மீண்டும் ஒரு ஜூன் 30!


"நேசமணி ராசாவுக்கும், கூட வந்த மேத்தனுக்கும் ஜே!"

-- என்று எழுந்திடும் பெருங்குரல் விண்ணையே பிளந்திடும் என்று என் குடும்பத்துப் பெரியவர்கள் கூற நான் கேட்டதுண்டு. இந்த முத்திராவாக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘நேசமணி ராசாவோடு உடன் வந்த மேத்தன்’ தான் என் வாப்பப்பா! என் தாத்தா. எங்களூர் பக்கம் முஸ்லிம்களை "மேத்தன்" என்றழைப்பது வழக்கம்.

என் தாத்தா, திரு. M.K பாவா அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்திலிருந்து பிரித்து, தமிழகத்தோடு இணைக்க, மார்ஷல். நேசமணி நாடார் அவர்கள் தலைமையில் நடந்த போராட் -டங்களில், அவரோடு இணைந்து போராடியவர். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் ஒரு முக்கியஸ்தர். அந்தப் போராட்டங்களின்போதுதான் நான் மேலே கூறிய முத்திராவாக்கியம் விண்ணதிரவைக்கும்.

என் தாத்தா ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. "திங்கள்" எனும் பெயரில் பத்திரிகையும் நடத்தியிருக்கிறார். தமிழ் வித்தகர். ‘கவிமணி’ தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் அருமைச் சீடர்களில் ஒருவர். தெளிந்த சிந்தனையாளர். பண்பாளர். சமூகத்தில் மதிப்போடும், மரியாதையோடும் வாழ்ந்தவர்.

தந்தையின் பெயரையே தன் பிள்ளையான எனக்கும் சூட்டி மகிழ்ந்தார் என் தந்தை. நானும் M.K. பாவா தான்.

தாத்தா, மீரான் காதிர் பாவா. பேரன் நான், மீரான் காசிம் பாவா.

"நாட்டைத்தான் கவனித்தாரேயன்றி, வீட்டை கவனிக்கத் தவறியவர்" - என்று என் தாத்தாமீது, பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. என் பாட்டியம்மாவின் சகோதரரோடு சில வருடங்க ளுக்குமுன் நான் உரையாட நேர்ந்தபோது, தன் தங்கையின் கணவரைப் பற்றி இப்படியொரு குறை தமக்கு இருப்பதாக, அவரே என்னிடம் தெரிவித்தார்.

அது ஒரு குறையென்று எனக்குத் தோன்றவில்லை. திரு. M. K. காந்தி மீது கூட இந்தக் குற்றச்சாட்டு உண்டு. அப்படியிருக்க, திரு. M. K. பாவா இதிலிருந்து தப்பிப்பதாவது?

ஆனால், என் தாத்தா மீது படியும் இந்தக் குற்றச்சாட்டுகள் செல்லுபடியாகாது. ஏனென்றால், அரைவயிற்றுக்கே கஞ்சி கிட்டினும், கஷ்ட்டங்கள் மேற்கொண்டாலும், அவர் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியளிக்கத் தவறவில்லை. ஆதலால்தான், என் தந்தை வங்கி மேளாளர் ஆனார். என் அத்தை மருத்துவர் ஆனார். மற்றொரு அத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகினார்.

குடும்பம் சீரழிந்திடவில்லை, யாரும் சிரிக்கும் நிலையிலும் இல்லை. சிறப்போடுதான் இன்றும் இருக்கிறது. ஆகவேதான் சொல்கிறேன், தாத்தா மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் செல்லுபடியாகாது என்று.

தாத்தா நாட்டை மட்டும் பார்த்தால் என்ன? அவர் பிள்ளை, என் தந்தை, படிக்கும் காலத்திலேயே குடும்பத்தைத் தாங்கும் தூண் ஆனார். ஸ்காலர்ஷிப் வரும் பணத்தை வீட்டுக்கு அனுப்பி அப்போதே குடும்பத்தைத் தன் தோளில் ஏந்திக்கொண்டார். அவர் அதை பாரம் என்று நினைக்கவில்லை. அந்தச் சூழலைச் சுமை என்றும் காணவில்லை.

தன் மகன், குடுப்பத்தைக் காப்பாற்றுவான் எனும் நம்பிக்கையோடு நிம்மதியாகத்தான் என் தாத்தா கண்மூடினார்.

அவ்வமயம், ஐந்து சகோதரிகள் திருமண வயதை எட்டியிருக்க, அதில் ஒரு சகோதரி இன்னும் மருத்துவம் படித்துக்கொண்டிருக்க, இவர்களையெல்லாம் கரையேற்றும் நிலையில் தான் இருப்பதை எண்ணி ஒருபோதும் என் தந்தை கலக்கம் கொள்ளவில்லை. அதற்காக, தான் எதிர்கொண்ட இன்னல்களைத் தியாகம் என்றும் அவர் கருதவில்லை. எத்தனை இக்கட்டாயினும் புன்னகைமாறாத இன்முகத்தோடே இன்றளவும் என் அப்பா பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்.

அத்தைக்கு நல்ல வரன் ஒன்று அமைந்திருப்பதாகக் கூறி ஊரிலிருந்து கடிதம் வரும். ஒன்று அப்பா ஊருக்குப் போவார் அல்லது ஊரிலிருந்து யாரேனும் வந்து அது குறித்து பேசுவார்கள். தேதி முடிவாகும். அதற்குப்பின்னான‌ நாட்களில் அப்பா தன் 'ஈஸி சேரில்' உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனைக்குள் ஆழ்வார். ஏதேனும் வழி காண்பார். பிறகு, அங்கோடி, இங்கோடி, உருட்டிப் பிரட்டி ஒருவழியாக சாம்பத்யம் திரட்டி, கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவார். இதற்காக அவர் ஓடும் ஓட்டம் இருக்கிறதே? என்னென்று சொல்வது? ஒரு அத்தையின் கல்யாணத்தின்போது, கல்யாணத்தன்று காலை வரையிலும் ஓடிக்கொண்டுதான் இருந்தார்.

ஒரு கல்யாணத்தை நடத்தி முடித்து பெருமூச்சுவிட்டு கொஞ்சம் நிமிர்கையில் மீண்டும் அடுத்த கடிதம்! அடுத்த அத்தை! அடுத்த வரன்!

இதிலெல்லாம் அப்பாவுக்குப் பின்னே துணையாக இருந்தது என் அம்மா என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். வரவுக்குள் செலவினைச் சுருக்குவதோடு அதில் கொஞ்சம் சேமிக்கும் சாமர்த்தியமும் அம்மாவுக்கு உண்டு. அந்த சேமிப்பு அப்பாவுக்கு தக்க நேரத்தில் பயண்படுவதுண்டு. இதனாலேயே என் அம்மாவை "வரம் தரும் தேவதை" எனலாம்.

என் அத்தைகளும் சூழ்நிலை உணர்ந்தே நடந்தனர். 'என் ஆசை இது' என்று யாரும் ஏதும் சொல்லியதில்லை. என் விருப்பம் இதுவென்றோ, எனக்கு இப்படி ஒருவர்தான் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்றெல்லாம் யாரும் சொன்னதே இல்லை. அண்ணன் முடிவுக்கே அனைத்தையும் விட்டுவிட்டவர்கள். இன்றும் அளப்பறிய பாசத்தை தங்களின் அண்ணன் மீது வைத்திருக்கும் அருமைத் தங்கைகள் அவர்கள்.

எல்லோரையும் ஒருவழியாகக் கரையேற்றி, நிலமைகளைச் சமாளித்து ஓரளவு நிகர்த்தி நிமிர்கையில், பிள்ளைகள் நாங்கள் வளர்ந்து நின்றோம். என் தங்கை தொல்லைகள் ஏதும் கொடுக்கவில்லை. நான்தான் படிக்காத மேதையாகத் திகழ்ந்து ஆகாத அக்கிரமங்கள் செய்திட்டேன். நான் எல்லோரும் போற்றும் நல்ல பிள்ளையாகத் திகழ்ந்தாலும் படிப்பு விஷயத்தில் பப்பரக்கேங்ங்ங்....!

என்ன செய்வது? நான் ‘ஆடினால் கறக்கும்’ மாடுகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட ‘பாடினால் கறக்கும்’ மாடு. ஆடிக்கறந்தே பழக்கப்பட்டுவிட்ட என் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் அவ்வாறே என்னையும் கறக்க முயன்றனர். அவர்களின் ஆட்டம் கண்டு மிரண்டுபோனேனே தவிர, கறக்கத்தோதாக என்னிடம் ஏதும் சுரக்கவில்லை. அவர்கள் பாடியிருக்கவேண்டாம், நானே எனக்காக பாடியிருந்தாலும் "சுரந்திருக்கும்" என்பதை உணர்வதற்குள் சகல சிரமங்களையும் அப்பா சிரமேற்கொண்டுவிட்டார்.

தங்கைகளை கரையேற்ற ஓடிய ஓட்டத்தின் தொடராக என்னை ஓர் நிலைக்கு கொண்டுவர ஓடினார் அப்பா. நல்ல பள்ளியில் அட்மிஷன் வாங்குவது துவங்கி, அமெரிக்காவுக்கு என்னை அனுப்பத் தேவையான தயாரெடுப்புகள் செய்ததுவரை, அவர் அலைந்த அலைச்சல் சொல்லி மாளாது.

சரி, இவன் இனி தன் சொந்தக்காலில் நின்றிடுவான் என்று தெம்பு பிறக்க, சற்றே நிமிர்ந்தபோது கல்யாண வயதை எட்டி நின்றாள் என் தங்கை.

நானோ இன்னும் முழுதாகக் காலூன்றவில்லை. காத்திருக்கவோ காலமும் இல்லை. சொந்தபந்தங்களோ "இத்தன காலமா பேங்க்ல மேனேஜரா இருந்திட்டு சொந்தமா ஒரு வீடு கூட இல்லேன்னா எப்படி நல்ல வரன்க‌ள் வரும்?" என்றெல்லாம் பேசத்துவங்க, அம்மா பயம்கொள்ளத் துவங்கினாள். அப்பா அதுகண்டு வருந்தினார்.

மீண்டும் ஓட்டம். வீட்டு வேலைகள் ஆரம்பமானது. அப்போதே தங்கைக்கு நல்லதோர் வரனும் வந்து அவளுக்கு நல்வாழ்க்கையும் அமைந்தது. வீட்டையும் கட்டி, தனியொரு ஆளாக நின்று கல்யாணத்தையும் நடத்தினார் அப்பா. அவர்தான் எல்லாம் செய்தார். என் பங்கு என்பது இராமருக்கு உதவிய அணில்களில் ஓர் சிறு அணில் போன்றதேயாகும்.

ஆனாலும், என்னைப் புகழ்வார். "உன்னால்தான் இதுவெல்லாம் நல்லபடியா நடந்தது" என்றுதான் எப்போதும் கூறுவார். இந்தத் தர்க்கம் எங்களுக்குள் அடிக்கடி நிகழ்வதுண்டு.

"என் பையன்தான் என் தெம்பு" என்பார் அப்பா. நானும், "யாமிருக்க பயம் ஏன்?" என்பேன். ஆனால் உண்மையில் அப்பாதான் என் தெம்பு. இன்றும் என் கவலைகளை அவர்தான் சுமந்துகொள்கிறார், மனதால் என்னை அவர்தான் சுமந்து செல்கிறார்.

தாத்தா திரு. M. K. பாவாவுக்கு இன்றும் ஊரில் பெயரும், மதிப்பும் இருக்கத்தான் செய்கிறது. வயது மூத்தவர்கள் சிலர் இன்னும் அவரை மறவாது நினைவில் கொண்டுள்ளனர். "பாவா சாயிப்புக்குப் பேரானா நீ?" என்று அமெரிக்காவில் நான் சந்தித்த ஒரு நாஞ்சில் நாட்டுக்காரர் கூட என் தாத்தாவை நினைவு கூர்ந்து பேசி என்னைப் பெருமைக்குள்ளாக்கினார்.

இப்படியோர் தாத்தாவின் பேரனாய். இத்தகைய ஒரு தந்தைக்குப் பிள்ளையாய் நானும் பிறந்தேன், இதுநாள்வரை வளர்ந்தேன். இதோ இன்று ஜூன் 30. இன்னுமொரு பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்களைப் போல என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினேனா என்பதுதான் என்னைக் குடையும் கேள்வி.

காலம், மூர்க்கத்தனமான வேகத்தோடு, அசுரத்தனமாக ஓடுகிறது. என் வாழ்க்கை பக்கங்களில் இளமை முடிவுரை எழுதவும், முதுமை முன்னுரை எழுதவும் ஆயத்தமாகிவிட்டது. சமீப காலமாக ஒவ்வோர் பிறந்தநாள் அன்றும் மகிழ்ச்சிக்குப் பதிலாக, ஒருவித பயமே மனதில் மேலோங்கி இருக்கிறது.

மகாகவி பாரதி பாடினான்...,

தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனைதரைப் போலே - நானும்

வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று.

நானும் பிறந்திட்டேன்... தாய் தந்தை தயவால் வளர்ந்திட்டேன்... பின் நரைகூடி கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் வேடிக்கை மனிதனாய் வீழ்ந்திடக்கூடாது என்பதே அப்பயம்.

உலகை புரட்டிப்போட்டு சாதிக்கவேண்டும் எனும் எண்ணமில்லை. என்னை நாடுவோரின் இன்னல்களைத் தீர்க்கும் ஓர் நிலை, என்னைச் சார்ந்தோர் பெருமைகொள்ளத்தக்கதாய், சாராதோர் நினைவுகளில் நீண்டு நிற்கத்தக்கதாய், என்னால் சிலர் நல்வாழ்க்கை கொள்கிறார் என்றே நிம்மதிகொள்ளத்தக்கதாய், ஓர் வாழ்க்கை அமையப்பெருமாயின், என் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக அமையும் என்றே எண்ணுகிறேன். அன்று மீண்டும் “ஜூன் 30” எனக்கு மகிழ்ச்சி தரும்.

இவை அமையப்பெற நீங்கள் என்னை வாழ்துவீர்களாயின் நான் நன்றியுடையவனாவேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி!

Comments

NRIGirl said…
That was a lovely post Bawa! Nice to know about your elders.

Now, wishing you belated birthday wishes and may all your fondest dreams come true - including the ones you have wished for towards the end of the post!

Once again enjoyed your writing style. Let me check with Amma if she has heard of your Grandfather.

My Grandma would have heard of him as she was a devote support of the then Congress...
Y L said…
Dear Bawa
Wish you many many happy returns of your day,June 30th.
very glad to read about your wonderful family.
My mother in law would have known about your grand father.
I have heard of Nesamany Nadar.
My congratulations to your father and mother for the very good example they have set for others.
My special appreciations to your mother.
Though I have met your mother and sister in your house, I was in a hurry since my excursion party was waiting on the road and I had no time to get aquainted with them.
Every good work gets its reward and your reward will be great.
May the Almighty God bless you abundantly.
NRIGirl said…
Bawa! In case you are wondering who YL is, that's my Mom :))
Anonymous said…
It was too good...I remembered your birthday but i dont remember whether i sent u the wishes...Still belated wishes again.

since 1993 i have been an ardent fan of your writing..that will continue till i die...Always my wishes will be there for you...and i am sure u know that :)

Kolu.N...

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

சாதனை வண்டு!!