சிறகில் பொதிந்து!


திடீரென இருண்டது மேகம். அந்த இருளை கிழித்து பளீரென பிறந்தது கண்ணை குருடாக்கும் விதம் ஒரு மின்னல் கீற்று. மின்னல் உண்டாக்கிய மிரட்சியை கூட்டியது செவியை செவிடாக்கும் அளவுக்கு குலை நடுங்கவைக்கும் இடியோசை. மனதை பிடித்தாட்டுகிறது ஒரு பயம். அழத்துவங்கினேன்!

அறை கதவைத் திறந்து அம்மா வந்தாள். என் அருகே வந்தவள் என் தலையை வருடி "பயந்திட்டியாப்பா?" என்றாள். நான் பதில் ஏதும் கூறவில்லை, அவள் கரத்தை இறுக பற்றிக்கொண்டேன். என்னை எடுத்து அவள் தோளில் இட்டுக்கொண்டாள். ஆதரவாய் என் முதுகில் தட்டிக்கொண்டே அவள் அறைக்கு என்னை எடுத்துச் சென்றாள்.

அங்கே அப்பா என்னை பார்த்து சிரித்தார். "ஆண்பிள்ளையே.. பயந்திட்டியா?" - என்றார். அவர் தன் நெஞ்சோடு என் தங்கையை அணைத்து பிடித்திருந்தார். அவர் அருகே சென்றதும் என்னை உச்சி முகர்ந்து,


"இதற்க்கெல்லாம் பயப்படலாமோ ஆண் பிள்ளை? உன் தங்கையின் பயத்தையும் போக்கவேண்டிய அண்ணன்காரன் நீ. நீயே பயந்தால் எப்படி?" - என்றார்.

அம்மா என்னை அவள் அருகில் படுக்க வைத்தாள். அவளின் ஒரு கை என்னை அணைத்திருக்க, அப்பாவின் ஒரு கை என் தலையை வருடி இருக்க, ஓர் அண்ணனாக என் தங்கையின் பயத்தை போக்க நான் அவளின் பஞ்சு கையை என் கையோடு சேர்த்து பிடித்திருக்க, சொர்கம் போன்ற அந்த தருணத்தில் சுகமான உறக்கத்திற்குள் நான் நுழைந்தபோது மீண்டும் ஓர் இடி செவியை அறைய திடுக்கிட்டு எழுந்தேன்.

இம்முறை எழுந்தபோதுதான் விளங்கியது இது வரை கண்டது கனவு என்று. என் அருகில் என் மனைவி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவள் உறக்கத்தை கலைக்காமல் கவனத்துடன் நான் படுக்கையை விட்டு எழுந்தேன்.

கண்ட கனவு மெலிதாய் மனதை பிசைந்தது. ஜன்னல் திரை விலக்கி வெளியே பார்த்தேன். விடியத்துவங்கி இருந்தது. அதன் கதவினை திறந்துவிட்டேன். சில்லென்ற குளிர் காற்றும், சாரலும் முகத்தில் படிந்து புத்துணர்வு தந்தது.

சற்று நேரம் அதில் லயித்துவிட்டு, குளியலறைக்குள் நுழைந்தேன். குளியலறையின் பெரிய கண்ணாடியில் தெரிந்த என் பிம்பம் என்னை வரவேற்றது. கண்ணாடியில் தெரிந்த என்னை நான் உற்றுநோக்கி நின்றிருந்தேன். கனவில் கண்ட எனக்கும், கண்ணாடியில் காணும் எனக்கும் எத்தனை வித்தியாசம்?

உருவம் மாறிப்போனது... உணர்வு? இதோ, இப்போதும் இந்த இடி மழையில் அன்றுபோல் இன்றும் என் மனதில் உள்ளிருந்து என் அம்மாவின் குரல் "பயந்திட்டியாப்பா?" என்கிறது. அப்பா கேட்கிறார் "ஆண்பிள்ளையே பயந்திட்டியா?"

அப்போதே அவர்களுடன் பேசவேண்டும் போல தோன்றியது. ஆயினும் இந்த அதிகாலையில் அவர்களோடு தொலைபேசி அவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் சற்று நேரம் கழியட்டும் என முடிவு செய்தேன். சரி, அது வரை எப்படி என் பொழுதை கழிப்பது?


"கண்ணாடி" - ஓர் தலை சிறந்த பொழுதுபோக்கு சாதனம். அதில் நம் முகத்தை நாமே பார்த்து ரசித்து நிற்பது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. ஆகையால் என்னை அல்லது என் அழகை ஆராயத் துவங்கினேன்.

என் பிம்பத்தை ஆழ்ந்து ஆராய்ந்த நான் என் மீசைக்கு வந்ததும் அதிர்ந்து நின்றேன். என் மீசையின் நடுவே ஓர் மின்னல் கீற்று! உண்மையா என ஆழ்ந்து நோக்க, உண்மை என்றே உணர்த்தியது என் மீசையில் புதிதாய் முளைத்திருந்த ஒரே ஒரு நரை முடி! அதை கண்டதும் இதயத்தில் நான் உணர்ந்ததுதான் பேரிடி! இப்போது அடி வயிற்றை கலக்கியது புது பயம்.


"வயசாக ஆரம்பிச்சுடுச்சா?"

நாழி ஆக காத்திராமல் அப்போதே அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன். என் குரல் கேட்டதும் கேட்டாள், "கனவு பாத்து பயந்து எழுந்தியா? இந்த நேரத்துல கூப்பிடறியே?".

"பயந்தது உண்மைதான் ஆனால் அது கனவு பாத்து இல்ல, அதுக்கப்புறம் கண்ணாடியில் என் முகத்தை பாத்து, அதில் நரைக்கத்துவங்கிய என் முடியை பார்த்து.." -- என்றேன்!

அம்மாவும் கவலைப்பட்டாள். எனக்கு வயதாகத் துவங்கியதற்க்காக அல்ல, நான் வசிக்கும் இடத்தில் உள்ள தண்ணீரின் தண்மைக்காக. தினமும் என்னை தலை குளிக்க வேண்டாம் என்றாள்.

அப்பாவோ அடக்க ஆற்றாது குலுங்க சிரித்தார். "வயது - என்பது நரையில் அல்ல, மனதில், செய்யும் செயலில் தான் வெளிப்படும்" - என்றார்.

"இப்போ ஒரு முடிதான் நரைத்திருக்கு, எல்லா முடியும் நரைத்தால்.." என்று கூறி முடிக்கும் முன் "டை இருக்கு, கவலைப்படாதே, நல்ல பிரண்ட் எது என்று நான் உனக்கு சொல்லித்தருகிறேன்" - என்று கூறி மீண்டும் சிரித்தார்.

நரை முடி பற்றிய சேதியை கூற என் தங்கையை அழைத்தேன். அவள் தன் பிள்ளைகளின் குறும்புகளையெல்லாம் சொல்லி முடிந்த பின் என் "முடி" விஷயத்தை சொன்னேன்.

"என் இரு பிள்ளைகளின் மாமன் எனும் அந்தஸ்துக்கு அழகு சேர்க்கும் அந்த நரை முடி" - என்றாள்.

"அது சரி தான்.. ஆனால், எனக்கு வயசாக ஆரம்பிச்சுடுச்சே..." -- என்றேன்,

"வயசா.. அதெல்லாம் உனக்கு இப்போ ஆகாது." - என்று கூறினாள்.

சில நேரம் இப்படித்தான். உறுதியாக இறுதியான குரலில் அவள் சொல்லும் இது போன்ற பதில்களால் என் விவாதங்கள் பல முறை அவளிடம் தோற்றுப்போவதுண்டு. நான் காணும் பெரும் சுகமே இவளிடம் தோற்கும்போது தான்.

என் பேச்சுக்குரலில் உறக்கம் கலைந்து எழுந்து வந்தாள் என் தேவதை. அவளிடமும் கூறினேன் என் நரை முடி பற்றி. அதிர்வது போல், பதறுவது போல் பாவ்லா காட்டி அவள் இப்படி கூறினாள்,

"இந்த நரை முடியை ஒளிச்சு வச்சு தானே ஏமாத்தி என்னை கல்யாணம் பண்ணிகிட்டே கிழவா?"

-- இந்த உரையாடல்களில், இந்த கிண்டல் பேச்சுக்களில், நான் மீண்டும் அதே சுகம் கண்டேன். இடி மழைக்கு பயந்து அன்று பாலகனாய் இருந்த நான் என் தாய் தந்தையின் சிறகினடியில் சுகம் கண்டு சுகமாய் உறங்கினேன். இன்று, நரை முடி கண்டு ஒரு வித பயம் கொண்டபோதும் அதே போல் தாய் தந்தை தங்கை தாரம் எனும் என் உறவுச்சிறகின் அடியில் அதே சுகம் காண்கிறேன். உருவம் மாறியும் உணர்வு மாறவில்லை!

மொத்தத்தில் என் அதிகாலை கனவு பலித்தது. கனவில் கண்ட அதே சுகம் கிடைத்தது!

April 03, 2007



Comments

SethS said…
வயதான பிறகு தோன்றும் எண்ணம் எல்லாம் ஒரு preview காட்டிவிட்டிர்கள்!!
bkaseem said…
ஜில்லு,

வித்தியாசமா கொஞ்சம் செண்ட்டியா டிரை பண்ணி இருக்கே! ஆனா, இது எந்த அளவுக்கு படிக்கறவங்க மனச தொடுறதுல வெற்றி பெறும் நு உறுதியா சொல்ல முடியல. செண்ட்டியா கொண்டு போய் காமெடியும் கலந்திருக்கே! அது நெகட்டிவோ நு எனக்கு தோணுது! நடுவிலே எங்கோ கொஞ்சம் தொய்வும் இருக்கு.

சிறகில் பொதிந்து - நு தலைப்புக்கு பதிலா "நரை முடி" - நு தலைப்பு வச்சு ஏன் இதை ஒரு முழு நீள காமெடி ஆக்கியிருக்க கூடாது?

நண்பன்.
Hey Sillu,

Konja sentiya than irukku.... nammai nesipavargal aravanaikaiyil yenna sugam illa......feel panna vechutta da!!

Enakku romba pidichadhu....."இந்த நரை முடியை ஒளிச்சு வச்சு தானே ஏமாத்தி என்னை கல்யாணம் பண்ணிகிட்டே கிழவா?"

Kizhava nu unnai azhaipadhu enakkum romba pidikum :-)
NRIGirl said…
Hi Bawa! Not really sure how I missed all these interesting stories earlier.

Having fun catching up with it all.Thank you for making your day.

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?