வானவில் பூக்கள் [ மொட்டுமலர்கள்! ]!

வானவில் பூக்களை அறிமுகப்படுத்துகிறேன்!

என் வாழ்க்கை பயணத்தில் ஆங்காங்கே பூத்து மணம் பரப்பிய இப்பூக்களை, மீண்டும் கொஞ்சம் முகர்ந்து பார்க்க, என் நந்தவனத்துக்குள் மீண்டும் ஒரு உலா போகப்போகிறேன். பலமுறை நான் தனிமை உலா நடத்தியிருந்தாலும் இம்முறை உங்களையும் என்னோடு அழைத்துச்செல்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.

வாழ்க்கைப் பாதையில் இதுவரை உள்ள பயணத்தில் ஆங்காங்கே சில பூக்கள் என் வாழ்வை வசந்தமாக்கியிருந்தன. வலி உண்டாக்காத பூக்கள் இவை, காயம் தந்ததில்லை, வேதனை தரவில்லை, இதயத்தினை சற்றே தீண்டிச்சென்ற தென்றல் பூக்கள் இவை!

வானவில் போல் திடீரெனத் தோன்றி, அழகினை இரசிக்கவைத்து, இரசித்து முடிக்கும் முன்னமே மறைந்து போனதாலும், சில பூக்களை நானும் பின்னர் மறந்து போனதாலும் தான் இப்பூக்கள் வானவில் பூக்கள்!

வண்டின் தோள் ஏறி வாருங்கள். அங்கே என் வானவில் பூக்கள் உங்களை வரவேற்றிட காத்திருக்கின்றது.

~~~ 0 ~~~

னக்கிடங்கை திறந்து, நினைவுக் கடலில் குதித்து மூச்சடக்கி முடிந்த வரையில் அடி ஆழம் வரை செய்திட்ட பயணத்தில் கிடைத்த முதல் முத்துப்பூ, ரோஜா நிற சட்டையும், பச்சை நிற பாவாடையும் அணிந்த என் முதல் வகுப்பு தோழிப்பூ!

அவள் முகம் எனக்கு நினைவில்லை ஆனால் அவள் மணம் இன்னும் என் நினைவில் நீங்காது அப்படியே இருக்கிறது. அவள் நிஜப்பெயர் தெரியாது. "கெஜா" என்று செல்லமாய் அழைப்பது போல் லேசாய் ஓரு ஞாபகம்.

கட்டிப்புரண்டு சண்டையிட்டதும் [விரசம் சேர்க்காதீர்கள்! நாங்கள் இருவரும் அப்போது ஒன்றாம் வகுப்பில் தான் படித்துக்கொண்டிருக்கிறோம்!], பிறகு அவள் அழுதபோது கண்ணீரை துடைத்துவிட்டதும் என் நினைவுப் படத்தில் அவள் அணிந்திருக்கும் பாவடையின் நிறம் போல பசுமையாய் நினைவிருக்கிறது.

கீறல் விழுந்த காட்சியாய் தெளிவில்லாது நிகழ்வுகள் நிழலாடினும் இது ஒரு காவியம். என் முதல் தோழியே, உனக்கு என்னை நினைவிருக்கிறதா? உன் முதல் வகுப்பு தோழனான இந்த குண்டு பையனை நீயும் நினைவில் கொண்டுள்ளாயா? நீ இப்போது எங்கிருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்? என்றேனும் சந்திக்க வழி உண்டா? சந்தித்தாலும் நமக்கு நம்மை அடையாளம் தெரியுமா? அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையக் கிட்டுமா?

என் தோட்டத்து முதல் பூவே! உனக்கு இக்கட்டுரையை சமர்பிக்கிறேன்!

~~~ 0 ~~~

ப்பாவுக்கு வடநாட்டிற்கு இடமாற்றம். என்னை கேரளாவில் பாட்டியிடம் விட்டு விட்டு அப்பாவும், அம்மாவும் தங்கையும் மத்தியபிரதேசத்துக்கு சென்றனர். நான் கேரளாவில் ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எட்டாம் வகுப்பு!

அசோக் குமார், புருஷோத்தமன், இராமநாதபிள்ளை, இசைக்கிராஜா இவர்களோடு நானும் சேர பஞ்ச பாண்டவர்களாய் வகுப்பில் உலா வந்த அற்புத நாட்கள் அது. கிட்டதட்ட பத்து பெண்கள் எங்கள் வகுப்பில். அதில், எப்போதும் வகுப்புக்கு லேட்டாக வந்து திட்டு வாங்கி கட்டிக்கொண்டு அழுதுவிட்டு, அதை தொடர்ந்து இரண்டு நாள் பள்ளிக்கு வராதிருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை ஞாபகம் இருக்கிறது.

அது தவிர முக்கியமாக "ராஜ ராஜேஸ்வரி" எனும் என் வகுப்பு தோழியை நன்கு ஞாபகம் இருக்கிறது. தோழி என்று அவளை இங்கே நான் கூறினாலும் எங்களுக்குள் தோழமை இருந்திருக்கவில்லை. அவளிடம் ஒரு முறையேனும் பேசியது கூட இல்லை. அசோக்கும், புருஷோவும் பேசுவார்கள். அவள் நல்ல படிப்பாள், பயங்கர வாயாடி! அவளிடம் எனக்கு பேச சந்தர்பம் கிடைக்கவும் இல்லை, நானாக பேச முயலவும் இல்லை. பெண்களோடு பேசுவதற்கு வெட்கம் கொண்டிருந்த காலம் அது.

ஆனாலும், அவளின் அதட்டலான குரலும், கலகலப்பான பேச்சும் எனக்கு பிடித்திருந்ததால் அவள் என் தோழி!

~~~ 0 ~~~

"ரீஸஸ் இண்டர்வல்" -- விடுகையில், வகுப்புக்கு வெளியே வந்து நின்றிருப்போம். பக்கத்து வகுப்பு பெண்களை பற்றி புருஷோவும், இராமநாதபிள்ளையும் எப்போதும் கமெண்ட் அடித்துக் கொண்டிருப்பார்கள். நானும் அசோக்கும் அதை இரசித்துக் கொண்டிருப்போம். எங்களுக்கு கமெண்ட் அடிக்கும் அளவுக்கெல்லாம் தைரியம் கிடையாது.

ஒருநாள் இண்டர்வல் சமயம். வழக்கம் போல நாங்கள் வகுப்புக்கு வெளியே நின்றிருக்க இராமநாதபிள்ளை என்னை ஆழமாய் நோண்டினான்.

"என்னடா?" என்றேன் அவன் கையை தட்டி விட்டவாறு.

"அந்த பொண்ண பாரு அவ உன்னத்தான் பாக்கா!" -- என்றான் நாகர்கோவில் பாஷையில்!

"யாரு?" -- நம்பிக்கையில்லாமல் கேட்டேன்!

"தோ! அவ தாம்லே!" -- இரகசியமாய் கூறி அவள் வரும் திசையில் கண்ணால் காட்டி சைகை செய்தான். அவன் காட்டிய திசையில் பல பெண்கள் வந்துகொண்டிருந்ததால் அவன் சுட்டிக்காட்டிய பெண் எது என்று தெரியவில்லை.

"அன்னா வருதா பாரு, தலைய துணி போட்டிட்டு, அவதாம்லே! உன்னத்தான் பாக்கா" -- என்று புருஷோத்தமன் அவளை கண்டுபிடித்து அவளை எனக்கு காட்டித்தந்தான்.

நானும் கவனித்தேன். ஒரு நாணப் புன்னகையை உதட்டில் ஒட்டி அவள் ஓரக்கண்ணால் என்னை பார்க்கத்தான் செய்கிறாள். எனக்கு உள்ளம் பதறியது! பயம் வந்தது!

அவள் என்னை பார்த்தது தற்செயலா இல்லை வேண்டுமென்றே பார்க்கிறாளா என கவனிக்கத் துவங்கினோம். அவள் உண்மையில் என்னைத்தான் பார்க்கிறாள் என்று உறுதியானது! இது உறுதியானதும், இண்டர்வலில் ஒரு முறை பார்ப்பது என்பது மாறி மதியநேர சாப்பாட்டு இடைவெளியில், காலையில் வகுப்பு துவங்கும் முன் என அவள் எப்போதெல்லாம் வகுப்பை விட்டு வெளியே வந்தாலும் இந்த பயல்கள் என்னையும் அழைத்துக்கொண்டு அவள் முன்னே அவளை தாண்டி செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

அப்படி ஒருமுறை அவளை அருகிலே பார்த்தபோதுதான் அவள் காதணியை கவனித்தேன். காதில் அவள் அணிந்திருந்த கம்மல் என் அம்மா அணிந்திருக்கும் கம்மல் போன்று இருந்தது. ஒரு வளையத்தில் முத்துக்கள் தொங்கும் அழகிய கம்மல் அது.

அன்றெல்லாம் இன்று போல செல் போனும் இல்லை ஈமெயிலும் இல்லை, ஏன் ·போன் கூட இல்லை. கடிதம் மட்டுமே ஒரே தொடர்பு சாதனம். அம்மா ஞாபகம் வரும் நாட்களில், அம்மாவை பார்க்கவேண்டும் எனும் ஏக்கம் வருகையில் அந்த பெண்ணின் கம்மல் மட்டுமே எனக்கு ஆறுதல். அம்மாவின் கம்மல் போன்ற கம்மல் அணிந்திருந்ததால் அவளை எனக்கு பிடித்திருந்தது!

ஒரு Sports day! ஓட்டப்பந்தையம் நடக்கிறது. Track ன் ஒரு பக்கம் என் தோழர்களோடு நான், மறு பக்கம் வராந்தாவில் தோழிகளோடு அவள். எல்லோரும் விளையாட்டை கவனித்துக் கொண்டிருக்க, அவள் தைரியமாய் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நானோ, அவள் கண்ணோடு கண் சேர்க்க முடியாமல் விலகிக்கொள்கிறேன். அவள் அதை இரசிப்பது போல் சிரிந்துக்கொண்டே வம்படிக்கும் மீண்டும் மீண்டும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஓட்டப்பந்தையத்தில் ஓடியவர்கள் சும்மா இருக்க எனக்குத்தான் மூச்சு வாங்கி வியர்த்து வழிந்தது.

அன்று தான் அவளை கடைசியாய் பார்த்தேன். என்னை பார்த்து சிரித்து வம்பு செய்துகொண்டிருந்தவள் திடீரென கூட்டத்தில் மறைந்து போனாள். அதன் பிறகு அவளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பரீட்சை வந்தது, விடுமுறை வந்தது, அடுத்த வருடம் அதே பள்ளியில் படிக்கவில்லை. நானும் அப்பா அம்மாவுடன் மத்தியபிரதேசத்துக்கே சென்றுவிட்டேன்.

அம்மாவை பிரிந்திருக்கும் ஏக்கம் குறைக்க இறைவன் அனுப்பிய தேவதையோ அவள் என்று பல முறை நான் நினைத்ததுண்டு!

~~~ 0 ~~~

பின்னொரு நாளில்,

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். ஒரு முறை ஊருக்கு போயிருந்த சமயத்தில் பஸ்நிறுத்தத்தில் இறங்கி பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருக்க எதிரே ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்தவள் என்னை பார்த்து சிரிக்கிறாள். நானும் என் மாமாவின் மில்லில் வேலை பார்க்கும் பெண்ணாய் இருக்கக்கூடும் என்று நினைத்து பதிலுக்கு சிரித்துவிட்டு அவளை கடந்துசெல்கையில்,

"நல்லாயிருக்கியா?"
-- என்று கேட்டாள் அவள். நான் நின்றேன். புரியாத குழப்பத்தோடு,

"நல்லாயிருக்கேன்" -- என்றேன்.

"காலேஜ் ல எல்லாம் சேந்துட்டியா?"

"ஆமா.."
-- என்றேன். குழப்பம் இன்னும் தீரவில்லை. மாமாவின் மில்லில் வேலை பார்க்கும் ஒருத்தி இத்தனை விவரங்களை கேட்பதாவது?

"அடையாளமே தெரியலயே.. ரொம்ம மாறி இருக்கே!"

"......" -- யாரிவள்?

"என்னை அடையாளம் தெரியல இல்ல?" -- கேட்டாள்

"ஆமா.. தெரியல... நீங்க.."

"எனக்கு புரிஞ்சது... உனக்கு என்னை அடையாளம் தெரியலன்னு. நான் ராஜேஸ்வரி உன் கூட எட்டாம் கிளாஸ் ஒன்னா படிச்சவ." -- அவள் கூறிக்கேட்ட நான் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்.

அந்த வாயாடி ராஜேஸ்வரியா? வகுப்பிலேயே நல்லா படிக்கும் அந்த ராஜேஸ்வரியா? அவளா இவள்? அவள் தான் இவள் என்றால் ஏன் இப்படி வாடிய கோலம்? என் தோழியையா மில்லில் வேலை செய்யும் வேலைக்காரி என்று நினைத்தேன்?

"நீங்க என்ன பண்றீங்க? எங்கே படிக்கறீங்க?" --என கேட்டேன்.

அவள் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லையாம், என் மாமாவின் மில்லில் இல்லை ஆனால் மற்றொரு ரைஸ் மில்லில் தான் வேலை பார்க்கிறாளாம். அடிக்கடி என் பாட்டி வீடு தாண்டி போகையில் நான் அங்கே நிற்பதை பார்ப்பாளாம், பேச வேண்டும் என்று தோணுமாம் ஆனால் எனக்கு ஞாபகம் இருக்காது என்று விட்டிடுவாளாம். இன்று ரோட்டில் எதிரே வந்ததால் பேசினாளாம்.

என்னால் ஏதும் பேச முடியவில்லை. சரி பார்க்கலாம் என்று கூறி அவளை விலகி நடக்கத் துவங்கினேன். மனம் முழுதும் கனத்திருந்தது. ஏதோ ஒரு கோவமும் தலைக்கேறியது. அவள் என்னை விட படிப்பில் பல மடங்கு கெட்டிக்காரி. இருந்தும் ஏன் அவள்க்கு இப்படி ஓர் நிலை? படிக்கும் காலத்தில் சரிக்கு சமமாய் இருந்து இன்று ஓர் ஏற்றத்தாழ்வு ஏன்? என்று பல கேள்விகள் ஏன்? ஏன்? ஏன்? என்று என்னை குதறி எடுத்தது. எதற்கும் பதில் தான் கிட்டவில்லை.

வாழ்க்கை, சமூகம், மனிதர், மனிதம், ஏற்றம், தாழ்வு, ஏழ்மை, விதி என்று பல விஷயங்கள் என் மண்டையை குடைந்தன. எல்லாம் விட்டெறிந்து ஓடிய சித்தார்தன் போல் எங்கேனும் ஓடிவிடத் தோன்றியது. ஏனோ என்னால் அவளை அந்த கோலத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் அதுதான் வாழ்வின் எதார்த்தம் இல்லையா? அதை எனக்கு புரிய வைத்துச் சென்றாள் என் பள்ளித்தோழி ராஜேஸ்வரி.

மீண்டும் ஒருமுறை அவளை சந்திக்கவேண்டும். அன்று அவள் தான் என் வகுப்பு தோழி என்று அறிந்து அதிர்ந்து நின்றதில் சரியாக பேச முடியாது விக்கித்து நின்றிருந்தேன், அதை அவள் நான் அவளிடம் பேச விரும்பவில்லை என்று எடுத்திருக்கக் கூடும். அதற்காக அவளை இன்னும் ஒரு முறை சந்திக்க வேண்டும், பழைய வகுப்புத் தோழனாய் சரளமாய் அவளிடம் பேசிடவேண்டும்.

இப்போதும் பாட்டி வீட்டுக்கு போகும் போதெல்லாம் வழி நீள என் விழிகள் தேடிக்கொண்டு தான் இருக்கின்றன அவளை, என் தோழியை, ராஜ ராஜேஸ்வரியை.

[இன்னும் நுகர்வேன்]
sillvandu@gmail.com

Comments

NRIGirl said…
Well written. Life as it unfolds...

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?