Monday, May 14, 2018

நெஞ்சாக்கூட்டில்..., [ ஒரு வட கத ! ]


து ஒரு வார இறுதி. அதிகாலையிலிருந்தே மழை பெய்துகொண்டிருக்க, மெல்லிய காற்றும் சில்லென வீசிக்கொண்டிருக்க, மழைநாளின் சோம்பலை, இழுத்துப்போர்த்திய பெட்ஷீட் தரும் கதகதப்போடு இதமாக அனுபவித்துக்கொண்டிருந்தோம் நானும் என் நண்பர்களும்.

இடம்: அமெரிக்கா.
பொருள்: அதை ஈட்டத்தான் நாடு விட்டு கடல் தாண்டி வந்துள்ளோம்.
ஏவல்: அதை எங்கள் மேனேஜர்கள் சரியாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இடம் தவிர, பொருளும் ஏவலும் இந்தக்கதைக்கு தேவையில்லை. இந்தக்கதை அமெரிக்காவில் நடக்கிறது என்பதை வித்தியாசமாக சொல்ல நினைத்த ஆர்வக்கோளாறு என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டுமென்றால் என்னை முறைத்துக்கொண்டு மேலே தொடருங்கள்….!

சூடா ஒரு டீ அடிச்சா சூப்பரா இருக்கும்ல?”
-- என்று ஒருவன் சாதாரணமாக உதிர்த்த அந்தக் கேள்வி வாக்கியம்தான் அன்றைய மாலைப்பொழுதை ரணகளமாக்கப்போகிறது என்று அப்போது நாங்கள் உணர்ந்திருக்கவில்லை….!

டீ கூட சூடா ஏதாவது கடிச்சுக்க இருதா இன்னும் சூப்பரா இருக்கும்ல?”
-- என்று வேறு ஒருவன் தீ எரியும் திரியை இன்னும் கொஞ்சம் தூண்டிவிட்டான்.

ஹூம்ம்ம்ம்இதுவே ஊர்ல இருந்திருந்தா பஜ்ஜி, வட, போண்டா னு எத்தனை பலகாரங்கள் நினச்ச உடனே கெடச்சிருக்கும்…”
--- என்று  நான் உள்பட எல்லோரும் பெருமூச்சு விட்டோம்.

இனி மாசக்கணக்காய், வருசக்கணக்காய் காத்திருந்து ஊருக்கு திரும்ப போகும்போதுதான் இதெல்லாம் சாப்பிட முடியுமா?”
--- என்று ஒருவன் பரிதாபமாகக் கேட்க, நாங்கள் விட்ட பெருமூச்சு ஏக்கப் பெருமூச்சாக மாறி அட்மோஸ்பியரை அந்தக் குளிரிலும் உஷ்ணமாக்கிக்கொண்டிருந்தது.

ஏன் அதுவரை காத்திருக்கணும், நாமே செஞ்சுட்டா போச்சு. இத்தனை கம்ப்யூட்டர் எஞ்சினீயர்கள் இருக்கோம் நம்மளால் ஒரு பஜ்ஜி போட்டிட முடியாதா?”
-- என்று அரை டிராயர் போட்டிருந்த ஒருவன் அதிரடியாக எழுந்துபெப் டாக்கொடுக்க, அதில் உணர்ச்சிவசப்பட்டு அவசரக் குடுக்கையாய் நான் கிளர்த்தெழுந்தேன்!

ஏன் முடியாது, நாம பண்ணலாம்நான் பண்ணறேன்…!என்றேன்.

பெப் டாக்குடுத்த நண்பனே அவன்டாக்குக்கு டக்குன்னு இப்படி ஒரு பலன் இருக்குமுன்னு எதிர்பார்க்காததால் அதிர்ந்து நின்றான். நான் அதிரடியாய் அடுக்களைக்குள் நுழைந்தேன்.

செய்யறதே செய்யறோம், சிறப்பா லக்சூரியா செய்யலாம்னு,

ஹவ் அபவுட் முட்டை போண்டா?” எனக்கேட்டேன்.

போண்டாவை அதும் முட்டை போண்டாவை யாரவது வேண்டாம் என்பார்களா?
கோரசாக வை நாட் என்றார்கள்.

ஆனால், முட்டை போண்டா செய்வதற்கு உடனடியாக ஒரு முட்டுகட்டை விழுந்தது. கடலை மாவு இருப்பில் இல்லை. கடலை மாவு வாங்க கடைக்குப் போகவெல்லாம், சோம்பலுக்கு அதிதீவிர மரியாதை அளித்தே பழக்கப்பட்ட எங்களின் மனம் அனுமதிக்கவில்லை, தவிர மழைவேறு பெய்கிறது. ஆதலால் நோகாமல் நொங்கெடுக்க அடுத்து என்ன வழி என சிந்தித்தோம்,

முட்டை போண்டாவுக்காவது முட்டை இருந்தது மாவு தான் இல்லை, வாழைக்காய் பஜ்ஜி போடலாம் என்றால், வாழைக்காவே இல்லை. வாழைக்காய் இல்லாட்டி என்ன வெங்காயம் இருக்கே, வெங்காய பஜ்ஜி, இல்லாட்டி கத்திரிக்காய் பஜ்ஜி, இல்லாட்டி காளிபிளவர் பஜ்ஜி இதுல ஏதாவது செஞ்சுடலாமேன்னு, எந்த பஜ்ஜியாக இருந்தாலும் கடலை மாவு இல்லாமல் பப்பு வேகாது என்பதைக்கூட உணராத வெகுளிப்பயல்களாக நிராதரவாய் சிந்திக்க ஆரம்பித்தோம் நாங்கள்.

முட்டைபஜ்ஜி என்று ஆசை வளர்த்து எதுவுமே இல்லாமல் முடங்கிப்போக மனமில்லாமல், கடலை மாவு இல்லாட்டா என்ன கடலை பருப்பு இருக்கான்னு பாருங்க வடை சுடலாம் என்றொரு மகான் முன்மொழிய, எல்லோரும் கூட்டமாக கடலை பருப்பை தேட ஆரம்பித்தோம். ஒருவேளை கடலை பருப்பு இல்லையின்னா துவரம் பருப்புல பருப்பு வடை சுட்டால் என்ன ஆகும், ஏதேனும்பின் விளைவுகள் இருக்குமான்னு ஒரு சாரார் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்கள்.

கடலை பருப்பு இருப்பில்லை., துவரம் பருப்பும் அடுத்தவேளை சாம்பாருக்கு மட்டுமே போதுமானதாய் இருக்க, நிராசை எங்களை சோர்ந்துபோகவைத்தது..

அந்த சோர்விலும் நம்பிக்கையை கைவிடாமல் கடலை பருப்புக்கான தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்துகொண்டிருந்த நண்பன் ஒருவன் திடீரெனெ,,

ஓஹ் மேன்திஸ் ஸ் ஜஸ்ட் டூ மச்
 -- என்று கோபமும் வெறுப்பும் கலந்து பீட்டர் விட்டான்.

நாங்கள் முறைந்ததில் பீட்டரை மறைத்து டமிளில் தொடர்ந்தான்..,,

திங்க்ஸ் வாங்னா ப்ளீஸ் வேஸ்ட் பண்ணாதீங்க. தேவை இருக்கறத மட்டும் வாங்குங்க…. ஸீ திஸ் பாசி பருப்பு பள்ஸாயி கலர் கூட சேய்ஞ்ச் ஆயி வொயிட் ஆய்டுச்சு
--- என்று கெட்டுப்போய் கலர் மாறிப்போனதாக உடைத்த முழு உளுந்தம் பருப்பு இருந்த டப்பாவை எடுத்து காட்டி எங்களை உபதேசிக்கத் துவங்கினான்.

திடீரென பொறி தட்ட, நாங்கள் அவனை ஒரு தேவதூதனைப் போல பார்த்துக்கொண்டிருந்தோம். அவனோ, ஒன்றும் புரியாமல் அவன் உபதேசத்தில் நாங்கள் மனமுருகிப் போனதாக நினைத்துக்கொண்டு,
டோன்ட் வொறி கய்ஸ்…. ஜஸ்ட் மேக் ஷுவர் திஸ் ஸ் நாட் ரிப்பீட்டட் என்றுகொண்டிருக்க, ஒருவன் சீறிப்பாய்ந்து அவன் கையிலிருந்த உளுந்துவடை டப்பாவை பறித்துக்கொண்டு,

“I am the master of this world…” என்று Heman சொல்வதைப்போலஉளுந்து வடை பண்ணலாம் guyss….என்று கூவிக்கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து நாங்களும் ஆனந்தக்கூத்தாடினோம். பீட்டர் விட்ட நண்பன் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.

ஒரு துண்டை எடுத்து தலைப்பாகை கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கினேன் நான். அரைக்கை பனியன் மற்றும் அரை டிராயரில் மற்ற நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

ஒரு ஆசைதான், முன்ன பின்ன வடை சுட்ட அனுபவம் ஏதும் இல்லையின்னாலும், அம்மாவை மனதில் நினைத்துக் கொண்டு ஏகலைவனாய் ஆயத்தமானேன் வட சுட.

உளுந்தவடை எனும் மெதுவடை தான் லட்சியம். வடையின் சாயலில் ஏதேனும் வரும் என்பது நிச்சயம்.

அம்மாவை மனதில் நினைத்திருந்ததால் ஆட்டும்முன் உளுந்தினை ஊறவைக்கவேண்டும் என்ற ஞானம் இருந்தது. முதல் வேலையாக உளுந்தை ஊறவைத்தோம்.

இன்ட்டெர்நெட் இருந்தாலும் அன்றெல்லாம் youTube போன்ற சம்விதானங்கள் இருக்கவில்லை. ஆகவே இதற்குமுன் சாப்பிட்ட உளுந்துவடைகள் தான் ஒரே reference…..

உளுந்துவடையில் வெங்காயம் அவ்வப்போது தட்டுப்பட்டதுண்டு, ஆகவே வெங்காயம் போடவேண்டும், நல்ல மிளகும் போடவேண்டும் என்று வேறொரு நண்பன் சொன்னான், சீரகம் போட்டால் தப்பேதுமில்லை என்றான் வேறொருவன்எதப்போட்டாலும் போடாட்டியும் உப்பு போட மறந்துடாதீங்கடா என்று அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தான் என்னைப்போல் உருவத்தால் உப்பினார்போல் இருக்கும் வேறொருவன்.

காரத்துக்கு கொஞம் பச்சமிளகாயும் நறுக்கிப்போடலாம் என்று தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், உப்பு போடச்சொல்லி அடிக்கடி வற்புறுத்தும் நண்பன் பால் எரிச்சலுற்ற வேறொருவன் அவனிடம் போய்,

மச்சீ, பாரீஸ்ல ஈஃபில் டவர் இருக்கு, மேலும் இந்த உலகத்துல எத்தனையோ செல்போன் டவர்ஸ் இருக்கு இதுல் எந்த டவர மறந்தாலும் ஒரு டவர நாம வாழ்க்கையிலே மறக்கவே கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க அது எந்த டவர் னு சொல்லேன் பாப்போம்என்றான்.

கேட்டவனைத்தவிர மற்ற எல்லோரும் பதில் அறியாமல் முழித்தோம். பின்பு அவனே சொன்னான்.

உப்பு போடறவங்களத்தான் மச்சான்கேள்விப்பட்டதில்ல உப்பிட்டவரைஉள்ளளவும் நினை என்றான்.. அதன்பிறகு உப்பினார் போல் இருக்கும் நண்பன் உப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை.

உளுந்து ஊறிற்று. வெங்காயம் நறுபட்டது. மிக்ஸியை பலமுறை ஆன் செய்து ஆஃப் செய்து பதம் பார்த்து ஒருவழியாக உளுந்தினையும் ஆட்டியாயிற்று. உளுந்து மாவில் சீரகம், உப்பு, நல்லமிளகு, வெங்காயம் இத்யாதி இத்யாதிகளை இட்டு கலந்தும் ஆயிற்று.

வானலிக்கும் வானொலிக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கா என்று முன்பு உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கச்சொல்லி கடி போட்ட நண்பன் கேட்ட கேள்வியை கண்டுகொள்ளாமல் வானலியில் எண்ணையும் காய்ந்தாயிற்று….

உள்ளங்கையில் எண்ணை தடவி, அதில் உளுந்துமாவு எடுத்து தட்டையாக்கி நடுவில் துளை இட்டு அதை எண்ணையில் இட ஆயத்தமானேன்.

என் வாழ்வில் எத்தனையோ பெண்கள் பால் நேசம் வைத்தபோதும் என் நேசத்தை அவர்கள் புரிந்துகொண்டிருக்கவில்லை, ஆனால் இந்த உளுந்துவடையோ என் நேசத்தை முழுவதுமாக புரிந்துகொண்டு, என்னை எண்ணையில் இட்டிடாதே எனும் வண்ணம் என்கையை விட்டு போக மறுத்து என்னோடு ஒட்டி இருக்கிறது. எண்ணையில் விழு என்கிறேன் நான். உன்னை விட்டு எங்கும் விழேன் என்கிறது அது.

மச்சான். எங்க அம்மா, வாழை இலையிலே எண்ணை தடவி அதுல தட்டி போடுவாங்க ஈஸியா விழும் என்கிறான் ஒருவன். வாழை இலைக்கு இப்போ எங்கே போவது?

Plastic paper  பயன்படுத்தலாம் என்று வேறொரு புத்திமான் கூற, அதைப் பின்பற்ற, மனசில்லா மனசோடு வடை என் கையை விட்டு விடை வாங்கி எண்ணையில் விழுந்தது.

எண்ணையில் இட்டெடுக்கும் எதனையும் பொறித்ததாய் சொல்லும் உலகம் ஏன் வடையை மட்டும் பொறித்த வடை என்று சொல்லாமல் சுட்ட வடை என்கிறது என்று அதே கடி நண்பன் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினான். பதில் யோசிக்க நேரம் இல்லை. வடைகள் பொன்னிறமாக மாறி பொன்னியின் செல்வனாய் ஆகிக்கொண்டிருந்தது.

இதுதான் பதம் என்று எண்ணையிலிருந்து வடையை எடுத்தோம்.

வாவ்வாட் அன் அச்சீவ்மென்ட்?

அன்று நாங்கள் சுட்ட வடைகள்தான் எத்தனை விதம்...

வாழ்க்கையில் பல அடி பட்டுத்தான் பக்குவம் உண்டாகும் என்பதை உணர்த்தும் விதம் வட்டத்தை தவிர்த்து பல உருவில் உருமாறி உருவாகின சில பக்குவ வடைகள்.. !
.
வெட்கத்தில் நாணிக் கோணி உடல் வளைத்திருக்கும் பருவப் பெண்கள் போல் சில நாண வடைகள்!

ஒரு பக்கம் பெருத்தும் மறு பக்கம் சிறுத்தும் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வினை பறைசாற்றுவதாய் சில சமுதாய வடைகள்!

எல்லா வடையிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் எத்தனை முயன்றும் எதிலுமே நடுவில் ஓட்டை விழவில்லை. நாங்கள் எத்தனை பெரியதாய் ஓட்டை போட்டாலும் எண்ணையில் விழுந்ததும் அது அடைபட்டுப் போகிறது. ஓட்டையில்லாத முழுமை வடைகள்!

பார்ப்பதற்கு உருவத்தில் பலவாறு வேறுபட்டிருந்தாலும் குணம் தான் முக்கியம் என்பதுபோல, சுவையில் எங்களை திருப்தி படுத்துவதாகவே இருந்தது அந்த வடைகள்.

தேநீரோடு, வடைகளை உண்டு மகிழ்ந்தோம். இரசித்து உண்ணும் நண்பர்களை பார்க்கையில் வடை சுட்ட எனக்குள் புதுவகையான உணர்வுஒருவகையான ஆத்ம திருப்தி உண்டாகியது. இப்போது புரிகிறது இந்த அம்மாக்கள் ஏன் அடுக்களையிலேயே தவம் கிடக்கிறார்கள் என்று. தன் குடும்பம் ஆர்வமாய் உண்பது கண்டு போதை கொள்கிறார்கள் அம்மாக்கள். வந்தனம்.

விலகி இருக்கும்போதுதான் மகத்துவம் புரிகிறது. அம்மாவை மனதில் நினைத்து சுட்ட வடை சுவையாகத்தான் இருந்தது. ஊருக்குப்போய் ஒருமுறை அம்மாவுக்கு வடை சுட்டு கொடுக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

வடையால் அன்றைய மழைநாள் முழுமையடைந்தது.

வீட்டிற்கு போன் செய்தேன். வீட்டில் அன்று எல்லா சொந்தங்களும் குழுமியிருந்தார்கள். ஏதோ கல்யாணத்திற்கு சென்றுவிட்டு எல்லோரும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். ஆதலால் எல்லோரோம் நான் பேசுவதை கேட்க ஸ்பீக்கரில் போட்டார் அப்பா.

அடுத்தநாள் ஆபீசுக்குப்போக ட்ரெஸ் அயர்ன் செய்துகொண்டிருந்ததால் நானும் ஸ்ப்பீக்கரில் தான் போட்டிருந்தேன். நான் வடை சுட்ட கதையை பெருமையாக எடுத்துரைத்தேன்.

அப்பா கேட்டார், அட பரவாயில்லையே வடை எல்லாம் சுட்டிருக்கியேஎப்படி வந்தது?” என்றார்.

சுவையாதான் இருந்தது பாஆனா என்ன உளுந்துவடைல ஓட்டை தான் வரவேயில்லை என்றேன். அதைக்கேட்டு அப்பா சொன்னார்

மக்களே…. உளுந்துவடைன்னா ஆட்டோமேட்டிக்கா ஓட்டையோட வரும்னு நினைச்சிட்டியோ…. ஓட்டை போட்டா தாண்டா வடையிலே அது வரும்…”
                --- என்று சொல்லி அப்படி சிரிக்கிறார்.

அவரோடு சேர்ந்து கோரஸாக சிரிப்பொலி எழுந்தது!  அங்கே என் சொந்தங்கள், இங்கே என் நண்பர்கள்!

இல்லை, ஓட்டை போட்டேன் ஆனால் அடைத்துக்கொண்டது என்றெல்லாம் விளக்கம் சொன்னாலும் அது எடுபடாது, ஆதலால் அவர்களோடு சேர்ந்து அசடு வழிந்துகொண்டே... நானும் சிரித்தேன்.

வடையின் சுவையோடு அப்பாவின் இந்த நகைச்சுவையும் சேர்ந்ததால்தான் இன்றளவும் இந்நிகழ்ச்சி  என் மனதில் மங்காது இருக்கிறது.

Thank you for that timing joke pa!

========================================================================
சில்வண்டு.
May 13, 2018.
sillvandu@gmail.com                                    Visit: sillvandu@blogspot.com
========================================================================