ரஜினிகாந்த்!

"மல் கூட கம்ப்பேர் பண்ணும்போது he is nothing! கமல் ஒரு பிறவிக்கலைஞன். ரஜினி கிறுக்கன். ஏதோ வந்து ஏதோ செஞ்சிட்டு போவான். அவனுக்கு நடிக்கவே தெரியாது!" என்பதுபோன்ற கருத்தையே அதிகம் கூறுவோரிடையே இருந்ததால்தானோ ஏனோ, இதுவே எனக்கும் ரஜினி குறித்தான அபிப்பிராயம் என்றாகிப் போனது.

"நீ சின்னப்பையனா இருக்கறப்போ, 'நினைத்தாலே இனிக்கும்' படம் பாத்திட்டு அதுல கமல்ஹாசன் 'என்னடி மீனாட்சீ' பாட்டுக்கு ஆடறதைப்போல நீ எவ்வளோ அழகா ஆடி பாடுவே தெரியுமா?" -- என்று அம்மா அவ்வப்போது என்னிடம் சொல்லக் கேட்டிருந்ததால், கமல்பால் ஓர் ஈடுபாடு எனக்கும் ஏற்பட்டிருந்தது.

கமல்ஹாசனை விரும்புதல் ஒரு படி மேல் என்பதுபோலவும், ரஜினியை விரும்புதல் ஒரு படி கீழ் போலவும் ஒரு அபிப்பிராயம் பொதுவாகவே நிலவி வந்தது. ஒரு முறை நண்பர்களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில், ரஜினிகாந்தைப் பற்றி யாரோ ஏதோ ஒரு கமெண்ட் அடிக்க, அப்போது தெருவோடு போய்க்கொண்டிருந்த ஒரு குடிகார வாலிபன் எங்களிடம் வம்புக்கு வந்தான். "ரஜினியப் பத்தி யார்ரா தப்பா பேசினது? மவனே, கொடல உருவி மாலையாப் போட்டிடுவேன் ஜாக்கிரதை" என்பதை காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகள் சேர்த்து, கெட்ட வாடையோடு திட்டிச் சென்றான்.

அந்த குடிகாரனைப் போன்றவர்கள் தான் ரஜினி ரசிகர்கள் என்று மனதுக்குள் பதிந்துபோனது.

பிற்பாடு, சுஜாதா, பாலகுமாரன், இளையராஜா, வாலி போன்றோரையெல்லாம் அறியவும், அவர்களை விரும்பவும் துவங்கியிருந்த காலகட்டத்தில், இவர்களின் வரிசையில் கமல்ஹாசனைத்தான் நிறுத்தமுடிந்ததே தவிர ரஜினியை நிறுத்த இயலவில்லை.

கமலை இரசிக்க முக்கிய காரணம் சுஜாதா தான். "விக்ரம்" படம் தயாரிப்பில் இருக்கும்போதே அதன் கதையை சுஜாதா குமுதத்தில் தொடராக எழுதிவந்தார். விக்ரம் ஷுட்டிங்கில் எடுக்கப்பட்ட stills களைத்தான் கதைக்கும் பயன்படுத்தினார். ராக்கெட், கம்ப்யூட்டர் என்றெல்லாம் ஆங்கிலப் படங்களில் மட்டுமே பார்க்கும் விஷயங்கள் தமிழில் வருவது பரவசமூட்டியது. கமல் தான் இதுபோன்ற கதைகளுக்கு சரியான ஆள் என்ற அபிப்பிராயம் மனதை ஆக்கிரமித்தது. அதுவும், படம் வெளிவந்தபிறகு, அதில் 'விக்ரம்... விக்ரம்' என்று கமல்ஹாசனே டைட்டில் பாடலை பாடியிருந்ததும், ஒரு நிழல் போல இரு உருவங்கள் நடனமான கை ஒடிந்து தொங்கி ஆடுவது போல வரும் நடன அமைப்பும் மனதை வசீகரித்தது.

மொத்தத்தில் விக்ரம் பயங்கரமாக பிடித்துப்போனது. இந்த சமயத்தில வந்த ரஜினியின் மாவீரன் பிடிக்கவில்லை. ஆனாலும், வேலைக்காரனில் ரஜினி இங்கலீஷ் பேசுவதையும், "குரு சிஷ்யனில்" ரஜினியின் காமெடியையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும், அதை வெளிக்காட்டவில்லை. ரஜினியை அறியாமல் இரசித்துவிட்டதை மனதுக்குள்ளேயே இரகசியமாக வைத்திருக்கும் அளவுக்கு கமல் பித்து. நாயகன் வந்தபிறகெல்லாம், கமலைத்தான் பிடிக்கும் என்று சொல்வதில் ஒருவிதப் பெருமையும் சேர்ந்துகொண்டது.

மீண்டும் சுஜாதா கமலின் மற்றொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்தார். சுஜாதா ஒருமுறை 'ஆல் இந்தியா ரேடியோ' வில் ஒரு Live நிகழ்ச்சி நடத்தினார். அதில் அவர் ஒரு கவிஞனை அறிமுகப்படுத்தப் போவதாக கூறிவிட்டு ஒருவரை அழைத்தார், அது கமல். கமல் அந்நிகழ்ச்சியில் இப்படியொரு கவிதை கூறினார்.

"எத்தனை சக்தி
இந்த கதிரவனுக்கு?
அன்று,
குந்தியை கருவுறுத்தி
கர்ணணை சிருஷ்டித்தது முதல்,
இன்று என்
சோலார் வாச்சுக்கு
சாவி கொடுப்பது வரை!"

கேட்ட மாத்திரத்தில் மனதில் பதிந்துபோனது இக்கவிதை. உண்மையில் இவன் சகல கலா வல்லவந்தான் என்று வியப்பு உண்டாயிற்று. கமலை பிடிக்கும் எனும் பெருமையும் பன்மடங்காகிப்போனது.

~~~ 0 ~~~

பெரியசாமி!

நாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் ஓனர் மகன். நல்ல நண்பன். மாபெரும் ரஜினி ரசிகன். ரஜினியின் "மாப்பிள்ளை" பட பாடல் கேசட் வெளிவந்திருக்க, அவன் கேசட் வாங்கிவந்தான். நாங்கள் இருவரும் பாடல்களை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தோம். பெரியசாமி, ரஜினிக்காக கேட்டான். நான் இளையராஜாவுக்காக கேட்டேன்.

நான், latest fashion லிருந்து மிகவும் பின்தங்கி இருப்பதாக பெரியசாமி கூறுவதுண்டு. பங்க் - கட்டிங், பேகி பேண்ட், என்பதெல்லாம் என்னை அனுகூலிக்கவில்லை. பட்டறையாக சம்மர்கட், அதிகம் தொள தொளக்காத பேண்ட். இப்படித்தான் நான் இருப்பேன். இதனால், பெரிசின் வீட்டில், என்னை ஏதோ ஒழுக்கமான, நல்ல பிள்ளை என்று எண்ணிக்கொண்டார்கள். பெரியசாமியின் தாயார், என்னை உதாரணம் காட்டி பெரிசை திட்டுவது வழக்கமானது. எனது இந்த 'நல்ல பிள்ளை'த்தனம் பெரியசாமியின் பல இஷ்டங்களுக்கு பெரும் இடைஞ்சலாகவே ஆகிப்போனது.

ஆதலால், என்னை மாற்றுவதுதான் இதற்கெல்லாம் ஒரே வழி என்று எண்ணி, அடுத்தமுறை முடிவெட்டப் போகையில், பெரியசாமி, அவன் முடிவெட்டும் கடைக்கு என்னை அழைத்துச்சென்று எனக்கு 'பங்க்' வைத்துவிடுமாறு கடைக்காரனிடம் சொன்னான்.

அப்போது அங்கே முடி வெட்டிக்கொண்டிருந்த சிலர், கடைக்காரரிடம் நெற்றியின் பக்கவாட்டின் இரு புறத்திலும் முடியை கொஞ்சம் மேல் நோக்கி சிரைத்து விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். பலரும் அவ்வாறே கேட்டு பக்கவாட்டு மேல் நெற்றி முடியை மழித்துவிட்டுக்கொண்டார்கள். ஏன் இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் எனக் கேட்டதற்கு, அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்றும், ரஜினிக்கு முன் நெற்றிப்பாகத்தில் வழுக்கை விழுந்து நெற்றியின் பக்கவாட்டில் வழுக்கை மண்டைமேல் ஏறி இருப்பதால் இவர்களும் அதைப்போல செய்துகொள்கிறார்கள் என்றார் கடைக்காரர்.

நான் பெரியசாமியிடம் இதை குறித்து கூறுகையில், இதுவென்ன பிரமாதம் ரசிகர்களின் தீவிர வெறியை உணரவேண்டுமென்றால், ரஜினி படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று கூறி, என்னை ஒருமுறை அழைத்துச் செல்வதாக கூறினான் பெரிசு.

மாப்பிள்ளை ரிலீஸ் ஆனபோது, சொன்னதுபோலவே, பெரிசு, அவன் காசிலேயே ரசிகர் மன்ற டிக்கெட் வாங்கி முதல் நாள், முதல் ஷோவுக்கு என்னை அழைத்துச் சென்றான். [அன்றைக்கு ரசிகர்மன்ற டிக்கெட் விலையே ரூ.50 தான். முதல் வகுப்பு ரூ. 5.50]

கரூரில், அமுதா தியேட்டரில் படம். அன்று பண்டிகை நாள். நான், புதிய வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து சினிமா பார்க்க சென்றிருந்தேன். தியேட்டர் வாசலில் திருவிழா கூட்டம். கல்யாண பத்திரிகை போல் அச்சடித்த மாப்பிள்ளை சினிமா விளம்பரத்தை எல்லோருக்கும் கொடுத்துகொண்டிருந்தார்கள் ரசிகர்கள். தியேட்டருக்குள் கேட்கவே வேண்டாம். எல்லோருக்கும் அத்தனை மகிழ்ச்சி, அத்தனை குதூகுலம்.

திரையில் ரஜினியின் பெயர் வந்ததுமே ஒட்டுமொத்த ஆட்களும் "தலைவா!" என்று பெருங்குரல் எழுப்பினார்கள். திரையில் ரஜினி வந்தபோதோ யாரும் அவர்தம் இருக்கையிலேயே இல்லை. எல்லோரும் திரையை நோக்கி இரு கைகளையும் நீட்டி, உணர்ச்சி மயக்கத்தில் "தலைவா" என்று கதறினார்கள். கலர், கலர் காகிதங்கள், வாச மலர்கள் இவைகளை வாறி இறைத்தார்கள். அத்துனைபேருக்கும் ஒரே போன்ற உணர்வு. தம்மை மறந்து ரஜினியில் லயித்தார்கள் ரசிகர்கள்.

என் மடி மொத்தமும் மலர் குவியல். படம் முடியும் வரை யாரும் தளரவில்லை. ஸ்ரீவித்யாவோடு சவால் விடும் கட்டங்களில் எல்லாம் தியேட்டரில் பெருத்த ஆரவாரம் செய்தனர் ரசிகர்கள். இவர்களுக்கேற்றர்போலவே "இதுதான் மச்சம் மச்சம்.. மிச்சம்.. மிச்சம்... உதட்டில் உச்சம்... உச்சம்" என்பதுபோல் அடி' பாட்டுகளும் இருக்க, மொத்த இரசிகர்களுக்கும் அன்று கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

படம் முடிந்ததும் தொடர்ந்து அடுத்த காட்சியை பார்க்கப் போவதாக பெரியசாமி கூறிச் செல்ல, நான், என் வெள்ளை பேண்ட் முழுதும் சாமந்திப்பூக்களின் மஞ்சள்கறை படிய வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

ஒரு தனி மனிதன் எப்படி இத்தனை நூற்றுக்கணக்கான ஆட்களை தன்வசம் இழக்கச் செய்கிறான்? என்பதில் எனக்கு பெருத்த ஆச்சரியம் உண்டாகிப்போனது. அப்படி ரசிக்கிறார்கள் ரசிகர்கள், ரஜினி அப்படி இரசிக்க வைக்கிறார், ஒரு வினாடி கூடத் தவறாமல் மகிழ்ந்திருந்தார்கள் படம் பார்ப்பவர்கள். இந்த உற்சாக ஊற்று தணிந்து பல வாரங்கள் கழித்து இதே படத்தை பார்க்கும் மேல்தட்டு மக்களுக்கு, படத்தில் ரஜினி ரசிகர்களுக்காக செய்பவை பைத்தியக்காரத்தனமாகத்தான் இருக்கும்.

ஒரு காந்த சக்தி, வசீகரம் இருக்கத்தான் செய்கிறது ரஜினியிடம் என்பது தெள்ளத் தெளிந்தது. இதனாலெல்லாம் ரஜினியை ரசிக்கத் துவங்கிடாவிட்டாலும், ரஜினியை தாழ்த்திப் பேசுவதை அத்தோடு நிறுத்தினேன்.

~~~ 0 ~~~

வரேனும் ஒருவருக்கு இரசிகன் என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் எனக்கு ஈடுபாடு இருக்கவில்லை. எவராயினும் நடுநிலையில் நின்று நன்மை, தீமையை பாரபட்சமின்றி எடைபோடும் ஒரு பக்குவமான கலா இரசிகனாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும், என்னையும் மீறி, ஒரு நடிகனுக்கு மாபெரும் விசிறியாகிப்போனேன். என் நடை, உடை, பாவனை, பேச்சு, ஓட்டம் எல்லாவற்றிலும் அனிச்சையாக அந்த நடிகன் போலவே ஆக முயற்சிசெய்தேன்.

என் ஒருபக்கத்து தோளினை வேண்டுமென்றே சரிக்கத் துவங்கினேன். அடிக்கடி விழிகளை ஓரத்திற்கு ஓடவிட்டு ஓரப்பார்வை பார்ப்பதை வழக்கமாக்கினேன். சிரிக்கும் விதத்தை கவர்ச்சிகரமாக்க முயற்சி செய்தேன். மொத்தத்தில் என்னை ஓர் மோகன்லால் ஆக நினைத்துக்கொண்டேன்.

கமல், ரஜினியைக்கடந்து நான் மோகன்லால் ரசிகனாய் ஆனபோதும். என்னை அவ்வப்போது ரஜினி ஆச்சரியப் படுத்திகொண்டே இருந்தார். 'அண்ணாமலை' பார்க்கும்போது சில காட்சிகளில் எனக்குள் உணர்ச்சி பெருகக் கண்டேன். 'வள்ளி' யின் ரஜினி மீதான என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. 'பாட்சா' வில், ரஜினி பாட்சாவாக மாறும் இடத்தில், தேவாவின் இசை இடிமுழக்கமாக, நாடி நரம்பெல்லாம் முறுக்கேறியதுபோல் ஓர் புது உணர்வுக்கு உள்ளானேன். 'வீரா' ரஜினியை frame by frame ரசித்தேன்.

எங்கள் HOD திரு. CKV சாருக்கு பிடித்தமான செல்லப் பிள்ளைகள் கூட்டம் ஒன்று உண்டு. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நானும் புதிதாக ஓர் இடம் கிடைக்கப்பெற்றிருந்த காலகட்டம். பரீட்சைகள் முடிந்த பிறகு, CKV சார் எங்களை 'தளபதி' பார்க்க அழைத்துச் சென்றார். தளபதியை மணிரத்தினத்தின் ரத்தினச் சுருக்கமான வசனங்களால் ரசிக்க முடியவில்லை. "என் நண்பனே கொன்னூட்டியேடா..." எனும் ஒரு வசனத்திலேயே பல நிமிடங்கள் ரஜினி வில்லனை டார்ச்சர் செய்ததை கேலி செய்து இருந்தோம். ஆனாலும், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருமுறை பார்த்தபோது, ரஜினியின் நடிப்பில் ஒரு புதுமை இருந்ததை கண்டுபிடிக்க முடிந்தது.

CKV சார் அடிக்கடி சொல்வார். "என்ன டென்ஷன் இருந்தாலும் ஒரு முறை அண்ணாமலை படம் பாத்தா ஜம்முன்னு மனசெல்லாம் ரிலாக்ஸ் ஆயிடும்!" என்பார். CKV சார் என் மனதின் தர வரிசையில் ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர். இவர் மாத்திரமல்ல, நான் படிக்கும்போது Vice Pricipal ஆக இருந்து பின் ரோவர் காலேஜில் Principal ஆன திரு. மதியழகன் சார், இன்னும் நிறைய high profile ஆட்கள், ரஜினிக்கு ரசிகராய் இருப்பதைக் கண்டு நான் வியப்பின் உச்சிக்கே போயிருக்கிறேன்.

எங்கள் பக்கத்து வீட்டு குட்டிப்பையன் முகேஷ் அப்போதுதான் பேசத்துவங்கியிருந்தான். அவனிடம் "நான் ஒரு தடவ சொன்னா" என்று யாரேனும் கூறினால், "நூறு சொன்ன மாறிரி!" என்று ரஜினி வசனத்தை மழலையாய் பேசுவான்.

இப்படி எல்லா வயதினரும், சமுதாயத அடுக்கில் எல்லா தட்டைச் சேர்ந்தவர்களையும் எப்படி ஒரு தனி மனிதனால் ஈர்க்க முடிகிறது? வசீகரிக்க முடிகிறது? அவர் அப்படியொன்றும் அழகில்லை, நிறமில்லை, கட்டுமஸ்தான் உடல் இல்லை, நிறைய வேண்டாத பழக்கங்களுக்கு அடிமையானவர். இருந்தும் ஆட்கள் ஒரு நடிகன் என்பதையும் தாண்டி தனிமனிதனாகவும் அவரை விரும்புவதும், நேசம் வைத்திருப்பதும் எப்படி சாத்தியம்?

அமெரிக்கா வந்த புதிதில், படையப்பா வந்தது. தமிழகம் போல கூட்டமேதும் இருக்காது என நினைத்து முதல் நாள் முதல் ஷோவுக்கு தியேட்டர் போனால், நம்ப இயலாதவாறு கூட்டம் நிரம்பி வழிகிறது. நல்லவேளையாக ஒரு நண்பன் சீக்கிரமே சென்று டிக்கெட் எடுத்து வைத்திருந்தான். தியேட்டருக்குள் நுழைந்தால், இது அமெரிக்கா என்பதையே மறக்கச் செய்யும் அளவுக்கு கரூர் அமுதா தியேட்டர் சூழ்நிலை உருவாகியிருக்கக் கண்டேன். விசில் சத்தமும், 'தலைவா' எனும் கூச்சலும், ஆட்டமும், கொண்டாட்டமும் என அதுவரையில் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை அனைவருமே அவிழ்த்துவிட்டனர்.

அமெரிக்க தியேட்டர்கள் இதுவரை கண்டேயிராத கூட்டங்கள் ரஜினி படங்களுக்கு கூடுகையில், தியேட்டரில் வேலை பார்ப்பவர்களும் தியேட்டருக்குள் வந்து படத்தை இரசித்துப் பார்த்ததை கண்கூடாக பார்த்திருக்கிறேன். சிவாஜி படம் வந்தபோது சில அமெரிக்கர்களும், மெக்ஸிகன்களூம் கூட "For that crowded indian movie" எனக்கூறி டிக்கெட் எடுத்து படம் பார்த்துச் சென்றார்கள்.

அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ, ஜப்பானோ, ஐரோப்பாவோ ரஜினி படம் என்றால் உலகின் எந்தத் திரைஅரங்காயினும் அங்கு கரூர் அமுதாவில் நான் கண்ட காட்சிகள்தான் அரங்கேறும் என்பதில் ஐயம் இல்லை. இந்த கொண்டாட்டம், இத்தனை ஆர்ப்பாட்டம், தகுதி, பதவி, நிலை, வயது அனைத்தும் கடந்து, அனைவரையும் கொண்டாடவைக்கும் நிலை ரஜினிகாந்தின் படங்களுக்கு மாத்திரமே சாத்தியம்.

இதுபோல அனைவரையும் ஈர்க்கும் சக்தி படைத்த ஒரு நடிகன் மீண்டும் உருவாவதுவும் கடினமே.

~~~ 0 ~~~

ன்று அவருக்கு உடல் நிலை சுகமில்லை. ரசிகர்கள் என்ன ஆச்சு? ஏது ஆச்சு? எப்படி இருக்கிறார்? என்று அலை பாய்கிறார்கள். இதற்காக பத்திரிகைகள், நாளும் ஒரு சேதியை வெளியிடுகிறது. வதந்திகளும் பரவுகிறது.

இந்நிலையில், சிலர் இந்த நிலை கண்டு கோவம் கொள்கிறார்கள். வெறும் நடிகன், நம்மை போல ஒரு மனிதன், இவன் மேல் அக்கறை கொள்பவர்கள் குடும்பத்தாரை நினைத்துப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் புத்திமதி கூறி, சமூகம் இப்படி இருக்கிறதே என்று கவலையும் கொள்கிறார்கள்.

அவர்கள் ஏன் இப்படி வாய் ஓயாது புத்திமதி ஓத மெனக்கெட்டு நேரத்தை பாழாக்குகிறார்கள் என்று விளங்கவில்லை. நடிகன் என்றால் ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நடிகனுக்கு ஒன்று என்றால் வருந்தத்தான் செய்வார்கள். இதிலென்ன பெரிய குற்றம் இருக்க முடியும்?

சாமானியன் வாழ்வில் அவனை பலப்பொழுதும் மகிழ்வித்திருக்கிறார் ரஜினி எனும் நடிகர். தன்னை சற்றுப் பொழுதேனும் மகிழவைத்தவரை மனதுக்கு அருகில் வைத்திருக்கிறான் ரசிகன். இதயத்திற்கு அருகில் இருப்பவர் துயர்கொள்ளூம்போது தானும் சேர்ந்து வருந்துகிறான். நாம் எல்லோருகே இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் தான்.

பக்கத்து வீட்டு பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்றால், நல்ல சாப்பாடு நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் இறங்காத காலம் இருந்தது. இன்று மத்திய தர நிலையில் இருப்பவர்களின் மனோநிலையும் மேல் மட்ட நிலை மனிதர்களைப்போல மாறிவிட்டது.

சாகக் கிடக்கும் ஒருவரை பார்ப்பதற்கு ஆஸ்பத்திரிக்கு செல்வதுகூட ஏதோ பிக்னிக் போவதுபோல்தான் ஆகிப்போனது. ஆஸ்பத்திரி வாசல் வரைக்கும் குதூகுலத்துடன் உற்ச்சாகமாக சென்று, நோயாளி அருகில் இறுகிய முகத்தோடு சற்று நேரம் நின்று விட்டு, அந்த அறையைவிட்டு வெளியேறும்போதே அக்கறையையும் அங்கேயே விட்டுவிட்டு, அடுத்ததாக டின்னருக்கு எங்கே போகலாம் எனும் அலசலில் ஆழ்ந்துவிடும் கலாச்சாரம்தானே இப்போது நம்மை அரித்துக்கொண்டிருக்கிறது.

உணர்ச்சிகளை சுருக்கவேண்டாம். அடுத்தவர் கஷ்ட்டத்தில் பங்குகொள்வது, அவருக்காக வருந்துவது, உண்மையாய் பிரார்தனை பண்ணுவதெல்லாம் மனிதனின் அற்புத குணங்கள். அவைகளை காலமாற்றத்தை காரணமாகச் சொல்லி தொலைக்கவேண்டாம்.

ஒருவருக்கு மகிழ்ச்சி தருவது லேசுபட்ட விஷயம் அல்ல, தன்னையே மறந்து ஒருவனை கொண்டாட வைக்கும் சக்தி சாதாரணமானதல்ல. அவர் பலரை மகிழ வைத்தவர். ஒரு நாளில் அவர் பெயர் பலரால் உச்சரிக்கப்படுகிறது. நாடறிந்த ஒருவர். பலர் அறியும் காரணத்தால் உயரத்தில் இருப்பவர், இப்போது தளர்ந்திருக்கிறார்.

தன்னை மகிழ்விக்க அவர் இனியும் வேண்டும் என்று விரும்புவோர் உள்ளனர். அவர்கள் தன் உணர்ச்சிகளை கொட்டினால் கொட்டிவிட்டுப் போகட்டுமே! உங்கள் மேதாவித்தனத்தால் அதற்கு அணை போடாதீர்கள். அவரவர்க்கு அவரவர் வழி, அவரவர் வழிகளில் அவர்கள் தொடரட்டும். வழிகாட்டியாய் வலிய நுழைந்து குழப்பம் விளைவிக்காதீர்கள்.

வண்டும் ரஜினிக்கு ரசிகனே! ரஜினி பூரண குணமாகி வருவார் என்று வண்டு அதீத நம்பிக்கை கொண்டுள்ளது. நல்ல மனம் படைத்தவர்கள் வண்டோடு சேர்ந்து நம்பிக்கை கொள்ளுங்கள். இந்த நம்பிக்கை அலைகள் அவரை குணப்படுத்தும்.

விரைந்து குணமுற்று வாருங்கள் ரஜினி சார்!

உங்கள் படங்களை கொண்டாடி இன்னும் போதவில்லை எங்களுக்கு.


சில்வண்டு.
June 06, 2011

Comments

Ravi said…
Blog nalla than iruku.Yennala Onnu Mattum Purila Is he Mahatma Gandhi / Kamarajar ?

Onnum Mattum Puriyuthu we can't differentiate Real / Reel Life :)

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?