Not Interested in Movies - னு சொன்னா?


"Not Interested in Movies" என்பது சிலரின் கூற்று!

அதில் அர்த்தம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. திரைப்படங்களை மிகவும் விரும்பும் இந்த வண்டு என்பதால். திரைப்படங்கள் சார்பாக வாதாட பீஸ் இல்லாத வக்கீலாக ஆஜர் ஆகுகிறது வண்டு.

ஏதொரு விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணம் உண்டு. அந்த காரணம் அறியாமல் உண்டாகும் விருப்பும் வெறுப்பும் அர்த்தமற்றது. [பின்னுகிறேனா?]. Not Interested in Movies என்று கூறுவது நான் சராசரிக்கும் ஒரு படி மேல் என்று காட்டிடத்தானோ? [மிளகாய் பொடி தூவி சிலரின் கோவத்தை கிளறுகிறேனா?]. சரி, ஏன் Not Interested என்று கேட்டால் அதற்கும் பதில் கூற சிலரால் முடிவதில்லை [சே.. சே.. யாரையும் நான் குத்தி காட்டலேங்க...!]

திரைப்படத்தை விடுங்கள் அந்த திரையிலேயே ஒரு மாபெரும் செய்தி அடங்கியுள்ளது. நல்லதாயினும், கெட்டதாயினும், காட்டப்படுவது எதுவாயினும் திரை தன் நிலை மாறுவது இல்லை. அது அதுவாகவே இருக்கிறது. [இதுல என்ன சேதினு கேக்காதீங்க... ஒரு விஷயத்தை சொன்ன அனுபவிங்க.. ஆராயாதீங்க!]

திரைப்படங்கள் மனிதனை அல்ல மனங்களை படம் பிடிப்பவை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை பொருத்தவரையில் ஒரு சரி உண்டு, ஒரு தவறு உண்டு. ஒருத்தரின் சரி, மற்றவர்க்கு சரிப்படாதபோது அது அவர்க்கு தவறாய் தோன்றுகிறது. அப்போது பிரச்சினைகள் உண்டாகிறது.

அடுத்தவரின் நிலையில் இருந்து சிந்தித்தால் தவறாய் நமக்கு தோன்றுவதில் ஏதோ ஒரு சரி இருப்பதாக தோன்றும். ஆகையால் தான் சில கொலையாளிகளின் கதைகள் கூட நம் மனதை தொட்டுச் செல்கிறது.

கதை கேட்டல் - முக்கியமான ஒன்று. குழந்தை பருவத்தில் பாட்டியும் அம்மாவும் கூறும் கதைகள் பிள்ளைகளில் நற்பண்பை நல்லொழுக்கத்தை வளர்த்தது. கடவுள் மேல் பக்தி உண்டானதெல்லாம் கடவுள் குறித்த கதைகள் கேட்டுத்தானே?

ஒரு கலாச்சாரத்தை ஒரு வாழ்கை முறையை புரியவைக்க, அதை இரசிக்கவைக்க திரைப்படங்கள் போல் வேறு எதனாலும் ஆகாது. கிராமத்தை புரிய வைத்த பாரதிராஜாவின் படங்கள், சமூகத்தின் இருண்ட பாகங்களை வெளிச்சம்போட்டு காட்டிய பாலசந்தர் படங்கள், பாரதியை பற்றியும், பெரியார் பற்றியும் அறிந்திராத பல விஷயங்களை படம் பிடித்து காட்டிய ஞானசேகரன் படங்கள் என்று கூறிக்கொண்டே போகலாம்.

எந்த ஒரு விஷயத்திற்கும் மறுபக்கம் உண்டு என எனக்கு போதித்தது திரைபடங்களே! ஒரு சேதியும் சொல்லாமல் சிரிக்க மட்டும் என்று உருவாக்கப்படும் சிரிப்பு படங்களாகட்டும், மனிதனால் முடியாமல் போகும் விஷயங்களை முடிவது போல் காட்டும் ஆக்ஷன் படங்களாகட்டும், கற்பனையில் மட்டுமே சாத்தியமாகும் பிக்ஷன் ஆகட்டும், ஏதோ ஒரு விதத்தில் மனதின் உணர்வுகளை தட்டிச்செல்வது நல்ல படங்களின் தண்மை.
பெரும்பாலும் குப்பையாக இருக்கும் படங்கள் காரணமாக ஒட்டு மொத்த திரைப்படங்களை உதாசீனப்படுத்துவது தகுமா?

நம் உணர்வுகளோடு உறவு கொள்ளும் எதையும் உதாசீனப்படுத்துதல் நியாயமல்ல. திரைப்படங்கள் நம் உணர்வுகளோடு உறவாடுபவை. அதனை உதாசீனப்படுத்தவேண்டாம். இனியேனும்!

சில்வண்டு!


Comments

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

சாதனை வண்டு!!