அவ்விருக் குறும்பர்!

[தேன்கூடு.காம் -- சிறுகதை போட்டியில் தரப்பட்ட "குறும்பு" எனும் தலைப்புக்கு எழுதப்பட்ட கதை. குறும்பு எனும் தலைப்புக்கு ஏன் சீரியஸா ஒரு கதை எழுதக்கூடாது என முயன்று எழுதிய கதைக்கு நடுவர்கள் சீரியஸா பரிசு இல்லை நு சொல்லி குறும்பு பண்ணிட்டாங்க ;-) ]


வெட்கம்!

அப்படி ஒரு வெட்கம். இனம் புரியாத வெட்கம் எனக்குள்! எப்படி நான் அவளை பார்ப்பேன்? எப்படி அவளோடு பேசுவேன்? யோசிக்க யோசிக்க எனக்குள் வெட்கம் கூடி கூடி வந்தது. யாரும் என்னிடம் விஷயம் என்ன என்று நேரடியாக சொல்லவில்லை. எனக்கும் முழுதாக புரியவும் இல்லை. அரை குறையாகத்தான் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. ஆனாலும் ஏனோ வெட்கம் என்னை சூழ்ந்துகொண்டது.

இப்போது வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு வயது பதினைந்து. பிளஸ் ஒன் பரீட்சை எழுதியிருக்கிறேன். அடுத்து பிளஸ் டூ! வழக்கமாக எல்லா விடுமுறைக்கும் ஊருக்கு போவதுண்டு தான். ஆனால், அடுத்தவருடம் பிளஸ் டூ பாருங்கள், ஆகையினால் இம்முறை ஊருக்கு போகவேண்டாம் என்று கூறிவிட்டார் அப்பா. ஆனாலும் இப்போது அம்மாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு போயிக்கொண்டிருக்கிறேன், ஏகப்பட்ட வெட்கத்துடன். காரணம், நேற்று அத்தையிடமிருந்து வந்த போன்.

போன் பேசியதும் அம்மா பரபரத்தாள்! அவள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உடனடியாக அப்பாவுக்கு போன் செய்தாள். அப்பா என் கிட்டே, உடனே இரயில்வே ஸ்டேஷன் போயி சொக்கலிங்கம் அங்கிள் கிட்ட சொல்லி அம்மாக்கும் எனக்கும் இன்னைக்கு பத்து மணி வண்டிக்கும், அப்பாக்கு வெள்ளிக்கிழமை அன்னைக்கும் டிக்கெட் புக் பண்ணி வாங்கிட்டு வர சொன்னார். அப்பா சீக்கிரமா ஆபீஸ்ல இருந்து வந்தார். STD குவாட்டர் சார்ஜுக்காக இரவு ஒன்பது மணி வரை காத்திருக்காமல் உடனடியாக ஊருக்கு போன் பண்ணி பேசினார்.

பிறகு என்னை வீட்டிற்க்கு காவலாக்கிவிட்டு, உடனே வருவதாக சொல்லிவிட்டு அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் கிளம்பினார்கள். அநேகமாக நகை கடைக்குத்தான் போயிருக்கனும். எல்லா நிகழ்ச்சிகளையும் கூட்டிக் கழித்து பார்த்தபோது தான் எனக்குள் வெட்கம் பிறந்தது.

என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்குள்ளும் ஒரு பரவசம், ஒரு பரபரப்பு. வெகுநேரம் கண்ணாடியில் என்னையே பார்த்துக்கொண்டிருந்தேன்...! கண்ணாடி என் பிம்பத்தையும், இடையிடையே அவள் பிம்பத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

எப்போதும் லொட லொடத்துக் கொண்டிருக்கும் நான் அதீத மவுனம் காத்தது எனக்கே என்னவோ போல்தான் இருந்தது. சாப்பிடும் போதும் குனிந்த தலை நிமிராமல் இருந்தேன். இது என்ன மாய வெட்கம் எனக்குள்? என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். சாப்பிடும் போது பேச்சோடு பேச்சாக எங்கோ பார்த்தபடி "நந்தினி பெரிய பெண்ணாயிட்டா டா" - என்றார் அப்பா. அவருக்கும் வெட்கமோ?

நான் "ம்" என்று "உம்" மட்டும் கொட்டினேன். அம்மா என்னைப் பார்த்து சிரித்தாள். என் வெட்கத்தை கண்டுபிடித்திருப்பாளோ? ஒருவேளை எனக்குள் இந்த வெட்கம் ஏன் என்று அவளுக்கு புரிந்தும் இருக்குமோ?

ஊர் வந்தது!

கல்யாண வீடு போல் களை கட்டியுருந்தது மாமாவின் வீடு. வெக்கேஷன் அல்லவா? எல்லா சொந்த பந்தங்களும் வந்திருந்தார்கள். வீட்டுக்குள் ஒரே பெண்கள் பட்டாளம். என் வெட்கமோ என்னை பாடு படுத்திக்கொண்டிருந்தது. அவளை எப்படி பார்ப்பது? பார்க்கையில் என்ன பேசுவது?

"சேகரத்தான்..." - அவள் குரல் கேட்டு உறைந்தேன். அவள் முகத்தில் புதிய பொலிவு, புதிதாய் படர்ந்திருக்கும் வெட்கம், என்னை நேரில் கண்ணோடு கண் நோக்க அவள் கொண்ட கூச்சம், புதியதாய் அவள் உடுத்தியிருக்கும் பட்டுத்தாவணி கூட்டியிருக்கும் அவள் அழகு, என்று ஏதேதோ மனதில் ஓட நான் அவள் குரல் வந்த திசையில் என் தலையை திருப்பினேன்.

அட! என்னால் நம்பவே முடியவில்லை. நந்தினி நான் நினைத்த எந்தக் கோலத்திலும் இருக்கவில்லை. சாதாரணமாக எப்போதும் போல சல்வாரில் தான் இருந்தாள். எப்போதும் இருந்திராத நாணம் இப்போதும் இல்லை. அவள் இயல்பாய் இருப்பதை பார்த்தபிறகும் என் வெட்கம் குறையவில்லை.

"ரொம்ப ஓவரா கற்ப்பனை குதிரையை ஓட விட்டுட்டோமே?" - என்று மீண்டும் வெட்கம் வந்தது.

"என்ன சேகரத்தான்? பேயறஞ்சமாதிரி நிக்கறீங்க.. என்ன ஆச்சு?"

அத்தான்! இப்படி இதற்க்கு முன் அவள் என்னை அழைத்ததே இல்லை. அதே போல் வாங்க போங்க என்ற மரியாதையும் இது வரை இருந்ததில்லை. அத்தான்! நன்றாகத்தான் இருக்கிறது ஒரு பெண் நம்மை இப்படி அழைக்க கேட்பது...!

"அத்தானா? என்ன புதுசா கூப்பிடறே?" -- என்றேன்.

"பாட்டி.."

"என்னது?"

"பாட்டி டா... நம்ம பேச்சி பாட்டி தான் சொல்லுச்சு, நான் இனிமே உன்னையெல்லாம் வாடா போடா நு பேசக்கூடாதாம்..."

"ஏனாம்?"

"அதுவா..., நான் இப்போ பெரிய பொண்ணு ஆயிட்டேனாம்!"

-- இதைக்கேட்டதும் மீண்டும் நான் தான் வெட்கத்தில் தலை குனிந்தேன். அவள் அதுபோலவே இருக்கிறாள். மற்றவர்களும் இயல்பாகவே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் என்ன ஆச்சு? அவளுடன் பேச எனக்கே ஓர் கூச்சம். அவள் கண்ணில் படாமல் நான் ஒளிந்திருக்க முயன்றேன்.

எனக்கே சந்தேகம் வந்தது. வயசுக்கு வந்தது அவளா இல்லை நானா?

பிளஸ் டூ முடித்தேன். கல்லூரி மாணவன் ஆனேன்.

கல்லூரியில் எனது மூன்றாம் வருடத்தில் ஒரு நாள், மாமாவுக்கு உடல்நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் சேத்திருப்பதாக செய்தி வந்தது. நாங்கள் ஊருக்கு புறப்பட்டோம். ஆபீஸிலிருந்து வரும் வழியில் மயங்கி விழுந்திருக்கிறார். இதயத்தில் சிறிய அடைப்பு இருப்பதாகவும், பயப்பட ஒன்றும் இல்லையென்றும் மருந்தில் குணமாகிவிடும் என்றும் உறுதி அளித்தார் மருத்துவர்.

அவர்கள் உதவிக்காக ஓரிரு வாரங்கள் நாங்கள் ஊரிலேயே தங்கினோம். நந்தினி இந்த நாட்களில் மிகவும் மாறிப்போயிருந்தாள். அவள் கலகலப்பு முற்றிலும் மறைந்து போனது. மாமா உடல் நிலை தேறி ஆபீஸ் போக ஆரம்பித்த பிறகும் இவள் பழையது போல் ஆகவில்லை. இவளது இந்த மாற்றம் இப்போது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. முக்கியமாக என்னை!

நான் அடிக்கடி ஊருக்குப் போக ஆரம்பித்தேன். போகும் போதெல்லாம் நந்தினியோடு நிறைய நேரம் செலவழித்தேன். அவளை வெளியில் அழைத்து சென்றேன். சினிமாவுக்கு போனோம். அவளை கலகலப்பாக்க நான் எடுத்த எந்த நடவடிக்கையும் பலன் தரவில்லை. ஆதலால் நான் பொறுமை இழந்தேன், ஆதலால் எனக்கு கோவமும் வந்தது.

"ஏன் இப்படி இருக்கே?" - என்று சாதாரணமாய் நான் அவளிடம் கேட்ட கேள்வியில் ஆரம்பித்தது எங்கள் வாக்குவாதம்.

"அப்பாவுக்கு ஏதும் ஆகியிருந்தா?" - என்று விம்மியவாறு அவள் கூற,

"இப்போ நல்லா ஆயிட்டாரில்லே, அப்புறமும் ஏன் அப்படி ஆயிருந்தா, இப்படி ஆயிருந்தா? நு தேவையில்லாம கற்பனை பண்ணி எல்லாரையும் நோகடிக்கறே?"

- என்ற என் தேற்றுதலையும் வகை வைக்காமல் அவள் மேலும் புலம்ப, விளக்கம் கூறவே முடியாத அளவுக்கு முட்டாள்தனமான கேள்விகளை என் முன் வைத்து அவள் என்னை நிராயுதபாணி ஆக்க, நான் சொல்லும் கருத்துக்கள் விளங்கியும் அது விளங்காதது போல்,

"உனக்கு என் உணர்வுகள் புரியாது.. என்னை கொஞ்சம் தனியா விடுறியா?"

- என்று சற்றே உயர்ந்த குரலில் அவள் கூற, அந்த சொற்க்கள் நான் அவளுக்கு அந்நியனோ எனும் சந்தேகத்தை கிளப்பி என்னை குதறி எடுக்க. அன்றைக்கே ஏதோ ஓர் காரணத்தை அத்தையிடம் கூறிவிட்டு அவளிடம் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அன்று அங்கிருந்து கிளம்பி என் வீட்டுக்கு வரும் வழியில் எங்கோ தான் முதல் முதலாய் உணர்ந்தேன் அவள் மேல் நான் கொண்டிருந்த காதலை!

ஊரிலிருந்து போன் வரும்போதெல்லாம் பெரும்பாலும் நான் பேசுவதை தவிர்த்தேன். ஒருமுறை, மறுமுனையில் நந்தினி இருக்க போன் என் கைக்கு வந்தது.

"ஹலோ சேகர்" - என்றாள். நான் ஒன்றும் பேசவில்லை, இணைப்பை துண்டித்தேன்.

பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பாள், விஷயம் இத்தோடு முடிந்து போகும். இணைப்பை துண்டித்ததால் இன்னும் ஓரிரு நாட்கள் அவள் என்னைப் பற்றி யோசிக்கக்கூடும். யோசிப்பாளா.....? யோசித்தாள்!

அடுத்த வாரம் என் கல்லூரிக்கே ஒரு கடிதம் வந்தது. அதில் மன்னிப்பொன்றும் அவள் கேட்டிருக்கவில்லை. நான் அவளிடம் பேசாததால் அவள் வாட்டமேதும் கொண்டாளா? என்பது பற்றியும் ஒரு சேதியும் இல்லை. மாறாக, எனக்கு அகம்பாவம் இருப்பதாகவும் அது இருக்கும்வரை என் மேல் மற்றவர்கள் கொண்டுள்ள அன்பை என்னால் உதாசீனப்படுத்தத்தான் முடியும், உணர்ந்து கொள்ள முடியாது என்றும் எழுதியிருந்தாள்.

அன்பு? அவள் எழுதியிருந்த அந்த அன்பை காதல் என்று மொழிபெயர்க்கச் சொல்லி என் உடலின் ஒவ்வொரு அனுவும் என்னை உந்தித் தள்ளியபோதும் என் மனம் எனும் நண்பன் "மகனே.. பொறுமை கொள்!" - என்று கூறி கட்டி இழுத்து என்னை காப்பாற்றியது.

அவள் என்னிடம் இருப்பதாகச் சொன்ன ஆணவத்தை, அவள் கண்டுபிடித்து களையச்சொன்னதால் மட்டுமே களைகிறேன் என்று அவள்க்கு உணர்த்த நானே அவளுக்கு போன் செய்து பேசினேன்.

"சேகரா? சொல்லு..." - என சாதாரணமாக பேசத்துவங்கினாள்.

அடிப்பாவி! இந்த அப்பாவியின் மூக்கை எத்தனை முறைதான் உடைப்பாய்? கோபத்தை மறந்து நானாக உன்னை அழைத்து பேசுகிறேன்... அதுக்கு ஒன்னோட ஒட்டு மொத்த ரியாக்ஷன் இவ்ளோதானா? என எண்ணிக்கொண்டேன். ஆயினும் மகிழ்ந்தேன். காரணம் காணாமல் போயிருந்த அவள் உற்ச்சாகம் மெல்ல தலை தூக்குவதை அவள் பேச்சினில் உணரமுடிந்தது.

என்னுள் வளர்ந்த காதல் ஒரு பக்கம் கையை கட்டி எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நந்தினிக்கும் எனக்குமிடையே நட்பு தழைத்தோங்கியது.

வருடங்கள் உருண்டன!

வேலை தேடி அலையும் காலத்தில் நான் சோர்ந்துபோகும் போதெல்லாம் நந்தினி என்னை தாங்கிப்பிடிப்பாள், நம்பிக்கை தந்து எனக்கு உற்ச்சாகம் தருவாள், எனக்காக அவள் அப்ளிக்கேஷன் அனுப்புவாள் என்ற என் கனவுகள் எதுவும் மெய்ப்பட சந்தர்ப்பம் அளிக்காமல் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே எனக்கு வேலை கிடைத்தது. டெல்லியில் போஸ்ட்டிங்!

டெல்லிக்கு போகும் முன் அவளிடம் காதலைச் சொல்லி அவள் காதலை பெற்றுவிட முடிவு செய்தேன். ஊருக்கு போனேன். சாதாரணமாகக் கூட என்னால் அவளிடம் பேச முடியவில்லை. டெல்லிக்கு போகவேண்டியிருப்பதால் டல்லடிக்கிறான் என்று குடும்பத்தார் நினைத்தனர். அவனவன் அமெரிக்காவுக்கே போகத்துடிக்கும் காலத்தில் டெல்லிக்கு போக டல்லடிப்பதாவது?

"என்ன ஆச்சு?" - அவள் கேட்க,

"ஒன்னுமில்லை..." - நான் கூற,

"அப்புறம் ஏன் இப்படி இருக்கே?" - அவள் கேட்க.

"எப்படி இருக்கேன்? எப்பவும் போலத்தான் இருக்கேன்!" - நான் கூற, இப்படியே நாள் நீள, நாளைக்கு நான் டில்லிக்கு கிளம்புகிறேன்.

மொட்டை மாடியில் தேய்பிறை தேயும் அழகை பார்த்துக்கொண்டு, என்ன செய்வது என்று ஆழ்ந்த யோசனையில் நின்றுகொண்டிருந்தேன்.

"சொல்லு..." - என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்.

"என்னது?" - கேட்டேன்.

"சொல்லனும் நு நினைக்கிறதை..." - என்றாள். நான் தயங்கி நின்றேன். அவளே தொடர்ந்து
பேசத்துவங்கினாள். அவள் பேச பேச நான் உணர்வற்ற நிலையில் இருந்தேன். அவள் பேசியதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டேன் ஆனால் அதை புரிந்துகொள்ள அப்போது முயற்ச்சி செய்யவில்லை.

"நான் சொல்றது புரியுதா?" - என்றாள். தலையாட்டினேன் புரியாமல்.

"நல்ல பையனா இரு, ஸ்மார்ட்டா போய் வேலைல ஜாயின் பண்ணு" - என்று கூறி கை கொடுத்தாள். "பெஸ்ட் ஆப் லக்" - என்று கூறிவிட்டு கீழிறங்கி சென்றாள்.

மறு நாள் நான் கிளம்பினேன். என் பயணம் முழுவதும் அவள் கூறியதைத் தான் அசை போட்டேன்!

அவள் சொன்னதும் வாஸ்த்தவம் தானே! நானும் அவளும் பழகுவதை ஒருபோதும் சந்தேகக் கண்ணோடு பார்த்ததில்லை எங்கள் பெற்றோர்கள். ஒருபோதும் ஒரு சின்ன கட்டுப்பாடு கூட விதித்ததில்லை. அத்தனை சுதந்திரம் தந்திருந்தார்கள். இப்படியிருக்க எங்களுக்குள் காதல் என்று அவர்கள் முன் சென்று நின்றால்...? அதிர்ச்சியாகத்தான் இருக்கும். மறுப்பேதும் கூறமாட்டார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை உடைப்பது போல் ஆகிவிடும்! அவர்கள் அளித்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியது போலும் ஆகும். ஒரு தரத்தில் அவர்களை நாங்கள் ஏமாற்றியது போலவும் ஆகித்தான் போகும். நாங்கள் "பழகிய விதம்" என்ற ஒன்றுண்டு! தாய் தந்தையர்க்கு சற்றும் கூட சந்தேகம் வராத விதம் அது. அந்த "பழகிய விதம்" தரம் தாழ்ந்து போகுமே! வேண்டாம் எங்களையும் தாழ்த்திக்கொண்டு, எங்களை பெற்றவர்களையும் சிறுமை படுத்தவேண்டாம்.

அவள் சொன்னதெல்லாம் புரிந்தவனாய் அதனை ஆமோதிப்பவனாய் டெல்லிக்குள் நுழைந்தேன்.

டெல்லியிலிருந்து அவ்வப்போது போன் செய்தேன். கடிதம் எழுதினேன். அதில் அவள் மேல் படிப்படியாக நான் வளர்த்த காதலை ஒரு கதை போல் கூறினேன். இருவரும் ரசித்தோம். சில இடங்களில் சிரித்தோம். கதை தீர்ந்த பின் ஒரு முறை அவளிடம் கேட்டேன்.

"நம்ம அப்பா அம்மா ஒரு பக்கம் இருக்கட்டும், சேகரும் நந்தினியும் மட்டும் இருக்கும் ஒரு உலகத்தில் நின்றுகொண்டு கேட்கிறேன்... என் காதலுக்கு என்ன பதில்?"

அவள் சொன்னாள்! "அந்த உலகத்தில் சேகர் காதலை உணரத்துவங்கிய வேளையில் நந்தினி அதன் உச்சத்திலிருந்தாள்!" - என்று!

அப்பாடா...! முதல் முறையாக என் மூக்கு உடைபடவில்லை!

நந்தினிக்கு கல்யாணம். மாப்பிள்ளை ஜெர்மனியில் வேலை பார்க்கிறார். அவருக்கு நந்தினியை பிடித்திருந்தது.

நான் இரண்டு வாரங்களுக்கு முன்னமே ஊருக்கு போய்விட்டிருந்தேன். எப்போதும் கற்ப்பனை உலகத்தில் வாழும் நான் இப்போதெல்லாம் தெளிவு பெற்றிருந்தேன். கவலை, சஞ்சலம், ஏமாற்றம் இதெல்லாம் ஏதும் இல்லை. மனம் தெளிந்த நீரோடை போல் இருந்தது. ஆனால், எங்கள் பேச்சி பாட்டி தான் அழுதுகொண்டே இருந்தாள்.

ஒரு நாள் கூடத்தில் எல்லோரும் உட்கார்ந்து நந்தினியின் சிறு பிராய சுட்டித்தனங்களை எல்லாம் கூறி அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தபோது எங்கள் பாட்டி மீண்டும் அழத்துவங்கினாள்.

"ஏன் பாட்டி அழுதிட்டிருக்கே... " - என்று அவளருகில் சென்ற நந்தினியை இறுக அணைத்தவள் இன்னும் அதிகமாய் அழத்துவங்கினாள்.

"பாட்டி பாட்டி நு என்ன சுத்தி வருவியே செல்லம். இப்ப கண் காணா இடத்துக்கு போறே... எப்ப உன்ன பாப்பேன்? அதுவர இருப்பனா?"

மாமா வும் கண் கலங்கினார். அதுவரை சிரித்து பேசிக்கொண்டிருந்த அனைவரும் சோகம் அப்பி உட்கார்ந்திருக்க, நான் பாட்டி அருகில் சென்றேன்..!

"பாட்டி நீ கொள்ளுப்பேரன் எல்லாம் பாத்ததுக்கு அப்புறம் தான் போவே! அதுவரைக்கும் உன்னை நாங்க விடுறதா இல்ல. நீ இப்படி வருத்தப்படுவேன்னு தான் நான் உன் பேத்தி கிட்டே சொன்னேன் என்னை கல்யாணம் பண்ணிக்கடி பாட்டி கிட்டேயே இருக்கலாம் நு அவ தான் இந்த கிழவிய கட்டி யாரு மாரடிக்கறதுன்னு மாட்டேன் நு சொல்லிட்டா..."

"புளுகுறான் பாட்டி... என்னை கட்டிக்கறியா நு கேட்டதுக்கு நீ பாட்டி ஜாடை ல இருக்கே... நான் அழகான பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் நு சொன்னான் இந்த அழுக்கு மூட்டை..." - என்றாள் நந்தினி!

நான் அவளையும் அவள் என்னையும் சீண்டிப்பேச... அழுகை விட்டு சிரிக்கலானாள் எங்கள் பேச்சி பாட்டி.!

அன்று இரவு, வழக்கம் போல் நான் மொட்டை மாடியில் வானம் பார்த்து நின்றிருந்தேன். "சேகர்.." மாமாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன். சும்மா மாடிக்கு வந்ததாக கூறிய அவர், குடும்ப விஷயம், கல்யாண விஷயமெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். கடைசியில்....

"நந்தினிக்கு மாப்பிள்ளை பாக்க முடிவு பண்ணப்பவே நான் கேட்டிருக்கணும். அப்ப எனக்கு ஏனோ இப்படி ஒரு எண்ணமே வராம போச்சு... உன் மனசுல... நந்தினி மேல... உங்களுக்குள்ளே... மனசுல.." - என்று திணறினார் மாமா.

அவரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல்,

"ஐயோ! என்ன மாமா இது? அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல... இருந்திருந்தா வெளிப்படையா உங்க கிட்டே சொல்லியிருப்போமே... உங்க கிட்டே எனக்கென்ன பயம்...?" - என்றேன்!

"அப்படி ஏதும் ஆசை இருந்தா இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலே... என் பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்.... "
- என்ற மாமாவை சமாதானப்படுத்தி.... "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... சும்மா பாட்டி அழுகய நிப்பாட்டத்தான் அப்படிச் சொன்னேன்." - என்று கூறி அனுப்பிவைத்தேன்.

மறுநாள் காலை பல் விளக்க தோட்டத்து கிணற்றடிக்கு சென்றேன்.
கிணற்றடியில் அப்பா நந்தினியிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்க, நான் மறைந்து நின்றேன். நந்தினி அப்பாவிடம் கூறிக்கொண்டிருந்தாள்...!

"இல்லே மாமா... அப்படி ஏதும் இருந்திருந்தா உங்க கிட்டே சொல்லாட்டியும் நான் சேகரத்தான் கிட்டேயாவது சொல்லியிருப்பேன்ல! அப்படியெல்லாம் எங்க மனசுல ஒன்னும் இல்ல மாமா!"

நாளை எனக்கு கல்யாணம்.
இப்போதான் நந்தினி ஜெர்மனில இருந்து போன் பண்ணினா. நல்லா இருக்கா..! கல்யாணத்துக்கு வர முடியாதாம். மன்னிப்பு கேட்டுகிட்டா! "வாழ்த்துக்கள் சேகரத்தான்!" - என்றாள்.

நீண்ட நாட்களுக்குப் பின் அவள் குரல் கேட்டதாலோ என்னவோ? கண் நீரைச்சுமக்கிறது. ஆயினும் சுதாகரித்து இயல்பானேன். நான் தளர்ந்துபோனால் என் நிலையை கண்டு சிரிக்க அவ்விரண்டு குறும்பர்கள் காத்திருக்கின்றனர். நான் தளரமாட்டேன்!

ஆப்டர் ஆல்,
அந்த இருவரும் கூடி என் வாழ்வில் செய்துவிட்ட குறும்புதானே இவையெல்லாம்? புரியவில்லை? நான் கடவுளையும், காலத்தையும் சொல்கிறேன்!


Comments

Anonymous said…
Kurumbar
ரெம்ப நல்லா வந்திருக்கு சில்வண்டு. எங்கடா குறும்புன்னு தேடிட்டு வந்தேன் கடைசில போட்டு தூக்கிட்டீங்க.

வாழ்த்துக்கள்
ஃபீலிங்ஸ்..ஃபீலிங்ஸ்..
ஃபீலிங்ஸ்ல இன்னா சொல்றதுன்னே தெரில..
நல்லா கீது..
Unknown said…
அடப்போங்கப்பா... கதையிலையாவது சேர்த்து வைப்பீங்களா? :((

எல்லாரும் ஓவரா பாலா, செல்வராகவன் படம் பார்த்து நெகட்டிவாவே முடிக்கிறீங்க... கொஞ்சம் விக்கிரமன் படமும் பாருங்க :))))
நன்றி சிறில் அவர்களே! உங்கள் பாராட்டு சில்வண்டினை மகிழச்செய்கிறது!
அரை பிளேடு அவர்களே!

உங்கள் பீலிங்ஸை கொட்டியதற்கு நன்றி! என்ன சொல்ல என அவதிப்படவேண்டாம்! உங்கள் பீலிங்ஸை பீல் பண்ண சில்வண்டால் முடியும்!

அரை பிளேடுக்கு பிடித்திருக்கும் கதை.. முழு பிளேடு?? ஹா ஹா ஹா :-)


அருட்பெருங்கோ! - உங்களூக்கும் சில்வண்டின் நன்றி! "கதையிலாவது சேர்த்துவைக்கப்படாதா?" - என்று நீங்கள் கேட்டது என் கதாபாத்திரங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது! அதேசமயம் அப்படி செய்யாததற்க்கு என்னை கோபிக்கவும் செய்கின்றன என் கதாபாத்திரங்கள்! ஆயினும் உங்களுக்கு என் நன்றிகள்.
Unknown said…
நல்ல கதை. இயல்பான நடை. நல்லா இருக்கு
Anonymous said…
"அந்த உலகத்தில் சேகர் காதலை உணரத்துவங்கிய வேளையில் நந்தினி அதன் உச்சத்திலிருந்தாள்!" -

நீ இப்படி வருத்தப்படுவேன்னு தான் நான் உன் பேத்தி கிட்டே சொன்னேன் என்னை கல்யாணம் பண்ணிக்கடி பாட்டி கிட்டேயே இருக்கலாம் நு அவ தான் இந்த கிழவிய கட்டி யாரு மாரடிக்கறதுன்னு மாட்டேன் நு சொல்லிட்டா..."

"புளுகுறான் பாட்டி... என்னை கட்டிக்கறியா நு கேட்டதுக்கு நீ பாட்டி ஜாடை ல இருக்கே... நான் அழகான பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் நு சொன்னான் இந்த அழுக்கு மூட்டை..."

wonderful writing.keep it up.
with love and regards,
B. Murali daran.
Hey Sillu,

Siru kathai potiyila unakku parisu kidaikaati yenna............ ithanai nalla paaratugal kidaichadhe periya parisu thana!!!

Congrats :-)
Anonymous said…
Hey Sillu,

Nalla kathai, interestinga pochu!!
Pettrorukku mariyadhai thandha nerathil arindhum ariyaamaleye kaadhalukkum mariyadhai thandha kathai!! Hat off 2 u :-)

Aana "Kurumbu"-ngara thalaipukku indha kathai suit agavillai....so judges mela entha thappum illai !!!

Nee un life-la seiyatha kurumbugala????????........ adhula onna ezhuthiyirundhale podhume....prize nichayam unakku than kidaichirukkum ;-)
NRIGirl said…
Wow! After a long time I have read a great story - sorry watched a great movie!

Thank you for making them both!

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?