கள்.

இது, நான் மிகவும் இரசிக்கும் ரேகிங் கேள்வி. இதுவரையில் யாரும் இதற்கு சரியான பதில் தந்ததாய் எனக்கு நினைவில்லை. சில வேடிக்கையான பதில்களாய், "Snake is directing movie", "Snake is taking picture", "Snake is making cinema" என்றெல்லாம் பதில் வந்து விழுந்து அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தும்.

ன்றையதினம், நான் என் நண்பர்கள் ரேகிங் செய்வதை மெய்மறந்து இரசித்துக் கொண்டிருந்தபோது என் நண்பன் ஒருவன் கோவமாக என்னை அழைத்தான்,

"தக்காளி டேய்...!" என்று.

இங்கே, "தக்காளி" என்பது ஏதோ என் உடல்வாகினைக் குறிக்கும் காரணப்பெயர் என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் அது தவறு. அது ஒரு திரிக்கப்பட்ட வட்டார வழக்கு. என் நண்பனின் வட்டாரத்தில் இந்தத் "தக்காளி" யைச் சேர்க்காமல் எவரும் எந்த வார்த்தையையும் உதிர்த்திடுவதில்லையாம். அவன் உதிர்க்கும் வட்டார வழக்குகளை அப்படியே இங்கே அப்பட்டமாக எழுதிட இயலாது என்பதால், அதைக் கொஞ்சம் திரித்துதான் நான் உங்களூக்கு வழங்கமுடியும்.

"தக்காளி..., நீ என்ன பெரிய பயிறா?, பயிறைப்பிடுங்கி, நீ பெரிய ஒழுக்கப்பயிறுன்னு இங்கே எல்லாருக்கும் தெரியும், ஒழுங்கு மரியாதையா வந்து ரேகிங் பண்ணுடா வீணையாய் போனவனே!" என்று மேலும் சில வழக்குகளால் வாக்கியத்தை அலங்கரித்து என்னை வைது வைக்கிறான். வைது என்னைத் துவைக்கிறான்! ஜூனியர்கள் முன்பாக என்னை வதைக்கிறான்.

நான் இன்னும் ரேகிங்கில் ஈடுபடாமல் வெறுமே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது தான் என் மீது அவன் இப்படிக் கோவம் கொள்ளக் காரணம். கண்டிப்பாக எல்லோரும் ரேகிங் செய்தாகவேண்டும் என்பது எங்களால் இயற்றப்பட்ட, எழுதப்படாத சட்டம். ரேகிங் செய்து ஜுனியர் பெண்களிடம் வெறுப்பினையும் கோபத்தையும் ஒரு சிலர் சம்பாதித்துக் கொண்டிருக்க, அதைச் செய்யாமல் நல்ல பிள்ளைகள் போல ஒரு சிலர், குறுக்குவழியில் பெண்களிடம் நன்மதிப்பை பெற்றிடக்கூடாது என்பதற்காகவே இப்படி ஓர் சட்டம் எழுதப்படாமல் இயற்றப்பட்டிருந்தது.

இனியும் நான் ரேகிங் செய்யாமல் அந்த சட்டத்தை மீறிக்கொண்டிருந்தால், என் நண்பன் இன்னும் சில வட்டார வழக்குகளை கூடுதலாகச் சேர்த்து என்னைத் திட்டிடுவான். அதை நான் உங்களுக்காக திரித்து எழுத மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும். ஆகவே, காலத்தால் ரேகிங்கில் ஈடுபடுவதே எனக்கு சாலச்சிறந்தது!

ரேகிங் செய்வதற்கான என் இரையைத்தேடி, அங்கே நின்றிருந்த ஜுனியர் கூட்டத்தை நோட்டமிட்டேன். அப்போதுதான் முதன்முதலாய் என் விழித்திரையில் பட்டு எதிரொளித்தது அவளின் பிம்பம்!

பயந்தும், நாணித்தும், இதோ அழப்போகிறோம் என அழுகைக்குத் தயாராகியும் நிற்கும் பெண்களூக்கிடையில், புன்னகையோடு, பதட்டமேதுமின்றி, அவளின் தோழி என் நண்பனால் Rag செய்யப்படுவதை ரசித்துக்கொண்டு நிற்கிறாள் அந்தப் பெண்.

அவளை அழைத்தேன். புன்னகை மாறாமல் என் முன்னே வந்து, கைகளை பின்புறமாகக் கட்டிக்கொண்டு ஏதோ, உயர் அதிகாரியின் முன் நிற்கும் ராணுவ வீராங்கணை போல நிற்கிறாள் அவள்.

"பேர் என்ன?" என அதட்டும் தொணியில்தான் கேட்டேன். என் அதட்டல் அவளை அசைக்கவில்லை போலும். புன்னகைத்தே நின்றிருக்கிறாள். செயற்கை அதட்டலுக்கு யார் தான் பயப்படுவர்?

"என்ன சிரிப்பு? இதுவென்ன உனக்கு விளையாட்டாய் தெரியுதா? சிரிப்பை நிறுத்து!"

-- என்று குரல் உயர்த்தி கடுகடுத்தேன். அதை அவள் எதிர்பார்க்கவில்லை. இவன் ஏன் காரணமில்லாமல் எரிச்சல் கொள்கிறான் என்பதுபோல் குழப்பம் கொண்டாள்.

உண்மையில் அவளிடம் என்னால் கோவமாகப் பேச முடியவில்லை. செயற்கையாகக் கூட கோவம் கொள்ள இயலாதவிதம் அழகு அவளது முகம். தலையாட்டியும், கையசைத்தும், கண்ணிமைத்தும் அவள் புரியும் சிறு சிறு சலனத்தில் சிதறிடும் கவனத்தை ஒருமுகப் படுத்துதலோ இயலாத காரியம். அவளின் மூக்குதான் அதற்குக் காரணம். அவளை பார்க்கும் ஓர் பார்வையில், அந்தப் பார்வையை முழுவதுமாக ஈர்த்துவிடும் வல்லமை கொண்டது அவளது மூக்கு. சீராக, எடுப்பாக, கூர்மையாக இருக்கும் அவளது மூக்கில், அவள் அணிந்திருக்கும் ஒற்றைக்கல் மூக்குத்திக்கு, அது அவளால் அணியப்பட்டிருப்பது பெருமை தரக்கக்கூடும். அவ்வழகை, அவள் அழகை, இரசிக்காமல் இருப்பது கடினத்திலும் கடினம்.

இப்படி ஓர் அழகுப் பெண்ணை ஆற அமர இரசிப்பதை விட்டுவிட்டு ரேகிங் செய்வதாவது? ஆனால், நான் இவளை இரசிப்பதற்கு இது சரியான இடமுமில்லை, இது அதற்கான சந்தர்ப்பமும் இல்லை. நான் இவளை Rag செய்தாக வேண்டும். அதைவிடுத்து, நான் இவளை இரசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இவள் கவனித்துவிட்டால் அது சீனியர் எனும் என் நிலைக்கும் இமேஜுக்கும் ஆபத்து. என் நண்பன்வேறு வட்டார வழக்குகளால் வசைபாடி இவள் முன்பாகவே என் மானத்தை வாங்கினாலும் வாங்கிடுவான். ஆதலால், அவளை இரசிப்பதற்கு தற்காலத் தடை போட்டுவிட்டு தொடர்ந்தேன் என் ரேகிங்கை!

"சொல்லு, உன் பேர் என்ன?" கடுகடுப்பினைக் குறைக்காமல் கேட்டேன்.

"நான்ஸி"

"முழுப்பெயரும் இதுதானா?"

"இல்லை"

"மீதியைச் சொல்ல உங்க தாத்தா வண்டி ஏறி வருவாரா?"

".........." பதில் கூறாது மௌனமாக நின்றிருக்கிறாள்.

"சொல்லு..., முழுப்பெயர் என்ன?"

"Nancy Sosamma Kunjorotha"

"மூணு பேரா?"

"இல்லை, என் முழுப்பெயர்!"

"பேரைக் கேட்டா ஒரு paragraph அளவுக்கு சொல்லறியே?"

"இல்ல, நான்ஸிதான் என்னோட பேரு. சூசம்மா எங்க பாட்டி பேரு. குஞ்சோரோதா எங்க குடும்பப் பெயர்..."

"அது என்ன அப்படி ஒரு பேரு? குஞ்சோரோதான்னு? உண்மையிலேயே இது பேரா இல்ல வேறேதும் பாஷையிலே என்னை திட்டுறியா?"

"...........!" -- அவள் பதில் ஏதும் சொல்லாது நின்றிருந்தாள்.

"அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?"

"அது எங்க குடும்பப்பேரு! அர்த்தம் தெரியாது!"

"அப்படீன்னா அர்த்தம் இல்லாத குடும்பம்னு சொல்லு."

-- என்று நான் கூறவும், அவள் முகத்தில் ஒரு அதிர்ச்சி அலை தோன்றி மறைந்தது.

அவளின் குடும்பத்தை இழுத்தது அவளுக்கு ரசிக்கவில்லை போலும். அவளின் முகம் சிறுத்துப்போய் கொஞ்சம் கறுத்தும் போனது. நான், அதை இரசித்திருந்தேன். பின் என்ன? ரேகிங் செய்ய அழைத்தால் சிரித்துக்கொண்டா வருவது? ஆனால் ஒன்று, சிரிக்காத அவள் முகமும் சிறப்பான தோற்றத்தைதான் தருகிறது. அந்தச் சிறப்பில் சிக்கிக்கொள்ளாமல் தொடர்ந்தேன் என் தொல்லையை...!

"இத்தனை பேரைச் சொல்லறியே.... இதுல உன்னை எந்த பேரைச் சொல்லி கூப்பிடறது?" என்று நான் கேட்டிட, அதற்கு பதிலேதும் கூறாது அவள் தலைகுனிந்து நின்றிருந்தாள்.

"கேக்கறேன்ல சொல்லு!" என்று நான் கத்தினேன். அந்தக்கத்தலில், என் மற்ற நண்பர்கள் அவர்கள் ரேகிங் செய்வதை நிறுத்திவிட்டு, இங்கே ஏதோ பிரச்சினை எனபதைப்போல, எங்களை கவனிக்கத்துவங்கினார்கள்.

"எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்கோங்க..." என்கிறாள் அவள். நான் போட்ட காட்டுக்கூச்சலால் கோபமும், எரிச்சலும் கொண்டவளாக.

"எப்படி வேணும்னாலும் கூப்பிடலாமா? அப்படீன்னா, குஷ்பு நு கூப்பிடலாமா?"

-- என்று நான் கேட்க, எங்களைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இதைக்கேட்டு சிரித்தார்கள். அதில் ஒரு நண்பன்,

"வேண்டாம்டா... அது குஷ்புவுக்கு அவமானம்...!" எனச்சொல்ல, மற்றவர்கள் இன்னும் உரக்கச் சிரிக்கின்றார்கள்.

"அப்படியா? அப்போ குறத்தின்னு கூப்பிடவா?" என்று நான் கேட்க, அதே நண்பன்,

"வேணாமடா அது குறவன்களுக்கு அவமானம்." என்கிறான்.

இதைக்கேட்டு மீண்டும் சுற்றி நின்றிருந்தவர்கள் சத்தம்போட்டுச் சிரித்துவிட, நான்ஸி தலைகுனிந்து நிற்கிறாள். ஜீராவில் மூழ்கியிருக்கும் ரசகுல்லா போல கண்ணீரில் மூழ்கியிருந்தன அவளது விழிகள். ஒரு இமை மூடல் போதும் கண்ணீர் அனைத்தும் கன்னத்தில் பாதையமைத்து வழிந்தோட! ஆனாலும் கட்டுப்படுத்தி நின்றிருக்கிறாள் அவள்.

"கோவம் வருதா?" கேட்டேன்.

"இல்லை!"

"அழுகை வருதா?"

"இல்லை!"

"அப்புறம் ஏன் கண்ணீர்?"

"தூசி!"

-- இருபொருள் பட பேசுகிறாளா? என் மிரட்டல்கள் தூசிக்கு சமம் என்கிறாளா? அவள் அப்படிச் சொன்னாளோ இல்லையோ எனக்கு அப்படித்தான் தோன்றியது.

வழக்கமாக எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கும் "மரியாதை" சல்யூட்டை அவளுக்கும் சொல்லிக் கொடுத்தேன். இடது கையால் வலது காதினைப் பிடித்துக் கொண்டு, ஒரு குதி குதித்து வலது கையால் சல்யூட் அடிப்பதே மரியாதை சல்யூட். சொல்லிக் கொடுத்தபின் அவளை சல்யூட் அடிக்கச் சொன்னேன்! வெட்கம் கொண்டும், அவமானத்தால் அவஸ்தை கொண்டும் அவள் சல்யூட் அடித்தாள்!

"இனி எங்கே என்னை பார்த்தாலும் இந்த சல்யூட் அடிக்கணும் புரியுதா?"

தலையாட்டினாள். அழுகை எந்நேரத்திலும் வெடிக்கும் எனும் நிலையில் இருக்கிறாள் போலும். துடிக்கும் உதட்டை பற்களால் இறுகக் கடித்து நின்றிருக்கிறாள்.

"சொந்த ஊரு எது உனக்கு?"

"தொடுபுழா! (கேரளத்தில் ஓர் ஊர்!)"

"எந்த ஸ்கூல்ல படிச்சே?"

"பெஹ்ரைன்ல..."

"பெஹ்ரைன்" என்று அவள் சொன்னதை பள்ளியின் பெயர் என்று எடுத்துக்கொண்ட நான், அது ஊட்டி போன்ற இடங்களில் உள்ள ஏதேனும் கான்வெண்டின் பெயராக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு,

"அது எங்க ஊட்டிலயா இருக்கு?" என்று கேட்டதுதான் தாமதம். பள்ளம் கண்ட வெள்ளம் போலப் பாய்கிறாள் பதுமை.

"பெஹ்ரைன் ஊட்டியில இருக்கான்னா கேக்கறீங்க? பெஹ்ரைன் Gulf ல இருக்கு. துபாய், மஸ்கட், ஷார்ஜா இதெல்லாம் கேள்விப்பட்டதில்லையா? அது ஒரு country." என்று வேண்டுமென்றே உரத்த குரலில் சொல்லிட, அதைக்கேட்டு, சுற்றியிருந்தவர்கள் எல்லோரும், ஜூனியர்கள் உள்பட, 'கொல்' லெனச் சிரித்தார்கள்.

"அந்த பெஹ்ரைன் எனக்கும் தெரியும். நீ எந்த ஸ்கூல்ல படிச்சேன்னு கேட்டதுக்கு பெஹ்ரைன்னு சொல்லவும், நான் இது ஊட்டி கான்வெண்டோன்னு நினைச்சேன்." என்று நான் தன்னிலை விளக்கம் அளித்தேன்.

யாரும் என் விளக்கத்திற்கு செவிமடுக்கவில்லை. "பெஹ்ரைன் ஊட்டியில இருக்குதுன்னா இத்தனை நாளா நினைச்சிட்டிருந்தே?" என்று என் நண்பர்களும் என்னை கேலிபேசத் துவங்கினார்கள். நான் மீண்டும் விளக்கம் அளிக்க முற்பட்டேன். ஆனால் என்னை பேசவிடாமல் மற்றொரு நண்பன்,

"பெஹ்ரைன் ஊட்டியிலே இருக்குன்னா அப்போ அபுதாபி எங்கே கொடைக்கானல்ல இருக்கா மச்சி?" எனக்கேட்கிறான். இதைக்கேட்டுச் சிரித்த இன்னொருவன், "அப்போ கண்டிப்பா எகிப்து ஏற்காடு மலையிலதான் இருக்கனும். எனக்குத் தெரிஞ்சுபோச்சு!" என்கிறான்.

பாவிப்பயல்கள், அங்கே ஜூனியர்கள் இருக்கிறார்கள், நான் ரேகிங் செய்துகொண்டிருக்கிறேன் என்பதையெல்லாம் மறந்து, ஜுனியர் பெண்கள் முன்பாக என்னை பலிகடா ஆக்கி அவர்கள், ஆளாளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

நான்ஸி உதட்டோரத்தில் குரூரமான கேலிப்புன்னகையினை பரவவிட்டு என்னையே விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். நான் விளக்கம் அளிக்க முயல்வது, நான் ஏதோ சமாளிக்க முயல்கிறேன் எனும் தோற்றத்தையே உருவாக்குவதால் என்னால் வேறொன்றும் பேச முடியவில்லை. என்ன சொன்னாலும் இப்போது எடுபடப்போவதும் இல்லை.

ஒரு நொடியில் நிலமை தலைகீழ் ஆகிவிட்டது. 'கெத்' தாக ரேகிங் செய்துகொண்டிருந்த என்னை, ஒரு சிறு அஜாக்கிரதை, 'கொத்' தாகத்தூக்கி அதளபாதாளத்தில் போட்டுவிட்டது. சீனியர் எனும் வீராப்பு எங்கோ தொலைந்துபோக, வெட்கமும் சங்கோஜமும் என்னை ஆட்கொள்கிறது.

நான்ஸி, பள்ளத்தில் விழுந்த யானையை வேடிக்கை பார்ப்பதைப்போல, நிலை சரிந்திட்ட என்னை ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளால் எனக்கு Nosecut ஆகிப்போனது.

இதற்குமேல் என்ன ரேகிங் செய்வது? "சரி, நீ போகலாம்!" என்று கூறி அவளை போகச்சொன்னேன். அவள் போகிறாள். போகிறபோக்கில் ஒரு மரியாதை சல்யூட்டை வேறு நான் கேட்காமலேயே செய்துவிட்டுப் போகிறாள். அதும் போறாதென்று கேலியும் கிண்டலும் கொக்கரிக்கும் ஒரு நமுட்டுச் சிரிப்பினைவேறு வீசிச்செல்கிறாள்.

நான் அவளை ரேகிங் செய்தேனா இல்லை எனக்கு நானே ரேகிங் செய்துகொண்டேனா என்பது புரியாமல் நானும் வெறுமனே நின்றுகொண்டிருந்தேன்.

வெட்டுப்பட்ட மூக்கோடு!

~~~ 0 ~~~

செய்யக்கூடிய விஷயங்களை செம்மையாக செய்திடத் தேவைப்படுவதைவிட, செய்யக்கூடாத விஷயங்களை செவ்வனே செய்திட அசாத்திய திறமை வேண்டும். இதை உணராமல், இருந்திருந்து நானும் முதல்முறையாக ரேகிங் செய்யப்போக, அழகான பெண் முன்னால் நோஸ்-கட் ஆகிப்போனதும் போதாதென்று, lecturer - ரிடம் வசமாக மாட்டியும் கொண்டேன். நாங்கள் ரேகிங் செய்வதை எப்படியோ பார்த்துவிட்ட lecturer, ரேகிங்கில் ஈடுபட்ட பையன்கள் என்று HOD யிடம் கொடுத்திட்ட லிஸ்ட்டில் என் பெயரும் இருந்தது.

மறுநாள் லிஸ்டோடு வகுப்புக்குள் நுழைந்தார் எங்கள் HOD திரு. CKV சார்.

ஏற்கெனவே என் பெயரில் ஒரு கறுப்புப் புள்ளி இருந்தது. முதல் வருடம் முடித்து, கல்லூரி அளித்த விடுமுறைகள் போதாமல், நான், என் பங்குக்கு இரண்டு வாரம் அதிகமாக லீவு எடுத்துக்கொண்டு தாமதமாக கல்லூரிக்கு வந்தது எனக்கு அந்தப் புள்ளியை பெற்றுத் தந்திருந்தது. அது போறாதென்று இப்போது இது வேறு!

லிஸ்டில் உள்ள பிரகஸ்பதிகளை ஒவ்வொருவராக எழுப்பி கேள்வி கேட்டு வகுப்பை விட்டு வெளியில் அனுப்பிக்கொண்டிருந்தார் CKV சார். கடைசியாக என்னை எழுப்பினார்!

"What are the four divisions in the COBOL language?" என்று வினாவையும் எழுப்பினார்.

நான்கில் முதலிரண்டு தெரியும், கடையிரண்டு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. விழித்தேன்! என் சின்னக்கண் முட்டைக்கண் ஆவதுபோல் முழித்தேன். வகுப்பை விட்டு வெளியே செல்லத் தயார் ஆனேன்.

"ஏற்கனவே 3 weeks late for the classes! இதுல உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம்?" எனக்கேட்டவர் தொடர்ந்து,

"நீ மூணு வாரம் classes miss பண்ணினதுனால உன்னை நான் இப்போ வெளியே அனுப்பலை... but I want to see your father in a week!" என்று கூறி குண்டு வீசிவிட்டு, என்னை உட்காரச் சொன்னார்.

நான் உட்காரவில்லை. அப்பாவை கூட்டி வருவதாவது? மற்றவர்களுக்கு வகுப்பை விட்டு வெளியே செல்லும் எளிமையான, இனிமையான தண்டனை, எனக்கு மட்டும் அப்பாவை கூட்டி வரும் கடுமையான, கொடுமையான தண்டனையா?

சாரின் ஆணையை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது.

என் முதல் இரண்டு செமெஸ்டர் ரிசல்டை இன்னும் நான் வீட்டில் தெரிவிக்கவில்லை. ரிசல்ட்ஸ் இன்னும் வரவில்லை என்றுதான் வீட்டில் சொல்லிவைத்திருக்கிறேன். அப்படிச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு. ஏனென்றால், முதல் செமஸ்டரில் இரண்டு பேப்பர் விழுந்துவிட்டது. இரண்டாவது செமஸ்டரில் அதை எழுதி பாஸ் பண்ணிவிட்டு, பாஸ் எனும் பாஸிட்டிவ் செய்தியைத்தான் முதன் முதலாக, கல்லூரி மாணவனாக என் ரிஸல்டை வீட்டில் சொல்லவேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் என்ன செய்வது? இரண்டாவது செமஸ்டரில் மற்றொரு திருப்பம்! எதிர்பாராமல் இன்னும் இரண்டு பேப்பர்கள் தொங்கிவிட்டது.

புதிய பாடங்கள்... புரியவில்லை என்று சாக்கு சொல்லவும் முடியாது. ஏனென்றால் தொங்கியதில் இரண்டு தமிழ் பாடம்! இதில் தோற்றது அவமானம். "தமிழிலேயே பெயிலுன்னா நீ என்ன லக்ஷணத்துல படிச்சிருப்பே?" எனும் கேள்வி வரும். சரி, language paper தான் போயிருக்கிறது Subject ல் எல்லாம் பாஸ் என்று சொல்லி சமாளிக்கவும் முடியாது. ஏனென்றால், கணிதத்தில் மரண அடி வாங்கியிருந்தேன். கணிதமோ கணிப்பொறிக்கு முக்கியமான பாடம்! அதிலும் அவுட் என்றால் என் வீட்டாருக்கு என் படிப்பின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக போய்விடுமே? எனும் பயம் எனக்கு. நான் என்ன செய்ய? மூன்றாவது செமஸ்டரில் எப்படியாவது எல்லாம் கிளியர் செய்து, பாஸ் எனும் பாஸிட்டிவ் ரிசல்ட் தான் சொல்லவேண்டும் என்று சபதம் எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை எனக்கு.

எனது இந்த மகத்தான சபதம் புரியாமல் CKV சாரோ! அப்பாவை அழைத்து வரச்சொல்கிறார். என் நிலையை நான் எப்படி இந்த உலகுக்குப் புரியவைப்பது?

"You can sit now!" என்கிறார் சார்!

"சார்!" என்றேன் நான்!

"What?" என்றார் அவர்.

"Sir my parents are in Karur. ஒரு வாரத்துல அவங்களை இங்கே கூட்டிவருவது கஷ்ட்டமான காரியம்!" என்றேன்.

"No problem... ஒரு மாசத்துக்குள் வந்தாபோதும்!" என்கிறார்.

"சார்!" என்றேன் மீண்டும்! அவரும் முறைத்தார் மீண்டும்!

"அப்பாக்கு Bangalore ல Training. ரெண்டு மாசம் கழிந்து தான் வருவார்" என்றேன்.

"May 27th is the time.... அதுக்குள்ள உன் father வந்து என்னை மீட் பண்ணனும். இல்லாட்டி you will not appear for the exams this semester!" என்றார்.

மே 27 க்கு இன்னும் பல நாட்கள் இருந்தன. அதற்குள் சூடு ஆறிவிடும் என்று சமாதானித்து ஒருவழியாக உட்கார்ந்தேன்.

அந்த நொடியிலிருந்து நல்ல பிள்ளையாக மாறி, அக்கறையோடு வகுப்பை கவனித்து, மாதப்பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்களையும், CKV சாரிடம் நல்ல மதிப்பையும் பெற்று, எப்படியாவது இந்தச் சிக்கலிலிருந்து விடுபட்டு என் சபதத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என்று உறுதியும் எடுத்துக்கொண்டேன்.

அதே நாள் மாலையில்,

எங்களுக்கு லேப் ஹவர் இருந்தது. நான் நல்ல பையனாக, CKV சார் கண்ணில் படும்படி சமத்தாக ஒரு PC முன் உட்கார்ந்து சிரத்தையாய் program செய்துகொண்டிருந்தேன். சாரின் கவனத்தை ஈர்க்கும்படி அடிக்கடி அவரிடம் சந்தேகம் வேறு கேட்டுக்கொண்டிருந்தேன்.

அப்போது லேபுக்கு வந்தார் எங்கள் அட்டெண்டர்! CKV சாரிடம் அவர் ஏதோ காகிதத்தை நீட்ட, சார் என் பெயரைச் சொல்லி உரக்க அழைத்தார். நான் உட்பட எல்லோரும் சாரை நோக்க,

"உன் Parents வந்திருக்காங்க.... go and meet them in the office!" என்கிறார் சார்.

இதைக்கேட்டதும் எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது...! அப்பா Bangalore போயிருக்கிறார் என்று இன்றைக்கு காலையில்தான் கதைவிட்டிருந்தேன் அதற்குள் இப்படி மாட்டிக்கொண்டேனே...? தலை சுற்றியது, மயக்கம் வருவது போல் ஆனது... கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போலத் தோன்றியது.

தயக்கத்தோடு CKV சார் முன்பாக நின்றேன். சாரின் முகத்தைப் பார்க்கும் சக்தி எனக்கு இருக்கவில்லை. இதற்குள் என் நீலச்சாயம் வெளுத்துப்போனதை உணர்ந்த என் வகுப்புத் தோழர்கள் "கொல்" லெனச் சிரித்து என்னைக் கொல்கிறார்கள்.

"போய் உங்க அப்பாவ மேலே அழைச்சிட்டு வா!" என்கிறார் சார்.

கீழிறங்கி office room அருகே வந்தேன். என்னை பார்த்ததும் அப்பாவும், அம்மாவும் ஆபீஸ் ரூமிலிருந்து வெளியே வந்தார்கள்.

"இந்த வாரத்துக்குள்ளே Fees கட்டணும்னு லெட்டர் போட்டிருந்தியே? நாங்க ஒரு வேலையா கோயம்பத்தூர் வரவேண்டியிருந்தது, அப்படியே இங்கே வந்து உன்னையும் பார்த்திட்டு பீஸ் கட்டிட்டு போகலாம் னு வந்தோம்..." என்றார் அப்பா. அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல்,

"ஒரு bad news பா... results வந்திடுச்சு... ரெண்டு பேப்பர் அவுட் ஆயிடுச்சு" என்றேன். ஏதோ அன்றைக்குத்தான் ரிஸல்ட் வந்ததைப்போல...!

அப்பா திகைத்தார், அம்மா அதிர்ந்தார்.

சரியாக நான் இதை அப்பாவிடம் சொல்லும் நேரத்தில் ஒரு கூட்டம் எங்களை கடந்து செல்ல, அவர்களும் நான் அப்பாவிடம் கூறிய பொய்யினைக் கேட்க நேர்ந்திட அக்கூட்டத்தில் ஒருத்தி நான் சொல்வதைக் கேட்டு "க்ளுக்" கென்று சிரித்துவிட்டாள். யார் அது எனத் திரும்பிப் பார்த்தேன்....,

வேறு யார்? நான்ஸி தான் அது! அடி மேல் அடியாக விழுகிறதே. வெந்த என் மூக்கில் அவள் சிரித்தது வேலைப் பாய்ச்சியது.

அப்பா ஏதும் பேசாது அமைதியாக இருந்தார். ஆனால் அவர் வேதனிப்பது எனக்குத் தெரியாமலா இருக்கும்?

"ஏன்பா ரெண்டு பேப்பர்ல பெயில் ஆனே? சரியா படிக்கலையா?" என சாதாரணமாகத்தான் கேட்டாள் அம்மா. ஆனால் அவள் உள்ளூக்குள் அழுவது எனக்குப் புரியாமலா இருக்கும்?

"தெரியலேம்மா... நல்லா தான் எழுதினேன்!" என்றேன்.

"மார்க்ஸ் வந்ததா?" எனக்கேட்டார் அப்பா.

நான்ஸியும் தோழிகளும் எங்களூக்கு அருகில்தான் நிற்கின்றார்கள். நான் மார்க் சொன்னால் அவளுக்கும் கேட்கும். தோல்வியில் இரண்டு வகை உண்டு, ஒன்று கௌரவமாகத் தோற்பது, மற்றொன்று முகத்தை வெளிக்காட்ட இயலாதவாறு தோற்பது. இந்த இரண்டு வகையிலும் சேரும் விதத்தில் இருந்தது நான் வாங்கிய பெயில் மார்க்.

அப்போதைக்கு மார்க்கை கூறி அவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று எண்ணி, "இன்னும் மார்க்ஸ் வரலை... இந்த வாரத்துக்குள் வந்திடும்!" எனக்கூறி அடுத்த பொய் புனைந்தேன்.

என் கையில் Fees க்கான காசைத் தந்துவிட்டு, "Fees ஐ கட்டிடு... வேற செலவுக்கெல்லாம் காசு இருக்கா இல்லே ஏதும் வேணுமா?" எனக்கேட்டார் அப்பா.

"இல்ல வேணாம்பா... என் கிட்டே இருக்கு" என்றேன்.

"சரி, நீ கவலைப்படாதே... இந்த வாரம் ஊருக்கு வா அப்ப நாம discuss பண்ணலாம்." என்று கூறி, "நாங்க கிளம்பட்டுமா?" எனக்கேட்டார் அப்பா.

"அப்பா... வந்ததுக்கு HOD ய மீட் பண்ணிட்டு போங்க...!" என்றேன். ஏதோ நானாகச் சொல்வதைப்போல,

"இப்போ மீட் பண்ணணுமா? டைம் வேற ஆகுது. அடுத்த முறை பாத்துக்கலாம்" என்றார் அப்பா.

"இல்லப்பா நீங்க வந்திருக்கீங்கன்னு சாருக்கு தெரியும்... அப்போ மீட் பண்ணாம போனா நல்லாயிருக்காது!" என்றேன்.

அப்பா "சரி" எனக்கூற, அவர்களை அழைத்துக்கொண்டு நான் lab க்குச் செல்ல, எதிரே வந்தார் கிரிஜா மேடம். எனக்கு மரண அடி தந்த கணக்குப் பாடத்தின் ஆசிரியை. அப்பாவையும், அம்மாவையும் கிரிஜா மேடத்திற்கு அறிமுகப் படுத்தி வைத்தேன்,

"CKV May வரைக்கும் டைம் தந்திருப்பதா சொன்னாரே... நீ இன்னைக்கே parents ஐ கூட்டிட்டு வந்திட்டியே!" என்று கிரிஜா மேடம் ஆச்சரியப்பட, அப்பாவும் அம்மாவும் மேலும் திகைப்படைந்து என்னைப் பார்க்க, நான் இதுவரை வாழ்நாளில் அனுபவித்திராத குற்ற உணர்வில் வெட்கித் தலைகுனிந்து நின்றிருந்தேன்.

என் வகுப்பினைக் கடக்கும் போது, "இது தான் என் class" என்று அம்மாவுக்கு காட்டிக்கொடுக்கக் கூட மனம் வரவில்லை. என்னை பெற்றவர்களை அவமானத்திற்குள்ளாக்கியதாக உணர்கிறேன். அது வருத்தமளிக்கிறது, அந்த வருத்தம் என்னை உயிரோடு பிடுங்கித் தின்றுகொண்டிருந்தது.

என் வகுப்புக்குள்ளிருந்து என் தோழிகள் சுனிதாவும், சந்தானலட்சுமியும் எங்களை பார்த்ததும் வெளியே வந்தார்கள்.

"அம்மா எங்களோட இருக்கட்டும். நீ அப்பாவ மட்டும் சார் கிட்டே கூட்டிப்போ" எனக்கூறி அம்மாவை வகுப்புக்குள் அழைத்துச் சென்றார்கள். நான் அப்பாவை அழைத்துக்கொண்டு சாரைப் பார்க்கச் சென்றோம்.

என் குட்டுகள் உடைக்கப்பட்டன!

அப்பாவும் சரி, CKV சாரும் சரி, என்னை திட்டவில்லை.

"மத்த எல்லா விஷயத்திலயும் நல்ல பையன் சார். நெனச்சா படிக்கவும் முடியும். விளையாட்டும், பேச்சும் ரொம்ப ஜாஸ்தி! அதுதான் அவன் பிரச்சினையே. பேச்சை குறைச்சிட்டு, கொஞ்சம் படிப்புல கவனம் செலுத்தணும் அதைத்தான் அவன் செய்யணும்…" என்றார் சார்.

"அவன் ஒழுங்கா படிக்காததை விட என்னை worry பண்ண வைக்கறது அவன் பொய் பேசறான் என்பதுதான்!" என்றார் அப்பா. ரிசல்டினை வீட்டில் சொல்லாமல் நான் மறைத்த விஷயமும் வெளிப்பட்டது. "ரிசல்ட்டை ஏன் வீட்ல சொல்லலை?" எனக்கேட்டார் சார். நான் என் சபதத்தைக் கூறினேன்.

"எல்லா பேப்பரையும் கிளியர் பண்ணணும்னு மனசுல நினைச்சிட்டா மட்டும் போதுமா? அதுக்கான முயற்சியும் எடுக்கணுமா இல்லையா?" எனக்கேட்டார் சார்.

"இனிமேல் கண்டிப்பா முயற்சிசெய்வேன் சார்!" என்றேன் நான்.

"சொல்றதோட நிக்காம அதுக்கான effortsம் எடுக்கணும்.... அப்பா முன்னால எனக்கு promise பண்ணு!" என்றார் அவர். நான் இருவருக்கும் அதன்படி வாக்கு கொடுத்தேன். இனி வரும் செமஸ்டர்களில், ஒவ்வொரு அரியர்ஸ் பேப்பராக எழுதித் தேறி, final semester போகும்போது back papers ஏதும் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறி, அதற்கான எல்லா உதவியும் எனக்குச் செய்துதருவதாக அப்பாவிடம் CKV சாரும் கூற, எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

பெற்றோரை வழியனுப்பினேன். மனதில் மறைத்து வைத்திருந்த காரியங்கள் வெளிப்படுத்தப் பட்டதால் என் மனபாரம் குறைந்து கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனால், தெம்பினை வளரவிடாமல் சில எண்ணங்கள் மனதை அலைகழித்தது.

அப்பாவிடம் "ரிசல்ட் இன்றைக்குத்தான் வந்தது" என்று நான் கூறியபோது நான்ஸி அதைக் கேட்டுச் சிரித்துச் சென்றார்போலத் தோன்றியதே? அவளுக்குக் கேட்டிருக்குமோ?

கேட்டிருந்தால், படிப்பு விஷயத்தில் என் பராக்கிரமம் அவளுக்குப் புரிந்திருக்குமே? என்மீதான அவளது அபிப்பிராயமும் அதள பாதாளத்தில் வீழ்ந்திருக்குமோ?

கவலை வந்தது!

~~~ 0 ~~~

Nancy ஐ ரேகிங் செய்து, பெஹ்ரைன் விஷயத்தில் மூக்கறுபட்ட Nosecut நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவளிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்துவந்தேன். ஆனால், அவளோ என்னை எங்கு பார்த்தாலும், எப்போது பார்த்தாலும் நான் கேட்காமலேயே 'மரியாதை சல்யூட்' செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவள் அப்படிச் செய்வது மரியாதையை தெரிவிக்க அல்ல, அவளால் நான் மூக்கறுபட்டதை நினைவூட்டுவதற்காகத்தான் என்றே எனக்குத் தோன்றியது. ஆதாலால், நான் அவள் சல்யூட்டுக்கு பதில் ஏதும் கூறாமல் கௌரவமாகச் சென்றுவிடுவதுண்டு.

'கௌரவமாக' என்றா கூறினேன்? உண்மையில் என் வெட்கத்தையும் சங்கோஜத்தையுமே கௌரவம் என்று மொழிபெயர்த்துக் கொள்கிறேன் அவ்வளவுதான். உண்மையில், நான்ஸியைப் பார்த்தாலே ஒருவித அவமானம் என்னை ஆட்கொண்டுவிடுகிறது. ஒவ்வொறு முறையும் இவள் முன்பாக, இவள் சிரிக்கத்தோதாக, நான் சறுக்கிவிடுவதால் தான் அப்படி.

நான் சறுக்குவது இருக்கட்டும், அதற்காக ஒரு ஜூனியர் பெண் என்னைப் பார்த்து சிரித்து விடுவதா? என் மீது பயம் இருந்தால் இப்படி சிரிக்கத் துணிவாளா? இதை இப்படியே விடக்கூடாது. இப்படியே தொடர்ந்தால் சீனியர் எனும் என் மதிப்பு அதிவிரைவில் மங்கிப் போகும். விடக்கூடாது. அவளை அடுத்தமுறை பார்க்கையில், அவளை மிரட்டல் செய்து, என் மீது பயத்தை ஏற்படுத்தி என் மதிப்பை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அன்றையதினம்,

நான் நான்ஸியின் வகுப்புக்கருகில் என் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கையில், நான்ஸியும் அவளின் தோழி மாலினியும் வகுப்பிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். இது நல்ல சந்தர்ப்பம். இன்று அவள் எனக்கு வழக்கம்போல சல்யூட் செய்யும்போது, அவளை அதட்டி, மிரட்டி, பயம்கொள்ளச் செய்துவிட வேண்டியதுதான் என்று காத்திருந்தேன். ஆனால் நான்ஸியோ நான் அங்கே நிற்பதை ஒரு பொருட்டாகவே கருதாமல் என்னைக் கடந்து செல்கிறாள்.

இவளென்ன எனக்கு Nosecut தருவதற்கென்றே பிறப்பெடுத்தாளா? எப்போதும் என்னைப் பார்த்ததும் சல்யூட் செய்பவள் இன்று நான் அவள் செய்வாள் என்று எதிர்பார்க்கையில் கண்டுகொள்ளாமல் போகிறாளே? இருக்கட்டும் பரவாயில்லை. ஆனாலும் நான் பின்வாங்கப் போவதில்லை. இதோ இவள் என்னை உதாசீனப் படுத்தவும் துவங்கிவிட்டாள். இப்படியே விட்டால் என் சரிந்த நிலை நிமிர்வது கடினமாகிவிடும். இதை இப்போதே சரி செய்தால்தான் சரிவரும்....!

"ஏய் நில்லுடி...!" என்றேன் கோவமாக நான்ஸியைப் பார்த்து.

அவள் நின்றாள். என்னை பார்த்தாள். என்னருகே வந்தாள். "என்ன?" என்றாள்.

"என்ன மரியாதையெல்லாம் மறந்துபோச்சா? ஏன் சல்யூட் பண்ணல?" என்று கேட்டு நான் அவளை மிரட்ட,

"எதுக்கு சல்யூட் செய்யணும்? பாக்கும்போதெல்லாம் சல்யூட் செய்யணும்னு என்ன சட்டமா?" என்று என் மிரட்டலுக்கு மிரளாமல் பதில் கேள்வி கேட்கிறாள்.

"என்னடி... என்ன குளிர் விட்டுப்போச்சா?" என்றேன் கோவத்தைக் குறைக்காமல். அதற்கு அவள்,

"என் பேரு நான்ஸி. ஒழுங்கா என் பேரைச் சொல்லி கூப்பிடுங்க, அதைவிட்டிட்டு இப்படி வாடி போடின்னெல்லாம் கூப்பிட்டு வம்பு பண்ணினா அப்புறம் HOD கிட்டே கம்ப்ளெயிண்ட் செய்யவேண்டியிருக்கும்!"

-- என்று கூறி விருட்டென அங்கிருந்து நகர்கிறாள். நான் அவளை வழி மறித்து நின்றேன்.

"என்ன மிரட்டறியா? என்னடி கம்ப்ளெயிண்ட் பண்ணுவ? வா நானும் கூட வர்றேன்... என்ன பயந்திடுவேன்னு நெனச்சியா? வாடி போலாம் HOD கிட்டே..." என்றேன், மதம் பிடித்த யானையைப் போல.

"கம்ப்ளெயிண்ட் பண்ண மாட்டேன்னு நெனச்சீங்களா? யார் Rag பண்ணினாலும் வந்து கம்ப்ளெயிண்ட் பண்ண சொல்லியிருக்கார் CKV சார். எனக்கு எந்த பயமும் இல்ல, பாவம் உங்க parents தான் ஏற்கனவே ஒரு தடவ வந்து உங்க பெருமையை எல்லாம் தெரிஞ்சிட்டு போயிருக்காங்க... அவங்களை இன்னொரு தடவை வரவழைக்க வேண்டாமேன்னுதான் சும்மா இருக்கேன்... Mind you..."

-- என்று உரத்த குரலில் அவள் பதில் உரைக்க, அவள் இப்படிச் சொல்வாள் என்று எதிர்பார்க்காத நான் அதிர்ந்து நின்றேன் உறைந்து.

அவளை மிரட்டிவைக்கவேண்டும் என்று நினைத்தேன். இப்போது நான் தான் மிரண்டு நிற்கிறேன். அவளிடம் பேசுவதையே தவிர்த்துவந்த நான் இன்று இப்படி அவளிடம் அவமானப் படுவதற்கா பேச்சு வளர்த்தேன்? என்று யோசித்து என்னையே நான் நொந்துகொண்டேன்.

மீண்டும் என் மூக்கில் வெட்டுக்காயம்!

~~~ 0 ~~~

ரேகிங் காலம் முடிவுற்றது.

சீனியர் ஜூனியர்களுக்கிடையில், நட்பும் காதலும் பூக்கத் துவங்கியது. ஆனால், எனக்கும் நான்ஸிக்கும் இடையே மனவருத்தங்கள் இன்னும் மங்காதே இருப்பதால் எங்களுக்கிடையே எதுவுமே பூக்கவில்லை.

நான்ஸியின் வகுப்பில் அவளைத்தவிர மற்றவர்கள் என்னிடம் நெருக்கமாகப் பழகினார்கள். அவளின் தோழிகள் உட்பட சிலரோடு எனக்கு நல்ல நட்பும் உண்டானது. அவள், அவளின் தோழிகளோடு இருக்கையில், அங்கு நானும் இருக்க நேர்ந்தால், என் நோக்கமெல்லாம் அனைவரின் கவனத்தையும் என் மீது படிந்திருக்கும்படிச் செய்வதில்தான் இருக்கும்.

உண்மையில், மற்றவர்களிடம் நான் ஏதும் பேசிக்கொண்டிருந்தாலும் குறி வைப்பது என்னமோ நான்ஸியைத்தான். ஏதும் விகடம் பேசி அவர்களை சிரிக்கவைத்தது நான்ஸி சிரிக்கத்தான். கவிதைபோல் ஏதேனும் கூறி அவர்களை லயிக்க வைத்தது நான்ஸி லயிக்கத்தான்.

சிரித்துவிடாதிருக்க, லயித்துவிடாதிருக்க நான்ஸியும் ஆவன செய்வாள். பொங்கிவரும் சிரிப்பினை அடக்க, பற்களால் உதட்டைக் கடித்துப் பிடித்திருப்பாள். நான் இருப்பது பொருட்டல்ல என்பதைப்போல, வேறு திசைநோக்கி பார்வையைப் பதித்திருப்பாள். என் மீது அவள் கவனம் இல்லையென்று காட்டிக்கொள்ள, மும்முரமாய் வேறேதும் காரியத்தில் ஆழ்ந்திருப்பதாய் நாடகம் கொள்வாள்! எதுவும் சரிவரவில்லை என்றால் அங்கிருந்து நழுவி வேறு எங்கேனும் சென்றிடுவாள்.

அவளை இப்படி கூட்டத்தினின்று தனிமைப்படுத்தி, ஒதுக்கி, ஒருமைப்படுத்துவதில் எனக்கொரு அலாதி திருப்தி. அவளைப் பழி வாங்குவதாய் ஓர் நிம்மதி.

இவை இப்படியிருக்க, ஒரு நாள் நான் கிரிக்கெட் பிராக்டீஸில் ஈடுபட்டிருந்தேன்.

எங்கள் கல்லூரி மேனேஜ்மெண்டுக்கு சொந்தமான பள்ளி ஒன்று நகர மத்தியிலேயே இருந்தது. அந்த பள்ளி மைதானத்தில்தான் வார இறுதிகளில் எங்களின் கிரிக்கெட் பிராக்டீஸ் நடக்கும். அது ஓர் தங்க மைதானம். ஏனென்றால், அந்த மைதானத்தை ஒட்டித்தான் பெண்கள் விடுதி இருந்தது. அந்த விடுதியில்தான், நான்ஸி உட்பட, எங்கள் கல்லூரியில் படிக்கும் பெண்கள் தங்கியிருந்தார்கள்.

விடுதியில், மைதானத்தை நோக்கியிருக்கும் பகுதியில், திறந்திருக்கும் ஜன்னல் கதவுகளின் எண்ணிக்கைக்கேற்ப விளையாட்டில் எங்கள் உத்வேகம் கூடுவதுண்டு. அன்றும் அங்குதான் ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்தோம்!

என் வகுப்புத்தோழன் ‘லெனின்’ தான் எங்கள் ஆஸ்தான விக்கெட் கீப்பர். அன்று அவன் ஏதோ காரணத்தால் கீப்பிங் செய்ய இயலாமல் போக, என்னை விக்கெட் கீப் செய்ய அழைத்தார்கள். Pad அணிந்து விக்கெட் கீப்பிங் Gloves அணிந்து, ஓரக்கண்ணால் எத்தனை ஜன்னல்கள் திறந்திருக்கின்றன என்று நோட்டமிட்டு நானும் தயார் ஆனேன் கீப் செய்ய.

மண்டைபாப்பான் என்று சிலரால் அழைக்கப்படும் அனில்குமார்தான் வேகப்பந்து வீச்சாளன். அவன் வீசிய முதல் பந்தே பேட்ஸ்மேனின் பேட்டில் அழகாகப் பட்டு என்னை நோக்கி விரைந்து வந்தது. கீப் செய்ய வந்த முதல் பந்திலேயே கேட்ச் வந்திட்டதே, விடுதி ஜன்னல்கள் முன்னிலையில் திறமை வெளிப்படப்போகிறதே என்று எனக்குள் உற்ச்சாகமும் பொங்கி வந்தது.

என் முகத்திற்கு நேராக வந்த அந்த பந்தைப் பிடிக்க Gloves மாட்டிய கைகளை என் முகத்திற்கு நேரே கொண்டுவந்து, பந்தைப் பிடித்து இரு கையை உயர்த்தி "அவுட்டேய்ய்ய்ய்ய்..." என அப்பீல் செய்ய எத்தனித்த வேளையில்தான் ஒரு அப்பட்டமான உண்மை புரிந்தது. ஆர்வக்கோளாறில் பந்தை பிடிக்கும் முன்பே கைகளை உயர்த்திவிட்டேன் என்பதே அது. விரைந்து வந்த பந்து நேராக என் மூக்குக்கும், மேல் உதட்டுக்கும் இடையில் உள்ள இடத்தைப் பதம் பார்க்க, என் மேலுதடு கிழிந்து இரத்தம் சூடாய் வழிந்தது.

விடுதி ஜன்னல்கள் "உச்" கொட்டின.

மேலுதடு உள்பட முகம் மொத்தமும் வீங்கிப்போக, முகம் அகோரமாகிப்போனது. இரண்டு நாட்களாகியும் வீக்கம் குறைந்தபாடில்லை. ஆதலால், வீங்கிய மேல் உதட்டை கர்சீப்பால் மூடி மறைத்துக் கொண்டே கல்லூரிக்குச் சென்றேன். வீக்கம் காரணமாக, அது உண்டானவிதம் தந்த வெட்கம் காராணமாக, வெளியே நடமாடாமல் வகுப்பிலேயே பெரும்பாலும் இருந்தேன்.

இருந்தாலும் ‘டீ’ குடிக்க கேண்டீன் போனபோது மாட்டிக்கொண்டேன்.

அந்த நேரத்தில் கேண்டீனில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று எண்ணித்தான் டீ குடிக்க வந்தேன். நான் வந்தபோது யாரும் அங்கே இருக்கவும் இல்லை. டீ வாங்கி, ஒரு மூலையில் அமர்ந்து கஷ்ட்டப்பட்டு குடிக்கத்துவங்கியபோது நான்ஸி அவள் தோழி மாலினியுடன் அங்கே வந்தாள்.

அவர்களை பார்த்ததும், அவர்கள் என் காயத்தை கவனித்திடக்கூடாதென்று அவசர அவசரமாக என் கைகுட்டையை எடுத்து வீங்கிய உதட்டை மறைக்கப் பார்த்தேன். பலனில்லை. அதற்குள் நான்ஸி என்னை கவனித்துவிட்டாள். நான் அங்கிருப்பதை கவனித்தவள், வழக்கம்போல அவள் பார்வையை வேறு பக்கமாக திருப்ப முனைந்தாள். ஆனால், என் முகத்தில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவளாக மீண்டும் என்னை உற்று நோக்க, வீங்கியிருக்கும் என் உதட்டைக்கண்டு அதிர்ந்து அவளையும் அறியாமல்,

"என்ன ஆச்சு? முகத்துல என்ன? உதடு ஏன் இப்படி வீங்கியிருக்கு?" என்று கேண்டீன் முழுவதும் எதிரொலிக்கும் விதம் கேட்டும்விட்டாள்!

அதைக்கேட்ட மாலினியும் என்னை கவனித்து, விரைந்து என் அருகில் வந்து, என்ன ஆச்சு? எப்படி ஆச்சு? என்றெல்லாம் கேள்விக்கணைகளை பாய்ச்சத்துவங்கினாள்.

இதுவென்ன வீரத்தழும்பா நான் விலாவரியாக விவரித்துச் சொல்ல? பந்தை பிடிக்கும் முன்பே, அதைப் பிடித்ததாக எண்ணி கையைத் தூக்கியதில் அடி பட்டுவிட்டது என்று பெருமை பொங்க சொல்லவும்தான் முடியுமா? சொன்னாலும் "கொல்"லெனச் சிரிக்க மாட்டார்களா? இப்போதே சிரிப்புத்தான் வருகிறது அவர்களுக்கு! பார்த்தால் யாவரும் சிரிக்கும் விதத்தில்தான் என் காயமும் இருக்கிறது.

"என்ன ஆச்சுன்னுதான் சொல்லுங்களேன்!" என்கிறாள் மாலினி.

"அடி பட்டிடுச்சு..." என்றேன் ஒற்றை வாக்கியத்தில்.

"அதுதான் எப்படின்னு கேக்கறேன்?" என்று கொஞ்சம் சலிப்போடு கேட்டாள் மாலினி.

"எப்படீன்னா? திரும்ப அடிபட்டு காட்டவா?" என்றேன் கொஞ்சம் கடுப்போடு. அதற்கு,

"அடிபட்டுக் காட்டவேண்டாம். எப்படி அடி பட்டுச்சுன்னு சொன்னால் மாத்திரம் போதும். ஏற்கனவே இருக்கும் இந்த ஒரு வீக்கம் போதலைன்னா இன்னொருமுறை அடிபட்டு இன்னொரு வீக்கத்தை சம்பாதிக்க நினைக்கறீங்க? சொன்னால் மாத்திரம் போதும்!" என்கிறாள் மாலினி.

மாலினி என்னிடம் சகஜமாகப் பேசும் நல்ல தோழி. வாயாடி. என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே உரிமையும் எடுத்துக்கொள்வாள். எடக்காக நான் கேட்ட கேள்விக்கு மாலினி சொன்ன சாமர்த்தியமான பதிலைக் கேட்டு நான்ஸி சிரிக்கின்றாள்.

நான்ஸி சிரித்தாலே என் மூக்கு அறுபடுவதாய் நான் உணர்வதால் எனக்கு அவள் மீது கோவம் பொத்துக்கொண்டு வந்தது. கோவத்தில்,

"என்ன சிரிப்பு உனக்கு?" என்று சற்றே குரலுயர்த்தி கேட்டேன் நான்ஸியை.

"இப்போ எதுக்கு கோவப்படறீங்க? அடிபட்டிருந்தா என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு யாரும் கேக்கமாட்டாங்களா? அதைக் கேட்டா ஏன் கோவம் வருது உங்களுக்கு?" என்று நான்ஸியும் பதிலுக்கு குரலுயர்த்தியே கேட்கிறாள்.

"எனக்கு என்னவோ ஆயிட்டுப்போகுது. அதுல உனக்கென்ன அக்கறை?" என்றேன் குரளலவைக் குறைக்காமல்!

"ஒரு அக்கறையும் இல்லை. ஏதோ தெரிஞ்சவராச்சேன்னு கேட்டோம்... உங்கமேலே நாங்க எதுக்கு அக்கறைப்படனும்?" என்று அவள் அதற்கும் ஏட்டிக்குப் போட்டியாக பதில் கூற,

"ஐயோ... ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துங்க...." என்று கூறிய மாலினி என்னிடம்,

"எப்படி அடி பட்டுச்சுன்னு ஒரு சாதாரண கேள்வி கேட்டேன். இப்படி பட்டுச்சுன்னு சொல்லியிருந்தா கேட்டுட்டு பேசாம போயிருப்பேன். அதை விட்டுட்டு ஏன் தேவையே இல்லாம, இல்லாத ஒரு பிரச்சினையை வளர்த்திட்டிருக்கீங்க?" எனக்கேட்க, அதற்கு நான்ஸி,

"விடு மாலினி. இது அடிபட்ட காயமா இருக்காது. யாராவது கடிச்சு வச்சிருப்பாங்க, அதுனாலதான் பதில் சொல்ல முடியாம நம்மகிட்ட எரிஞ்சுவிழறார்." என்கிறாள்.

அதைக்கேட்டதும் மாலினி என்னைப் பார்த்து,

"ஓஹ்.. அதுதான் விஷயமா? யாரு இப்படி கடிச்சு ரொமான்ஸ் பண்ணினது? அதைச் சொல்லுங்க முதல்ல!" என்று கண்ணடித்துக்கொண்டே கேட்கிறாள்.

மாலினி கேட்டது என் காதில் விழுந்தாலும், என் கவனமெல்லாம் நான்ஸியைச் சுற்றியே இருந்தது.

'நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை ஏதுமில்லாமல் இருந்துவிட்டு இன்று எப்படி இவள் பேசத்துணிகிறாள்? அதுவும் என்னை கேலி செய்வதுபோல் பேசுகிறாளே? இதில் ஏதோ விஷயம் உள்ளது, இவள் ஏதோ விஷமம் செய்கிறாள். ஒருவேளை என்னை பழிவாங்க ஏதும் சதி செய்கிறாளோ? கூட்டத்தினின்றும் அடிக்கடி அவளை தனிமைப்படுத்தியதற்கு என்னை பழிவாங்கும் நோக்கம் ஏதும் இவள் இப்போது பேசுவதில் இருக்குமோ?'

என்றெல்லாம் எனக்கு சந்தேகம் பிறந்தது. எதுவாயினும் விடக்கூடாது. இன்னொருமுறை இவளை என் மூக்கையுடைக்க விடக்கூடாது. அவள் எனக்கு Nose cut தரும் முன்பே நான் அவள் அவளுக்கு Nose cut குடுத்திடவேண்டும்...! என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மாலினி,

"வெட்கப்படாம சொல்லுங்க...யார் கடிச்சது?" என்று மீண்டும் மீண்டும் கேட்க, முன்பின் யோசிக்காமல், நான்ஸியை முந்திக்கொண்டு அவள் மூக்கை உடைத்திடவேண்டும் எனும் நோக்கத்தில் மாலினியைப் பார்த்து,

"உன் பிரெண்டுதான் கடிச்சா! ஏன், அவ உன்கிட்டே சொல்லலியா? அவதான் கடிச்சுவச்சா. கடிச்சதையும் கடிச்சிட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நாடகம் ஆடுறா" என்று கூறி நான்ஸியைப் பார்த்து,

"நீதானே கடிச்சே? அதுக்குள்ள உனக்கு மறந்துபோச்சா?" என்றேன் கொஞ்சம் சத்தமாகவே.

மாலினி அதிர்ந்தாள். நான்ஸி திகைத்துப்போய் நிற்கிறாள். சடாரென அக்கம்பக்கம் திரும்பி வேறு யாரேனும் கேட்டுவிட்டார்களா என்று பார்த்துக்கொண்டாள். கண்டிப்பாக ஓரிருவர் கேட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் எங்களுக்கு அருகில், பக்கத்து மேஜையில் உட்கார்ந்திருந்த அந்த ஜூனியர் பையனின் காதிலாவது தெளிவாய் இது விழுந்திருக்கவேண்டும்.

நான் இப்படிப் பேசுவேன் என்று இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஏன், நானே கூட எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வதென்று அறியாது சற்று நேரம் சலனமில்லாமல் உட்கார்ந்திருந்தாள் நான்ஸி!

அந்த அழகு முகத்தில் படர்ந்திருந்த புன்னகை பொசுக்கென்று பொசுங்கிப்போனது. அவளின் மலர் மனம் என் வார்த்தைகள் கேட்டு நசுங்கிப்போனது. கண்கள் கலங்கிட மெல்ல அவள் விசும்பியதும் என் செவிகளுக்குக் கேட்டது. மேற்கொண்டு பேசாமல், இருந்த இருப்பிலேயே சற்று நேரம் இருந்தவள், விருட்டென்று எழுந்து கேண்டீனைவிட்டு வெளியேறினாள்.

"ஏன் இப்படி இருக்கீங்க? யார் மனசு நோகுதுன்னு பாக்காம எதையும் பேசிடுவீங்களா? தேவையே இல்லாம அவளை வருத்தப்பட வைக்கறீங்க. ஏன் உங்களுக்கு இருக்கிற மதிப்பை நீங்களே கெடுத்துக்கறீங்க?" என்று முகம் சுழித்துக் கூறிவிட்டு மாலினியும் நான்ஸியைத் தொடர்ந்து சென்றாள்.

இது ஏன் இப்படி?

எதற்காக நான்ஸி மீது இத்தனை கோவம் கொள்கிறேன்? ஏன் அந்தக்கோபம் என் தலைக்கேறி அவள் வருந்தும்படியாக என்னை பேசவைத்திடுது? நானோ அவளைக் கண்டது முதலாய் அவளை இரசித்துக்கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க ஏன் எங்களிடையே எப்போதும் உரசலும், விரிசலுமே உண்டாகிப்போகிறது?

இது ஏன் இப்படி?

உண்மையில் என் கோவம் அவள் மீதல்ல. சந்தர்ப்பங்கள் மீதுதான்! என்னை குறித்து அவள் மனதில் நல்லதோர் மதிப்பு வளர்ந்திட வகைசெய்யாமல், ஒவ்வொரு முறையும் அவள் முன்பாக என் நிலை கேலிக்குள்ளாவதுபோல அமைத்திடும் சர்ந்தர்ப்பங்கள் மீதுதான் என் கோவமெல்லாம். அதைத்தான் அவள்மீது கொட்டித்தீர்க்கிறேன் போலும்!

~~~ 0 ~~~

ந்தர்ப்பங்கள் இப்படி எங்களுக்கிடையில் ஓர் இடைவெளியை உண்டாக்கிட்டபோதிலும் நான் அவளை இரசிப்பதிலிருந்து சற்றும்கூட பின்வாங்கவில்லை. பின்வாங்குதல் சாத்தியமும் இல்லை. ஏனென்றால், இந்தப் பெண் சாதாரணமானவள் அல்ல.

அழகு கொண்டிருப்பதும், அத்தோடு, 'தான் அழகு' எனும் அகந்தை கொள்ளாதிருப்பதும், அவ்வழகோடு அறிவும், திறமையும் ஒன்றிக் கலந்திருப்பதும், இவற்றோடு குறும்பும், நகைச்சுவை உணர்வும் அமையப்பெற்றிருப்பதும், அபூர்வத்திலும் அபூர்வம். நான்ஸி அபூர்வம். அழகான அபூர்வங்களை இரசிக்காதிருப்பது அபத்தம். ஆதலால்தான், இடைவெளி உண்டானபோதும் அவளை இரசிக்கும் செயலை நான் உயிர்ப்பித்தே வைத்திருந்ந்தேன்.

'அதிகம் ஆராதிக்கும் சிலரை அருகாமல் தூர நின்று ஆராதிப்பதே நன்று' என்று சொல்வதுண்டு. நானும் இனி நான்ஸியை தூர நின்று ஆராதிப்பதே நல்லது என்று முடிவெடுத்தேன். பேசியும், பழகியும், உணர்வுகள் இரண்டறக் கலந்தும் வளர்வது ஒருவகை நெருக்கமென்றால், பேசாதும், பழகாதும், எட்ட நின்றே ஆராதிப்பது மற்றொருவகை நெருக்கம்.

இந்த இரண்டாம் வகையைச் சார்ந்து நெருக்கம்கண்டு, நான் மட்டுமே அறியும் இரகசிய நட்பினை நான்ஸியோடு வளர்த்திருந்தேன்.

அந்த வருடம் ஓடிமாய்ந்தது. செமஸ்டர் லீவும் ஆரம்பமானது.

என் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் கேரளாவில்தான் கழியும். அங்கே என் வயதையொத்த Cousins களின் Gang என் வருகைக்காக காத்திருக்கும். இவர்களோடு ஊரைச்சுற்றி பொழுதைக் களிப்பதும், மோகன்லாலின் படங்களை பார்ப்பதும், "தட்டுகட" எனப்படும் கையேந்தி பவனில் சப்பாத்தியும், 'பொறிச்ச கோழி'யும் சாப்பிடுவதும், பைக்கில் இரவுநேர நகர் உலா போவதும் என, மலையாளிகள் சொல்வதைப்போல "அடிபொளி" யாகத்தான் கழியும் கேரளாவில் என் விடுமுறை நாட்கள். அதுவும், இந்தமுறை நான்ஸியின் கதைவேறு இருக்கிறது, நான் ஊர் நண்பர்களிடம் வாயளக்க. என் இரகசிய நட்பைக் கேட்டு அவர்களும் வாய்பிளக்க!

ஊருக்குக் கிளம்பினேன் உற்சாகமாக!

கோயம்பத்தூரை நள்ளிரவில் கடக்கும் Tea Garden Express எனக்குப் பிடித்தமான ரயில்களில் ஒன்று. அதில் எர்ணாகுளம் வரை சென்று, அங்கிருந்து அதிகாலையில் புறப்படும் "Venad Express" ல் ஊர் வரை செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான பயணத்திட்டம்.

இரயிலை பிடிக்க இரயில் நிலையத்திற்கு வந்தால் அங்கே எனக்கொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. என் கல்லூரிப் பெண்களும் அதே ரயிலுக்குக் காத்திருக்கிறார்கள். வழக்கமாக பஸ்களிலோ, அல்லது காலை இரயிலான Island Express-ல் அல்லது கேரளா எக்ஸ்பிரஸில் தான் இவர்கள் செல்வது வழக்கம். இன்று ஏனோ இரவு இரயிலேயே இவர்களும் வருகிறார்கள்.

என் வகுப்புத் தோழியர் சிலருடன், ஜூனியர் வகுப்பு பெண்கள் சிலரும் இருக்க, அவர்களோடு நான்ஸியும், மாலினியும் உடனிருந்தார்கள். பத்து பெண்கள் புடைசூழு, அவர்களுக்கிடையே ஒரே ஆண் நானென்று ஆக, ஆனந்தமாகத் துவங்கியது எங்கள் பயணம்.

அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் விடுமுறைக்கு யாத்திரை செய்யும் வெவ்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்தான் நிரம்பி வழிகின்றனர். எங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டவசமாக உட்கார இடம் கிடைத்தது. நான்ஸியும், மாலினியும் ஒரு பக்கத்தில் உள்ள ஒற்றை இருக்கைகளில் (side seat) அமர்ந்துகொள்ள, நானும் மற்றவர்களும் மறுபக்கத்தில் உள்ள மூன்றுபேர் அமரும் இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டோம். கேலிப்பேச்சு, அரட்டை என எல்லோரும் பயணத்தை ஆனந்தமாக ஆஸ்வதித்திருக்க, நான் இருப்பதால் நான்ஸியும், நான்ஸி இருப்பதால் நானும் யாதொன்றும் பேசாது அமைதிகாத்தே இருந்தோம். மாலினிதான் எங்கள் இருவரோடும் ஏதேனும் பேசிக்கொண்டே வருகிறாள்.

ஆனந்தமான யாத்திரை இதுவென்று எண்ணியிருந்த எனக்கு பேராபத்து ஒன்று நான் பாத்ரூம் போய் வருகையில் பாத்ரூம் வாசலிலேயே காத்திருந்தது. பாத்ரூம் வாசலில் சில பையன்கள், வேறு கல்லூரியில் படிக்கும் சில தடியன்கள், என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். எல்லோரும் போதையில் மிதந்துகொண்டிருந்தார்கள்!

"தமிழா? மலையாளமா? ஏது பேசும்?" என்று என்னைப்பார்த்து குழறிக்கேட்டான் அதில் ஒருவன்.

"ரெண்டும் பேசும்" என்று நான் அவனுக்கு பதில் கொடுத்தேன்.

"எவிடே போகுந்நு?" என்று குழறிக்கொண்டே கேட்டான் கூட்டத்தில் மற்றொருவன். கேள்விகள் கேட்டுக்கொண்டே அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். வசமாக, தனியாக, நானும் அவர்களின் வளையத்திற்குள் சிக்கிக்கொண்டேன்.

அழகான பத்து பெண்பிள்ளைகள் ஒரே பெட்டியில் பயணம் செய்தால் அதில் பயணம் செய்யும் மற்ற ஆண் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்தான். பார்வை வீசலாம், பேச்சை வளர்க்கலாம், உதவுகிறேன் பேர்வழி என்று நெருக்கம் காட்டலாம், விசில் அடித்து வம்பு வளர்க்கலாம், பயணத்தை ருசிகரமாக்கலாம்.

ஆனால், என்னே துர்பாக்கியம்? நான் ஒருவன் இடைஞ்சலாகக் கூடவே வருகிறேனே! என் மயில் கூட்டத்தை அவர்கள் நெருங்க நான் ஒரு தடையாக இருப்பது லஹரியில் மிதக்கும் அவர்களை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கவேண்டும். ஆதலால் என்னைச் சூழ்ந்துகொண்டு நான் எப்படி என்று ஆழம் பார்க்கிறார்கள்.

நான், வெகு இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, சாதாரணமாக சக யாத்திரைக்காரரிடம் பேசும் தொணியிலேயே பேசினேன். எங்கே போகிறாய்? என்றவன் கேட்ட கேள்விக்கு நான் போகவேண்டிய இடத்தைக் கூறினேன்.

"கூட உள்ள girls எல்லாரும் எங்கே போறாங்க?" என்று இன்னொருவன் கேட்க, அது அவன் அக்கறைகுட்பட்ட விஷயம் இல்லை என்பதால் நான் பதில் கூறும் என் தொனியை மாற்றினேன்! அவர்கள் என்னை இளப்பமாக நினைத்திடக் கூடாதல்லவா? ஆதலால், குரலை பலப்படுத்தி,

"பலரும் பல இடங்களுக்குப் போகிறார்கள், என்ன விஷயம்?" எனக்கேட்டேன் குரலில் கொஞ்சம் கோபமுலாம் பூசி!

என் தொனி மாற்றம் அவர்களுக்கு ரசிக்கவில்லை போலும். "நீ ஆராடா கிருஷ்ண பரமாத்மாவா?" என்று இன்னொரு போதை மனிதன் திடீரென முளைத்து என்னிடம் சீறினான். நான் கிருஷ்ணனாம் என் மயில்கள் கோபியராம். போதையில் அவனுக்கு அப்படித் தெரிகிறதாம். அதனால் அவனுக்கு பற்றிக்கொண்டு எரிகிறதாம்.

கண்டிப்பாக பிரச்சினை செய்யப்போகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறது. இதை எப்படிச் சமாளிப்பது? எங்கள் கல்லூரியைச் சேர்ந்த வேறு பையன்கள் எவரும் அந்தப் பெட்டியில் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்தக் குடிகாரர்களிடம் சண்டைக்குப் போவதும் சரிவராது. நானோ ஒரே ஒருவன். அவர்களோ, ஒரு தடிமாட்டுக் கூட்டம். எல்லோரும் போதையில் வேறு மிதக்கிறார்கள். பிரச்சினையை வளர்ப்பது எனக்கு மட்டுமல்ல என் மயில்களுக்கும் ஆபத்தே! எப்படிச் சமாளிப்பது?

என்னிடம் அவர்கள் செய்யும் வம்புகளுக்கு பொறுமையாக அமைதிகாப்பதும், என் மயில்களிடம் தொல்லைக்கு வந்தால் ஆவது ஆகட்டும் என சீறிப்பாய்ந்து முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பதுவுமே சிறந்த யோசனை என்று முடிவுசெய்தேன்.

"உன் பிரச்சினை என்ன?" என்று என்னை சீண்டியவனைப் பார்த்து தீர்க்கமாகக்கேட்டாலும், உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. குடிபோதையில் இருக்கும் இவர்கள் விபரீதமாய் ஏதேனும் செய்திடுவார்களோ எனும் அச்சம் எனக்கு ரொம்பவே இருந்தது. இருந்தாலும், மற்ற பயணிகள் உதவிக்கு வரக்கூடும் எனும் குருட்டு நம்பிக்ககையில் வீரன் போல் எதிர் கேள்வி கேட்டு என்னை சீண்டிவயவனை முறைத்து நின்றேன்.

நல்லவேளையாக சமாதானப் புறா ஒன்று பறந்து வந்தது.

ராவணக் கூட்டத்தில் விபீஷணன் போல, சில அடாவடிக் கூட்டங்களில் reasonable person ஒருவன் இருப்பான். மது அருந்தியிருந்தாலும் மதிமயக்கும் போதைக்குள் இவன் போகமாட்டான். இவன், தன் நண்பர் கூட்டம் அதிக ரசாபாசங்களில் ஈடுபடாமல் காக்கும் பொறுப்பை அவனாக எடுத்துக் கொண்டிருப்பான். அவன் நண்பர் கூட்டமும் இவன் பேச்சுக்குக் கட்டுப்படும். இதுபோல ஒரு ரீஸனபிள் பெர்ஸன் என்னைச் சூழ்ந்த கூட்டத்திலும் இருந்தான்.

"டா... வாய மூடுடா!" என என்னிடம் சீறுபவனை அடக்கிவிட்டு என்னைப் பார்த்து "நிங்கள் போயிக்கோங்க!!" என்று தமிழும் மளையாளமுமாகக் குழறி என்னை அந்த வளையத்திலிருந்து விடுவித்தான்.

நான் மீண்டும் என் மயில் கூட்டத்தோடு ஐக்கியமானேன். ஆனாலும், என் கவனமெல்லாம் அந்தக் கும்பல் மேலேயே இருந்தது. அவர்கள் ஏதேனும் தொந்தரவு தரக்கூடும் என்று என் உள்ளுணர்வு உரைத்துக்கொண்டேயிருந்தது. என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்துவது பலப்போதும் பொய்த்துப்போவதில்லை. அன்றும் பொய்க்கவில்லை.

பலமுறை நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை அங்கும் இங்குமாகக் கடந்து சென்றது அந்தக் கூட்டம். அதில் இருவர், வெளியே செல்லும் கதவினை(door ஐ)த் திறந்து அங்கேயே அமர்ந்து கொண்டார்கள்.

அந்தக் கதவினை ஒட்டிதான் மாலினி உட்கார்ந்திருக்கும் ஒருவர் அமரும் இருக்கையும் (side seat) உள்ளது. ஏதோ தொல்லை செய்வதற்காகவே அவர்கள் அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது அவர்களை பார்க்கும்போதே தெரிகிறது. அதிவிரைவில், தொல்லையும் துவங்கியது. படிக்கட்டில் உட்கார்ந்திருந்த இருவரில் ஒருவன் வெளிப்புறமாக கையை நீட்டி, ஜன்னல் வழியே மாலினியைக் கிள்ளியிருக்கிறான்.

சடாரெனெ எழுந்தாள் மாலினி. அதைப்பார்த்து நானும் எழுந்தேன்.

"தொந்தரவு செய்யறாங்களா மாலினி?" எனக்கேட்டேன்.

"என் கையைப் பிடித்துக் கிள்ளுகிறான்" என்று பதட்டத்தோடு கூறினாள் மாலினி.

இதைக்கேட்டு நான் அந்தப் பையன்களை நோக்கி வேகமாக போகத்துவங்க, என் கையைப் பிடித்து இழுத்து என்னை தடுத்திட்டாள் நான்ஸி.

"வேண்டாம்... நீங்க ஏதும் பேசாதீங்க, அவங்க உங்களைத்தான் வம்புக்கிழுக்கப் பாக்கறாங்க. இதை நாங்க handle செஞ்சுக்கறோம். நீங்க அங்கே போகாதீங்க...!" என்று கூறி, தன் சல்வாரின் துப்பட்டாவை ஒரு பக்கமாக இழுத்துக் கட்டி முடிச்சு போட்டுவிட்டு அந்தப் பையன்கள் பக்கம் சென்று,

"என்னடா நெனச்சிட்டிருக்கீங்க? பொறுக்கிகளா! மரியாதையா இருக்கலையின்னா அடுத்த ஸ்டேஷன்ல ரயில்வே போலீஸில கம்ப்ளெயிண்ட் செஞ்சிடுவேன் ஜாக்கிரதை!" என்றொரு மிரட்டல் விடுத்தாள்.

அந்தப் பையன்களும் எழுந்து அவளோடு மல்லுக்கு நின்றார்கள். "என்ன மெரட்டறியா? நீ மெரட்டினா நாங்க என்ன பயந்திடுவோம்னு நினச்சியா..." என்று கூறிக்கொண்டே அவர்கள் நான்ஸியை நெருங்க, இதைக்கண்டு நான் அந்தத் தடியன்களை தடுத்திட நினைத்து அவர்கள் பக்கம் போகலாம் என்று பார்த்தால், என் இரு கைகளையும் இழுத்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என்னை போகவிடாமல் தடுக்கின்றாள் மாலினி.

நான்ஸியோ இந்தத் தடியன்களூக்கெல்லாம் அசராதவளாக தன் இருக்கையில் கால்வைத்து ஏறி செயினை இழுக்க ஆயத்தமாகிறாள். நான்ஸி செயினை இழுக்கப் போவதைப் பார்த்த ஒருவன் அவள் கையைப் பிடித்து தடுக்க முயல, நான்ஸி அவன் கையினை உதறித் தள்ளிவிட்டு, அவனின் வயிற்றைப்பார்த்து எட்டி விட்டாள் ஓர் உதை. அதை வாங்கியவன் சுருண்டு போய் ஒரு மூலையில் விழுந்தான். நான்ஸி தொடர்ந்தாள்,

"என்னடா? பொண்ணுங்கன்னா பயந்துபோய் ஒன்னும் பேசாம இருப்பாங்கன்னு பாத்தியா?" என்று கூறிக்கொண்டே, தன் கூந்தலை அவள் வாரிக் கட்டியபோது, எனக்கு அவள் பத்து கைகளிலும் ஆயுதங்கள் ஏந்திய பத்ரகாளி போல காட்சி தந்தாள்.

நல்லவேளையாக, அந்த நேரத்தில், அதே விபீஷணன் மீண்டும் தோன்றி, நிலைமையைச் சமாளித்து, அத்தக்கூட்டத்தை வேறு இடத்துக்கு இட்டுச்சென்றான். நான்ஸியிடம் உதைவாங்கியவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டே நொண்டிச்சென்றான்.

நான்ஸியின் முகம் இன்னமும் கோவத்தில் சிவந்திருந்தது. இத்தனை ஆக்ரோஷம் கொள்பவள் இவள் என்பது அவளைப் பார்க்கையில் தெரியாது. கல்லூரியில் அவள் என்னிடம் கோவமாகப் பேசியதெல்லாம் இந்த ஆக்ரோஷத்திற்கு முன் ஒன்றுமே இல்லை. நான் வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

இந்தக் களேபரங்கள் அடங்கியபிறகு, இதற்கு முன்னான பயணங்களில், தொல்லைக்குள்ளான சில பெண்களின் சார்பாக, நான்ஸி கோதாவில் இறங்கிய நிகழ்ச்சிகளை மற்ற தோழிகள் கூறிக்கொண்டு வந்தார்கள். நான் அவைகளை அதிசயத்தோடு கேட்டுக்கொண்டிருந்தேன்.

நான்ஸியின் வீரபராக்கிரமங்களை தோழிகள் சொல்லிக்கொண்டிருக்கையில், மாலினி என்னைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே,

"எப்படி என் பிரெண்டு?" என்று கேட்கிறாள்.

கண்ணடிப்பது மாலினியின் மேனரிசம். பலப்போதும் அவள் சொல்லும் விஷயங்கள் கண்ணடித்து சொல்லக்கூடிய அளவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதில்லை. தொட்டதற்கும் பிடித்ததற்குமெல்லாம் இவள் இப்படி கண்ணடிப்பது ஆரம்பத்தில் பலருக்கும் பல குழப்பங்களை உண்டாக்கியிருந்தது என்பது வேடிக்கையான உண்மை.

"உன் பிரெண்டு தைரியசாலிதான். ஆனால், நடந்த இந்த சம்பவத்தில் அவமானப்பட்ட தென்னமோ நான்தான்" என்றேன்.

"ஏன்? உங்களூக்கென்ன அவமானம் வந்தது?" எனக்கேட்டாள் மாலதி, கண்ணடிக்காமல்.

"பின்னே என்ன? உங்களூக்கெல்லாம் காவலா ஒரு ஆண்பிள்ளை நான் கூட வந்தால், என்னை ஒரு மூலையில உட்கார வச்சிட்டு நீங்களாகவே சண்டைக்கு போயிட்டீங்க. பாக்கறவங்களுக்கு, அந்தத்தடிப்பசங்க என்கிட்டே ஏதோ சில்மிஷம் செய்யப்போக நீங்களெல்லாம் சேர்ந்து என்னை காப்பாத்த அவனுங்க கிட்டே சண்டை பிடிக்கப் போனீங்கன்னு நெனச்சிருப்பாங்க. இதைவிட அவமானம் வேற என்ன வேணும்?" என்று நான் கேட்க, நான் சொன்னதைக்கேட்டு எல்லோரும் சிரிக்கின்றார்கள்.

நான் என் வேதனையை அவர்கள் சிரிக்கும் விதத்தில் வேடிக்கையாகச் சொன்னாலும் உண்மையில் எனக்கு வெட்கமாகவும், அவமானமாகவும்தான் இருந்தது. என்னதான் மற்ற பெண்கள் என்னைச் சுற்றிலும் நின்றுகொண்டு போகவேண்டாம் எனத்தடுத்தாலும், என்னதான் மாலினி என் கையைப்பிடித்து வைத்துக்கொண்டு நான் போகாதவண்ணம் பார்த்துக் கொண்டாலும், நான்தானே முன்னின்று பிரச்சினையை எதிர்கொண்டு சமாளித்திருக்கவேண்டும்? அதைச் செய்து அடிவாங்கியிருந்தாலும் அவமானம் இல்லாதிருந்திருக்கும். இது, கோழைத்தனம் போல் ஆயிற்றே? என்றெல்லாம் யோசனையில் ஆழ்ந்துபோனேன்.

எர்ணாகுளம் வந்தது.

அந்தத் தடியன்கள் அங்கே இறங்கிச்சென்றார்கள். போதை தெளிந்து, வெட்கித் தலைகுனிந்து எங்கள் பக்கம் வாராது வேறு பக்கமாக அவர்கள் சென்றுவிட்டார்கள். நாங்கள் Venad Express-க்கு மாறி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு நடந்த களேபரத்தில் யாரும் சரியாகத் தூங்கவில்லை என்பதால் நான்ஸியும், மாலினியும் மற்ற தோழிகளூம் களைப்புற்று உறக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

தூங்கிக்கொண்டிருக்கும் நான்ஸியை பார்த்தேன். இரு கைகளையும் கூப்பி கும்பிடுவதுபோல ஜன்னல் மீது சாய்வாக வைத்து, அதில் தலையைச் சாய்த்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். நேற்று பத்ரகாளி அவதாரம் எடுத்தவளா இவள்? என்று சந்தேகம் கொள்ளும் விதம், குழந்தையைப் போன்ற சாந்த முகம் அவளுக்கு.

உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. ஆதலால், குழந்தையைப்போன்று துயில்கொள்ளூம் இவள் மீதிருந்து என் பார்வையை விலக்கினேன். தவிர, இந்த மாலினையை நம்ப முடியாது. உறங்குவதுபோல பாவனை செய்து நான் நான்ஸியை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்து என்னை எல்லோர் முன்பாகவும் கேலி செய்தாலும் செய்திடுவாள்.

அதனால் நான் நான்ஸியை பார்ப்பதை விடுத்து, என் இருக்கையிலிருந்து எழுந்து வாசற் கதவருகே சென்று, கதவு திறந்து அங்கு நின்றேன். சில்லென என்மேல் பட்டு எனக்குள் உற்சாகத்தை எழுப்பியது அதிகாலைக் குளிர்காற்று.

இரவில் மழை பெய்திருக்கவேண்டும், மரங்களும், மண்ணும் நனைந்திருந்தது. கேரளத்தின் நிலப்பரப்பு வித்தியாசமானது. மேடும் பள்ளமுமாக மலைச்சரிவுகள் இருக்கும், திடீரென ஆறு கடக்கும், பிறகு பரந்து விரிந்த வயல்வெளிகளும், பெரிதும் சிறிதுமான ஏரிகளும், காயல்களும் அதில் தேங்காய் மட்டைகளை ஏற்றிச்செல்லும் ஓடங்களும், ஓடத்தை ஒற்றை மூங்கில் தடி கொண்டு செலுத்தும், மூங்கிலைவிட ஒல்லியான ஓடக்காரரும் தென்படுவர். இரயிலின் வாசற்படியில் நின்றபடி இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இரயில் பயணிக்கும்போது எழும் ஓசைகளில் ஒரு தாள நயம் உண்டு. 'தடக்… தடக்' கென்று இரயிலின் வேகத்திற்கேற்ப தண்டவாளம் தாளம் எழுப்பும். பாலம் கடக்கையில், இரு பாளங்கள் இணைகையில், குகைக்குள் செல்கையில் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதத்தில் ஒலித்திடும் ஓசைகள், பாளத்தின் தாளத்தோடு இணைகையில், கேட்பதற்கினிய சங்கீதமாக ஒலித்திடும்.

இந்த சங்கீதத்தில் லயித்துக்கொண்டே நான் கேரளத்தின் இயற்கை எழிலில் ஆழ்ந்திருந்தபோது நான்ஸி துயிலெழுந்து வந்தாள். வாசற்கதவருகே நான் நிற்பதைப் பார்த்து, ஒரு மெல்லிய புன்னகையை தவழவிட்டு, என்னைக் கடந்து வாஷ்பேசின் அருகே சென்றாள்.

முகம் கழுவி, சுடிதாரின் துப்பட்டாவால் முகம் துடைத்து, பின்னல் அவிழ்த்து, கேசத்தை சரிசெய்து, மீண்டும் பின்னிக்கட்டி, கண்ணாடியில் ஒருமுறை அதைச் சரிபார்த்துவிட்டு, அவளும் கதவருகே வந்து என்னருகே நின்றுகொண்டு இயற்கையை இரசிக்கத் துவங்கினாள்.

நான்ஸி தன் இருக்கைக்கு செல்லாமல் என்னருகே நிற்கிறாள் என்பதை உணர்ந்ததும் என்னை ஓர் பரபரப்பு பற்றிக்கொண்டது. இவள் இங்கே நிற்க காரணம் என்ன? என்னிடம் ஏதேனும் பேசிடத்தானோ? மற்ற தோழிகள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் என்னிடம் ஏதேனும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாளோ? என்றெல்லாம் சில எதிர்பார்ப்புகள் என்னை தொற்றிக்கொண்டது.

நான்ஸி மீண்டும் என்னை நோக்கி புன்னகை வீசினாள். தன் உள்ளங்கையை ஒன்றோடொன்று இறுகத்தேய்த்து அந்தச் சூட்டினை முகத்தில் ஒப்பிக்கொண்டு, குளிருக்குத் தோதாக, தன் இரு கைகளையும் இறுகக்கட்டிக்கொண்டு கொஞ்சம் நடுங்கி நின்றிருந்தாள். நான் என் எதிர்பார்ப்பினையும், பரபரப்பினையும் வெளிக்காட்டாது இயல்பாக நிற்க முயன்று கொண்டிருந்தேன்.

'என் அருகே நிற்பவள் நான் அறியாத ஒரு பெண், சற்று நேரம் அங்கே நின்றுவிட்டு போய்விடுவாள். அவள் ஏதும் பேசுவாள் என்று எதிர்பார்ப்பு தேவையில்லை. பேசாது சென்றிட்டால் வருத்தங்களும் தேவையில்லை!' என்று மீண்டும் மீண்டும் என் மனதுக்குள் நான் சொல்லிக்கொண்டிருந்தேன்.

ரயில் ஓடுகிறது! மண், மரங்கள், வீடுகள் ஓடுகின்றன, காலநேரம் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. நான்ஸி மட்டும் நின்றுகொண்டிருக்கிறாள்! யாதொன்றும் பேசாமல்.

இது சீண்டல். வேண்டுமென்றே இவள் என்னை சீண்டுகிறாள். இது ஒரு நூதன பழிவாங்கல்! அருகில் வந்து நிற்பாளாம், புன்னகைப்பாளாம் ஆனால் பேசமாட்டாளாம். என் மீது இன்னும் கோவமிருந்தால் என்னருகே வந்து நிற்கவேண்டியதன் அவசியம் என்ன? வந்து நின்றபின் பேசாதிருப்பதில் அர்த்தமும் என்ன?

இது, அவள் என்னோடு பேசுவாளென்று ஓர் எதிர்பார்ப்பினை எனக்குள் உண்டாக்கி, பேசாமல் என்னை ஏமாற்றி, மீண்டும் எனக்கு Nostcut தந்திட அவள் செய்யும் யுத்தி!

இதைத் தடுத்திட நான் அங்கிருந்து சென்றுவிட்டால்? அவள் அங்கே நிற்பது ஒரு பொருட்டே அல்ல என்று நான் அங்கிருந்து நகர்ந்துவிட்டால், அது அவளுக்கு பெரிய Nostcut ஆகிப்போகும். இது நல்ல யோசனை. அவளுக்கு Nosecut கொடுக்கும்விதம் அங்கிருந்து அவளைவிட்டு விலகிச்சென்றிடவேண்டும் என்று முடிவுசெய்து நகரத்துவங்குகையில்,

மெல்லிய படலமாய் ஏதோ ஒன்று என் மீது படர்கிறது. அது என்னவென்று பார்த்தேன். அது, அவளது சுடிதாரின் துப்பட்டா. காற்றில் பறக்கும் அந்தத் துப்பட்டாவின் ஓரப்பகுதி என் இடக்கையோடும், தோளோடும் படுகிறது. காற்றின் வேகத்திற்கேற்ப சிலப்போது என்மீது படர்கிறது.

அதை விலக்கவா? இல்லை நான் விலகவா? என கனநேரம் யோசித்து பின், வேண்டாம் எதிர்மறையாக ஏதும் செய்திட வேண்டாம் என்று என் முடிவினை மாற்றிக்கொண்டேன். பேசாவிட்டாலும் அவள் என் அருகே நிற்பது சுகம். சொல்லம்புகள் அவள் மனதில் காயமேற்படுத்தியது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகு அவளோடு பேசுவதைத் தவிர்த்து நான் கடைபிடித்த மௌன விரதம், நான் வருந்துவதை அவளுக்கு உணர்த்தியிருக்கும். ஒரு குற்றஉணர்வு என்னையும் காயப்படுத்துகிறது என்பதை அந்த மௌனம் அவளுக்குத் தெரிவித்திருக்கும். ஆதலால், அன்றைய கோவம் இன்றுவரை இவளில் குடிகொண்டிருக்க வாய்ப்பில்லை.

மேலும், காலம் ஆற்றாத காயங்கள் இல்லை. அவள் மனக்காயம் கண்டிப்பாக ஆறியிருக்கும். ஆறாமலா அக்கறைகாட்டி நேற்று இவள் என்னைத் தடுத்தாள்? என் உணர்வை உணராமலா இன்று இவள் என் அருகே நிற்கத்துணிந்தாள்?

அதனால், இப்போது நான் ஏதும் எதிர்மறையாக செய்திடக்கூடாது. அவளோடு பேசிட எனக்கிருக்கும் தயக்கம் போல, என்னோடு பேசிட அவளுக்கும் தயக்கம் இருக்கும். அந்தத் தயக்கம் மாறிட அவகாசம் தேவைதான். அதுவரையில், அவள் பேசாவிட்டால் போகிறது, அவளது துப்பட்டா பேசுவதை இரசித்திருப்போம் என்று அவளறியாமல் அவளது துப்பட்டாவின் ஓரத்தை என் விரல் நுனியில் அழுத்திப் பிடித்துக்கொண்டேன்.

பெண் சார்ந்த பொருள் யாவும் அதிமென்மை!

இப்படி நான் நான்ஸியின் துப்பட்டாவோடு தோழமை ஏற்படுத்திக்கொண்டிருக்கையில் சாயாக்காரர் வந்தார். "சாய்... சாயே..." என்று கூவிக்கொண்டே!

அவர் எங்களருகே வந்து, "சாயா எடுக்கட்டே?" என்று வினவ, நான் நான்ஸியைப் பார்க்க, அவளின் முகபாவம், "சாயா குடித்தால் தேவலாம்" என்று அவளின் அகம் நினைப்பதை எனக்குத் தெரியப்படுத்த, அது தெரியவந்த தைரியத்தில் நான்,

"டீ சாப்பிடலாமா?" என்று அவளைக்கேட்டேன்.

"ம்.. சாப்பிடலாம்!" என்று வீணான அலட்டல்கள் ஏதுமின்றி அவள் பதில் சொன்னாள்.

அவள் சம்மதித்த மகிழ்ச்சியில் சாயாக்காரரிடம், "ரெண்டு சாயா" என்றேன். சாயாகாரர், சாயா பாத்திரத்தை ஆனமட்டும் சரித்துப்பிடித்து பிளாஸ்டிக் டம்ளர்களில் சாயாவை நிரப்பத் துவங்கினார்.

முதல் தம்ளர் நிரம்பியதும் அதை வாங்கி நான்ஸிக்குக் கொடுத்து, அடுத்த தம்ளர் நிரம்பக் காத்திருந்தேன். நான்ஸி தேநீர் அருந்தினாள்.

"நல்லா இருக்கா?" கேட்டேன்.

"ம்ம்...." என்றாள்.

அடுத்த தம்ளரை இதற்குள் சாயாக்காரர் நிரப்பியிருக்க, அதை வாங்கி, அவருக்கு காசையும் குடுத்துவிட்டு நான் பருகத்துவங்கினேன்.

தண்டம்!!!

டீ அல்ல அது... தண்டம்!! தேயிலையின் குணாதிசயங்கள் கொஞ்சமும் அதில் இல்லை. நிறம் இல்லை, மணம் இல்லை, சுவை அறவே இல்லை. குறைந்தபட்சம் சூடாகக்கூட இல்லை. ஏதோ பாத்திரம் கழுவிய தண்ணீரில் கொஞ்சம் சக்கரை கலக்கி வைத்தார்போல இருந்தது அந்தத் திரவம்.

ஓரக்கண்ணால் நான்ஸியைப் பார்த்தேன். அவளோ கண்ணும் கருத்துமாக அந்த டீ' யினை உறிஞ்சிக்கொண்டிருக்கிறாள். அவள் குடிக்கையில் நான் எப்படி குடிக்காமல் தூரக்களைவது? கஷ்ட்டப்பட்டு, இரண்டு மடக்கு குடித்தேன், மூன்றாவது மடக்கை தொண்டைக்குள் இறக்கினால் மொத்தமாக எல்லாமும் வெளியே வந்திடுவதுபோல் ஓர் நிலையில் நான் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது நான்ஸி,

"நேத்து நடந்த பிரச்சினையிலே நீங்க இன்வால்வ் ஆகவேண்டாம்னு நான் சொன்னது உங்களை hurt பண்ணிடுச்சா?" என்று கேட்கிறாள். அவள் திடீரென்று இப்படி என்னிடம் பேசத்துவங்க, அவள் பேசுகிறாள் எனும் ஆனந்த ஆச்சரியத்தில், நான் அறியாமலேயே அந்த மூன்றாவது மிடறு தே-திரவத்தை அவதிப்படாமல் விழுங்கி நின்றேன்.

"சேச்சே... அப்படியெல்லாம் ஒன்னுமில்லை... நான் சும்மா தமாஷுக்கு வேடிக்கையாதான் நேத்து எல்லார்கிட்டேயும் எனக்கு அவமானமாயிடுச்சுன்னு சொன்னேன்." என்றேன்.

"தமாஷா சொன்னாலும் மனசுக்குள்ல நீங்க hurt ஆகியிருந்தீங்கன்னு எனக்கு தோணிச்சு. எனக்கு தெரியும் நீங்க insulted ஆ feel பண்ணி இருக்கீங்க..." என்றாள்.

அவளுக்கு சரியாகத்தான் தோன்றியிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளூம் விதமாக நான் பதிலேதும் பேசாது மௌனமாக நின்றிருந்தேன். அவளே தொடர்ந்தாள்.

"உங்களை அவமானப்படுத்தனும்னு நான் அப்படிச் சொல்லலை. நீங்க ஒரே ஒருத்தர் தனி ஆளா இருக்கீங்க. அவங்க அஞ்சாறு பேர் தடிப்பசங்களா இருந்தாங்க. அடிதடின்னு அவங்க இறங்கியிருந்தா எப்படி உங்களால சமாளிச்சிருக்கமுடியும்? நாங்க இறங்கிப் போனதுக்கு அப்புறம் நீங்க தனியாதான் உங்க ஊர் வரைக்கும் போகனும். அப்போ வந்து அவங்க உங்களை தொந்தரவு செஞ்சா என்ன பண்ணறது? அதனாலதான் உங்களை இன்வால்வ் பண்ண வேண்டாம்னு நான் அப்படிச் சொன்னேன்...."

"......."

"அது மட்டுமில்லே. அந்த பசங்க உங்களைத்தான் வம்பிழுக்க பாத்தாங்க. எங்களை தொந்தரவு செஞ்சா நீங்க கேக்க போவீங்க உங்க கிட்டே பிரச்சினை பண்ணி எங்க எல்லாரையும் பயப்படுத்தலாம் நு எதிர்பாத்தாங்க. நாங்களே நேரடியா handle செய்யவும் இங்கே வால் ஆட்ட முடியாதுன்னு பேசாம போயிட்டாங்க...!" என்றெல்லாம் அவள் கூறிக்கொண்டிருக்க நான் அவளை கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தேன்.

பெண்களூக்கு இந்த தைரியம் வேண்டும். எதற்கெடுத்தாலும் கண்ணீர்விட்டு விசும்பும் கோழைப் பெண்களாக இருக்கக் கூடாது. தைரியம் மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை, விவேகம் வேண்டும், சமயோசிதமாக செயல்படும் திறனும் வேண்டும். இவளிடம் இவை அனைத்தும் இருக்கிறது. அத்தோடு, இவள் அக்கறையும் கொண்டுள்ளாள். நான் வருத்தம் கொண்டிருப்பேன் என்று, என்னோடு பேசாதபோதும், என் வருத்தத்தைப் போக்க எனக்கு விளக்கம் தந்துகொண்டிருக்கிறாள். இவள் ஒரு அற்புதக் கலவை! நான் முன்பைவிட அதிகமாக இவளை இரசிக்கத் துவங்கினேன்.

நான் யாதொன்றும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தவள்,

"என்ன ஒன்னும் சொல்லாம பாத்திட்டிருக்கீங்க?" என என்னைக்கேட்டாள்.

“உன்னை இரசித்துக்கொண்டிருக்கிறேன். உன் அழகு இதழ்களில் பிறப்பெடுக்கும் வார்த்தைகளில் தோய்ந்திருக்கும் இனிமையை, என் இரு செவிகளாலும் சுவைத்துக் கொண்டிருக்கிறேன். உன்னை ஆராதித்துக்கொண்டிருக்கிறேன்..." என்றா நான் சொல்ல முடியும்? ஆதலால்,

"பரவாயில்லை. உண்மையிலேயே எனக்கு வருத்தமில்லை. நான் நேற்றைக்கு விளையாட்டாதான் அப்படிச் சொன்னேன்." என்றேன். பிறகு மனதுக்குள், "அந்தத் தடிப்பயல்கள் வாழ்க, அவர்களால்தானே நீ மீண்டும் என்னோடு பேசுகிறாய்..." என்று நினைத்துக்கொண்டேன்.

அகத்தில் நான் இப்படி நினைத்ததின் அழகு முகத்தில் புன்னகையாய் வெளிப்பட்டிருக்கக்கூடும்..,

"ஏன் சிரிக்கறீங்க?" என்று நான்ஸி கேட்க நான் திகைப்புற்றேன். பின்பு சமாளித்து,

"இல்ல, ஆறுதல் சொல்லறேங்கர பேருல பேச்சோட பேச்சா அந்தப் பசங்கள என்னால சாமாளிச்சிருக்க முடியாதுன்னு சொல்லிட்டியே... அத நெனச்சு சிரிப்பு வந்தது" என்றேன். அதற்கு,

"ஐயோ நான் அப்படிச் சொல்லலே..." என்று கூறியவள் சில வினாடிகள் எதையோ யோசித்துவிட்டு,

"இல்லை. சண்டை வந்திருந்தா உங்களால அவங்களை சமாளிச்சிருக்க முடியும். அதுல எனக்கு சந்தேகம் இல்லை. ஆனா, சண்டைக்கு போற அளவுக்கு உங்களூக்கு தைரியம் இருக்காங்கறதுல எனக்கு சந்தேகம் இல்லைன்னு சொல்ல முடியாது..." என்று கூறிச் சிரிக்கிறாள்.

"அதுசரி! இப்போ நேரடியாகவே அவமானப்படுத்த ஆரம்பிச்சுட்டியா?" எனக்கேட்டேன்.

"நீங்களே சொல்லுங்க, நேத்து நீங்க பயக்கல?" என்று எதிர்கேள்வி கேட்கிறாள். அந்தக் கேள்விக்கு நான் பதில் கூறும் முன்னமே அவளே தொடர்ந்து,

"பயந்தீங்க. நான் பாத்தேன். பாத்ரூம் போகும்போது முகத்தில இருந்த பிரகாசம் திரும்ப வரும்போது இல்லவே இல்லை. அந்த பசங்க நம்ம பக்கம் வந்தப்பல்லாம் உங்க முகத்தை நான் கவனிச்சுட்டுதானே இருந்தேன்...!" என்கிறாள்.

"அடக்கொடுமையே... அது பயம் இல்ல கவலை. உங்களைப் பத்தின கவலை...! அந்தப் பசங்க குடிபோதையிலே உங்க கிட்டே வம்பு செய்யக்கூடாதேன்னு நான் கலவரப்பட்டது உண்மைதான். ஆனா அது பயம் இல்லை!" என்றேன்.

"அதேதான்... அந்தக் கலவரத்தைதான் எங்க ஊர்ல பயம் நு சொல்வாங்க!" என்று கூறி மீண்டும் சிரிக்கிறாள்.

என்ன ஒரு ஆச்சரியம். இப்போது அவள் என்னை கேலிசெய்துதான் சிரிக்கிறாளென்றாலும் எனக்கு அவள் மீது கோவம் வரவில்லை. என் மூக்கு உடைபடுவதாகவும் எனக்குத் தோன்றவில்லை. அதுமட்டுமல்ல, என்னை கேலிசெய்து அவள் சிரிப்பதை நான் இரசிக்கவேறு செய்கிறேன். முன்பு ஏன் கோபித்தேன்? இன்று ஏன் இரசிக்கின்றேன்? இதைத்தான் காலத்தின் கோலம் என்கிறார்களோ?

நான்ஸி காலத்தை குறித்தும் அது உண்டாக்கும் கோலத்தை குறித்தும் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. நான் ஓர் பயந்தாங்கொள்ளி எனும் ரீதியில் என்னை கேலிபேசுவதில் கோலாகலம் கொண்டிருக்கிறாள். அந்த கோலாகலத்தின் தொடர்ச்சியாக,

"இந்தத் தடியன்களை விடுங்க. என்னை Rag பண்ணறதுக்கே பயந்தவர்தானே நீங்க?" என்று அவள் திடீரென்று கூற, நான் அந்தக் கூற்றில் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.

"அடிப்பாவி! அங்க அலசி, இங்க அலசி கடைசியில் ஆகாசத்தையே அலசுறியே? நான் எங்கே பயந்தேன்?" என்றேன்.

"பின்னே... Rag பண்ணும்போது ஒரு கேள்வியக்கூட என்னப்பாத்து கேக்கல. வேறே எங்கேயோ பாத்திட்டு என்கிட்டே கேள்வி கேட்டுட்டிருந்தீங்க... பல பேர் ரேகிங் செய்யறதை பாத்திருக்கேன் ஆனா பயந்துகிட்டே ஒருத்தர் Rag செய்வதை உங்ககிட்டே மட்டும்தான் பார்த்தேன்!" என்று போட்டாளே ஒரே போடு.

அன்று நான் கொண்டது பயம் அல்ல. உன்னை இரசிப்பதிலிருந்து என்னை கட்டுப்படுத்த என்னோடு நான் நடத்திய போராட்டம்! இப்போதும் எனக்குள் அதே திண்டாட்டம்! என்று எப்படி நான் இவளுக்குச் சொல்லி புரியவைக்க? பேசாதே நின்றிருந்தேன். அதையும் அவள் சொன்னாள்.

"இதோ இப்ப கூட என்னை பாக்காம தண்டவாளத்த பாத்துதான் பேசிட்டிருக்கீங்க..." என்று.

போன ஜென்மத்தில் நான் ஒரு குதிரையாக இருந்து இவள் என் கடிவாளமாக இருந்திருப்பாளோ? கண்ட நாள் முதலாய் என்னை இந்தப் பாடு படுத்துகிறாளே?

"நான் ஒன்னு சொல்லட்டுமா?" என்று பொங்கிவரும் சிரிப்பினை அடக்க முயன்றுகொண்டே என்னைக்கேட்டாள்.

"இவ்வளவு சொல்லியும் போதலியா? அதையெல்லாம் என்னைக்கேட்டா சொன்னே? இல்ல, இப்ப‌ நான் வேண்டாம்னு சொன்னாலும் சொல்லாம விடத்தான் போறியா? சொல்லு!" என்றேன்.

சிரித்து சிரித்து கண்கள் நிரம்பியிருக்க, துப்பட்டாவால் கண்ணைத் துடைத்துக்கொண்டே தொடர்கிறாள் நான்ஸி.

"சத்தம்போட்டு பேசினா கோவமா பேசறதுன்னு யாரு உங்களுக்கு சொல்லிக்குடுத்தாங்க? பயத்துலயும் எல்லோரும் சத்தம்போடுவாங்க தெரியுமா?" என்று கேட்டு மீண்டும் அவள் சிரிக்கத்துவங்க, அவளுக்கு புரை ஏறியது.

கண்பட்டால் புரையேறுமோ? என் கண் பட்டுத்தான் சிட்டு இவளுக்கு புரையேறுகிறதோ? என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்! இருமியும், தொண்டையை கணைத்துக்கொண்டும் புரை ஏறியதை சரிசெய்தவள் தொடர்ந்து,

"அதுல, உங்களைவிட அதிகமா சத்தம்போட்டு நான் பேசினா டக்குன்னு அமைதியாகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிப்பீங்க பாருங்க அதுதான் க்யூட்! சான்ஸே இல்ல அந்த எக்ஸ்பிரஷன்! என்னால மறக்கவே முடியாது." என்கிறாள்.

அடப்பரிதாபமே... அப்படியென்றால் என் எந்த மிரட்டலும், திட்டலும் இவளை காயப்படுத்தவில்லையா? எமகாதகி. இல்லையில்லை, குறும்புக்காரி! புரையேறியது இன்னமும் சரியாகவில்லை. இன்னமும் இருமுகிறாள், கணைத்து தொண்டையை சரிசெய்கிறாள் ஆனாலும் என்னைக் கேலி பேசுவதை நிறுத்துவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. ஆகவே நான் நான்ஸியிடம்,

"போதும் தாயே நிறுத்து. இல்லாட்டி நீ என்னை படுத்துற பாட்டுக்கு நான் இப்படியே குதிச்சிடுவேன்..." என்றேன்.

"ஓஹ், குதிக்கும் அளவுக்கெல்லாம் தைரியம் இருக்கா?" என்கிறாள்.

"இல்லையம்மா ஆளைவிடு!" என்றேன்.

"அப்ப நான் தான் உங்களை நேத்து அந்தக் கும்பல் கிட்டேருந்து காப்பாத்தினேன்னு ஒத்துக்குங்க..." என்று அவள் சொல்ல,

"ஆமாம்மா தாயே! நீ தான் என்னை காப்பாத்தினே. இனியும் நீ என்னை இதுபோல காப்பாற்ற உன்னையே என் Bodyguard-ஆ ஆக்கிடறேன் போதுமா?" என்றேன்.

அதைக்கேட்டு, "அடச்ச்சீசீசீ...!" என்கிறாள் முகம் சுழித்து.

"அடடா... எதுக்கு மூஞ்சிய இந்த சுழி சுழிக்கறே? Bodyguard ன்னுதானே சொன்னேன். அதுல என்ன விகல்பம் உனக்கு?" என்று நான் கேட்டதற்கு சொல்லத் தோதாக பதிலேதும் கிடைக்கவில்லை நான்ஸிக்கு. ஆனால் நான்ஸியை சாமாளிக்க முடியாமல் படுகுழியில் வீழ்ந்திருந்த எனக்கோ, என்னைத் தூக்கிவிட வல்லதான கயிறு 'Bodyguard' எனும் வார்த்தை வடிவத்தில் கிடைத்தது. நான் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். வார்த்தைக்கு வார்த்தை அவளை 'Bodyguard' என்று அழைத்தேன். என் நிலை ஓங்கியது!

"வேண்டாம் அப்படி கூப்பிடாதீங்க..." என்கிறாள் நான்ஸி. நான் அப்படியே கூப்பிட்டேன். சடாரென கோபித்துக்கொண்டு "நான் என் சீட்டுக்கு போறேன்" எனக்கூறி நகர்கிறாள் அவள்.

"ஏய்... நில்லு ஒரு நிமிஷம்!" என்று நான் கூறியதை பொருட்டாக்காமல் அவள் போக எத்தனிக்க, காற்றில் பறந்து என் கைகளில் தவழ்ந்த அவளது துப்பட்டாவை பிடித்திழுத்து அவளை நிறுத்தினேன்.

அவள் நின்றாள். ஆனால் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை.

"Bodyguard ன்னு சொன்னா ஏன் உனக்கு கோவம் வருது?" எனக்கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. மீண்டும் கோவம் காட்டுகிறாள். நானும் விடாமல், "சொல்லு பாடிகார்ட்ட்ட்...." என்றதும் அவள் என்னை முறைக்கிறாள். அவள் முறைப்பதால், அந்த வாக்கியத்தை முடிக்காமல் அப்படியே தொடர்ந்து தொடர்ந்து, "சொல்லு பாடிகார்ட்ட்ட்.......டுன்னு சொன்னா ஏன் கோவம் வருதுன்னு கேக்க வந்தேன்... பாடிகார்டுங்கற வார்த்தையிலே என்னமோ சிக்கிடுச்சு..." என்று கூறி பொய்யாக தொண்டையை கணைத்து இருமினேன். அவளுக்கு சிரிப்பு வருகிறது ஆனால் சிரிக்கவில்லை.

மேற்கொண்டு என்ன பேசுவது என்று அறியாது இருவரும் சற்று நேரம் மௌனமாக நின்றிருந்தோம்.

மௌனமாகக் கடந்த அந்த நிமிடங்கள் ஏதோ மாயம் செய்தது. மனம் இலேசாயிற்று. மனதுக்குள் உற்சாகம் பொங்கியது. நான்ஸியின் தோழமை கிடைத்துவிட்டதாக ஆணித்தரமாய் ஓர் உணர்வு உள்ளத்தில் நம்பிக்கை வளர்த்தது. நான் நான்ஸியை பார்த்தேன். அவளும் என்னைப் போலத் தான் உணர்கிறாள் போலும். அவள் முகத்தில் கோவத்திற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. மாறாக, மெல்லிய புன்னகை இதழ்களில் பரவ பொலிவோடு காணப்படுகிறது அவளது திருமுகம்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஒருவிதமான வெற்றுப் புன்னகையை இருவரும் பரிமாறிக்கொண்டோம். உற்ச்சாகம் உள்ளத்தை ஆர்ப்பரிக்க, நானே பேச்சினைத் தொடர்ந்தேன்.

"உன்கிட்டே நான் ஒரு விஷயம் கேட்டா அதுக்கு உண்மையான பதில் சொல்வியா?" என்று நான்ஸியைக் கேட்டேன்.

"என்ன?" என்று கொஞ்சம் ஆச்சரியம் கலர்ந்து என்னைக் கேட்கிறாள் நான்ஸி. நான் அவளை உற்றுப் பார்த்து, அவளின் கண்களை என் கண்களால் ஊடுறுவி,

"முதல்ல நீ உண்மையான பதிலைத்தான் சொல்வேன்னு உறுதி தா. அப்பத்தான் கேட்பேன்." என்று குரலில் கொஞ்சம் தயக்கத்தைக் காட்டி நான் கேட்க, நான்ஸி,

"Rubbish ஆ ஏதாவது கேட்டு என் கிட்டே வாங்கி கட்டிக்காதீங்க..." என்கிறாள்.

"இல்லை, எனக்கு இது Rubbish இல்லை. இது fact. நான் feel பண்ணின fact. நீயும் அதையேதான் feel பண்ணியிருப்பேன்னு எனக்கு தெரியும். So, உண்மைய மறைக்காம என்கிட்டே சொல்லணும்" என்றேன்.

"என்னது?" என்றாள் குழப்பத்தோடு.

"உண்மையை மாத்திரம்தான் சொல்லணும்..." என்று நான் மீண்டும் பீடிகை போட்டேன்.

"Rubbish ஆ மட்டும் ஏதாவது கேட்டீங்க.... அப்புறம் நானே பிடிச்சு வெளியே தள்ளி விட்டிடுவேன்." என்கிறாள்.

"நீ தள்ளிவிட்டாலும் பரவாயில்லை ஆனா என்னைக் குடையும் இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரிஞ்சே ஆகனும்" என்று கூறி, அவளை உற்று நோக்கி என் குரலை இன்னும் கொஞ்சம் மிருதுவாக்கி அவளிடம் கேட்டேன்,

"உண்மையிலேயே இந்த டீ அவ்வளோ நல்லாவா இருக்கு? அதை இவ்வளவு நேரமாகியும் விடாம இரசிச்சு குடிச்சிட்டிருக்கியே?" என்று. அதைக்கேட்டு சிரித்தவள்,

"குடிச்சிட்டா இருக்கேன். கையிலேயே வச்சிட்டிருக்கேன். நான் பாத்தப்ப நீங்கதான் உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டிருந்தீங்க. அதும் சூடே இல்லாத டீயை ஊதி ஊதி வேற குடிச்சீங்க..." என்று சொல்ல,

"டீ நல்லாயிருக்கான்னு கேட்டப்போ 'உம்' கொட்டினது யாரு? நீ சொன்ன வார்த்தைக்ககத்தான் இதை கொட்டாம வச்சிட்டிருக்கேன்" என்று நான் சொல்ல, "பின்னே... டீக்காரர் முன்னாடி வச்சே எப்படியிருக்குன்னு கேட்டா வேற எப்படிச் சொல்லுவாங்களாம்..." என்று அவள் சொல்ல,

இப்படி அவளொன்றும் நான் ஒன்றும் சொல்லிச்சொல்லி தொடர்ந்த எங்கள் வாக்குதர்க்கம் தீர்வதற்குள் நான்ஸி இறங்கவேண்டிய நிலையம் வந்திட்டது.

நான்ஸியும், மாலினியும் அங்கு இறங்கினார்கள். மாலினியை அழைத்துச் செல்ல அவளது அண்ணன் வந்திருக்க மாலினி அவனோடு சென்றாள். நான்ஸி இங்கிருந்து பஸ் பிடித்து இன்னும் ஒரு மணிநேரம் யாத்திரை செய்யவேண்டும். இருந்தாலும் இரயிலை விட்டு இறங்கியதும் உடனே புறப்பட்டிடாமல், பஸ்ஸ¤க்கு இன்னும் நேரமிருப்பதாகச் சொல்லி, ரயில் புறப்படும்வரை என்னோடு பேசிக்கொண்டே நின்றிருந்தாள்.

சிக்னல் பச்சை காட்ட, Guard விசிலடித்து கொடியசைக்க, இரயில் புறப்பட்டு மெல்ல நகரத்துவங்கியது. நானும் இரயிலோடு மெல்ல நடந்து படியேறி அங்கு நின்றேன்.

"சரி பின்னே! பார்க்கலாம்…" என்று கூறி கையசைத்தேன்.

"ம்... பார்க்கலாம்..." என்று கூறி நான்ஸியும் கையசைத்துவிட்டு, "ஊர் போய் சேர்ந்ததும் மறக்காம போன் பண்ணிச் சொல்லுங்க....., மறந்திடாதீங்க!" என்கிறாள்.

"கண்டிப்பா செய்யறேன் Bodyguard! நீங்க சொல்லி நான் மறப்பேனா?" என்றேன். அதைக்கேட்டு,

"வேண்டாம்.. அப்படி கூப்பிடாதீங்க அப்புறம் உதைபடுவீங்க..." என்கிறாள் நான்ஸி.

"உதைபட்டாலும் நீதான் Bodyguard" என்று நான் சொல்லவும், அதைக்கேட்டு நான்ஸி ரயிலோடு ஓடிவந்து என்னை நெருங்கி என் வயிற்றில் ஓங்கி விட்டாள் ஒரு குத்து. பிறகு,

"ரயில் புறப்பட்டாச்சுங்கற தைரியமா, என்கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது!" என்கிறாள்.

"நான்தான் உன்னை என் Bodyguard ஆக்கிக்கறேன்னு சொல்லிட்டனே அதுக்கப்புறமும் இப்படி strength ஐ நிரூபிச்சுகாட்டணுமா?" எனக்கேட்டேன். சிரித்தாள். கையசைத்து விடை தந்தாள்.

இரயில் மறையும் வரை அவள் பார்த்திருப்பாள் என்று அவள் என் கண்ணிலிருந்து மறைந்த பின்னரும் நான் கையசைத்து டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன்.

ரயில் வேகம் பிடித்தது.

ஊர் போய் சேர்ந்ததும் நான்ஸியை போனில் அழைத்து பத்திரமாக ஊர்வந்து சேர்ந்திட்ட விவரத்தைக் கூறினேன். அதற்குப்பின், ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் என்னை அழைத்துப்பேசினாள். அதற்கிரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் நான் அவளை அழைத்துப் பேசினேன். பிறகு ஒன்றிரண்டு நாட்கள் என்பது மாறி ஒவ்வொரு நாளும் என்றாகி, ஒரு நாளில் பல முறை என்று ஆகிப்போனது.

ஊரில் போன் வைத்திருக்கும் என் உறவுக்காரர்கள் அனைவரின் போன் நம்பரையும் அவளுக்குக் கொடுக்கும்படி ஆயிற்று. எந்த நேரத்தில் எங்கு இருப்பேன் என்பதும் அவளுக்கு அத்துப்படி ஆனது. நான் எங்கு இருந்தாலும் அங்கு வந்தது அவளது தொலைபேசி அழைப்பு.

எத்தனைக்கெத்தனை பேசாதிருந்தோமோ அத்தனைக்கத்தனை இப்போது ஓயாது பேசிக்கொண்டிருந்தோம்.!

~~~ 0 ~~~

சில நட்புகள் வினோதமானவை. அவை மனதில் நிலைத்திருக்க காரணமாய் அமையும் சம்பவங்கள் வேடிக்கையானவை. நான்ஸியோடான என் நட்பிலும் இப்படி ஓர் சம்பவம் உண்டு.

இந்த சம்பவம்தான் நான்ஸி குறித்தான என் நினைவுகளை இன்றளவும் என் மனதோடு பின்னிவைத்திருக்கிறது. நான்ஸியை "Bodyguard" என்று அழைத்ததில்தான் இது ஆரம்பமானது.

"வேண்டாம்.. அப்படி கூப்பிடாதீங்க! எனக்கு கோவம் வரும். கோவம் வந்திட்டா விளைவுகள் பயங்கரமா இருக்கும். எனக்கு boxing எல்லாம் தெரியும். ஒரு பஞ்ச் விட்டா தாடை எலும்பெல்லாம் பிஞ்சு போயிடும்" என்று அவள் கூறியபோதெல்லாம்,

"அடடே! அது ஒரு additional qualification ஆச்சே, எங்கே சாம்பிள் காட்டு..." என்று கூறி நானும் அவளை சீண்டிவந்தேன்.

இதைத்தொடர்ந்து, அவள் அவ்வப்போது என் முகத்தைக் குறிபார்த்து குத்த வருவதும், நான் லாவகமாக விலகித் தப்பிப்பதுமாக இருக்க, ஒருமுறை என் லாவகம் என் காலை வாரிவிட அவளது மென்மையான கரங்கள் அதைவிட மென்மையான என் மூக்கை பதம் பார்த்தேவிட்டது. இதற்கு அவளை நான் பழிவாங்கப்போவதாக அவளிடம் சவால் விட்டதுதான் எங்களின் இந்த விளையாட்டுக்கு அடித்தளம் இட்டது.

ஒரு வாரத்துக்குள் நான் அவள் மூக்கைத் தாக்கினால் நான் சவாலில் ஜெயிப்பேன் என்றும் இல்லையேல் இதில் அவள் ஜெயித்ததாக ஆகும் என்றும், யார் ஜெயித்தாலும் தோற்பவருக்கு ஒரு Amul Crackle வாங்கித் தரவேண்டும் என்றும் முடிவானது.

நானாவது அவளை ஜெயிப்பதாவது என்று நம்பிக்கையின்றிதான் நானும் இருந்தேன். ஆனால் அவளை வெல்ல ஓர் சந்தர்ப்பம் தானாக அமைந்துவந்தது.

காலேஜ் லைப்ரரியில் நான் பேப்பர் படித்துக்கொண்டிருந்தபோது மாலினியோடு அங்கே வந்தாள் நான்ஸி. அவளைப் பார்த்ததும் வழக்கம்போல ஏதாவது வம்பினை வளர்க்கலாம் என்று அவளை அழைத்து,

"நான்ஸி, இங்க பாத்தியா உங்க ஊர் நியூசை?" என்று பேப்பரிலிருந்து கண்களை எடுக்காமலேயே நான் கேட்க, என் ஆச்சரிய முகபாவத்தைப் பார்த்து,

"என்ன ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டே என் அருகே வந்தவள், மேசைமீது விரித்து வைத்திருந்த பேப்பரில், "எங்கே? என்ன நியூஸ்?" என்று, இல்லாத சேதியை மும்முரமாய் குனிந்து தேடிக் கொண்டிருந்தாள்.

எனக்கு மிக அருகில் நின்றுகொண்டு அவள் பேப்பரில் செய்தியை தேடிக்கொண்டிருக்க, என் கண்களுக்கோ அவளது மூக்கு மட்டும், மகாபாரதத்து அர்ஜுனனுக்குத் தென்பட்ட கிளிபோலத் தெளிய, தானாகக் கனிந்த இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காது அவள் மூக்கைப்பார்த்து இதமாய், பதமாய் வைத்தேன் ஒரு குத்து "ப்ளச்" சென்று.

நான்ஸி நிலைகுலைந்து தடுமாறி அமர்ந்தாள். பட்டுக்கரங்களால் தன் மூக்கைத் தொட்டுத் தடவி வலி போக்குகிறாள். அவள் கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பி நின்றது. நான் சொன்னேன்,

"நீ மூக்கு உடைபட்டதும், உன்னோடான சவாலில் நான் ஜெயிச்சதும்தான் இப்போதைக்கு நியூஸ். இது நாளைக்கு பேப்பரிலே வரும். நீ மறக்காம நாளைக்கு Crackle வாங்கித்தந்து தோல்வியை ஒப்புக்கொள்ளனும்." என்றேன்.

அவள் மூக்கு செக்கச் செவேலென சிவந்திருந்தது. குத்து பலமாகப் பட்டிருக்குமோ? என்று திடீரென்று எனக்கு கலக்கம் உண்டாக,

"வலிக்குதா நான்ஸி?" எனக்கேட்டேன்.

"இல்லை!" என்று கோவமாகச் சொல்லிவிட்டு நான்ஸி எழுந்தாள்.

"சீரியஸா கேட்கிறேன் நான்ஸி. பலமா பட்டிடுச்சா?" என்று மீண்டும் கேட்டேன்.

"இல்லை…" என்று மீண்டும் ஒற்றை வார்த்தையில் பதில் தந்துவிட்டு மேற்கொண்டு பேசாமல் அவள் சென்றுவிட்டாள். நான் வருந்தினேன்.

மறுநாள்!

நான்ஸி கோபித்துக்கொண்டதால் நான் அவளைப்பார்க்க அவள் வகுப்புக்குப் போகவில்லை. ஆதலால், அவள் என்னைத் தேடி வந்தாள். லைப்ரரி அருகில் வராந்தாவில் என்னைக்கண்டவள் என் அருகே வந்தாள். "Crackle" சாக்லேட்டை எடுத்து என் பக்கம் நீட்டினாள்.

"வேண்டாம்... உனக்கு எதையும் sportive ஆ எடுக்கத்தெரியல. சின்னப்பிள்ளைங்க மாதிரி கோவிச்சுகிட்டு அழுகுனி ஆட்டம் ஆடற. அதனால, நான் இந்த விளையாட்டுக்கு வரலை." என்றேன்.

"Sorry.. Sorry! எனக்கு ரொம்ப வலிச்சதால அப்படி செஞ்சிட்டேன்." என்று கூறி "ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இத வாங்கிக்கங்க..." என பல ப்ளீஸ்களை வைத்து அவள் கெஞ்சிட, சரியென்று நானும் மன்னித்து அந்த Crackle ஐ வாங்கிக் கொண்டேன்.

"தேங்க்ஸ்" என்று கூறியவள் நான் சாக்லேட் கவரை பிரிக்காமல் இருப்பதைக்கண்டு,

"இதைப் இப்போ சாப்பிடற ஐடியா இல்லையா? நீங்க எனக்கும் ஒரு bite தருவீங்கன்னுதான் நான் wait பண்ணிட்டு இருக்கேன். ஏன்? பந்தயத்துல ஜெயிச்சு வாங்கின சாக்லேட்டுங்கறதால யாருக்கும் குடுக்காம தனியாவே சாப்பிடணும்னு நெனச்சிருக்கீங்களா?" எனக்கேட்டாள்.

"அடடா கொஞ்சம் பொறுமையா இரும்மா. நாம பேசிட்டிருந்ததால இதை அப்படியே வச்சிருந்தேன். அதுக்குள்ல நிறுத்தாம அடுக்கிட்டே போறியே..." என்று கூறி சாக்லேட் கவரினை மும்முரமாக பிரிக்கத்துவங்கினேன். என் கவனம் அத்தனையும் சாக்லேட் கவரை பிரிப்பதில் முழுமையாக குவிந்திருந்தபோதுதான்...,

'நச்' சென்று, என் மூக்கில் பலமாய் விழுந்தது ஒரு குத்து!

குத்து விழுந்த வேகத்தில், பளீரென ஓர் வெளிச்சக்கீற்று மின்னல்போல் தோன்றி மறைய, அதைத்தொடர்ந்து பல வண்ணங்களில் நட்சத்திரங்களும் மின்னி மறைய, நான் நிலைகுலைந்து, தள்ளாடி, அருகிலிருந்த சுவற்றில், சுவரோடு சுவராகச் சாய்ந்து நின்றிருந்தேன்!

நான்ஸி அதைப்பார்த்து எக்காளத்துடன் சிரிக்கத்துவங்கினாள்.

என் கையிலிருந்த Crackle ஐ பறித்துக்கொண்டவள், "இப்போ இந்தக் குத்துக்கு நீங்க எனக்கு சாக்லேட் வாங்கித்தரணும் இல்லையா? அந்த சாக்லேட்தான் இது! அதனால இப்ப இது எனக்குத்தான் சொந்தம். வேணும்னா உங்களுக்கு நான் ஒரு கடி தரட்டுமா?" எனக்கேட்டாள்.

"வேணாம் தாயே! நீ விட்ட குத்து மட்டும் போதும். இதுக்கு மேலே கடி வேறு நான் வாங்கவேண்டுமா? ஒன்னும் வேண்டாம்!" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வெப்பமாய், உதட்டின் மீது ஏதோ ஊர்ந்து செல்வதாகத்தோன்ற, "என்ன அது?" என்று, அதை எடுத்துக்களைய எத்தனித்தபோதுதான் பிசுபிசுப்பாய், கருஞ்சிவப்பாய், சுவையில் துவர்ப்பாய் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருப்பது தெரிய வந்தது.

நான்ஸி குத்தியது கொஞ்சம் பலமாகவே என் மூக்கினை பதம் பார்த்துவிட்டது. குத்து விழுந்த வேகத்தில் என் சில்லிமூக்கு உடைந்ததால்தான் இரத்தம் இப்படி அருவிபோல ஒழுகிக் கொண்டிருக்கிறது. நான்ஸி இன்னும் இதை கவனிக்கவில்லை, அவள் சாக்லேட்டை பிரிப்பதிலேயே மும்முரமாக இருக்கிறாள்.

அவளை அழைக்க முயன்றேன். முடியவில்லை. அதற்குள், கண்கள் இருட்டிக்கொண்டுவர, சக்தியெல்லாம் உறிஞ்சி எடுத்துவிட்டார்போல உடல் தளர்ந்துபோக நான் தலைகிறங்கி தொப்பென்று தரையில் மயங்கி விழுந்துவிட்டேன். தரையோடு கால்கள் தொடர்பற்றுப்போக, ஒரு காரிருள் வட்டம் என்னை இழுக்கப்பார்க்க, நல்லவேளையாக யாரோ குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு என் முகத்தில் அடித்துத் தெளித்ததில், மயக்கம் தெளிந்து சுயநினைவுக்குத் திரும்பினேன்.

என்னைச்சுற்றி எல்லோரும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அக்கூட்டத்தில் நான் நான்ஸியைத் தேடினேன். நான்ஸி, பேயறைந்தாற்போல பயந்து நடுங்கி நின்றிருந்தாள். முதல் முறையாக அந்த தைரியசாலி பயந்திருக்கப் பார்க்கிறேன். எனக்கு சிரிப்பு வந்தது.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் விஷயத்தில் நான்ஸியிடம் மூக்குடைபட்டு, மூக்குடைபட்டு கடைசியில் உண்மையிலேயே என் மூக்கை குத்தியுடைத்து இரத்தம்வழியச் செய்துவிட்டாளே! என்று அடக்கமாட்டாமல் எனக்கு சிரிப்புவந்தது.

இவள் மூக்குத்திப்பூ அல்ல, மூக்குகுத்திப்பூ!

நான் நான்ஸியை பார்த்து புன்னகைத்தேன். என் அருகே வரச்சொல்லி சைகை காட்டினேன். என்னருகே வருவதற்கு ஒரு அடி எடுத்து வைத்திருப்பாள்... அவ்வளவுதான் மயக்கம்போட்டு விழுந்துவிட்டாள்.

என் மீது அடித்துத் தெளித்த தண்ணீரின் மீதத்தை இப்போது நான்ஸியின் முகத்தில் அடித்துத் தெளிக்க, அவள் மயக்கம் தெளிந்து எழுந்தாள். ஆனாலும், இன்னமும் அவள் உடல் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. முகமெல்லாம் வெளறி இருந்தது. அவள் நிலை என்னை கவலை கொள்ளச் செய்தது.

நான் அவளது கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். "எனக்கு ஒன்னும் இல்லை பயப்படாதே! சின்ன மூக்கு உடைஞ்சது அவ்வளவுதான். இது எனக்கு எப்பவும் வருவதுதான். தண்ணியிலே ரொம்ப நேரம் நின்றாலும் இப்படித்தான் ஆகும்" என்றெல்லாம் சமாதானம் கூறியும் அவள் சமாதானம் ஆகவில்லை. வெறித்தபடி என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாளே தவிர ஏதும் பேசவும் இல்லை. திரும்பவும் மயக்கம் போட்டுவிட்டாளா எனபதும் தெரியவில்லை.

மாலினி, நான்ஸியை அவள்மீது சாய்த்துக்கொண்டு அவளது தோளினைக் குலுக்கி, கன்னத்தில் படபடவென அடித்து, "நான்ஸி நான்ஸி" என்று விளிக்க, நான்ஸி சுயநினைவுக்குத் திரும்பினாள். என்னைப்பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டாள். என் கைகளைப் பிடித்து அவள் நெற்றியில் வைத்துக்கொண்டு,

"I am sorry! நான் வேணுமின்னு செய்யலை. I am sorry!" என்று கூறிக்கொண்டே குலுங்கி அழுகிறாள்.

அன்று அவளை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அடுத்த இரண்டு நாட்கள் அவள் காய்ச்சலிலும் வீழ்ந்தாள். நண்பர்கள் எங்கள் இருவரையுமே திட்டித்தீர்த்தார்கள். இதுவென்ன இப்படியொரு விளையாட்டு என்று சினம் கொண்டார்கள். நாங்களும் அன்றோடு அந்த மூக்குக்குத்து விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

"இந்த காலத்துலயும் நட்புக்காக இரத்தம் சிந்தும் என்னைப்போல ஒருத்தன் உனக்கு நண்பனா கிடைச்சது உன் பாக்கியம்னு நினைச்சுக்கோ!" என்று நான் நான்ஸியிடம் அவ்வப்போது வேடிக்கையாக சொல்வதுண்டு. அப்போதெல்லாம்,

"ஒரு பொண்ணு லேசா தட்டினதுக்கே இரத்தம் சிந்தி மயக்கம்போட்டு விழுந்திட்ட நண்பனை தடிப்பசங்க கூட்டத்திலேயிருந்து காப்பாத்தும் அளவுக்கு சாமர்த்தியமான தோழி கிடைச்சிருப்பது உங்க பாக்கியம்னு நீங்களும் நினைச்சுக்கோங்க..." என்று நான்ஸியும் சொல்லிடுவாள்.

"சிலரோட friendship ரொம்ப விசித்திரமானது. பிரெண்டு ஆகுற வரைக்கும் மாத்தி மாத்தி ஒருத்தர் மூக்கை ஒருத்தர் பேச்சால உடைக்கப் பாப்பாங்க, பிரெண்ட்ஸ் ஆயிட்டா, மூக்கை கையால குத்தி மூக்குடைக்க பாப்பாங்க. பாவம் உங்க மூக்குங்களுக்குத்தான் சொல்லப்போனா பாக்கியமே இல்லை.....!" என்று மாலினியும் கேலிசெய்வாள்.

இவர்களின் தோழமை இன்பம் சேர்க்க அந்த கல்லூரிக்காலம் இன்பமாக ஓடி மாய்ந்தது.

என் ஆட்டோகிராபில், மூக்குத்தியணிந்த அழகான மூக்கின் படத்தை வரைந்து, அதற்கடியில், "Your Bodyguard" என்று எழுதி, கையெழுத்திட்டிருந்தாள் நான்ஸி. அதைப்பார்த்து நான் நான்ஸியிடம்,

"கடைசியிலே இந்த சவால்ல, நம்ம ரெண்டு பேர்ல யார் ஜெயிச்சோம்? யார் தோற்றோம்?" என்று கேட்க,

"தெரியலயே? வேணுமின்னா கடைசியா ஒருமுறை மோதிப்பாத்திடலாமா?" என்று என்னைக் கேட்டாள் நான்ஸி. இதைக்கேட்டு அலறினாள் மாலினி,

"வேண்டாம் கண்மணிகளே, நீங்க ரெண்டுபேருமே ஜெயிச்சுட்டீங்க. திரும்பவும் உங்க அட்டகாசத்தை ஆரம்பிச்சுடாதீங்க ப்ளீஸ்....!!!" என்று கூறி எங்களிருவரையும் கையெடுத்து கும்பிட்டாள்.

கடைசியாக ஒருமுறை செல்லமாக ஒரு குத்து நான்ஸியின் மூக்கில் நானும், என் மூக்கில் நான்ஸியும், பழைய ஞாபகத்திற்காக பரிமாறிக்கொண்டு விடைபெற்றுக்கொண்டோம்.

உனக்கு இதுவெல்லாம் இப்போதும் நினைவிருக்கிறதா நான்ஸி? என்போல நீயும் இந்த வேடிக்கைகளை யோசித்துப் பார்த்து, தனியே சிரிப்பதுண்டா?

அடடே... என் மூக்கு அரிக்கிறதே?! நீயும் என்னைப்போலவே இந்த நினைவுகளில்தான் இப்போது சஞ்சரித்துக்கொண்டிருக்கிறாயா நான்ஸி!?

Comments

NRIGirl said…
Beautiful write up. Took me exactly 50 minutes to read! Totally enjoyed it!

I am sure Nancy too recalls the incident every now and then.

Thank you for sharing Bawa!
Just a few days back I was wondering why we do not have the short novels we used to have in Ananda vikatan. actually i missed them.Today, I have read a sort novel and I really enjoyed reading it. waiting for the sequel.
@Queen:
48 pages in 50 mins is a good reading rate Queen! It’s bit lengthy right? I tried but could not edit further more to shorten it. As usual, you are first one to leave the comment. So, thanks a lots and lots.

@Mrs. YL:
Thanks for reading Amma. I am so happy and delighted to get your comment for this story. Thank you Amma.
Garima A. said…
Bawa......can you please translate your novel for non tamil readers!!!

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?