ஆஸ்கர் வாங்கினேன்!

" I come from a country and a civilization that given the universal word. That word is preceded by silence, followed by more silence. That word is 'Ohm.' So I dedicate this award to my country."

- Sound Mixing காக ஆஸ்கர் வாங்கிய ரெசூல் பூக்குட்டி யின் ஏற்புரை இது. ஒலி தொடர்பான தொழிலில் ஒலியின் ஆதாரமான "ஓம்" எனும் ஓங்காரத்தை இவர் குறிப்பிட்டு பேசியது மிகப்பொருத்தம்.

"ஓம்" என்பது ஒரு எழுத்து, இது அ, உ, ம எனும் ஒலிகளை உள்ளடக்கியது. சூரியன், சந்திரன், அக்னி எனும் ஒளி வடிவங்களும் இதனுள் அடங்கும். ஓம் எனும் பிரணவத்திலிருந்தே எல்லா ஒலி, ஒளி வடிவங்களும் உண்டாயின.

ஓங்காரம் எனும் பிரணவத்தினை, உலகினை தன்னுள் அடக்கிய, அமைதியாலும் பேரமைதியாலும் சூழப்பட்ட ஒலியினை, உலகுக்கு வழங்கிய நாட்டிலிருந்து, நாகரீகத்திலிருந்து வந்திருப்பவன் என்று தன்னை அறிமுகப்படுத்திய விதம் கண்டு ஓர் இந்தியனாய் பெருமிதம் கொள்கிறேன்.

"ஓம்" - என்பது ஒலியின் ஆதாரம் என்பதனையும் தாண்டி அது இந்து சமயத்தின் புனித குறியீடு. உலக அரங்கில் அப்புனித ஒலியை உலகுக்கு அளித்த சமுதாயத்திலிருந்து, நாகரீகத்திலிருந்து வந்திருப்பதாக பெருமைபட கூறிய இவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். இதுவல்லவோ பாரதத்தின் சிறப்பு?

இச்சிறப்பின் இறப்புக்கு கங்கணம் கட்டும் சில தீயோரின் தீய சக்திக்கு எதிராக நல்ல உணர்வினை, நாட்டு பற்றினை, நல்லோர் மனதில் உண்டாக்கும் விதமான இந்த பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.

பூக்குட்டி உங்களுக்கு என் இதயப் பூக்களால் கோர்க்கப்பட்ட பூங்கொத்தினை பரிசாக்குகிறேன். எனக்கு முதல் ஆஸ்கார் வாங்கித்தந்ததற்காக!

பொதுவாக எனக்கு ஆங்கில பாடல்கள் பிடிப்பதில்லை. ஏனென்றால் என்ன பாடுகிறார்கள் என்று புரிவதில்லை. புரியாத விஷயமாக இருந்ததால் அதன் மீது ஓர் வெறுப்பினை வளர்த்திருந்தேன். இசை என்பதன் இலக்கணம் இந்தியருக்கே தெரியும் என்றொரு தலைக்கணம் கொண்டிருந்தேன். ஆங்கில இசை இலக்கணப் பிழை என்று எனக்கோர் எண்ணம்.

இப்படியெல்லாம் பிழையாய் எண்ணங்கள் கொண்டிருந்த நான் அன்றெல்லாம் ஓர் பக்குவப்பட்ட இசை இரசிகனாய் இருந்திருக்கவில்லை. இசையை விடவும் அதிகமாய் இளையராஜாவை இரசித்துக்கொண்டிருந்த காலம். இளையராஜாவை இரசிப்பது என்றால் மற்ற இசையமைப்பாளர்களை மட்டம் தட்டுவதே என்று தானாக ஓர் சட்டம் இயற்றி அதை செயல்படுத்திக் கொண்டிருந்த ஓர் செவிட்டு இரசிகனாய்தான் நான் இருந்தேன்.

திரைப்படங்களில் நல்ல பாடல்களுக்கு பஞ்சம் வர, திடீரென டி.வி விளம்பர பாடல்கள் சில அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் துவங்கியது. அப்படி சில பாடல்கள் நாம் அறியாமலேயே நம்மை முணுமுணுக்கவும் வைத்தது.

அப்படியிருந்த காலத்தில் ஓர் நாள், 1992ம் வருடம் என்று நினைக்கிறேன். கோயம்பத்தூர் ஸ்ரீ லட்சுமி காம்ப்ளெக்ஸ் உள்ளே வேடிக்கை பார்த்து நடந்துகொண்டிருந்த போது, ஒரு கேசட் கடையிலிருந்து வந்த இசை என்னை ஈர்த்தது. மேற்கத்திய இசைபோல் இருந்தாலும்.. அற்புதமாக இருந்த அந்த இசை என்னை சுண்டி இழுக்க எங்கும் நகராது அங்கேயே நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தேன், ஆங்கில வார்த்தைகளில் பாடல் ஆரம்பிக்கும் என்று எதிர்நோக்க என்னை ஆச்சர்யத்தில் தள்ளிவிட்டு தமிழில் பாடல் வரி துவங்கியது...

"புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது" - என்று துவங்கிய அந்த பாடலிலிருந்து பொழிந்த அந்த தேனிசை மழையில் நனைந்துருகிய நான் அப்படியே அந்த கேசட் கடைக்குள் நுழைந்து "இது எந்த படத்து பாடல்? யார் இசை?" - என்று வினவினேன்.

"மணிரத்தினத்தின் அடுத்த படம் ரோஜா! யாரோ ஒரு புது பையன் போட்டிருக்கான் பாட்டெல்லாம் வித்தியாசமா இருக்கு... அருமையா இருக்கு" -- என்று கடைக்காரர் கூற, அப்போதே ஒரு கேசட் குடுங்க என்று கேட்டு வாங்கி நேராக வீட்டிற்கு வந்தேன்.

"சின்ன சின்ன ஆசை", "புது வெள்ளை மழை", "ருக்குமணி.. ருக்குமணி", "காதல் ரோஜாவே", "தமிழா தமிழா" - என ஒவ்வோர் பாடலும் அற்புதம், அத்தனை ஆனந்தம். "சுண்டி இழுக்கும் இசை" - என்பார்கள், உண்மையில் என்னை சுண்டி இழுத்தது ரஹ்மானின் இசை.

இப்படி அறிமுகமான இந்த ரஹ்மான் தான், எனக்கு இரண்டு ஆஸ்கார் விருது வாங்கித்தருவார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இன்று இந்தியாவில் ஒவ்வொரு இசை இரசிகரும் ஆஸ்கர் வாங்கி இருக்கிறோம். அந்த கலைஞன் வாங்கிய விருது அவனுக்கு மட்டும் சொந்தம் அல்லவே, அவன் இரசிகர்களுக்கும் தானே... ஆகவே ஒவ்வோர் இசை இரசிகனும் இன்று ஆஸ்கர் வாங்கியவனே! ஆகவே உங்களுக்கும் எனக்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள்!

திரைபடத்தினை பொருத்தவரை ஆஸ்கர் பெரிய விஷயம் இல்லை, பெரிய விருதும் இல்லை என்பது விவரம் அறிய வந்த போது நான் அறிந்துகொண்டது. அனைத்து அமெரிக்க படங்களுக்கு நடுவில் ஒரே ஒரு "சிறந்த வெளி நாட்டு படம்" -- எனும் ஒரு விருது, அது மட்டுமே உலக சினிமாவுக்கு, மற்றவை அனைத்தும் அமெரிக்க படங்களுக்கு எனும் போது இது எப்படி உலகிலே உயர்ந்த விருதாகும்? ஆஸ்கர் ஹாலிவுட்டுக்குத்தான் தேவதை, நம் படங்களுக்கு அது தேவையில்லை!

ஆயினும், இப்போது நமக்கு கிடைத்திருக்கும் இந்த விருது சிறப்பானதும் பெருமைக்குரியதும் ஆகும் காரணம், ரஹ்மானும், பூக்குட்டியும் ஓர் அமெரிக்க படத்தில் வேலை செய்து அதில் சிறந்தவர்களாய் அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதால், இவ்விருது சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல நமக்கு பெருமையும் தேடித்தருவதும் ஆகும்.

அமெரிக்கப் படங்களின் இசை வரிசையில் சிறந்த இசையாக, ஓர் இந்தியனால், இந்திய தனித்தன்மையோடு அமைக்கப்பட்ட இசை, சிறந்த இசை என்று அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் விஷயமே இங்கே சாதனை ஆகும்.

மற்றபடி, உலக அங்கீகாரம் கிடைக்காது போனாலும், பல சாதனைகளை ரஹ்மானும், இளையராஜாவும், இரவீந்திரனும், பர்மனும், நெளஷாதும், எம்.எஸ்.விஸ்வநாதனும், மஹாதேவனும், குமாரும், பாபுராஜும் இன்னும் எண்ணற்ற கலைஞர்களும் செய்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்....இருக்கிறார்கள்.

"ஜெய் ஹோ" - பாடல் சிறந்த பாடல், ஆனால் அது தலை சிறந்த பாடலன்று. இது எல்லா பக்குவமான இரசிகர்களும் ஒத்துக்கொள்ளும் விஷயம். பம்பாய் - படத்தின் தீம் மியூசிக், கருத்தம்மாவில், "சின்ன உசிரை முடிச்சிடு" - என அந்த பச்சிளங் குழந்தையின் தந்தை கூற, கள்ளி வெடித்து பால் வர, பிண்ணனியில் மனதை உருக்கும் குரலில் "காக்கா எளப்பார" -- என துவங்கும் பாடல்களை விட சிறந்ததில்லை "ஜெய ஹோ!" ஆயினும், அமெரிக்கரை திரும்பி பார்க்க வைத்த விதத்தில் அது சிறந்தது.

"சிறப்பு" என்பதற்கு நமதான வரையரை இதற்கும் பன்மடங்கு மேல் எங்கோ நம்மால் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆகவே, இது சாதனையின் உச்சமல்ல. ரஹ்மானும், பூக்குட்டியும், இன்னும் திறமை வாய்ந்த நம் கலைஞர்கள் அனைவரும் அடையவேண்டிய உச்சம் இன்னும் இருக்கிறது.

கொடைகானல் அற்புத அழகு நிறைந்த இடம், கொடைக்கானல் போகும் வழியில் ஏதேனும் ஒரு கொண்டை ஊசி வளைவில் ஒரு அருமையான இயற்கை காட்சி தென்படும், வண்டி நிறுத்தி நாமும் பத்து நிமிடம் அதை இரசித்து போகலாம். அப்படி ஒரு கொண்டை ஊசி வளைவு இன்பமே இந்த ஆஸ்கர். கொடை யின் அழகு எனும் ஆனந்தம் இன்னும் மேலே இருக்கிறது, இந்த கொண்டை ஊசி அற்புதத்தில் திருப்தியடைந்து வண்டியை வீட்டுக்குத் திருப்பிடக் கூடாது.

அத்தனை பிரபலங்கள் கூடியிருந்து உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் நிகழ்ச்சியின் மேடையில் நம் தாய் மொழி தமிழும், தேச மொழி ஹிந்தியும் ஒலித்தது கூடுதல் சிலிர்க்க வைத்த சிறப்பு.

பூக்குட்டியையும், ரஹ்மானையும் மனதார வாழ்த்தி பாராட்டுவோம். ஒவ்வோர் இந்தியனுக்கும் பெருமை இன்று. பெருமை கொண்ட ஒவ்வோர் இந்தியனும் மகிழ்ந்திருப்பான், ஒவ்வோர் இந்தியனும் மகிழ்வதால் நாடே மகிழ்ச்சியில் திகழ்கிறது, மகிழ்வான நாடு சுபிக்ஷமாய் இருக்கும். நாட்டை சுபிக்ஷமாக்கிய இவ்விருவருக்கும் மீண்டும் நன்றியும் பாராட்டுகளும்.

இந்த அற்புத தருணத்தில் இரசிகர்களாகிய நாம் ஒரு படியேனும் மேலே உயர்வோம். ஒருவரை தாழ்த்துவதன் மூலம் மற்றவரை உயர்த்தும் ரசனையை கை விடுவோம். ஒரு கலைஞனின் இரசிகன் எனும் பெயரில் மற்றோர் கலைஞன் தரும் அற்புத படைப்பினை உதாசீனப்படுத்தும் இயல்பினை களைவோம். கலைஞன் மேல் மரியாதை மாத்திரம் வைத்து கலைக்கு மாத்திரம் தீவிர ரசிகர் ஆகுவோம்.

இசையை பொருத்தவரை, நம்மை இசையச்செய்யும் எந்த ஓசையும் அற்புத இசையே! அப்படி ஓர் இசைக்கு ரசிகராய் இருப்போம்.

ரெசூல் பூக்குட்டிக்கும், ரெஹ்மானுக்கும், அனைத்து இந்தியருக்கும் இரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க பாரதம்... வளர்கிறது பாரதம்!

Comments

Nee Naan Sivam said…
This comment has been removed by the author.
Anonymous said…
I totally Agree with you.

Very good post and exactly shadows the way i have been feeling recently.

One point i like about ARR is that fame and success has not gone to his head and he is growing in his stature due to his humbleness and Modesty. This was clearly shown yesterday during his acceptance speech.

Good post silvandu!!!!!

Vinodh
A Recluse said…
Anna.. Isai amaitha rehman kku Oscar kuduthadhe nammalukke kuduthadha enni magizhra ungalukku indha chinna ponnoda sirapaana Oscar :) Good post anna...
Anonymous said…
The way I look at this is; Oscar has become a Buzz for more than a million crowds that has never heard about it before Rahman took the stage. In that way Academy should be proud and should thank Rahman for it! -Mani

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

சாதனை வண்டு!!