பெண்னொன்று கண்டேன்!


ரு டீ அடிக்கலாமா? இல்லை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாமா?

இந்த யோசனையோடுதான் பதினைந்து நிமிடங்களாய் காத்திருக்கிறேன். 4.35-க்கு வரவேண்டிய டவுன்பஸ் இன்னும் வரவில்லை. எப்போது வேண்டுமானாலும் வதுவிடும் எனக் காத்திருக்கத் துவங்கி நாற்பது நிமிடமாயிற்று. சரி வரும்போது வரட்டும் என அருகிலிருந்த டீ கடையில் ஒரு டீ சொன்னேன்.

ஒரு டீ என கடைக்காரன் தந்த டம்ளரில் இருந்ததென்னவோ பாதி டீ தான். "தேநீர்" என்று பார்த்தால் முக்கால் என்று சொல்லலாம். "தே" இல்லை சூடாய் 'நீர்' மட்டும் தான் அதிலிருந்தது.

பாதி குடித்து முடிந்தபோது புழுதியை கிளப்பிக்கொண்டு வந்துசேர்ந்தது அதுவரை வராத டவுன்பஸ். நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல் வேறெங்கோ சென்று நின்ற பேருந்தை நோக்கி ஒரு கூட்டமே ஒடியது. டீக்கான காசையும் கிளாசையும் குடுத்துவிட்டு நானும் ஓடினேன்.

இரு படிக்கட்டுகளிலும் கூட்டம் முட்டிக்கொண்டும் முண்டியடித்துக்கொண்டும் நின்றிருந்தது. பின்படிக்கட்டைவிட முன்படிக்கட்டு 'கட்டாக' இருந்தது. காரணம், அதன் அருகே நின்றிருந்ததில் பெரும்பாலும் 'சிட்டாக' இருந்தது.

இரண்டு நுழைவாயில்களைக் கொண்ட இப்பேருந்தில் மயில், மான், குயில்கள் முன்பக்கம். காளை, காட்டெருமை, கோவேரிக் கழுதைகள் பின்பக்கம்??!!!.

இக்கூட்டத்தோடு நானும் ஒருவனாய் நின்றிருந்தேன். அக்கூட்டமே என்னைத் தள்ளி பேருந்தில் ஏற வைத்தது.

"பின்னால போ! பின்னால போ!"

ஆண்களைப்பார்த்து வழக்கம்போல கத்திக்கொண்டிருந்தார் கண்டக்டர். அவர் பெண்கள் பின் -னால் தான் தங்களை போகச்சொல்கிறார் என தவறாகப் புரிந்துகொள்ளும் ஆண்களோ பஸ்ஸில் பின்பக்கம் போகாமல் பெண் பக்கமே முன்னேறுகிறார்கள்.

இரட்டை விசில் சத்தம் தந்த உற்சாகத்தில் ஓட்டத்துவங்கினார் ஓட்டுனர். எப்போதும் என்னை வியப்புக்குள்ளாக்கி பிரமிக்க வைப்பது நடத்துனர்களின் திறமை. காற்று கூடப் புகமுடியாத கூட்டத்தில் இவரால் மட்டும் எப்படி லாவகமாக நுழைந்து சீட்டுக் கொடுக்க முடிகிறது?

கட்டுக்கட்டாக கலர் கலர் டிக்கெட் கட்டுகள், அத்தோடு ஒரு ஸ்டேஜ் ஷீட். இரண்டு, ஐந்து, பத்து, இருபது என இரண்டாய் மடக்கி விரல் இடுக்கில் சொருகப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள், சுண்டு விரலில் மோதிரமாய் தொங்கும் விசில், காது மடலில் ஒரு பேனா, கை இடுக்கில் தேய்ந்து போன ஒரு தோல் காசுப்பை! அதை ஒரு குலுக்கு குலுக்க கரை ஒதுங்கும் அலை போல் வந்தொதுங்கும் சில்லறைக் காசுகள், டிக்கெட் கொடுக்கும் வேகம், எங்கும் பிடிக்காமல் இவரால் மட்டும் எப்படி விழாமல் நிற்கமுடிகிறது? திறமைதான். அதை வழக்கம்போல் வியந்துகொண்டே பயணிக்கிறேன்.

மேடு பள்ளப் பாதையில் பேருந்து அதிகமாய்க் குலுங்க அதில் பிடி விட்டுப்போய் தள்ளாடிய பெரியவரை கைத்தாங்கலாய்ப் பிடித்த கண்டக்டர் டைமிங் ஜோக் அடித்தார்..,

"ஏய் பெருசு, வண்டிய ஆட்டாதே!"

அந்தப்பெரியவரை உட்காரவைக்க இடம் தேடிய அவர், அங்கே அமர்ந்திருந்த ஒரு இளைஞனைப் பார்த்து, "எப்பா ஏய் ஜென்டில்மேன், வயசு பையன் தானே நீ? இங்க பார் தாத்தா வண்டிய ஆட்டி கிட்டிருக்கார். கொஞ்சம் எந்திருச்சு இடம் குடப்பா பெரியவர் உட்காரட்டும்." - என்றார்.

அந்த இளைஞனோ, கண்டக்டரை முறைத்துக்கொண்டு, எதையோ சொல்லி முனங்கிக்கொண்டு எழுந்து இடம் கொடுத்தான்.

பெரிய மீசை வைத்திருந்த வாட்டசாட்ட இளைஞன் அவன். முகத்திலும், செயலிலும் கனிவு இல்லை. இவனைப்போய் ஜென்டில்மென் என்றாரே கண்டக்டர்? அவன் இன்னும் ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.


ஒரு பெரியவருக்கு இடம் கொடுத்ததற்கு இப்படி அங்காலாய்க் கிறானே? எனக்கு அவன்மேல் கோபமாய் வந்தது. அவனைக் கோபத்தோடு பார்த்தேன். அவனும் என்னை முறைத்தான். எத்தனை எளிதில் எதிரிகள் தோன்றிவிடுகிறார்கள்?

"மயிலெல்லாம் இறங்கு!"- கண்டக்டர் சொல்ல எல்லோரும் இரசித்துச் சிரித்தனர். அந்த நிறுத்தத்திற்கு "மைல்கல்" என்று பெயர். இறங்கியதோ ஒரே ஒரு கிழவி மட்டும்.

அப்போதுதான் கவனித்தேன் முன்படிக்கட்டுக்கருகில் நின்றிருந்த அவளை.... அழகை?

அவளும் நின்றேதான் பயணிக்கிறாள். அமர்ந்திருக்கும் தன் தோழியோடு ஏதோ மும்முரமாய் பேசிக் கொண்டிருக்கிறாள். முன்பக்க இருக்கையின் கம்பி மேல் சாய்ந்துகொண்டு, அவள் தோழியின் முகம் பார்க்கத் தோதுவாக நின்றிருந்ததால், அவள் முகம் எனக்குத் தெளிவாய் தெரிந்தது. அவள்..., அழகின் பொருள் வடிவம்.

"பட பட" வென பேசிக்கொண்டிருக்கிறாள். பேசப்பேச முகம் பல்வேறு பாவங்களைக் காட்டியது. மலர்கிறாள், உதடு சுழித்து அதிருப்தி காட்டுகிறாள், அதையே கடித்து வெட்கம் கொள்கிறாள், யோசனையில் ஆழ்கிறாள், யோசித்தும் பயனில்லை என சலித்துக்கொள்கிறாள்! லயித்துப் பேசுகிறாள், நான் லயித்துப் பார்க்கிறேன்!

சிரிக்கிறாள்! எனக்கு மட்டும் கேட்கிறது ஒரு வெண்கல மணியோசை! நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு வானவில்களைப் பார்த்ததுண்டா? அதும் கருப்பு நிறத்தில்? நான் பார்த்தேன்... அவள் புருவத்தை.

இது என்ன திடீரென ஒரு சந்திரகிரகணம்? காற்றில் பறந்து அவள் முகத்தை மறைத்தது அவளின் கார்குழல். மெல்லிய விரல்களால் குழல் திரை விலக்கினாள், மீண்டும் உதித்தாள் பெளர்ணமியாய்...!

எத்தனை ஒதுக்கியும் ஒதுங்கவில்லை நான்கைந்து சுருள்முடி. கன்னத்தில் படர்ந்துகொண்டு அவள் காதணியிடம் அவை சொல்வது என்ன? அவளை நான் ரசிக்கும் விஷயத்தையா?

காற்றில் மிதந்து சென்ற என் எண்ண அலைகள், அவளின் விரல் அசைவுகளால் மீட்டப்பட எனக்குள் மட்டும் கேட்கிறது ஓர் இன்ப இசை. எங்கோ எதையோ பார்க்க அவள் திருப்பிய விழி, என் விழியில் பதிந்த பொழுதில் இதயம் பலநூறு பட்டாம்பூச்சிகளை உற்பத்தி செய்து அனுப்பியது. விழி பதிந்த சொற்ப வினாடிகள் என்னை சிலையாக்கிப் போயின!

ஆணுக்கு வெட்கம் உண்டா? அவளும் என்னைப் பார்த்ததில் நான் வெட்கம் கொண்டேனா? தெரியவில்லை. இருந்தும் என் பார்வையை அவளிடமிருந்து விலக்கினேன். அழகுதான், ஆயினும் அதிகமாய் இரசிப்பது கண்ணியமில்லாத செயல்.

மீசைக்கார இளைஞன் பக்கம் என் பார்வையைத் திருப்பினேன். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான். கர்ணகொடூரமாய் பார்த்துக்கொண்டிருக்கிறான். என் பார்வையில் இருந்த மென்மை அவனிடம் இல்லை, அவன் முகத்தில் இரசனை இல்லை, அவளின் அழகைப் பாராட்டும் பண்பும் அவன் பார்வையில் தென்படவில்லை. அவளைப் பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்தான்.

பெண்களைப் பார்க்கும் பார்வையில் கண்ணியம் வேண்டும், பார்வையால் கூட காயங்களை உண்டாக்கிவிடக்கூடாது. பெண் ஒரு நுண்ணிய கலைப்பொருள், காணும்போதும் கையாளும் போதும் கவனம் தேவை. இவன் பார்வையால் காயங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறான். அந்த நுண்ணிய கலைப்பொருள்மேல் கீறல்களை ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

நல்லவேளை இவன் போன்றதல்ல என் பார்வை, இவன் போல அல்ல என் இரசனை. எத்தனை மதிப்பும் மரியாதையும் உடையது என் இரசனை? என்னைப்போல இவனுக்கு இரசிக்கத் தெரியாமல் போனதற்காக அவன் மேல் நான் பரிதாபம் கொண்டேன்.

தோழியோடு பேசிக்கொண்டே அவளும் என்னை ஒரக்கண்ணால் பார்த்தாள். நான் அவளைப் பார்க்கிறேனா என ஊர்ஜிதம் செய்துகொண்டாளோ? என்னைப்பார்த்தபோதெல்லாம் அந்த மீசை இளைஞனையும் பார்த்தாள். பார்த்த மாத்திரத்தில் பார்வையை விலக்கிக்கொண்டாள்.

இரு பார்வைகளின் வித்தியாசத்தை அவளும் உணர்ந்திருக்கக்கூடும். ஆளை விழுங்கும் அவன் பார்வையால் எரிச்சலுற்றாளோ? அவள் முகத்தில் மலர்ச்சி குறைந்தது, அவள் பாவத்தில் கோப ரேகைகள்.

இப்படிப் பார்வையால் சீண்டுகிறானே சண்டாளன். கோவத்தோடு அந்த மீசைக்காரனைப் பார்த்தேன். நான் அவனைப் பார்ப்பதைக்கூட உணராமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களால் ஏதோ சைகைகளையும் செய்கிறான். அவனை அடித்து துவம்சம் செய்யத் தோன்றியது. ஆனால் நேரம்தான் இல்லை! நான் இறங்கும் இடம் வந்துவிட்டது.

'அட?' அவளும் இங்குதான் இறங்குகிறாளா? என்னை முழுதாக மகிழவிடாமல் இதோ அவனும் எனக்குப்பின்னே இதே நிறுத்தத்தில் இறங்குகிறான்.

முன்படிக்கட்டில் இறங்கிய அவள், சற்றே தள்ளிச்சென்று நிற்க்கிறாள். தோழிக்காக காத்திருக்கிறாள் போலும். ஒரு முறை அவளை முழுமையாய் விழிவாங்கி இதயப்பதிவு செய்துகொண்டேன். அவளைக்கடந்து வந்தேன். மனம் இன்னொருமுறை பார்க்க ஆவல் கொண்டும் கட்டுப்படுத்தினேன்.

அதிகம் பார்ப்பது கண்ணியமில்லை. கண்ணியத்தைக் காப்பாற்றிக்கொண்டு நடையின் வேகத்தைக்கூட்டினேன். இன்னும் கொஞ்சம் உற்சாகத்தைக் கூட்ட சிபி கடையில் ஒரு சாயா குடித்தால் என்ன?

'சிபி.. ஒரு சாயா!" சொல்லிவிட்டுக் காத்திருந்தேன்.

வெண்கல மணியோசை மீண்டும் கேட்க எங்கிருந்து எனப் பார்த்தேன்? சற்றே தூரத்தில் அவள் வந்துகொண்டிருந்தாள். அருகினில் வருவது அவள் தோழிபோல் தெரியவில்லையே? சிரித்துப் பேசிக்கொண்டே வருகிறார்கள். இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்ததும் அவள் அருகே அந்த மீசை இளைஞன் தெளிவாய்த் தெரிந்தான். இருவருக்கும் இடையில் அதிக இடைவெளியும் இல்லை. இவனா? இவள் அருகிலா?

என்னைக் கண்டதும் அவள் சிரிப்பு நின்றது. முகம் மாறியது. அவனுக்கு மட்டும் கேட்குமாறு அவள் சொன்னவை எனக்கும் கேட்டது...,

"பஸ்ல ஒருத்தன் என்னையே முழுங்குறமாதிரி பாத்துகிட்டிருந்தான்னு சொன்னேன்ல, அது இவன்தான்!"- அந்த மீசைக்கார வாலிபன் என்னை முறைத்துப் பார்த்தான்.

அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு, கோபத்தோடு அவனிடம் இன்னும் ஏதேதோ சொன்னதில் அந்தக் கடைசி வார்த்தைகள் என் செவியை அறைந்தது....,

"சரியான ஜொள்ளு!"


Comments

bkaseem said…
சில்லு,

இந்த கதைக்கும் உனக்கும் நெருங்கிய பந்தம் இருக்கு, எப்படி?

நீ அவளை பார்த்ததும் அவள் உன்னை பற்றி நினைத்ததும்

நீ எழுதும் கதையும், அதற்கு நீ பெறும் விமர்சனமும்!

நண்பன்.
Anonymous said…
Dai Sillu,

Unakku idhu thevaiyada ;-)
NRIGirl said…
Once again a super hit Bawa!

I am not lying when I say you are the best story writer I have come across whom I know personally too.

Please please please write more.

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

சாதனை வண்டு!!