சுதந்திர நன்நாள்!

றுபது ஆண்டு ஆயிற்று. நாம் சுதந்திரம் பெற்று.

சுதந்திர நன்நாளில் எத்தனை பேர் உணர்வுபூர்வமாக வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம்? விடுமுறை நாள் என்பதையும் தாண்டி எந்த விதத்தில் இந்த நாள் நம்மில் ஓர் தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கிறது? இவை யாவும் சிந்தனைக்குறிய கேள்விகளே!

அறுபது ஆண்டு சுதந்திர பாரதத்தில் மக்களின் இன்றைய நிலை என்ன? நாட்டின் நிலையும் தான் என்ன?

அறுபதாண்டுகளாய் அழித்துக்கொண்டிருக்கிறோம் வறுமைக்கோடு இன்னும் அழிந்தபாடில்லை. அறுபதாண்டுகளாய் நாமே நம்மை ஆண்டுகொண்டிருக்கிறோம், உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படை கூட அனைவருக்கும் கிட்டியபாடில்லை. கல்வியில், மருத்துவ வசதிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநிலை என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. சீனியர் சிட்டிசன் என அறியப்படும் முதியோருக்கு போதிய பாதுகாப்பு? என்பதில் அக்கறையும் அறவே இல்லை!

நம்மை நாமே ஆளும்போதும் ஏன் இன்னும் அவல நிலை? இதற்க்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? மக்களா? ஆட்சியாளர்களா? சிந்திக்கையில் அனைவரும் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஓட்டு, ஆட்சி, பதவி என்று ஆதாயம் எதையும் எதிர்பாராமல் நாடு, அதன் நலன், அடுத்த தலைமுறைகளின் எதிர்காலம் இவைகளை மட்டுமே மனதில் கொண்டு, இவைகளுக்காக உண்மையான அக்கறை கொள்ளும் ஓர் தலைவர் என்று யாரை நம்மால் இன்றைய கால கட்டத்தில் இனம் காட்ட இயலும்?

எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் தேச பக்தர்கள் எத்தனை பேர்? அடுத்து வரும் தேர்தல் என்பதை தாண்டி சிந்திக்கும் தலைவர்கள் எவரேனும் உளரா?

தலைவர்களை விடுவோம். மக்களாகிய நாம் என்ன செய்கிறோம்? "நம்மால் என்ன செய்ய இயலும்?" - எனும் கேள்வியை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நம்மால் வேறு பயண் இல்லை.

"கூட்டத்திற் கூடி நின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி கிளியே! நாளில் மறப்பாரடி.." - என்று பாடினான் பாரதி. இன்று நாம் அனைவரும் அப்படித்தான் இருக்கிறோம்.

பாரதி பாடிய காலத்திலோ, நல்வழி காட்டும் தலைவனின் பாதையில் பயணிக்க, போராட, நாட்டிற்காக குருதி சிந்த லட்சோப லட்சம் மக்கள் இருந்தனர். ஆனால் இன்று மதம் கலக்காத பொதுவான காரணத்திற்கு போராட, தியாகம் செய்ய எத்தனை பேர் முன்வருவார்?

ஒரு தலைவன் என்பவன் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர் காந்தி அடிகள். வெறும் கொள்கையை மட்டும் கொண்டிருக்கவில்லை அதன் படி அவர் வாழ்ந்தும் காட்டினார். தன் கழிவறையை தாமே சுத்தம் செய்தார். அதை கண்டு அவரது சீடர்கள் பலரும், கழிவறைகளை தாமே சுத்தம் செய்தனர். இன்றைய காலத்தில் காந்தி இருந்து அவ்வாறு செய்வாராயின் அவரை அழைத்து வந்து நம் கழிவறையையும் சுத்தம் செய்யுமாறு கூறவும் நாம் தயக்கம் கொள்ள மாட்டோம் என்பதில் கடுகளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.

நம் இதயச்சுவர் ஏன் இத்தனை தடிமன் ஆகிப்போனது? நம் மனோபாவங்கள் மாறிப்போக காரணம் என்ன? வரலாற்றை பொறுத்தவரை 100 ஆண்டுகள் என்பது மிகச்சிறிய காலமே. அப்படியிருக்க சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளுக்குள் அது ஒரு விடுமுறை தினம் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு ஆளாக காரணம் ஏதுவாக இருக்கும்? இவை யாவும் ஆராய்ச்சிக்குறியவை.

சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த நாம் சுதந்திரம் குறித்து அறிந்து கொண்ட விதத்தில் தான் முதல் கோணல் நடந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது.

"1947 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது, ஜவஹர்லால் நேரு நம் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஆவார். காந்தி அடிகள் சுதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்" - என்றெல்லாம் பரீட்சைக்காக உரக்கப் படித்து மனப்பாடம் செய்த செயலில் தான் நாம் நம் நாட்டு சுதந்திர வரலாற்றினை கற்றுக்கொண்டோம்.

சுதந்திரம் என்பது அதன் உணர்வோடு அல்லது அதன் தாக்கத்தோடு நமக்கு போதிக்கப்படவில்லை. ஆண்டாண்டுகளாக ஒரு நாட்டு மக்கள் அனைவரும் ஒரே காரணத்திற்காக ஒன்றாக இணைந்து பாடுபட்ட அந்த உணர்வு வரும் தலைமுறைகளுக்கு சரியான ரீதியில் எடுத்துச் செல்லப்படவில்லை.

கடவுள், பக்தி போன்ற உணர்வுகள் தலைமுறைக்கு தலைமுறை மாயாமல் தேயாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டுப்பற்று, அதன் வரலாறு, அதன் பாரம்பரியம், பெருமை இவை யாவும் அங்கங்கே உதாசீனப் படுத்தப்பட்டுவிடுகிறது.

ஏன் அப்படி? இதற்கு காரணம் யாது? யார் இங்கே குற்றவாளி?

அனைவரும் தான். முக்கியமாய் ஆசிரியப் பெருமக்கள், நம் முந்தைய தலைமுறை பெரியோர்கள், அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் தலைவர்கள் என அனைவரும் தான் இதில் குற்றவாளிகள்.

பண்டைய காலத்திய அரசர்களையும் அவர்தம் பெருமைகளையும் படித்தது போன்றே சுதந்திரத்தையும் நாம் வெறும் பாடமாக மட்டுமே படித்தோம். இதோ நம் காலத்துக்கு மிக சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் இவை எனும் அதிர்ச்சி நமக்குள் உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். இவை நமக்கு நம் நாட்டோடு உண்டான அணுகுமுறையை சிறந்ததாய் மாற்றிட உதவியிருக்கக் கூடும்.

நாட்டுப்பற்றை நோக்கி நம்மை அழைத்துச்செல்ல சிறந்த வழி மொழிப்பற்று ஆகும். கவனிக்க மொழிப்பற்று என்பது மொழி வெறி அல்ல. தாய் மீது உண்டாவது போல் அன்பு தாய்மொழி மீதும் இயல்பாய் உண்டாகும் நிலை வேண்டும். சகோதரர் மீது உண்டாகும் பாசம் போல் நம் தேசத்து பிற மொழிகள் மீது பாசமும் நமக்கு முக்கியமாய் உண்டாகிட வேண்டும்.
மொழி வசப்படாமல் ஏதும் கற்பது கடினமே! ஆகையால் மொழியாளும் திறன் வளர்த்தல் வேண்டும். மொழி, இலக்கியம், வரலாறு இது மூன்றும் ஆரம்ப பள்ளிகளில் மிக முக்கியமாக போதிக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் எல்லாம் சேர்ந்து சுதந்திரம் என்பதை ஒரு மாபெரும் சம்பவமாக நமக்கு உயர்த்தி காட்டத் தவறிவிட்டது எனலாம்.

அறுபதாம் ஆண்டில் நாம் மெல்ல மெல்ல நம் தனித்தண்மையை இழந்துகொண்டிருக்கிறோம் என்பது அப்பட்டமான உண்மை. நம் கலாச்சாரம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதில் வேறு விவாதம் தேவை இல்லை. கை கூப்பி சொல்லும் வணக்கம் கை தூக்கி சொல்லும் "ஹாய்" ஆகிவிட்டது. தமிழை ஆங்கிலத்தில் பேசுகிறோம். அமுதை அமிலத்தில் கலக்குவது பாவமன்றோ?

நம் தனித்தன்மையை விட்டு அடுத்தவர் முறைதனை ஏன் காப்பி அடிக்க வேண்டும்? நாம் நம் அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஓர் தவறான பாதையில் வெற்றி நடை போடுகிறோம்.

நாம் யார் என்பது பற்றி அறியாமை, நம் மூதாதையர் பற்றி அறிந்துகொள்ளும் அக்கறையின்மை, நம்மை பற்றி ஓர் உயர் மதிப்பு நமக்கே இல்லாமை என்பவை தான் இந்த கலாச்சார சீர்கேட்டுக்கு காரணம். கழுவும் நம் கலாச்சாரத்தை விட்டு துடைக்கும் ஓர் கலாச்சாரத்திற்கு நம்மை அடகு வைப்பது சரியா?

இனியேனும் சிந்திப்போம்! நாம் சுதந்திரம் பெற்ற அந்நாளில் மகாத்மா துக்கத்தில் இருந்தார். இன்றும் அவர் ஆன்மா துக்கித்து தான் இருக்கிறது. நூறாவது வருடத்திற்குள்ளாவது திருந்துவோம். அவர் ஆன்மாவை மகிழ்விக்க உறுதி பூணுவோம். சுதந்திர நாளை உளப்பூர்வமாய் உணர்வுபூர்வமாய் கொண்டாடுவேம். இந்தியத்தாயின் பெருமை போற்றுவோம்.

இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துக்கள்.

ந்தே மாரம்!

Comments

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?