துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

[மரத்தடி தமிழ் குழுமத்தில் மஹாபாரத கதாபாத்திரங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற கர்ணன் மற்றும் துரியோதன சகோதரர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டது.]


சிறுவயதில் கார்டூன் புத்தகங்கள் வழியாகத்தான் மஹாபாரதம் எனக்கு பரிச்சியமானது. பிறகு அப்பா ஒரு கோடை விடுமுறையின் போது படித்துகாட்டியதிலும், அறிஞர் பெருமக்களின் கருத்துகளிலிருந்தும், தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்த்தவரை தொலைக்காட்சி தொடரிலிருந்தும் மஹாபாரதத்தை ஓரளவு தெரிந்துகொண்டேன்.

எனக்கும் கர்ணண் மீதுதான் பிடித்தம் அதிகம். கர்ணண் படமும் இதற்க்கு ஒரு காரணம். ஆனால் நான் அந்த படம் பார்த்ததில்லை. பிறெகெப்படி இந்தப்படம் காரணம் ஆனது என்று கேட்பீர்களேயானால், காரணம் அந்த பாடல்.

சீர்காழி அவர்களின் குரலில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" எனும் பாடல் தான் கர்ணணைப்பற்றி யோசிக்கவைத்து என்னை உருக வைத்தது. இப்போதும் அந்த பாடலை கேட்கையில் சிலநேரம் கண்ணீர் பெருகுவது உண்மை.

மரத்தடியில் நாம் இப்போது மஹாபாரத கதாபாத்திரங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மஹாபாரதம் பற்றி என் மனதில் படிந்துபோன கருத்துக்களை, சில ஐயப்பாடுகளை உங்கள் முன் வைப்பது பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆகையால் கருத்திறக்கிறேன்.

மஹாபாரதம் எனக்கு புரியத்துவங்கியதிலிருந்தே எனக்கு துரியோதனன் & CO மேல் பரிதாபமும், பாண்டவர்கள் மீது ஏதோ பிடிக்கான்மையும் உண்டாகிவிட்டது. (என்னைப்போல அதிகம் சாப்பிடுவதால் பீமனை மட்டும் கொஞ்சம் பிடிக்கும் இருந்தும் கதாயுத யுத்தத்தில் விதிமுறை பிழறி ஜெயித்ததால் அந்த பிடிப்பும் இளகிவிட்டது). மட்டுமல்ல, துரியோ கூட்டத்துக்கு பல இடங்களிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது.

கெளரவ பாண்டவ குழந்தைப்பருவத்திலிருந்தே இக்குழந்தைகள் மேல் பெரியவர்கள் காட்டும் பாசங்களில் வித்தியாசம் தெரிகிறதோ என்று ஒரு சந்தேகம். (தொலைக்காட்சியில் பார்த்தவரை அப்படித்தான் தோன்றுகிறது என்பது நிச்சயம்.)

பாண்டவாஸ் என்றால் கண்ணில் வெண்ணை, கெளரவாஸ் என்றால் கண்ணில் சுண்ணாம்பு என்பது போன்ற போக்கு இருந்ததாகவே நான் உணர்கிறேன். இது எந்த குழந்தைப் பருவத்தையும் பாதித்து ஆறாத காயத்தை நெஞ்சில் உண்டாக்கிப்போகும் காரியமே.

ஓவியப்போட்டியில் முதல் பரிசு வாங்கிவந்து எல்லோருடைய பாராட்டையும் மொத்தமாக பெற்றுக்கொண்டான் என் வயதை ஒத்த என் பக்கத்துவீட்டு நண்பன். ஒரு சாக்லேட் பார் வாங்கி என்னிடம் தந்து அதை அவனுக்கு கொண்டு கொடுத்து பாராட்டி வருமாறு என் அம்மா கூறினார். நான் அவனைச்சென்று பாராட்டி சாக்லேட் கொடுத்து வாழ்த்தி வந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு கோவம், அவன் மேல் தேவையில்லாத வெறுப்பு, எப்போதும் என்னை மட்டும் கொஞ்சிப்பேசி பாராட்டும் ஆண்டிகள் கூட்டம் இன்று என்னை கண்டேகொள்ளாமல் அவனைப்பற்றியே பேசியதில் பயங்கர வருத்தம்.

எடுத்தேன் பென்சிலையும் நோட்டுப்புத்தகத்தையும், வரைகிறேன் பேர்வழி என்று கன்னாபின்னாவென கண்டமேனிக்கும் கிறுக்கித்தள்ளினேன். ஒரு படம் கூட உருப்படியாக வரவில்லை. இயலாமையால் ஆத்திரமும் பொங்கியது. என் நண்பனின் முகம் என்று ஒருவட்டம் மட்டும் வரைந்துவிட்டு பேப்பரே கிழியும் அளவுக்கு அதன்மேல் ஏகப்பட்ட தப்புக்குறியிட்டு என் ஆத்திரம் தீர்த்தேன்.

என் நண்பன் பாண்டவன் இல்லை ஆயினும் நான் கெளரவ புத்திதான்கொண்டிருந்தேன்.

அந்த நோட்டுபுத்தகத்தை பார்த்த என் தாயார் அதிர்ந்து போனார். ஏன் இப்படி செய்தாய் என்று அவர் கேட்கும் முன்னே நான் என் இயலாமையை கூறி அழுதுவிட்டேன்.

அன்று என்னை பெற்றவர்கள் எனக்கு தந்த அறிவுரைகள் என்னை சமாதானப்படுத்திய தோடல்லாமல் என்னை பக்குவமானவனாக மாற்றவும் உதவியது. அன்று அவர்கள் என்னில் இருக்கும் திறமைகளை எனக்கு உணரச்செய்தார்கள். எல்லோர்க்கும் எல்லாமும் சாத்தியமல்ல எனும் உண்மையினை எனக்கு போதித்தார்கள். இருந்தும் ஆர்வம் இருந்தால் முயற்ச்சி செய் பலன் கிடைக்கும் என்று என்னுள் நம்பிக்கையையும் வளர்த்தார்கள்.

"திருநெல்வேலிக்கு அல்வா கொடுப்பதுபோல மஹாபாரதம் பற்றி பேசுகையில் என் கதை எடுத்துக்காட்டா? கொஞ்சம் ஓவர்தான் "


மற்றவர்களின் திறமைகளுக்கு மதிப்பு கொடுப்பது மிகச்சிறந்த பண்பு அதைவிட்டு ஆத்திரம் கொள்வது அபத்தம் என்று எனக்கு சொல்லி புரியவைத்து எனக்கு ஆறுதல் தந்தார்கள்.

அடுத்தமுறை அந்த நண்பனை சந்தித்தபோது உண்மையாக பாராட்டினேன். அவன் புதிதாக வரைந்துகொண்டிருக்கும் ஓவியங்களை காட்டினான். நான் என் அபிப்ராயங்கள் சொன்னேன். அவன் படைப்புகளில் ஆர்வம் காட்டியதால் நாங்கள் சிறந்த நன்பர்கள் ஆனோம்.

(என்ன கொடுமை இது? திருநெல்வேலிக்கு அல்வா கொடுப்பதுபோல மஹாபாரதம் பற்றி பேசுகையில் என் கதை எடுத்துக்காட்டா? கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள். இந்தக்கதையை ஏன் சொல்கிறேன் என்றால்....)

இதேபோல துரியோதனனுக்கு விஷயங்களை புரியவைக்க ஏன் எந்த பெரிசும் serious ஆக முயலவில்லை? குழந்தை பருவத்திலிருந்தே இந்த பயக்களால் மட்டம்தட்டப்பட்டோம் எனும் எண்ணம் தானே துரி க்கு பாண்டா பாய்ஸ் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்கிவிட்டது?

சகுனி மாமா மட்டுமே துரியின் மன வேதனையை புரிந்துகொண்டார் என்று தோன்றுகிறது. ஆனால் அவர் புரிந்துகொண்ட தன் மருமகனின் வேதனைக்கு செய்துவிட்ட வைத்தியம் வேறுவிதம். "பாஞ்சே... நீ எந்த விதத்திலும் பாண்டா பாய்ஸை விட குறைந்தவன் இல்லையடா" என்பதனை மருமகன் துரியோதனன் மனதில் ஆழப்பதியவைக்க அவர் செய்துவிட்ட வேலைகள்தான் பாரதப்புகழ் பெற்ற சகுனித்தனமாகிப்போனது.

துரியோதனனின் ஆத்திரமும் கோபமும் அதன் காரணத்தால் மதி மழுங்கி அவன் செய்துவிட்ட காரியங்களுக்கும் மொத்த காரணம் அவனுக்கு அவன் மீதே உள்ள கோவம் தானோ என்று எனக்கு தோன்றுகிறது.

ஐந்து பேர் தான், பட்டைய கிளப்புறாங்க, நூறுபேர் இருக்கோம் ஒன்னும் பண்ணமுடியலையே என்று என்னும்போது, (நமது கிரிகெட் அணி நூறு ரன்கள் கூட எடுக்காமல் சுருண்டுபோகும் போது ஒவ்வொரு சராசரி இந்திய கிரிகெட் ரசிகனின் மனதிலும் அறியாமல் தோன்றும் ஒரு கோவம் போல) கோபமும் எரிச்சலும் வரத்தானே செய்யும்?

சகுனிமாமா வின் சாதுர்யத்தால் பாண்டவர்களின் வீக்னெஸ் அழகாக வெளித்தெரிந்தது, மனைவியை வைத்தே சூதாடினார்கள். அந்த செயலுக்கு அழகாய் ஒரு கமிஷன் போட்டுவிட்டு பேருக்கு ஆமா தப்புதான் பண்ணிட்டாங்க னு ஒப்புக்கு சொல்லிவிட்டு மீண்டும் துரி & Co மீது வழக்கு தொடர்ந்துவிட்டது பாரதம்.

குழந்தை கிருஷ்ணர் எனக்கு பிடித்தவராக இருந்தாலும் அவர் வளர வளர ஏனோ அவரை எனக்கு அவ்வளவாக பிடிக்காமல் போனது. ஒரு சந்தர்ப்பவாதி அதும் சந்தர்ப்பங்களை உருவாக்கும் வல்லமை படைத்த சந்தர்ப்பவாதி என்று மட்டுமே என் கருத்துக்களில் படிந்து போனார்.

"குருக்§க்ஷ்த்திரத்தில் வென்றது தர்மம் என்று
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தருமன் வென்றான் அவ்வளவே. "


பாண்டவர்ளுக்கு உபதேசம் செய்து வழிகாட்டியாகவும் தேரோட்டியாகவும் இருக்கும் கிருஷ்ணர் ஏன் துரியோதனனை திருத்த முயன்றிருக்கக்கூடாது? அவர் நினைத்தால் முடிந்திருக்காதா என்ன? அவர் கூற்றுக்களுக்கு துரி செவிமடுத்திருக்க மாட்டான் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில்,

கண்களை கட்டிக்கொண்டு வாழ்ந்ததால் சேர்ந்துபோன சக்தியினை துரி க்கு கொடுத்து அவன் உடலை இரும்பாக்கிட மகனை பிறந்தகோலத்தில் வரச்சொல்வார் காந்தாரி. துரியும் அவ்வாறே வந்துகொண்டிருக்கும்போது, கிருஷ்ணர் குறுக்கிட்டு "என்னதான் இருந்தாலும் அன்னைமுன் இப்படி செல்லலாகுமோ?" எனக்கூறி துரியை குழப்பிவிட்டு இடுப்புப்பகுதியை மட்டும் மறைத்துவிடச்செய்கிறார்.

துரி செவிமடுக்கிறான். அவன் அத்தனை வெகுளி, Kind of simple to handle, கிருஷ்ணர் சூழ்ச்சி செய்கிறார் என்பதினைக்கூட புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அத்தனை வெகுளி. இந்த வெகுளிப்பையனை ஏன் கிருஷ்ணர் அறிவுறுத்த முயலவில்லை? ஒருவேளை விரும்ப வில்லையோ?

குருக்§க்ஷ்த்திரத்தில் வென்றது தர்மம் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தருமன் வென்றான் அவ்வளவே. அதும் சூழ்ச்சிகள், ஏமாற்றுவேலைகள் என ஒரு பெரிய டீமே underground ல் illegal ஆக செயல்பட்டு தான் வெற்றிபெற வைத்துள்ளார்கள். குந்தி உள்பட, தாய்க்கு தலைப்பிள்ளைதான் செல்லப்பிள்ளை என்பார்கள் ஆனால் இவருக்கும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் ஐந்து வெண்ணைகளும் என்றாகிப்போனது வேதனையே!

முன்பொருமுறை இதுபற்றி நண்பர்கள் மத்தியில் விவாதம் எழுந்தபோது என் நண்பன்ஒருவன் கூறியது இப்போது ஞாபகம் வருவதால் சிரிப்பும் வருகிறது. "அவிங்கல்லாம் வீரத்தமிழ் குலத்துல பொறக்கல மச்சான் நம்ம ஆளுங்களா இருந்திருந்தா மானத்தோட நேருக்கு நேர் நெறிமுறையா நின்னு நீயா நானா நு பாத்திருப்பாய்ங்கள்ல... சர்த்தானே நான் சொல்றது?"

இதெல்லாம் ஆரம்பித்தது திரெளபதி சிரித்ததால்தானே? "ஆவதும் ஆணாலே" என்று மரத்தடியில் ஆனந்த் ராகவ் கதை சொல்கிறார், ஆனால் அழிவதென்னவோ பெண்ணால்தான் என்றே தோன்றுகிறது. (நாஞ்சொல்லலப்பா... ஊரு சொல்லுது, உலகம் சொல்லுது, நடக்கறதெ எல்லாம் பாக்கும்போது உண்மைதானோ நு நம்பத்தான் தோணுது.)

அந்தப்பெண்மணிக்கு ஏன் அப்படி ஒரு அடக்கமற்ற சிரிப்பு வேண்டியிருக்கிறது? அதும் ஒரு ஆணை ஏளனம் செய்து?

"துகிலுரியும்போது மாரை கையால் மூடிக்கொண்டு கண்ணா காப்பாற்று என்று ஓலமி ட்டபோதெல்லாம் இறைவன் வந்துதவவில்லை, ஆண்டவனைப்பார்த்து இரு கையும்நீட்டி தன்னை மறந்து அவள் அழைத்தபோதுதான் கண்ணண் வந்து உதவிச்சேலை நீட்டினார். முழுமையாக நம்மை இறைவனிடம் ஒப்படைத்தால் தான் இறைவன் நமக்கு அருள்புரிவார்"

- என்று பள்ளிக்காலத்தில் ஒரு நாள் ரீஸஸ் பெல் அடிப்பதற்க்கு இரண்டு நிமிடம் முன்னால் எங்கள் தமிழ் ஐயா கூறியபோது, கருத்தில் உண்மையிருந்தாலும் இந்த உதாரணத்தில் ஏதோ மனதை நெருடியது.

அந்தச்சபையில், அத்தனைபேர் முன்னிலையில் ஒரு பெண்ணின் மானம் பறிபோகும்போது முழுதாக அவள் தன்னை கடவுளிடம் தன்னை ஒப்படைக்கும் வரையில் கடவுள் காப்பாற்ற வராமல் காத்திருக்கவேண்டுமா? கைகளை கவசமாக்கி மார்மறைத்து அவள் காத்து வைத்திருந்த சொற்ப மானமும் போனபின் தான் கடவுள் வந்தார் காப்பாற்ற என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெண்கள் குளிக்கும்போது அவர்களின் ஆடையினை கவர்ந்து சென்றிடுவதெல்லாம் எவ்வளவு பெரிய குற்றத்திற்க்குள்ளாகும் செயல்? இந்த குற்றம் கிருஷ்ணர் செய்தால் மட்டும் ஏன் லீலைகள் என்று மாறிவிடுகிறது? எல்லோருக்குமே ஒரு கண்ணில் வெண்ணை இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு.

சிரித்துக்கொண்டே காரியம் சாதிக்கும் காரியவாதி கண்ணன். சிரிப்பில் மயக்கி ஆளைகுழப்பி சூழ்ச்சிசெய்து அதில் சிக்கவைப்பதில் கில்லாடி. இப்படி சூழ்ச்சியும் தந்திரமும் செய்பவர்கள் எப்படி கடவுளாக முடியும் என்ற கேள்விக்கு திட்டுகள்தான் பதிலாய் கிடைத்தது. ஆகையால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கிருஷ்ணரை பிடிக்காமல் போக, உருவத்தோடு ஒத்து வருவதால் அண்ணண் கணபதி யின் பக்தனாகிப்போனேன் என்பது இந்தக்கட்டுரைக்குத் தேவையில்லாத விஷயம்தான்.

கையில் அம்பையும் வில்லையும் கொடுத்து குறிபார்க்கச் சொல்லி என்ன தெரிகிறது என்று குரு கேள்வி தொடுக்க ஆகாயம், மரம், மரத்தடி, கிளை, இலை என்று தியரி பேப்பருக்கு பதில் எழுதுவது போல எல்லாம் சொல்ல பாவம் துரி பெயில். கிளியின் கண் மட்டும்தான் தெரிகிறது என கூற அர்ஜுன் பாஸ்.

குருவின் frequency ஐ தெரிந்து அவரை off பண்ணிவிட்ட குறும்பு மாணவன் என்று வேண்டுமானால் அர்ஜுனை புகழலாம். லிட்டரல் மீனிங் எடுத்து அவரின் கண்ணுக்கு கிளியின் கண் மட்டும் தான் தெரிந்தது என்று எடுத்துக்கொண்டால் பக்கத்து மரக்கிளியிலிருந்து அவரை குறி வைக்கும் எதிரி எப்படி அவர் கண்ணுக்குத் தெரிவார்? கல்வித்திட்டத்தில் எங்கேயோ ஒரு இடறு இருக்கிறது. (சரி இந்த கேள்விக்குப் பிறகுஇருவரையும் அம்பெய்ய சொன்னாரா? துரி விட்ட அம்பு என்னவாயிற்று என்று யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.)

அந்தக்கால குருமார்கள் முதல் இந்தக்கால ஆசிரியப்பெருமக்கள் வரை ஒரு பிரச்சினை அப்படியே உள்ளது. கேட்கும் கேள்விகளுக்கு மக்கு மாணவனை பதில் சொல்ல சொல்வது.. அவன் முழிக்கும்போது அவருடைய செல்ல மாணவனை பதில் சொல்ல சொல்வது, அவன் சொன்ன பிறகு மக்கு மாணவனை திட்டி அவமானப்படுத்திவிட்டு உட்காரச்சொல்லிவிடுவது.

ஏன் அவன் மக்கானான்? அவனை புத்திசாலியாக்க என்ன செய்வது அவன் குறைகள் என்ன? அவன் ஏன் பாடத்தில் மனம் செலுத்த மறுக்கிறான் என்று எந்த ஆசிரியரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. நன்றாய் படிக்கும் மாணவன் முன் அவமானப்படுத்துவதால் எந்த லாபமும் இல்லை, அந்த மக்கு பையனுக்கு பதில் சொன்ன மாணவன் மேல் கோவம் தான் மேலோங்கும், சில நேரம் படிப்பு மீதே கூடவெறுப்பு வந்துவிடும். நவீன கால துரியோதனர்கள் இங்கிருந்து உருவாகிவிடும் அபாயம் உண்டு.

மனிதனுக்கு வாழ்க்கை நெறிமுறைகளை கற்பிக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த இதிகாசத்தில் ஏன் இத்தனை முரண்பாடுகள்? நல்லவர்கள் என்று அடையாளம் காட்டப்படும் கதாபாத்திரங்கள் ஏதேனும் ஒரு தவறை செய்யத்தான் செய்கிறது. இந்த தவறுகளினால் நல்லவர் அல்லாதவர் என காட்டப்படும் கதாபாத்திரங்கள் மேல் அனுதாபம் பிறக்கிறது.

மனசில்லா மனசாக துரி பக்கம் நின்று போரிட்ட அனுபவசாலி பெரியோர்கள், துரிக்கால போரிட்டு வெல்வதை விட்டு அர்ஜுன் அம்பால் உயிர் நீக்க அடம் பிடித்திருந்து தந்த ஏமாற்றம் ஒரு புறமும், எதிரணியின் சூழ்ச்சிகள் மறு புறமும் இருந்தும், ஒரு tough-fight கொடுத்த துரியோதனன், கர்ணன் & Co தான் உண்மையான வீரர்கள் என நெஞ்சம் போற்றுகிறது.

என் மனதில் இப்படி படிந்துபோன கருத்துக்களில் நியாயம் உள்ளதா? இல்லை நான் புரிந்துகொண்ட முறை தவறா? மரத்தடியில்தான் அமர்ந்துள்ளேன் போதியுங்கள்!


Comments

Anonymous said…
இதற்கு முன் நானெழுதின மறுமொழி உங்களுக்கு கிடைத்ததா?
இல்லையே.. கீதா அவர்களே...

என் கருத்துக்கு மனமார்ந்த நன்றி என்று உங்கள் பக்கத்தில் நீங்கள் அளித்திருந்த பதிலையும், மறுமொழி கிடைத்ததா என்று கேட்டு இப்பக்கத்தில் விடுத்திருக்கும் மொழியையும் தவிர வேறு ஏதும் கிடைக்கப்பெறவில்லையே?

ஒரு அருமையான விமர்சனத்தை இழந்துவிட்டேனோ? என்ற விசனத்தில்...

வண்டு.. சில்வண்டு!
Anonymous said…
//துரியோதனன், கர்ணன் & Co தான் உண்மையான வீரர்கள் என நெஞ்சம் போற்றுகிறது.

என் மனதில் இப்படி படிந்துபோன கருத்துக்களில் நியாயம் உள்ளதா?//

நியாயம்தான். எனக்கும் இதே கருத்துதான்.

சிறுவயது முதலே பாண்டவர்கள் நல்லவர்கள் என்ற ஒரு பக்கத்தைமட்டுமே நமக்கு போதிக்கிறார்கள். நாமாக படித்து புரிந்துகொண்டபின்புதான் துரியனின் மேல் ஒரு பரிதாபமும், கிருஷ்ணன் & பாண்டவர்கள் மேல் ஒரு கோவமும், வெறுப்பும் வருகிறது.

உங்கள் சிறுவயது நிகழ்ச்சி மூலம் துரியனின் மனப்போராட்டத்தை அழகாக விளக்கி இருக்கிறீர்கள். துரியனுக்கு பெரியவர்களான பீஷ்மர், துரோணர், எல்லோரும் உபதேசம் செய்யத்தான் செய்தார்கள் ஆனால் அவனின் மனதில் சிறுவயது முதலே படிந்திருந்த வன்மம்/அவமானத்தினால் விளைந்த கோவம்/ஏக்கம்/பொறாமை இவற்றை அவர்களின் போதனைகளால் அடக்க முடியவில்லை... கூடவே சகுனி இருந்து தூபம் போட்டுக்கொண்டே இருந்ததனால் அவனது மனக் குமைச்சல் அடங்கவே இல்லை...

கிருஷ்ணரைப் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான்.. பாண்டவர்கள் மேல் அவருக்கு அன்பு அதிகம்தான் போல.. மகாபாரதம் படித்த பிறகு கிருஷ்ணர் மேல் பக்தி வரவில்லை. எனக்கு பலராமனின் நடுவுநிலை பிடித்திருக்கிறது. கருஷ்ணனின் துணையோடு பாண்டவர்கள் செய்த அநீதியை எப்பொழுதுமே எதிர்த்துவந்தவன் பலராமன்.

//.......... நவீன கால துரியோதனர்கள் இங்கிருந்து உருவாகிவிடும் அபாயம் உண்டு..//

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

//மனிதனுக்கு வாழ்க்கை நெறிமுறைகளை கற்பிக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த இதிகாசத்தில் ஏன் இத்தனை முரண்பாடுகள்? //

மகாபாரதக் கதையில் இது போன்ற விஷயங்களை பார்க்கும்போது.. எப்படியெல்லாம் நாம் செயல்படக்கூடாது என்பதைச் சொல்வதற்காக இதனை எழுதி இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது..

உங்களுடைய எல்லா கருத்துக்களும் நிச்சயம் நியாயமானவையே..
NRIGirl said…
As usual a great read! Very interesting the way you tell the stories. Thank you!
bk said…
உங்கள் நிகழ்கால சந்தேகங்கள் அனைத்தும் நியாயமானவையே!ஆயினும் இறுதியில் தங்கள் எழுப்பிய//என் கருத்துக்களில் நியாயம் உள்ளதாபுரிந்து கொண்ட முறை தவறா?// என்ற வினாவைக் கண்டதும் என்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்ய விரும்புகிறேன்!(மிகத் தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும்)
//துரி-க்கு ஏன் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,விதுரர் போன்றோர் போதனை செய்யவில்லை?//
போதனை நடந்தது;துரி ஏற்கவில்லை என்பதே உண்மை!கோபம்,பழி உணர்வு ஏற்படும் போது போதனைகள் எடுபடாது;தூபமே எடுபடும்!
உங்களின் சிறுபிராய சம்பவம் நெருக்கமான குடும்ப உறவுகளுக்குட்பட்டது!ராஜ்யங்களில் அப்படி நிழ்வதற்கான வாய்ப்பு குறைவு.அங்கு புஜபல பராக்ரமத்திற்கு மட்டுமே மதிப்பு!அதனால்தான் பதவியை பெறுவதற்கு உடன் பிறந்தவரையும் ஏன் தந்தையையும் கொன்று அறியனையிலமர்ந்த ராஜாதி ராஜாக்களை நம் வரலாறு பதிவு செய்து கொண்டே இருக்கிறது.

மன ஓட்டத்தின் அடிப்படையில் ஐந்துப் பிள்ளைகளைப் பெற்ற குந்தி தன பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்த விசயங்கள்,100 குமாரர்களை ஈன்ற காந்தாரியால் இயலவில்லை!சகுநியோ தம் சகோதரியின் வாழ்க்கைக்கு காரணமான பீஷ்மரை பழி வாங்கும் எண்ணத்திலும்;துரியை அரியணையில் வைத்து பீஷ்மரின் வாக்கை உடைக்க வேண்டும்.பாசம் காரணமாகவும் தூபம் நடந்திருக்கலாம்!
கர்ணன்தான் எனக்கும் பிடித்த குணவாளர்!அதற்மிகள் மத்தியிலும் தன் தர்மத்தை கைவிடவில்லை!வந்திருந்தது இந்திரன் என்று தெரிந்தும் தன கவச குண்டலத்தை தனமளித்தது தன்னுடைய 'தானத்தின் மேலிருந்த கர்வத்தால்'!(அதேதான் யுதிஷ்டிரன் செய்கையும்!'தன்னுடைய தர்ம வாக்கின் மேலிருந்த கர்வத்தால்' சூதாட்டத்தைத் தவிர்க்கலாம் என்ற நிலையிலும் மனைவியை,தம்பியரை பணயம் வைத்தான்)கர்வத்திலேயே அழிவுத் தொடங்குகிறது.இது பலராமனுடைய கருத்து!
இப்படி தன வாக்கின் படி நடந்திருந்தால் துரியை கூட நம் மக்கள் ஏற்றிருப்பார்கள்!13 வருட வனவாசத்திற்கு பின்னும் அவன் தன வாக்கை நிறைவேற்றவில்லை.

//கௌரவ பாண்டவ பிள்ளைகள் மீது பெரியவர்கள் காட்டும் பாசம் வேறுபடுகிறது//
பீஷ்மர் ஒரு சபதம் எடுத்திருந்தார்;அது "தர்ம நெறிப் படி வாழும் ராஜகுமாரனையே அரியணையில் அமர்த்தி குரு வம்சத்தைக் காப்பேன்" என்பதாகும்.எனவே யுதிஷ்டிரனா , துரியோதனனா என்ற நிலையில் யுதிஷ்டிரனையே தேர்வு செய்தார்.என் மூத்த மகள் அதிகமாக விட்டுக் கொடுத்து விடுவதால் என் கவனம் முதலில் அவள் பக்கமே இருக்கும்!அது பாரபட்சமல்ல !
குரு துரோணர் தன சிஷ்யப் பிள்ளைகளிடம் அம்பில் நாணேற்றி எண்ணத் திரிகிறது என்று கேட்ட போது யுதிஷ்டிரன் கூறியவை-"பறவைக்கு அருகில் பறவை கூடு ஒன்று தெரிகிறது,நான் எய்தும் அம்பினால் கூடு விழ நேரிடலாம்;அப்படி விழுந்தால் அதிலிருக்கும் முட்டைகள் குஞ்சுகள் மட்டுமின்றி கீழே இருக்கும் எறும்புப் புற்றும் உடையும் அபாயம் இருக்கிறது.எனவே நான் கவனமாக பறவைக்கு மட்டும் குறி வைக்க வேண்டும்."துரோணர் யுதிஷ்டிரனையும் fail செய்துவிட்டார்.ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் ஆள்பவனே சிறந்த அரசன் என்று குருகுல வாசத்திற்கு பின் யுதிஷ்டிரனை யுவராஜனாக தெரிவு செய்ய திருதராடிரனுக்கு அறிவுறுத்தினார்;ஆனால் புத்திர பாசம் திருதராஷ்டிரனின் மனதையும் குருடாக்கியிருந்ததுதுருபதை வென்று பாண்டவர் மீண்டும் தம் திறமையை நிருபித்தனர்.

//திரௌபதிக்கு அப்படி என்ன அடக்கமற்ற சிரிப்பு?அதுவும் ஆணை ஏளனம் செய்து?//
சிரிப்பை ஏன் அடக்க வேண்டும்?பெண் சத்தமாக சிரிக்கக் கூடாது என்று யார் வரையறுத்தது?ஆன் மட்டும் பெண்ணை ஏளனம் செய்து சத்தமாக சிரிக்கலாமா?
திரௌபதியின் சுயம்வரக் கதையை தாம் ஒரு முறை படித்தால் திரௌபதியின் ஏளனம் புரியும் .
எனக்கு கண்ணகி,சீதையை விட திரௌபதி பிடிக்கும்.பெண்ணின் வரையறையை தோற்றுவித்தவர்களுக்கு பதிலடிக் கொடுப்பதற்காக உருவாக்கப் பட்டவள்தான் திரௌபதி!நல்லன 'ஆவதும் பெண்ணாலே'!தீயவை 'அழிவதும் பெண்ணாலே'!நேர் உரையாடலின்போது இது பற்றி நாம் விரிவாக பேசுவோம்!
கண்ணனின் செய்கைகள் பல விமர்சனதிற்குட்பட்டாலும் சில நடுவுநிலைகள் எனக்கே பிடிக்காதவை!நாராயணி சேனையை துரிக்கு கொடுத்தது,பீமனின் பேரன் பார்பாரிகாவை இரு அணிகளிலும் போரிடச் செய்தது,இன்னும் சில...!
மற்றபடி கிருஷ்ண லீலைகள் மீது எனக்கும் உடன்பாடு இல்லை.கீதைப் பிடிக்கும் அதனால் கிருஷ்ணனையும் பிடிக்கும் அவ்வளவே!
தர்மம் வென்றது,தருமன் அல்ல!காரணம் வெற்றி என்பது களிப்பு தருவது,வேதனையை அல்ல!பாண்டவர் ஐவர் தவிர அபிமன்யு,கடோத்கஜன்,அரவான்,உபபாண்டவர்கள்,பார்பாரிகா என்று தங்கள் தரப்பினர் அனைவரும் உயிர் துறந்த பின்னும் தருமன் வென்றான் என்றால் சற்று மனம் உறுத்துகிறது !
அளவுக்கு அதிகமான கதாப்பாத்திரங்கள் என்பதால் கதையின் நீதியை விட கதையையே சுற்றி சுற்றி விமர்சனம் கிளம்புவதில் ஆச்சரியம் இல்லை!
எனினும் நாம் நேரில் இன்னும் விவாதிப்போம்!

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

மன்னிப்பீரா தோணியாரே?