வானவில் பூக்கள்! [ஒரு ஆரிய பூ!]

"யே ஆயே ஹோ?"

எனக்கு நான் மட்டுமே துணையாய், வகுப்பறையில் என் இடத்தில் தனியே அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே எங்கோ எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஒரு இண்ட்டர்வல் சமயத்தில் என் செவியில் விழுந்த ஹிந்தித்தேனைச் சிந்தியது யார் என அதிர்ந்து திரும்ப, அங்கே என் அருகே பூத்திருந்தது ஆரிய பூ ஒன்று!

"புதுசா?" என்று தான் அவள் கேட்டிருக்கவேண்டும் என ஊகித்து "ஆம்" என்ற பதிலாய்த் தலையாட்டினேன் திராவிடப் பணிவுடன்.

"மதறாஸ் கே ஹோ?" -- மீண்டும் தூற்றினாள் தேனினைச் செவியினில்!

ஆம் என்பதை இலகுவாய் "ஹாம்!" என்றேன். என் பதில் ஹிந்தியாய் மாறி அவளைச் சென்றடைந்த வேளையில் மனம் "இவள் யாராக இருக்கக்கூடும்?" என்பதை அகழ்வாராய்ச்சி செய்யத்துவங்கியது. அவளோ அகழ்வாராய்ச்சியில் என்னை மூழ்கவிடாமல் அடுத்த தேனினைச் சுரந்தாள் என் மீது தெளிக்க!

"மதறாஸ் மேம் கிதற் கே ஹோ? டமிள்நாடு யா பிர் கேரள்?"
-- தெளித்திட்டாள் அவள் சுரந்திட்ட தேனினை!


ஹிந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் என்பதால், நான் தமிழ் பாதி, கேரளம் பாதி எனும் கதையெல்லாம் கதைக்காமல் அளவாய் அழகாய்,

"தமிழ்நாடு கா ஹும்!" என பெருமூச்சு வாங்கினேன்!


இவள் கேட்ட இந்த கேள்விக்காக, "அட, பரவாயில்லையே இவள்!" - என மனம் இவளைப் போற்றியது. காரணம், மளையாளிகள், ஆந்திராக்காரர்கள், கர்நாடகா வாசிகள், தமிழர்கள் என இவர்கள் அனைவருமே "மதறாஸி" தான் இந்த ஹிந்தி காரர்களுக்கு.

எந்த ஊர் என்ற கேள்விக்குப் பதிலாக தென்னகத்தின் எந்த இடத்தைக் கூறினாலும் "மதறாஸி" என்று வகைப்படுத்தி விடுவார்கள். தென்னகத்தைப் பற்றிய அறிவும் அக்கறையும் இவர்களுக்குக் கொஞ்சம் கூட இல்லையே என நான் வருத்தப்படுவதுண்டு. ஆனால் இப்பூவோ, அந்த அறிவும் அக்கறையும் கொண்டிருக்கிறாள். ஆதலால் மனம் இவளைப் போற்றிப் பாராட்டியது.


"சர் நேம் க்யா ஹை?" -- குடும்பப் பெயர் கேட்டாள். நான் குடும்பப் பெயர் கூறினேன். இதைத்தொடர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் வரிசையாய்க் கேட்டாள். அதும் போதாதென்று குடும்பத்தார் என்னை அழைக்கும் செல்லப் பேர் என்ன என்றும் கேட்கிறாள்?

வெட்கத்தோடு நானும் அதைக் கூறினேன் நகம் கடிக்காமல்!

"உன்னை நாங்கள் எப்படி அழைக்க வேண்டும்? இயற்பெயரிலா இல்லை குடும்பத்தார் அழைக்கும் செல்லப்பெயரிலா?" -- என்றவள் கேட்டதற்கு,

"நீ எப்பெயர் அழைத்தாலும் அப்பெயர் நற்பெயரே!" என மனதில் நினைத்து. "உங்கள் வசதிப்படி அல்லது உன் விருப்பப் படி எப்படி வேண்டுமென்றாலும் அழை" -- என்றேன் ஓட்டை ஹிந்தியில்.

" T K " -- என்றாள். இது ஆங்கில "ok" யின் ஹிந்தி வார்ப்பு!

"அபேஹ் ஓஹ் மதறாஸி!" என்பதே என் வகுப்புத் தோழர்கள் பெரும்பாலும் என்னை விளிக்கும் விதம்.

இதைத்தவிர நான் கொஞ்சம் (கொஞ்சமா?) குண்டாய் இருந்ததால். "மோட்டூ [குண்டன்]!" என்றும், "டமாட்டர் [தக்காளி]" என்றும், "ஆலூ [உருளைக்கிழங்கு]" என்றெல்லாம் கூட என்னை என் சம்மதம் பெறாமலேயே அழைத்து வந்தனர் தோழர்கள்.

முதல் முதலாய் இவள் தான் பெயர் சொல்லி அழைக்கவா? செல்லப் பெயர் சொல்லி அழைக்கவா? எனக்கேட்கிறாள். இவள் மீது எனக்குள்ள மதிப்பு கூடாது போனால் தானே அது அதிசயம்?


இவள் யாராக இருக்கக்கூடும் எனும் கேள்விக்கு விடைதேடி மனம் நடத்திய அகழ்வாராய்ச்சியில், க்ளாஸ் லீடர் ஒரு பெண் என்றும் உடல் நிலை மோசமாக உள்ளதால் அவள் இன்னும் வகுப்புக்கு வந்த பாடில்லை என்றும் என் வகுப்பு நண்பர்கள், அவர்களின் அரட்டைக்கிடையே, முன்பு எப்போதோ பேசிக்கொண்டி ருந்ததில், ஆங்காங்கே புரிந்த ஓரிரு வார்த்தைகளைக் கோர்த்து, நான் அரை குறையாக புரிந்துகொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

இவள் தான் அந்த க்ளாஸ் லீடரோ?

"அச்சா மில்தே ஹை!" -- என்று கூறி கை கூப்பினாள். அச்சப்படாது வணக்கம் கூறச்சொல்கிறாளோ? நானும் கை கூப்பி வணக்கம் கூறி விடை பெற்றேன்.

அழகாய் இருக்கிறாள். கரிசனமாய் பேசுகிறாள். கிளாஸிலேயே அழகான பெண் இவள் தான் என்பதிலும் இரு வேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை.

பிங்க் நிறத்தில் வெள்ளை கட்டம் போட்ட டாப்ஸ், வெள்ளை நிற பேண்ட் கொண்ட சல்வார்தான் எங்கள் பள்ளியின் பெண்கள் சீருடை. அவளின் மெலிந்த தேகத்திற்கு அந்த உடையும், அவளின் தும்பை நிறத்திற்கு உடையின் நிறமும் கனக்கச்சிதமாய்ப் பொருந்தியது. துப்பட்டாவால் தலையில் முக்காடு இட்டிருக்கும் அவளைப் பார்க்கையில் மனதுக்குள் அமைதியும் உற்ச்சாகமும் பிறந்தது.


சாதாரண சந்திப்பு தான் இது. மனதெல்லாம் தித்தித்தது.

இல்லை இல்லை, நீங்கள் புரிந்துகொண்டிருப்பது தவறு...
அது காதல் அறியா வயது என்பதால், காதல்வயப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் மனது மகிழ்ந்திருந்தது!

~~~ 0 ~~~

போபாலில் [மத்திய பிரதேசம்], பள்ளிகளில் காலை ஏழரைக்கெல்லாம் வகுப்பு ஆரம்பித்துவிடும். முதல் வகுப்பு ஆங்கிலம். Shingulu என்றொரு ஆங்கிலோ இந்திய வயதான கண்டிப்பான பெண்மணிதான் இங்கிலீஷ் டீச்சர்.

கொஞ்சமேனும் புரியும் வகுப்பு இது ஒன்று தான். இது இங்கலீஷ் மீடியம் பள்ளியாக இருந்தாலும், இந்த ஒரு வகுப்பு தாண்டினால் மற்ற ஆசிரியர்கள் பெரும்பாலும் ஹிந்தியிலேயே மற்ற பாடங்களை நடத்துவ தால் என் கவனமெல்லாம் நீண்ட மணியோசை எப்போது ஒலிக்கும்? எப்போது வீடு போய்ச்சேரலாம்? எனும் எதிர்பார்ப்பிலேயே ஓடும்.
வகுப்பில் எனக்கு நண்பர்கள் இருக்கவில்லை.

"மதறாஸி" என்று அழைக்கப்பட்டு கேலிக்குள்ளாக்கப்படுவதால் உண்மையில் யாரோடும் ஒட்டவும்
முடியவில்லை! சலீம் என்றொருவனும், ரஷீத் என்று மற்றொருவனும் என்னோடு அனுசரனையாக நடந்து கொண்டாலும், சரளமாய் ஹிந்தி பேச வராததால் அவர்களோடும் ஒன்றிட இயலவில்லை. ஆதலால் நான் என்னை மட்டுமே என் நண்பனாக்கி என்னுடன் மாத்திரமே தனிமை இனிமை கண்டு இருந்திருந்தேன்.

மற்ற நண்பர்கள் ஒன்று கூடுவார்கள். கூட்டத்தில் தனியாய் நானும் அங்கிருப் பேன்.
அரட்டை அடிப்பார்கள், அரட்டை புரிந்தவரைக்கும் அல்லது புரிந்தார்போல ஒரு சிரிப்பை மட்டும் முகத்தில் ஒட்ட வைத்து, நானும் அவர்களது அரட்டையில் கலந்து வைப்பேன்.

பதினொரு மணிக்கெல்லாம் நல்ல சூடு சமோசாக்கள் மணக்கத்துவங்கும். பள்ளிக்கூடத்தின் பிரதான வாயிலில் உள்ள பெரிய இரும்புக் கதவின் மறு பக்கத்தில் சமோசா வண்டி வந்து நிற்கும். இண்டெர்வல் சமயத்தில் மாணவர்கள் சமோசாவோ அல்லது கச்சோரியோ அல்லது சோலாடிக்கியோ வாங்கிச் சாப்பிடுவார்கள். வட இந்தியாவில் பெரும்பாலன மக்கள் காலை உணவாக உண்பது அவலும், ஜிலேபியும்!

இண்டெர்வல் சமயத்தில், மணி அடித்ததும் ஓடிச்சென்று சுடச்சுட கமகமக்க்கும் சமோசா வாங்கி உண்பது ஒரு ஆனந்தமான செயல். அந்த சமோசாக்களின் சுவையே அலாதி!


வகுப்புகளில் எனக்கு எப்போதும் கண்டம் இந்த ஹிந்தி வகுப்பு தான். வெள்ளை பைஜாமா குர்தா அணிந்த சிரிக்காத ஆசான் இறுகிய முகத்தோடு முறைக்காத குறையாக வகுப்புக்குள் நுழைந்து ஆக்ரோஷமாய் ஹிந்தி எடுப்பார். அவருக்குப் பொழுது போகாவிட்டால் என்னை எழ வைத்து ஹிந்தி வாசிக்கச்சொல்லி அழ வைப்பார்.

எனக்கோ ஹிந்தி வேகமாய் வாசிக்க வராது. நான் தட்டுத் தடுமாறி
திக்கித்திணறி வாசிக்க, நான் படிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வகுப்பில் சிரிப்பொலி எழும். குர்த்தா ஆசிரியர் ஒரு வெறுப்போடு என்னை பார்ப்பார். பிறகு, "நீ படித்த அழகு போதும்" எனும் பாவனையோடு சைகை காட்டி அமரச்செய்வார். அப்போது வகுப்பே என் பக்கம் திரும்பி பரிதாபமாகவோ, கேலியாகவோ என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும். நான் வெறுமையாய் உட்கார்ந்திருப்பேன். இதைத் தொடர்ந்து உருது வகுப்பு. அதில் எழுத்து கூட்டிக் கூட ஒன்றும் வாசிக்கத் தெரியாது. அப்போதும் வீசும் அனுதாப அலை.

இப்படி ஒவ்வொரு நாளும் கடினமாகிக் கொண்டிருக்க, மீண்டும் பாட்டி ஊருக்கே சென்று புரியும் பாஷையில் படிப்பினைத் தொடர்வதே எனக்கும் ஹிந்திக்கும் நல்லது என்று தோன்றியது. ஆனால், அப்பா அம்மாவை விட்டு மீண்டும் பிரிந்து இருக்க என்னால் முடியாது. நல்ல நண்பர்கள் இருந்தாலேனும் ஒரு ஆறுதல் இருந்திருக்கும். அதுவும் இல்லை.

வேறுபட்ட நிலத்தில் நடப்பட்ட என் வேர் பட்டுப்போனது! வேறுபாடுகள் ஈடுபாட்டினைக் குறைக்க, நாளுக்கு நாள் நான் மக்கு மாணவனாக உருக்குலைந்து கொண்டிருந்தேன்.

பிடிப்பில்லாது இப்படி தவித்துக்கொண்டிருந்த வேளையில் தான் என் முன்னே பூத்து செந்தேன் தூற்றி என்னுள் "பிடிப்பு" உண்டாக்கினாள் இப்பூ!

~~~ 0 ~~~

Hazala - அப்பூவின் பெயர். என் க்ளாஸ் லீடர்!

வகுப்பில் ஒரே ஆறுதல் இவள் என்றானாள். கூட்டத்தினின்று விலகி தனியே என் உலகில் ஆழ்ந்து போயிருக்கும் சமயங்களில், அதை கவனித்து என் அருகே வந்து பேச்சுக்கொடுப்பாள். "ஹிந்தியிலேயே பேசு அப்போதுதான் ஹிந்தி வசப்படும்" என்பாள். ஒவ்வொரு நாளும் என் ஹிந்தி சிறக்கின்றது என்று கூறி என்னை ஊக்குவிப்பாள். ஹிந்தி வசப்பட்டதோ இல்லையோ, நான் அவள் வசப்பட்டேன்!

Shingulu மேடத்தின் வகுப்பில் ஒரு நாள் திடீரென மேடம் என்னை எழவைத்து ஆங்கிலப் புத்தகம் எடுத்து உரக்க வாசிக்கச் சொன்னார்கள். நான் என் பை கட்டைத் தடவினால் அதில் எல்லா புத்தகமும் இருந்தது ஆங்கிலப் புத்தகம் தவிர. நிலமையைச் சமாளிக்க பக்கத்து நண்பனிடம் புத்தகம் கேட்டேன், அவன் தர மறுத்துவிட்டான். இதை கவனித்த மேடம் என் அருகே வந்து என்ன விஷயம் என வினவினார். புத்தகத்தைக் கொண்டு வரவில்லை என்று கூறினேன். அடுத்த வினாடி, "பொளேர்" என பொறி பறக்க என் கன்னத்தில் விட்டார் ஒரு அறை. நான் நட்சத்திரங்கள் எண்ணினேன். அடித்தும் அடங்காத கோவத்தில் ஏதேதோ இன்னும் கூறி என்னை திட்டிவிட்டு அமரச்செய்தார் Shingulu மேடம்.

வகுப்பு முடிந்ததும் Hazala என் அருகே வந்தாள். நான் தலையை குனிந்தே இருந்தேன். டெஸ்க்கில் என் கண்ணீர் துளிகள் குளம் கட்டியிருந்தது. அவள் என்னை அழைத்தாள், நான் தலை நிமிரவேயில்லை. பிறகு அவளே தன் கை கொண்டு என் தாடையை பிடித்துத் தூக்கினாள். என் கன்னத்தில் காங்கிரஸ் சின்னம் பதிந்திருந்தது கண்டு அதிர்ந்தாள்.

புத்தகம் கொண்டுவரவில்லை அவ்வளவுதானே! அதற்குப்போய் விரல் பதியும் அளவுக்கு இப்படியா அடிப்பது? எனும் பொருள் பட அவள் ஹிந்தியில் ஆதங்கப்பட்டாள். பிறகு என்னைச் சமாதானப்படுத்தும் விதமாக,

"அந்த மேடம் அப்படித்தான் திடீரென கோவம் வந்திடும் நீ கவலைப்படாதே"
-- என்று ஆறுதல் கூறியவள், என் அருகில் உட்கார்ந்திருந்த, எனக்குப் புத்தகம் தராத, அந்த நண்பனை எனக்கு புத்தகம் தர மறுத்ததற்காக கோபித்துத் திட்டினாள்.

"பரவாயில்லை விடு" என நான் கூறியும் கேட்காமல் அவனோடு சண்டை யிட்டாள். பிறகு, அவனை அங்கிருந்து வேறு எங்கேனும் போய் உட்கார் என உத்தரவிட்டுவிட்டு [கிளாஸ் லீடர் அல்லவா அவள்க்கு இந்த அதிகாரம் இருந்தது] அன்று முழுதும் அவள் என் அருகிலேயே என்னோடு அமர்ந்திருந்தாள். [போபால் பள்ளிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடம் என்பது கட்டாயம் இல்லை, கலந்தும் அமர்ந்துகொள்ளலாம்]!

எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது அவள் எனக்காக என் அருகே வந்து அமர்ந்தது. இவள் தோழமை எனக்கு வேண்டும் என்று மனம் விரும்பியது. அவளின் மிக நெருங்கிய தோழனாய் நான் ஆகவேண்டும் என்று ஒரு ஆசையும் பிறந்தது.

~~~ 0 ~~~

நான் பள்ளிக்குப் பேருந்தில் போய் வருவேன்! ஒரு நாள் என் பேருந்து நிறுத் தத்தில் நான் காத்திருக்க, எதிர் திசையில் செல்லும் பேருந்துக்காக சாலையின் மறுபுரத்தில் உள்ள நிறுத்தத்தில் அவள் நின்றிருப்பதைக் கவனித்தேன். அப்போது தான் தெரியும் அவளும் பேருந்தில்தான் பள்ளிக்கு வந்துபோகிறாள் என்று. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் ஒன்றாகவே பஸ் நிறுத்தம் வரைச்செல்வது வாடிக்கை ஆகிப்போனது.


ஒரு நாள் நான் என் பேருந்துக்காகக் காத்திருந்த வேளையில் ஒருவன் என் அருகே வந்து அவனாகவே அவனை என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். நாங்கள் படிக்கும் பள்ளியிலேயே மேல் நிலை வகுப்பில் படிக்கும் பையன் அவன்.

Hazala-வுடன் அவனுக்கு நட்பு வேண்டுமாம். அவளுக்கு நான் நண்பன் என்பதால், நான் அவனுக்காக அவளிடம் சிபாரிசு செய்ய வேண்டுமாம். அவனுக்காக தூதும் போகவேண்டுமாம்.


அவனின் நடை, உடை பாவனை எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. அதோடு அவன் அவளோடு நட்பு வேண்டும் என்றும் கூறக்கேட்டது என்னை சினம் கொள்ளச்செய்தது. நான் ஒன்றும் பேசாது அவனை விட்டு விலகி நின்றும் என்னை விடாது தொந்தரவு செய்தான்.

"உஸ்க்கோ போல்னா, முஜ்சே தோஸ்த்தி கர்னே கேலியே!"
-- என்று அவன் நச்சரித்துக்கொண்டிருக்க,


"மே நஹி போல் சக்தா" என்று திட்டவட்டமான என் மறுப்பினைத் தெரிவித்தேன் கோவமாக!

அவன் முகம் சிவந்தான், ஸ்வரம் மாற்றினான், பிறகு,

"அபே கதே [கழுதை], சாலே [மச்சான்], மோட்டே [குண்டன்], மதறாஸி [தமிழன்டா]!"
-- என ஆரம்பித்து ஹிந்தியில் ஏதேதோ தூற்றினான். நல்லவேளையாக என் பேருந்து அந்நேரத்தில் வர நான் அவனை சட்டை செய்யாது பேருந்தில் ஏறி இடத்தைக் காலி செய்தேன்.


அதன் பிறகு, நானும், அவளும் பள்ளி விட்டு ஒன்றாக வரும்போதெல்லாம் அவன் எங்களைப் பின் தொடர்ந்து வந்து எங்களை நோட்டமிட்ட்டுக் கொண் டிருப்பான். அவன் Hazala விடம் ஏதும் கலாட்டா செய்யக்கூடாது என்பதற்காக, அதுமுதல், அவளை பஸ் ஏற்றி அனுப்பிய பிறகே நான் புறப்படுவதை வழக்கமாக் கிக் கொண்டேன். பஸ் நிறுத்தத்தில் என்னை எப்போது பார்த்தாலும் முறைத்துக் கொண்டே இருப்பதை அந்த மேல் வகுப்பு அண்ணனும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

வகுப்பில், நண்பர்களின் அரட்டையிலும் அடிக்கடி அவள் பெயர் அடிபடுவதை கவனித்தேன். என்னவென்றறிய காதைத் தீட்டினேன்! பலப்பொழுதும் அவளைப்பற்றி கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள். நாகரீகமில்லாத கமெண்ட்ஸ் அவை.

அந்த நண்பர்கள் மீது கோவம் வந்தது, அவர்களால் அவளுக்கு ஏதேனும் தொல்லை வருமோ என்று பயமும் இருந்தது. அவளை எப்படி எச்சரிப்பது? நேரடியாகச் சொல்லும் அளவு துணிச்சல் இல்லை. ஆதலால் ஒரு நாள் வகுப்பு முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போன பிறகு அவள் டெஸ்க்குக்குச்சென்று சாக்பீஸால் "ஜாக்கிரதையாய் இரு" என்று எழுதி வைத்தேன்.


நான் அவள்க்கு காவலாக வேண்டும் என்று தோன்றியது. அதற்காகவேனும் அவளின் நெருங்கிய தோழனாய் ஆகவேண்டும்.

~~~ 0 ~~~

டைவேளையில் சமோஸாக்கள் மற்றும் பலகாரங்கள் வாங்க பெண்களூக்கு வகுப்பில் உடன் படிக்கும் பையன்கள் உதவி செய்வது வழக்கமாக இருந்தது. பையன்களிடம் காசு கொடுத்துவிட, பையன்கள் பெண்களுக்குப் பலகாரம் வாங்கித்தருவார்கள். அதும் எங்கள் வகுப்பு முதல் மாடியில் இருந்ததால் படியிறங்கச் சோம்பல்கொண்டு பெரும்பாலும் பெண்கள் பையன்களிடம் இந்த உதவியை பெற்றுவந்தார்கள்.

எங்கள் வகுப்பில் பெண்கள் பக்கம் உள்ள ஜன்னலில் திண்டு இருக்கும். இடைவேளைகளில் பெண்கள் இந்த திண்டில் ஏறி அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். எங்கள் வகுப்பின் ஒரு பக்கம் வராந்தாவும், மறு பக்கம் கீழே செல்லும் படிக்கட்டும் இருக்கும். வராந்தா வழியாக வகுப்பினைச் சுற்றிச்சென்று படி வழியாக கீழே இறங்கிச் செல்லவேண்டும். பெண்கள் பக்கமுள்ள ஜன்னல் வழியே பார்த்தால் இந்த மாடிப்படி தெளிவாய்த் தெரியும்.

Hazala என்னிடம் பைசா தருவாள். நான் அவள்க்கு பலகாரம் வாங்கிக் கொடுப்பேன். இப்படி அவள் என்னோடு நெருங்கிப் பழகுவது என் ஹிந்தி நண்பர்களிடையே ஒரு எரிச்சல் அலையை கிளப்பியிருந்தது. போயிம் போயும் ஒரு மதறாஸியிடம் பள்ளியிலேயே அழகானப் பெண் நெருங்கிய நட்பு பாராட்டுவதா? என்று ஒரு கும்பல் என் மேல் கோபம் கொண்டு திரிந்தது. நான் இதை உணராதவனாய் இருந்திருந்தேன்.

ஒரு நாள் இடைவேளையின் போது வழக்கம் போல் அவள் காசு தர, நான் எனக்கும் அவளுக்கும் சேர்த்து பலகாரம் வாங்க வகுப்பிலிருந்து வெளியேறி, வராந்தா வழியாக, வகுப்பின் பின்புறம் வந்த போது என் வகுப்பு நண்பர்கள் சிலரும், மேல் வகுப்பு அண்ணாக்கள் சிலரும் என்னை சூழ்ந்துகொண்டார்கள். ஒருவன் என் சட்டையைப் பிடித்தான், நான் புரியாமல் விழித்தேன்.

"கையிலிருக்கும் காசை கொடுடா" -- என்றான் என் வகுப்பில் படிக்கும் என்னை விட குண்டான நண்பன்!

"எதுக்கு?" -- என கேட்டேன் அவனிடம். ஹிந்தியில் இதை கேட்பது சுலபம் "க்யூ?"!!

"அவளுக்கு நாங்கள் பலகாரம் வாங்கிக் கொடுத்துக்கொள்கிறோம். நீ போகவேண்டாம்" என்றவர்கள் என் கையிலிருந்த பணத்தையும் பிடுங்க முயன்றார்கள். நான் முறுக்கிப்பிடித்து முரண்டு பிடித்தேன்.

"மதறாஸியான உனக்கு இத்தனை திமிறா? மகனே மிதிபடுவாய்" என்றார்கள். மறத்தமிழனான எனக்கோ கட்டுக்கடங்காத கோவம் வந்தது. அனைவரையும் தூக்கிப்பந்தாடிட வேகம் வந்தது. ஆனாலும் விவேகம் [அல்லது இயலாமை] அதை தடுத்தது நிறுத்தியது.

"இனி அவளிடம் நீ பேசவோ பழகவோ அறவே கூடாது" என்றார்கள். அப்போது தான் மனோகரா போல் பொங்கி எழுந்தேன். "எனக்கும் அவளுக்கும் இடையில் நீங்கள் யாரடா" என்று அரைகுறை ஹிந்தியில் சீறி என் எதிரே நின்றிருந்தவனை எட்டி விட்டேன் ஒரு உதை.

"அபேஹ்.. தூனே முஜே மாரா?" என்று ஹிந்தி வில்லன் போல் சீறி எழுந்தவன் முஷ்டியை முறுக்கி என் முகத்தினை தாக்க ஓடி வந்தான். நான் கண்மூடி குத்து வாங்கத் தயாரானேன் ஆனால் குத்து விழவில்லை. கண் திறந்த போது என் அருகே Hazala நின்றிருந்தாள். அவள் முகம் கோவத்தில் சிவந்திருந்தது.

வழக்கமாய் அவள் தன் தோழிகளோடு ஜன்னல் திட்டில் தான் அமர்ந்திருப்பாள். அன்று பலகாரம் வாங்க புறப்பட்ட நான் வெகுநேரமாகியும் மாடிப்படி பக்கம் வராதிருந்ததால் என்ன ஆயிற்று என, என்னைத் தேடி வந்திருக்கிறாள்! அவளைக்கண்டதும் அண்ணன்கள் அடிதடியை நிறுத்திவிட்டார்கள்.

அவள் ஒன்றும் பேசவில்லை. என் கையை பிடித்து "ஆவோ மேரே சாத்" என்று கூறி சர சரவென இழுத்துக்கொண்டு படி இறங்கிச்சென்றாள். இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். கோவம் அடங்கவில்லை அவளுக்கு. "பொறுக்கிகள்!" என்று அவர்களை திட்டிக்கொண்டே இருந்தாள்.

"கொஞ்சம் நாளாகவே என்னை வம்பிழுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் பொறுமையாய் இருந்தும் என்னை சீண்டுகிறார்கள். என்னைப்பற்றி தெரியாது அவர்களுக்கு...." -- அந்த அழகு முகம் சிவந்தது. கோவத்தில் கோவைப்பழ இதழ்கள் துடித்தது! இத்தனை கோவம் வருமா இவளுக்கு? ஆச்சரியமாகவும் இருந்தது.

"நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், அதுவும் அந்த மேல் வகுப்பு பையனிடம். உன் friendship வேணும் நு அலையாய் அலையறான். என்னை தூது வரச்சொன்னான். நான் மறுத்துவிட்டேன். அந்த கோவத்தை ஆள் வைத்து இன்று என்னிடம் இறக்கிவைக்கப் பார்த்தான்...."
-- என்று நான் கூறி முடிக்கும் முன் அவள் தொடர்ந்தாள்,


"எனக்கும் தெரியும். அவன் ஒரு நாள் என்னிடமே வந்து வம்பும் செய்தான்! எனக்கு விருப்பம் இல்லையென்று சொன்னபிறகும் தொந்தரவு செய்தான். உன்னையும் என்னையும் சேர்த்து ஏதேதோ உளறினான். இனியும் தொந்தரவு செய்தால் அவன் நல்ல பாடம் படிப்பான்!"
-- என்றாள். அவள் வார்த்தைகளில் அக்னி!


இருவரும் வகுப்புக்கு திரும்பினோம்.

"என்னால் தேவையில்லாமல் உனக்குப் பிரச்சினை வந்தது!"
-- என்றாள் கவலையோடு! [மேரே வஜே சே தேரே கோ பி பரிக்ஷான்!]


"உனக்கேதும் பிரச்சினை வரக்கூடாது அதுவே என் கவலை இப்போது!"
-- என்றேன் அக்கறையோடு! [துஜே குச் தக்லீப் நஹி ஹோனா வஹி மேரா பரிக்ஷான்!]


வராந்தாவில் என்னை தாக்கவந்த கும்பல் நின்றுகொண்டிருந்தது. அவர்களை சட்டை செய்யாது நடந்தோம். அவள் என் கைகளோடு அவளின் கை கோர்த்துக் கொண்டாள்! அன்றும் பள்ளி முடியும் வரை வகுப்பில் என் அருகில்தான் அமர்ந்திருந்தாள்!

~~~ 0 ~~~

வளையை மயங்க வைத்து அதன் கை காலில் பின் குத்தி "dissect" செய்வார்கள் உயிரியல் மாணவர்கள். திடீரென மயக்கம் தெளிந்து தவளை குதித்து ஓடும். அதை பார்க்கும் மாணவிகள் பயந்து அலறுவார்கள். இது ஒரு தமாஷ் என்று நான் அதைப் போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.

அன்றும் நான் அதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது ஓர் அலறல் கேட்டது. தவளை ஏதும் தாண்டவில்லை பிறகேன் இந்த அலறல் என அலறல் வந்த திசை நோக்கியபோது மேல்வகுப்பு அண்ணனின் வகுப்பில் கைகலப்பு நடப்பது தெரிந்தது.

என்ன பிரச்சினை என ஓடிச்சென்று பார்க்கையில், மூன்று ஆஜானுபாகுவான நபர்கள் அண்ணனை பிடித்து இழுத்து வருகிறார்கள். அதில் ஒருவன் அண்ணனின் முடியினை பிடித்து இழுக்க கொத்தாக கொஞ்சம் முடி அவன் கையோடு வந்தது. Hazala-விடம் வம்பு செய்த மேல் வகுப்பு அண்ணன் தரையில் வீழ்த்தப்பட்டு மிதிக்கப்பட்டு நன்றாய் உதையும் வாங்கிக்கொண்டிருக்கிறான்.


அடித்தவர்கள் அவனிடம், "இனி எந்தப் பெண்ணிடமும் உன் வாலை ஆட்டாதே" என்று எச்சரித்து அவனை எறிந்துவிட்டுச் சென்றார்கள். அடிக்க வந்தவர்கள் இந்த பள்ளி மாணவர்கள் அல்ல வெளி ஆட்கள் என்று புரிந்தது. அடி வாங்கிய அண்ணன் ஏதுமே நடக்காதது போல எழுந்து சிரித்துக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தான். அதைப்பார்த்ததும் எனக்கு அவன் மேல் வந்த கொஞ்சம் அனுதாபமும் இல்லாது போனது.

"இனியும் தொந்தரவு செய்தால் அவன் ஓர் பாடம் படிப்பான்!" என்று ஹஜாலா கூறியிருந்தது ஞாபகம் வர, இந்த சம்பவத்தில் அவளுக்குத் தொடர்பு இருக்குமோ என எனக்குச் சந்தேகம் வந்தது.

நான் வகுப்புக்கு ஓடினேன். அங்கே நடு நாயகமாய் ஹஜாலா அமர்ந்திருக்க அவளைச்சுற்றி தோழிகள் பட்டாளம். அவள் அருகே சென்றேன். என்னை பார்த்தாள்! அவளூக்குத் தொடர்பு உண்டு என்பதை உணர்த்தியது அவள் பார்வை.


"திரும்பவும் தொல்லை கொடுத்தான். நேற்று மிகவும் கொச்சையாகப் பேசி என்னை அவமானப் படுத்திவிட்டான். அதுதான் என் அண்ணன்களிடம் செல்லிவிட்டேன்" -- என்றாள்.

அந்த ஆஜானுபாகு நபர்கள் இவள் அண்ணன்களா? ஆடிப்போனேன்!


"என்னை மட்டுமல்ல, இவனையும் வம்பிழுத்திருக்கிறான் பத்மாஷ். என்னிடம் தூது செல்ல வற்புறுத்தி தொல்லை கொடுத்திருக்கிறான். அப்போதே இவன் என்னிடம் அதைக்கூறி என்னை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னான்!" -- என்று மேல் வகுப்பு அண்ணன் சிபாரிசுக்கு வந்ததையும் நான் அவனிடம் கோவப்பட்டதையும் தோழிகளிடத்து கூற,

"யார்? இந்த மதறாஸியா? அவன் மிரட்ட இவன் மறுத்தானா?" -- என ஆச்சர்ய குரல்கள் எழுந்தன.

"அவுர் நஹி தோ க்யா? வைசே பி பெஹன் கோ குச் பரிக்ஷான் ஹை தோ கோன் தேக்கே ரஹ் சக்தா ஹை?" [என்ன இருந்தாலும் சகோதரிக்கு ஒரு தொல்லை என்றால் யாரால் தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?] --என்று அதற்கு Hazala பதிலும் கூறினாள்.

தொல்லை கொடுத்தவனை அடித்துவிட்டுச் சென்ற அண்ணன்களை குறிப்பிடு கிறாளா? இல்லை என்னைத்தான் குறிப்பிடுகிறாளா எனும் குழப்பத்தை "சகோதரி" எனும் சொல்பதம் உண்டாக்கியது. அந்த குழப்பம் இன்றும் எனக்குத் தீர்ந்தபாடில்லை.

~~~ 0 ~~~

து எவ்வாறாயினும் ஆடிய வால்கள் அடங்கின! எங்கள் நட்பு அதே போல் தொடர்ந்தது. கால ஓட்டத்தின் வேகத்தில் பள்ளிக்காலமும் முடிவுக்கு வந்தது.

Sendoff-ன் போது அம்மாவிடம் கூறி அனைவருக்கும் இட்லியும் சாம்பாரும் எடுத்துச் சென்றிருந்தேன். முன்பு பல முறை கூறியிருக்கிறாள் "சவுத் கா சாம்பார் ரொம்ப பிடிக்கும்" என்று. அவள் ரசித்து சாப்பிட்டாள். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாய்க்கும் என் அம்மாவுக்கு "சுக்ரியா" கூறச்சொன்னாள்.

"ஆண்ட்டி ஜி கோ போல்னா... சாம்பார் பஹுத் படியா தா!" -- என அவள் என் அன்னையை ஆண்ட்டி என்று நெருக்கம் காட்டியது எனக்குப் பிடித்திருந்தது.

எல்லோரும் விடைபெற்றுக் கொண்டோம். அவளும் நானும் வழக்கம் போல் for one last time ஒன்றாக பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினோம். மனதில் இனம் புரியாத பரவச வேதனை. அவளுக்கும் அப்படித்தானா என தெரியவில்லை. இருவரும் பேசவில்லை, மவுனமாய் நகர்கிறோம்.

"அடுத்த வருடம் மேல் வகுப்புக்கு இந்த பள்ளியில் தானே வருவாய்?" -- மவுனத்தை உடைத்தாள்!

"இல்லை. அப்பாவுக்கு தமிழ்நாட்டிற்கு மாற்றல் ஆகிற்று. அங்கே போய்விடுவேன்" -- என்று நானும் சேர்ந்து உடைத்தேன் மவுனத்தை.

"அப்படியா?" -- என்று ஆச்சர்யமாய் கேட்டுக்கொண்டாள் சாதாரணமாக. இதற்கும் மேல் ஏதும் ரியாக்ஷனை அவளிடமிருந்து எதிர் பார்த்திருந்தேனா என்பது பற்றி தெளிவான சேதிகள் மனதில் பதிந்திருக்கவில்லை.

"யஹ் தேரேலியே! மேரி தரப் சே!" -- அப்பாவுக்கு யாரோ பரிசளித்திருந்த அழகான டைரி ஒன்றை அம்மாவிடம் சண்டை போட்டு எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி வைத்திருந் தேன். அதை "என் ஞாபகமாய் வைத்துக்கொள்!" என்று கூறி அவளிடம் நீட்டினேன்.

"அச்சா ஹை!" -- என்று அதை ஆர்வமாய் வாங்கிக்கொண்டாள். அவள்க்கு அது உண்மையிலேயே பிடித்திருந்ததாக அவளின் முகபாவம் பறைசாற்றியது.

"இதைப் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வரும்!" -- என்றாள். அதற்காகத்தான் கொடுத்தேனோ?


மீண்டும் மவுனம். அவள் அந்த டைரியை புரட்டிக்கொண்டே வருகிறாள். ஏதும் தேடுகிறாளோ? அவள் விலாசம் வாங்கி அவளோடு எக்காலத்தும் ஓர் கடிதத் தொடர்பு வைத்திருக்கவேண்டும் என்று மனம் ஓர் தீர்மானத்தை முன்மொழிந்தது. அதற்காக விலாசம் கேட்க வேண்டும்.

தற்போது ஏனோ ஏதும் பேச முடிய வில்லை. தொண்டையை ஏதோ அடைத்தது. சரி, பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் வேளையில் அவள் விலாசத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என தீர்மானத்தை ஒத்தி வைத்தேன்.


நிறுத்தம் வந்தது. நின்றோம். என் பேருந்து எப்போது என கேட்டாள். அது பற்றி கவலையில்லை உன் பேருந்து வந்து உன்னை ஏற்றி விட்டுப் பிறகு செல்கிறேன் என்றேன். "சரி" என்று சம்மதித்தாள்! இன்னும் ஓரிரு நிமிடங்களில் அவள் பேருந்தும் வந்துவிடும். அதற்குள் அவளிடம் நிறைய விஷயங்கள் எனக்குச் சொல்ல வேண்டியிருந்தது.

அவள் தோழமைதான் நான் இந்த வருடம் முழுதும் இங்கேயே படிக்க காரணம் என்பதையும், இவள் மாத்திரம் தான் எனக்கு அமைந்த ஒரே தோழி என்பதையும், இவள் தோழமை எனக்கு என்றும் வேண்டும் என்பதையும், கடிதத் தொடர்பு வைத்திருக்க விரும்புகிறேன் என்பதையும், இப்படிச் சொல்ல வேண்டிய விஷயங்கள் யாவும் ஒரே நேரத்தில் கிடைத்த பல ரேடியோ ஸ்டேஷன் போல கூச்சல் போட்டுக்கொண்டிருக்க,

அவள் பேருந்து வந்தது!

"அச்சா!" -- என்று சிரித்து கை கொடுத்தாள். கைபற்றி நானும் விடை கொடுத்தேன். அவள் பேருந்தில் ஏறி டாடா காட்டி சிரித்த முகத்தோடு விடை பெற்றுச் சென்றாள். அந்த பேருந்து மறையும் வரை நானும் இமைக்காமல் வழி மேல் விழி வைத்து விடை கொடுத்தேன்!

இல்லை இல்லை, நீங்கள் புரிந்துகொண்டிருப்பது தவறு...
அது காதல் அறியா வயது என்பதால் காதல் வயப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் மனது வலித்திருந்தது!

[இன்னும் நுகர்வேன்!]

Comments

Manian said…
Hazala'vai marupadiyum contact panniningala...:)


immm... ethupola ennum niraiya erukkum pola ...

nijama.. post nalla erukku...unga style'laye... ha..ha.. nice post!

Best regards,
Mani
06th Jan 2010,10:38
NRIGirl said…
Great blogs! Enjoyed reading... Keep it up!

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?