பல்!

திகாலை மணி 5.30 இருக்கும், என் செல் ·போன் சிணுங்கியது. அலாரமோ என எடுத்து பார்த்தேன். இல்லை அது ஒரு SMS. ஷார்ஜாவில் இருக்கும் என் தங்கையிடமிருந்து.

"உன் மருமகனின் பல் ஆடுகிறது. அதை ஆடாமல் ஒட்டி வைக்கும் சாதனம் வாங்கி தா அம்மா என்கிறான். பல் ஒடியப்போகிறது என்று ஒரே அழுகையாய் அழுதவண்ணம் இருக்கிறான்" - என்றது SMS.

அதை படித்ததும் என் தூக்கம் கலைந்தது. சிரிப்பு வந்தது, என் தங்கைக்கு போன் செய்தேன்.

"நான் அடுக்களைல வேலையா நின்னுட்டிருந்தேன்! அழுதிட்டே என் கிட்டே வந்தவன், என் மிடில் பல்லு ஆடுதும்மா! நான் ஒன்னுமே பண்ணல, அதுவா ஆடுது, ஒடியுமா மா? -ன்னு கேட்டு அழ ஆரம்பிச்சுட்டான். பல் ஒடியாம ஒட்டி வைக்கணும் நு அழுதிட்டிருந்தான். இப்போதான் தளர்ந்து போய் தூங்கிவிட்டான்." - என்றாள் என் தங்கை.

நம் குழந்தை பருவத்தின் முதல் முக்கிய நிகழ்ச்சி இந்த பல் விழுதல் என்றே தோன்றுகிறது. நம்மில் பலருக்கும் நினைவு நிற்க துவங்கியபின் நடக்கும் முதல் நிகழ்வும் இதுவே! ஒரு பல் மெதுவாய் ஆட்டம் கொடுக்கும். பின் அதன் ஆட்டம் அதிகரிக்கும். பின் நாக்கு அந்த ஆடும் பல்லோடு விளையாடும். சில நேரம், பெரும்பாலும் சாப்பிடும் போது, எக்குத்தப்பாய் இடையில் சிக்கி வலி தந்து பிராணனை வாங்கும்.

பல் ஆடும் நேரங்களில் உறக்கம் கொள்ள பயம் வரும். உறங்கும் போது பல் விழுந்து அதை விழுங்கிவிட்டால் என்ன ஆவது? என்பதே பயத்திற்கு காரணம்.

சாப்பிடும் போது அல்லது விளையாட்டில் இடி படும்போது தான் பெரும்பாலும் பல் விழும். பல் போன இடம், சில நாட்களுக்கு வழ வழப்பாக இருக்கும், நாக்கால் அந்த இடத்தை தொட கூசும்.

முன் வரிசை பல் என்றால், சிரிக்கும் போது அடக்கிவாசிக்க வேண்டும். ஆயினும் பல வேளைகளில் அடக்கி வாசிக்க மறந்து போக, "ஓட்டைப் பல்லா" - என்று நண்பர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும்.

பாஸ்கர் என்றொரு நண்பன் என் பள்ளி காலத்தில் இருந்தான். எனக்கு ஒரு பல் விழுந்து மற்றொரு பல் ஆடிக்கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் நானும் அவனும் எதிரி களாய் இருந்தோம். என்னை வேண்டுமென்றே வம்பிழுந்துக்கொண்டிருந்த அவன், "போடா ஓட்ட பல்லா" - என்று என்னை கேலி பேச, சினமுற்று நான் அவன் மேல் பாய, அவன் விட்ட குத்தில் ஆடிக்கொண்டிருந்த என் கடவாய் பல் பெயர்ந்து வந்தது கூடவே குருதியையும் அழைத்துக்கொண்டு.

என் வாயில் இரத்தம் கண்ட நண்பர்கள் பயந்துவிட, முக்கியமாய் பாஸ்கர் பதறிப்போனான். பிறகு பஷீர் எனும் என் கிளஸ் லீடர் தலைமையில் அந்த பல்லை நாங்கள் ஊர்வலமாய் எடுத்துச்சென்று எங்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடக்கம் செய்தோம்.

அந்த கடவாய் பல்லின் தியாகத்தால் அதற்கு பிறகு பாஸ்கர் என் சிறந்த தோழன் ஆனான். அவன் வீட்டுக்கு என்னை அழைத்து சென்று கூழ் தந்து என்னை கூல் ஆக்கினான்.

அன்று அப்பல்லை புதைக்கயில் அடுத்து வரும் பல் நல்ல பல்லாக, சிறப்பான பல்லாக வரவேண்டும் என நானும் என் நண்பர்களும் பல்லை புதைதுவிட்டு பிரார்தனை செய்தோம். அந்த இடத்தில் வளர்ந்த கடவாய் பல்லை போன வருடம் தான் என் பல் டாக்டர் "சொத்தை" என்று சொல்லி என் "சொத்தை" பறித்துக்கொண்டார்.

"பாற்பல்" விழுந்து பின் அடுத்த பல் முளைக்கும் வரை பலரின் போதனைகள் கேட்க நேரிடும். "நாக்கால தள்ளாதே, அப்புறம் தெத்து பல் ஆயிடும்" - என்று அனைவரும் கூற, பல் சரியாய் முளைத்து வரும் வரை ஒரு சமாதானக்கேடு இருக்கத்தான் செய்யும். என்னதான் அழகாய் முளைத்து வந்தாலும் பால் பல்லின் "Finishing Touch" பின் முளைக்கும் பல்லுக்கு இருப்பதே இல்லை. இது சில காலத்துக்கு மனதில் தீராத சோகமாய் இருக்கும்.

எனக்கெல்லாம் இந்த சோகம் கல்லூரி காலம் வரை நீண்டது. நல்ல வேளையாக ஒரு தோழி "உனக்கு அழகான பல் வரிசை டா" - என்று ஒரு நாள் கூறியதால் இந்த சோகத்திலிருந்து விடுபட்டேன். இல்லாவிடில் இன்றுவரையும் கூட இச்சோகம் தொடர்ந்திருக்கக் கூடும் யார் கண்டார்?

விழுந்த பற்களில் சில, என் பாட்டி வீட்டு ஓட்டுக்கூரையில் எறியப்பட்டது. பெரும்பாலும் என் பற்கள் கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் தான் விழுந்திருக்கிறது. சில பற்கள், கிணற்றுக்குள் வீசப்பட்டன. ஒன்று முன்பே நான் சொன்னபடி என் பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதைக்கப்பட்டது. ஒரு பல் ஒரு முறை பஸ் யாத்திரையின் போது விழுந்துவிட வேறு வழியின்றி ஜன்னல் வழி வெளியே எறிந்தேன்.

விழும் பல்லை முறைப்படி எறியாவிட்டால், அல்லது புதைக்காவிட்டால் வளரும் பல் "மண்வெட்டி பல்" -- ஆகிவிடும் அபாயம் உண்டு என்று என் பெரியம்மா பையன் என்னிடம் பல முறை கூறி இருக்கிறான்.

விழுந்த பல்லை அழகாய் பேப்பரில் மடித்து, "மம்மட்டி பல்லே போ போ! குத்தரி பல்லே வா வா!" என்று கூறி வீட்டு கூரையில், முடிந்தால் பாட்டி வீட்டு கூரையில், எறிவதே சரியான முறை! எனக்கு தெரிந்த வரை.

பல் விழுந்து பல் முளைக்கும் களேபரங்கள் எல்லாம் அடங்கி ஓய்ந்த பின், நாமும் வளர்ந்து ஆளான பின் முளைக்கும் ஞானப் பல். அது நம்மில் பலரையும் ஒரு கை.. அல்ல, அல்ல, ஒரு வாய் பார்த்துவிடும். ஞானம் சாதாரணமாய் வந்து விடாது, வலிகள் அனுபவித்தால் தான் ஞானம் வரும் எனும் தத்துவத்தோடு வ(ள)ரும் ஞானப் பல்.

ஞானப் பல், வந்தும் வராத ஞானம் எனக்கு ஒரு பல் சொத்தையாகி பின் பிடுங்கப்பட்ட பிறகு வந்தது. "பல்"-லை ஆரோக்கியமாய் பாதுகாக்க வேண்டும் என்பதே அது.

நம்மில் பலரும் பல் விளக்கும் முறையே தவறு என்கிறார்கள் பல் மருத்துவர்கள். பக்கவாட்டாக அல்லாமல், கீழிருந்து மேல் நோக்கி, மற்றும் மேலிருந்து கீழ்நோக்கி விளக்குவதே சரியான முறை. இம்முறையில் விளக்கினால் தான் பல் இடுக்குகளில் சிக்கியுள்ளவை வெளியேற்றப்பட்டு வாய் சுத்தமாகும், சுவாசம் சுகந்தமாகும்.

பிரஷ் வைத்து விளக்கினாலும், கை விரல் வைத்து விளக்குதலும் அவசியம். Gum ல் விரல் கொண்டு மஸாஜ் செய்வதும் ஈனி (ஈறு) யை பலப்படுத்தும். முக்கியமாக, மாலை நேரம் பல் விளக்குதல் மிக மிக அவசியம்.

முன்பெல்லாம் ஏது பிரஷ்? ஏது பேஸ்ட்? வேப்பங்குச்சி, உமிக்கரி இதில் தான் பற்கள் விளக்கப்பட்டன. நம் முந்தைய தலைமுறைக்கு நம்மை விட பற்கள் உறுதியாகத்தான் இருந்தன. கை கழுவி, வாய் கொப்பளிப்பதும் கூட கலாச்சார வளர்ச்சியில் அழிந்து கொண்டுதான் வருகிறது. டிஷ்யூ பேப்பரில் கை துடைத்து உதடு மட்டும் துடைக்கும் ஓர் கலாச்சாரத்தில், வெறும் வாசனை திரவியத்தை வாயுக்குள் அடித்தால் தான் அடுத்தவர் முன் வாய் திறக்க முடிகிறது.

இதை எல்லாம் கூறும் நான் இவை அனைத்தயும் பின் பற்றுகிறேனா என்றால், இல்லை என்பதே என் உண்மையான பதில். ஆனால், என் மருமகனின் முதல் பல் ஆடத்துவங்கி யிருக்கும் இவ்வேளையில் என் அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க இன்றிலிருந்து பற்களை ஆரோக்கியமாக காப்பாற்ற இவை அனைத்தையும் பின் பற்றுவேன் என்று இதை படிக்கும் உங்கள் அனைவரையும் சாட்சி நிறுத்தி உறுதி செய்துகொள்கிறேன்.

நீங்களும், உங்கள் மருமகப்பிள்ளையோ அல்லது உங்கள் பிள்ளையின் பல்லோ ஆடும் வரை காத்திருக்காது, என்னுடன் சேர்ந்து உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். பல்லோடு சேர்த்து எடுத்த உறுதியையும் நாம் சொத்தையாக்காமல் காப்பாற்றுவோம் அல்லது காப்பாற்ற முயற்ச்சி செய்வோம்.

'பல்'லாண்டு 'பல்'லாண்டு 'பல்'லாயிரத்தாண்டு 'பல்'லோடு வாழ அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Comments

bkaseem said…
ஏய் சில்லு,

எழுதனும் நு ஆசை இருக்கும் அளவுக்கு எழுத கரு கிடைக்காம நீ அவதிப்படறது நல்லா தெரியுது. பல் விழுந்ததை வச்சு உன் எழுத்து ஆர்வத்தை தீத்திட்டே! ஆனா, இந்த படைப்பு என்ன வகை? உபதேசமா? உன் மலரும் நினைவா? கொஞ்சம் விளக்குறியா?

நண்பன்.
sathya said…
HEELOO SILLU
ITHA VASIKUM POTHU ANNA ENNN SIRU PARUVATHIL SEITHA ANNATHU VEKULI THANGALUM NYABAGAM VARUKIRARTHU
ENN MALARUM NIANVUKALLAI THIRUPI NINNAKIA SEITHU UNGAL KATTURAIKU NANATRI
Anonymous said…
Hey Sillu,

Pal aadudhu nu vandha oru sms a vechu ippadi oru essay unnaala mattum than ezhutha mudiyum!!!

'Unakku azhagana pal varisai da' nu sonna un thozhi naan enbadhai unarndhalum athai yeppo sonnen enbathu seriya ninaivukku varavillai!!. Irundhalum nee sogathilirundhu vidupada naan karanamaga irundhen enbathai arindhadhil magizhchi :-)

Indha comment romba late a vandhalum latest a vandhirukku illaya :-)

Eppodhum Un Anbu Thozhi :-)

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?