கருப்'பூ'!

வள் ஒரு கருப்பழகி!

நான் பார்த்த அந்த கருத்த பெண் உண்மையில் பேரழகி! நீங்கள் ஊதாப்பூ பார்த்திருக்கக்கூடும். இவள் நான் கண்ட கருப்'பூ'!

கருப்பின் அழகை கவனித்ததுண்டா? கருப்பின் காந்த சக்தியையும், அதன் ஈர்ப்பினையும் உணர்ந்ததுண்டா? எல்லா நிறங்களையும் தன்னுள்ளே அடக்குவது கருப்பின் இயல்பல்லவா? இந்த இயல்பு இருப்பதால்தானோ என்னவோ கருப்பின் மீது எனக்கு மதிப்பு அதிகம். கருப்பின் மீது மதிப்பு அதிகம் என்பதால் தானோ ஏனோ, இந்த கருப்புப் பெண்ணை பார்த்ததுமே என் மனதுக்குப் பிடித்தும்போனது.

"அண்ணா! அந்த பொண்ண பாருங்களேன். எத்தனை களையான முகம்? கருப்புன்னாலும் அழகா இருக்கால்ல?"

-- இப்படித்தான், காலேஜ் பஸ்ஸில் காலேஜுக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு இனிய நன்நாளின் இளம் காலைப்பொழுதில், என் காதைக் கடித்து, அந்தக் கருப்பழகி மீதான கவனஈர்ப்புத் தீர்மானத்தை, என் கவனத்திற்குக் கொண்டு வந்தாள் என் அருகே அமர்ந்திருந்த மஞ்சு.

மஞ்சு - என்னை அண்ணா என்றழைக்கும் தோழிகளில் ஒருத்தி.

மஞ்சு காட்டிய பெண்ணை வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தேன். மாநிறத்துக்கும் சற்றே குறைவான நிறமாயினும் ஒரு பிரத்யேக அழகைத் தன்னுள் கொண்டிருக்கிறாள். வசீகரிக்கும் களையான முகம் அவளது, லேசாய் உடைந்த மிருதுவான குரல் அவளுக்கு. மெலிந்த தேகம், சராசரி உயரம், இடைவரை நீண்ட அடர் கூந்தல், பளீர் சிரிப்பு என அவள் தரிசனம் கண்ணுக்குக் குளிர் தந்தது.

அந்தக் கருப்பழகி வேறு துறையில் ஜுனியர் வகுப்பில் படிக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன் (மஞ்சு உதவினாள்! "அண்ணா இதெல்லாம் சரியில்லை" எனும் கன்டனத்தோடு!).

அதன் பிறகு காலேஜ் பஸ்ஸில் அவ்வப்போது அல்லது எப்போதுமே இவளை கவனிக்கத் துவங்கினேன். எப்போதும் தன்னுடன் இரண்டு தோழிகள் புடை சூழத்தான் வலம் வருகிறாள். அதில் ஒரு தோழி கொஞ்சம் குண்டு, மற்றொருத்தி ரொம்பவே குள்ளம். இந்தத் தோழியர்கள், சில பழங்கால சினிமாக்களில், இளவரசியின் தோழிகளாக வரும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் போலத் தோற்றமளிப்பதால், இவர்களைப் பார்த்ததுமே எனக்குத் தாளாத சிரிப்பு வரும்.

கல்லூரியில் நடந்த ஒரு பாட்டுப்போட்டியில் இவள் பாடக்கேட்டேன். இனிமையாகப் பாடியவள் போட்டியில் இரண்டாம் பரிசும் வென்றாள். இவள் பாடவும் செய்வாள் என அறிந்ததில் இவள் மீது எனக்கிருந்த பற்று கூடித்தான்போனது.

இவள் கலையரசி, களையான முகத்தழகி, காரிருள் குழலழகி, மட்டுமல்ல தேனினும் இனிய குரலழகியும் இவளே! இவள் பெயர் என்ன என மஞ்சுவின் உதவியோடு கண்டுபிடித்திட்ட போதிலும் நான் மட்டும் அழைக்க அவளுக்கு வேறு ஒரு பெயரிட்டேன்.

"குயில்" என்று!

~~~ 0 ~~~

NSS - கேம்ப் பத்து நாட்கள் எங்கள் கல்லூரியிலேயே நடந்தது. அந்த பத்து நாட்களும் முத்து நாட்கள். பல கிராமங்களுக்கும் பயணித்தோம், பலரது வாழ்க்கை நிலையைப் பயின்றோம், சுத்தம் சுகாதாரம் குறித்து போதித்தோம். இதுவெல்லாம் எனக்குப் புது அனுபவம். வாழ்வியல் குறித்து அதிகம் என்னை யோசிக்க வைத்த சம்பவங்கள் இந்தப் பயணங்களில் நிறையவே நடந்தது என்றாலும், அவைகளை வேறு கட்டுரைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது குயில் பற்றிய செய்திக்கு வருகிறேன்.

இதுபோன்ற கிராமப்பிரதேச பயணங்களின் போது, உணவுக்காவும், ஓய்வுக்காகவும் தோப்புகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும் இளைப்பாறும் நேரங்களில், எவரேனும் ஒருவர் ஏதேனும் ஓர் பாடலை பாடத்துவங்குவார்கள். அப்படி ஒருநாள் நானும் என்னை அறியாமல் ஓர் பாட்டினை பாடத்துவங்கினேன். சத்தியமாக என் அருகில் குயில் இருந்ததை நான் கவனித்திருக்கவில்லை.

"இளம் சிரிப்பு ருசியானது! அது கனிந்து இசையானது!

குயில் மகளின் குரலானது! இருதயத்தில் மழை தூவுது!

இரு புருவம் இருளானது! இருந்தும் என்ன வெயில் காயுது?

இனிக்கும் தேனே! எனக்குத் தானே!"

-- என நான் என்னை மறந்து பாடி முடிக்க,

"நல்லா பாடுறீங்க" என்று ஓர் பெண் குரல் என்னை பாராட்டியது. பாராட்டிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி யார் என நான் திரும்பிப் பார்த்தபோதுதான், அங்கே குயில், என் அருகே குயில் என்பதை கவனித்தேன்!

"நன்றி!"

-- அவள் பாராட்டுக்கு நானுரைத்த நன்றியதனை, அவள் புன்னகையோடு ஏற்றுக்கொண்டாள். புன்னகைக்கும் போது அவள் அழகுக்கு அழகு சேர்க்கிறாள். அதை இன்னும் கொஞ்சம் பார்த்து ரசிக்கத்தானோ ஏனோ நான் இந்த உரையாடலை வளர்க்க விழைகிறேன்!

"உண்மையைச் சொல்லனும்னா நான்தான் உங்களை பாராட்டனும். நீங்க ரொம்பவுமே இனிமையா பாடுறீங்க. அதும் அன்னைக்குப் பாட்டுப்போட்டியில நீங்க பாடினது ரொம்ப அற்புதமாக இருந்தது. உங்க குரலுக்கு அந்தப்பாட்டு ரொம்பவும் பொருந்தி இருந்தது. சொல்லப்போனா உங்க கிட்டே இதைச் சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தேன். ஆனா, சந்தர்ப்பம்தான் சரியாக அமையல!"

-- என, முன்பு அவள் பாட்டுப்போட்டியில் பாடிய பாட்டுக்கு இப்படி என் பாராட்டினைப் பதிவு செய்து, அவளோடான என் உரையாடலை வளர்த்தேன்!

"ஓ! நன்றி!" என் பாராட்டுக்கு அவளுரைத்த நன்றியதனை நானும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டேன்.

"உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?" இருவரும் ஒரே குரலில் ஒன்றாகக் கேட்டு! இருவரும் ஒன்றாகக் கேட்டோம் என்பதை ஒன்றாக உணர்ந்து, ஒன்றாகச் சிரித்தோம். சிரிப்பினூடே அவள்,

"நான் கத்துக்கிட்டிருக்கேன். நீங்க?" என பதில் கூறி என்னைக் கேட்டாள்!

"எனக்கும் சங்கீதம் கத்துக்கிட ஆசைதான். ஆனால், சந்தர்ப்பம்தான் சரியாக அமையல!" என்றேன். அதற்கு அவள்,

"சந்தர்ப்பம் உங்களை அடிக்கடி அலைகழிக்கிறதே!" என்று சொல்லிச் சிரிக்கிறாள். அந்தச் சிரிப்புக்குக் காரணம் முழுதும் புரியாதவனைப் போல நான் அவளைப் பார்க்க, என் குழப்பத்தை கவனித்தவள் அதற்கான விளக்கம் தந்திட்டாள்.

"என்னை பாராட்டுறதுக்கும் சந்தர்ப்பம் சரியாக அமையலேன்னு சொன்னீங்களே?"

"ஓஹ்...!" இருவரும் சிரித்தோம். அவளின் தோழியரும் சிரித்தார்கள் ஸ்ருதி சேராமல்!

"சங்கீதம் தெரியாமலேயே இவ்வளோ நல்லா பாடுறீங்களே?" தோழியரின் சிரிப்பினை அடக்கச்சொல்லி கண்ணால் கட்டளை இட்டுவிட்டு என்னிடம் இப்படிக் கேட்டாள் குயில். அதற்க்கு நான்,

"ஏதோ உங்களைப்போல நல்லா பாடுறவங்க, பாடுறத கேட்டு வரும் ஞானமும் அது தரும் ஆர்வமும்தான் காரணம்!" என்றேன். இதைக்கேட்டு, "கிண்டல் செய்யறீங்க இல்லையா?" எனகிறாள் புன்னகைத்தவாறே!

"ஐயோ! இல்லேங்க, நான் தன்னடக்கத்தோட பதில் சொன்னேன்!" என்று நான் கூறியதற்கும் அவளின் தோழிகள் கெக்கே பிக்கேவென சிரிக்க, மீண்டும் அவர்களை முறைத்தவள், என் பக்கம் திரும்பி,

"ஓஹ்..! இதுதான் தன்னடக்கமா? நான் இதுவரை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை." எனச் சொன்னாள். அவள் முகத்தில் புன்னகை குறைந்திருந்தது.

"நிஜம் தான் சொல்லறீங்களா? கலைமகளின் ஆசியுள்ள நீங்களே இப்படிச் சொல்லி அவள் ஆசியை புறந்தள்ளலாமா? இது கலைஞர்களுக்கு ஆகும் செயலா?" என்று நான் கேட்கவும், நான் கேட்டது விளங்காமல், குழப்பத்தோடு அவள் என்னைப் பார்க்க, அப்போதுதான் முதல் முறையாக கவனித்தேன் அவளின் அழகான அந்த மேனரிஸத்தை!

வில் போன்ற புருவம் அவளுக்கு. அதில், தன் இடது புருவத்தை மட்டும் மேலே உயர்த்தி கேள்விக்குறி ஆக்கி என்னைப் பார்க்கிறாள் குயில். அந்த புருவவில் வித்தையில் நான் கொஞ்சம் மயங்கித்தான் போனேன் என்பது உங்களுக்கு மட்டுமான இரகசியம்!

"தன்னடக்கம், நாவடக்கம், அவையடக்கம், இதுவெல்லாம் தெரியலையின்னா, இருமாப்பு, ஆணவம், அகம்பாவம் இதுவெல்லாம் தலையில் ஏறி தலைக்கனம் வந்திடாதா? தலைக்கனம் பிடித்த கலைஞர்களூக்கு கலைமகள் ஆசி எப்படிக் கிடைக்கும்? அதற்காகத்தான் சொன்னேன்."

-- என்றேன் அவள் விழியால் தொடுத்த வினாவிற்கான விடையாக.

அவளின் தோழியர் என்னை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, நானே தொடர்ந்து, "ஆனால் நீங்க அடக்கமான பெண்ணாகத்தான் இருக்க முடியும்!" என்றும் கூற,

"அது ஏன் அப்படி?" எனக்கேட்டாள் குயில்.

"ஏனப்படி என்றால்... ஏனோ எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது!"

"அது ஏன் அப்படித் தோன்றுகிறது என்றுதான் சொல்லுங்களேன்?" எனச் சிணுக்கத்துடன் கேட்டார்கள் குயிலின் தோழிமார்கள்.

"அது முடியாது. அது சிக்கல். அதைச்சொன்னால் நான் ஏதோ உங்கள் தோழியை வர்ணிப்பதுபோல் ஆகிவிடும். முதல் சந்திப்பிலேயே ஒரு பெண்ணை வர்ணித்தால் நீங்கள் கூட என்னைத் தவறாக நினைக்கக்கூடும். அப்படி நீங்கள் நினைக்காமல் இருக்கவேண்டுமானால், கவிநயத்தில், கற்பனை வளத்தில், மொழிப்புலமையில், உங்களை நான் மதிமயங்கச் செய்ய வேண்டும். ஆனால், இதுவெல்லாம் ஓர் தேர்ந்த கவிஞனுக்குத்தான் சாத்தியமாக முடியும். நானோ பாவம், வெறும் பாமரன், வெறும் ரசிகன்!" என்றேன்.

"அப்பப்பா, இதுவே மயக்கம் வருவது மாதிரிதான் இருக்கிறது" என்கிறார்கள் தோழிகள். நான். குயிலைப் பார்த்தேன். அவள் நான் பேசுவதையே மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்னங்க? நான் சொன்னது சரிதானே?" எனக்கேட்டேன் அவளிடம். அதற்கு அவள் ஒரு மந்தகாசப் புன்னகை உதிர்த்து, "நல்லா பேசுறீங்க!" என்று கூறி, அவளே தொடர்ந்து, "ஏதோ என் நீண்ட கால ஸ்நேகிதன் போல" என்றும் தன் இதழ் மலர்ந்து மொழியுதிர்த்தாள்!

அவள் கூறியதை ஆமோதிக்கும் செயலாய் கண்களை மெல்ல மூடித்திறந்து புன்னகைத்து நின்றேன். அவளும், ஓர் புன்னகையுதிர்த்து விடை பெற்றுக்கொண்டாள்.

நட்பின் அஸ்திவாரத்துக்கான முதல் மூலக்கல் அங்கே நடப்பட்டதோ?!

~~~ 0 ~~~

"காயத்ரி" என்றொரு பெண், மிகவும் வித்தியாசமான குரல் அமைப்பு கொண்டு உச்சஸ்தாயியில் மனதை உருக்கும் விதம் பாடுவாள். [காயத்ரி, "பூங்குருவி பாடடி சுக ராகம் தேடித்தான் மன பாரம் தீரத்தான்!" என நீங்கள் பாடுவது இன்னும் என்னுள்ளே ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. நீங்கள் பிரபல பாடகியாக எனக்கு அறிமுகமாகும் நாளை இன்னும் நான் எதிர்நோக்கியிருக்கிறேன். அதேசமயம், உங்களுக்கு நான் தந்த வேடிக்கையான வாக்குறுதியும் நினைவிருக்கிறது. நான் படம் பண்ணும் நிலைக்கு வளர்ந்து வந்தால் உங்களைத் தேடிக் கண்டுபிடித்து கண்டிப்பாக என் படத்தில் பாட வைப்பேன்!]

குயில் என் பாட்டுத்தோழியாயினும் நான் காயத்ரிக்குதான் பெரும் இரசிகனாய் இருந்தேன். காயத்ரியின் பாட்டுத்திறமை பற்றி நானும் குயிலும் பல முறை பேசியதுண்டு. குயிலும் காயத்ரிக்கு இரசிகைதான். ஆயினும், போட்டி இருக்கும். ஒரு முறையேனும் காயத்ரியை விடச் சிறப்பாகப் பாடி பெயர் பெற வேண்டும் என்று அடிக்கடி கூறுவாள். நான் இரண்டும் இரண்டு விதம், இரண்டுமே சிறப்பு தான் என்பேன். அதற்கு, "அப்படியானால் இரண்டு முதல் பரிசு தானே தரவேண்டும், நான் இரண்டாம் பரிசு தானே வாங்குகிறேன்!" என்று வாதிடுவாள்.

காயத்ரியின் குரலுக்கு தீவிர இரசிகன் நான் என்பதைப் பதிவு செய்ய இதைவிடச் சிறந்த இடம் வேறு இருக்காது என்பதால் இடைச்சொருகலாய் இம்மூன்று பத்தியைத் திணித்தேன். இனி நாம், நான் இசைக்குப் பாட்டெழுதி ஒரு பாடலாசிரியன் ஆன சம்பவத்துக்குத் தாவுவோம் வாங்கள்.

~~~ 0 ~~~

"றிவொளி இயக்கம்" மும்முரமான செயல்பாட்டில் இருந்த காலகட்டம். தமிழகத்தில் எழுத்தறிவு சதவிகிதத்தை வளர்க்க அரசாங்கம் நடத்திய திட்டம் இது. கல்லூரி மாணவ மாணவியர் பெருமளவு பங்கேற்றுக்கொண்ட இத்திட்டத்தில் எழுத்தறிவின் அவசியத்தை அறிவுறுத்தும் விதம் பாடல் இயற்றும் போட்டி ஒன்று கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் எங்கள் கல்லூரியும் பங்கு பெற்றது.

எங்கள் NSS ஆசிரியர் ஒரு நாள் என்னையும், எங்கள் வகுப்பின் கலைச்சிறந்த என் நண்பன் கண்ணனையும் அழைத்து,

"நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு சாயந்திரம் என் வீட்டுக்கு வந்திடுங்க, நான் ஒரு இசையமைப்பாளரை கூட்டிட்டு வந்திடறேன். நாம ஆறு பாட்டு காம்பெடிஷனுக்காகத் தயார் செஞ்சிடலாம்" என்று சொன்னார்.

எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆறு பாடல்களை இயற்றுவதில் நாங்கள் என்ன செய்யவேண்டும்? எங்களை எதற்காக அழைக்கிறார்?

கண்ணன் கேட்டான். "நாங்க எதுக்கு சார்?"

"நீங்க தான் பாட்டு எழுதப்போறீங்க" என்கிறார் ஆசிரியர். "ஏன் முடியாதா?" என்று அவரே தொடர்ந்து கேட்க சந்தேகத்தோடு நானும், உறுதியோடு கண்ணனும் தலையாட்டி வைத்தோம் "முடியும்" என்று.

கண்ணன் ஒரு கவிஞன். நல்ல கவிதைகள் எழுதுவான். நானோ வெறும் parody தான் எழுதியிருக்கிறேன். ஏதோ ஒரு தைரியத்தில் பாடல் எழுதக் கிளம்பினோம். சாரின் வீட்டில் இசையமைப்பாளர் காத்திருந்தார். அவர் ஹார்மோனியத்தில் ஒவ்வொரு பாட்டின் டியூனையும் வாசிக்க நாங்கள் இருவரும் இசையமைப்பாளரையும், அவரின் ஹார்மோனியப் பெட்டியையும், ஒருவர் மாற்றி ஒருவரின் முகத்தினையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

பாடல்களை வாசித்துக்காட்டிவிட்டு எங்கள் வரிகளுக்காகக் காத்திருந்தார் இசையமைப்பாளர். எங்களுக்கோ வரி என்ன ஒரு எழுத்துகூட எழுத வரவில்லை.

"சார். டியூனை எல்லாம் ரெக்கார்டு பண்ணிக் கொடுங்க. நாங்க ராத்திரி பூரா யோசிச்சு நாளைக்கு பாட்டோட வருகிறோம்" என்றோம். இதைக்கேட்டு கோவம் கொண்டு, திட்டாத குறையாக எங்களை முறைத்தார் எங்கள் NSS சார்.

"அதெல்லாம் சரிப்படாது. உங்களால முடியும். இப்பவே எழுதுங்க. Song by song ஆ போகலாம். வேணும்னா போய் சாப்டிட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு ஒரு ஒருமணிநேரம் கழிச்சு வாங்க. எல்லாம் சரியா வரும்" என்றார் அவர்.

நாங்கள் இருவரும் வெளியே போய்விட்டு ஒரு மணிநேரம் கழித்து வந்தோம். முதல் பாடலின் சிச்சுவேஷனை மீண்டும் விளக்கினார் எங்கள் NSS சார்.

"பட்டிணத்தில் வேலை செய்யும் கணவனைத் தேடிக்கொண்டு அவன் விலாசத்தை எடுத்துக்கொண்டு மனைவி வருகிறாள். அவள் படிப்பறிவு இல்லாதவள். ஆதலால், விலாசத்தை படிக்க முடியாமல் அங்கே போவோர் வருவோரிடமெல்லாம், ஐயா இது எந்த இடம் நு பாத்து சொல்லுங்கன்னு கேட்கிறாள். ஆனால் நகரத்திலோ மக்கள் அடுத்தவர் பற்றி கவலையில்லாத பரபரப்பில் இருப்பவர்கள். யாரும் அவளுக்கு உதவ வராத சூழலில், நாலு எழுத்து படிக்காது போனதாலே தானே இந்தக் கஷ்டம்? என, படிக்கத் தெரியாததை எண்ணி நொந்து பாடுகிறாள்" என்று விவரிக்க இசையமைப்பாளர் மீண்டும் அந்த பாட்டிற்கான டியூனை வாசித்துக் காட்டினார்.

இம்முறை கண்ணன் ஒரு உத்தியைக் கையாண்டான். அவன் அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தை உட்கொண்டு, அந்த கதாபாத்திரம் அந்தச்சூழலில் என்ன வசனம் பேசும் என்பதைப் பேசிக்காட்டினான்.

"எண்ணும் தெரியல, எழுத்தும் தெரியல, ராசா நான் உன்ன எங்கே போயி தேடுவேன்? எப்படி உன்ன கண்டுபிடிப்பேன்... ஆளு பேருன்னு நூறு பேரு இருந்தும் எனக்கு படிச்சு சொல்ல யாரும் இல்லியே... நானே படிச்சிருந்தா இந்தத் தொல்லை இல்லியே" என அவன் பேசி நடிக்க, அந்த வசனங்களைப் பாடலாய் வடிவமைப்பதில் எங்களூக்குப் பெரும் சிரமம் ஏதும் இருந்திடவில்லை.

எண்ணும் எழுத்தும் தானே தெரியவில்லை எனக்கு - என்

ஏக்கத்தை எப்படி புரியவைப்பேன் உனக்கு?

தேடி வந்தேன் ராசா - உன்ன

தேடி வந்தேன் ராசா!

பரபர வென போகுறாங்க பல நூறு பேரு - இதில்

உன்னயும் என்னயும் சேத்து வைக்க உதவுறதாரு? - நான்

நாலெழுத்து படிச்சிருந்தா போதுமே - என்

கஷ்ட்டமெல்லாம் போயிருக்கும் தூரமே!

என, முதல் பாட்டிற்கான வரிகள் வந்தமைந்தது. சந்தத்தில் வார்த்தைகள் பொருந்தியதில் இசையமைப்பாளரும், வரிகளில் சாரும் திருப்தியாக, எங்களுக்கும் உற்ச்சாகம் பொங்கியது. இதே உற்ச்சாகத்தில் மற்ற பாடல்களையும், பெரும் பிரயர்த்தனங்கள் இல்லாமல் முன்பைவிடச் சுலபமாகவே எழுதி முடித்தோம்.

பாடல் எழுதிய, அதும் இசைக்குப் பாடல் எழுத முடிந்த மகிழ்ச்சி என் உள்ளத்தில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தது. ஆனந்தத்தில் நான் சலம்பிக்கொண்டிருக்க கண்ணன் நிறைகுடமாய் நின்றிருந்தான் தளும்பாமல்.

அடுத்த இரண்டு நாட்கள் பாடல்களுக்கான ரிகர்சல் நடந்தது. பாடலாசிரியர்கள் என்பதாலும், பாடக்கூடியவர்கள் என்பதாலும் நானும் கண்ணனும் கூட ரிகர்சலில் கலந்துகொண்டோம். முதல் பாடலுக்கு அருமையான ஹம்மிங்கை உருவாக்கியிருந்தார் அந்த இசையமைப்பாளர். அந்த ஹம்மிங்கை எங்கள் கல்லூரிப் பாடகன் வஸந்த் பாட, பாடலை காயத்ரி பாடினாள்.

காயத்ரியின் குரலில் என் வரிகளைக் கேட்டபோது என் உடலின் ஒவ்வோர் திசுவிலும் மின்சாரம் பாய்ந்தது. இரண்டு பாடல்களூக்கு குயிலின் குரலைத் தேர்ந்தெடுத்தார் இசையமைப்பாளர். அப்பாடல்களை வெகு லாவகமாய் இனிமையாய் பாடினாள் குயிலம்மா. என் பாடலின் வரிகள் இசையோடு எத்தனை அழகாகப் பொருந்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, சில வார்த்தைப் பிரயோகங்களைப் பாராட்டவும் செய்தாள்.

பாராட்டுக்களை நான் கண்ணனோடு பங்கிட்டுக்கொண்டேன். இருவரும் இணைந்தே அல்லவா பாடல்களை இயற்றியிருந்தோம்?

ரெக்கார்டிங் நாள் வந்தது. ஆர்க்கெஸ்ட்டிராவுடன் சேர்ந்து பாடுகையில் எங்கள் பாட்டு இன்னும் ஒரு படி மேலோங்கி புதிய பரிமாணத்தில் மிளிர்ந்தது.

தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக,

பஞ்சாலை போகும் தம்பி - நான்

சொல்லுறத கேளு தம்பி!

பள்ளி படிக்கும் பருவம் தம்பி

படிச்சா நீ தங்கக் கம்பி!

-- என்று எழுதப்பட்டிருந்த ஒரு பாட்டு, முதலில் வஸந்த் மட்டும் பாடுவது போல் தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், ரெக்கார்டிங் சமயத்தில் பாட்டின் அமைப்பை மாற்றினார் இசையமைப்பாளர்.

பஞ்சாலையில் வேலை பார்க்கும் சிறுவனுக்கும் அறிவொளி இயக்க உறுப்பினருக்கும் நடக்கும் சம்பாஷனையோடு துவங்கி, பாட்டின் இடையிடையே அச்சிறுவன் பேசுவது போலவும், உடன் சேர்ந்து பாடுவது போலவும் மாற்றி அமைத்தவர், அச்சிறுவன் பேசுவதைப்போல சில வசனங்களை பாட்டில் எழுதிச்சேர்க்கச் சொல்லிவிட்டு, "ரெக்கார்டிங்கில் நீயே அதை வசந்துடன் பேசிப் பாடிடு" என்று கூறினார்.

எனக்கோ பயம் வந்து கவ்விக்கொண்டது. முதலில் தயங்கினேன். குயில் உள்பட எல்லோரும் தைரியம் கூறி என்னைத் தேற்றி பாடவைத்தார்கள். வசந்தோடு சேர்ந்து நானும் பாடினேன். ரெக்கார்டிங் முடித்து பாடல்களை எங்களுக்குப் போட்டுக் காட்டுகையில், நான் பாடிய பாடல் வந்தபோது என்னைப் பார்த்த குயில், தன் விரல்களால் 'அருமை' எனும் முத்திரை காட்டினாள். கண்கள் மூடி அப்பாட்டினை ஆழ்ந்து இரசித்தவள், பாட்டு முடிந்ததும் என்னருகே ஓடி வந்து, "கையக் குடுங்க" எனக்கூறி என் கைகளை இறுகப் பற்றி கைகுலுக்கிப் பாராட்டினாள்.

அவள் என்னைப் பாராட்ட பாராட்ட, என் மனம் மோகன ராகத்தில் ஆலாபனை செய்யத்துவங்கியது. வெறும் பாராட்டுத் தரும் மயக்கமே அலாதியானது. அதும் ஒரு பெண் பாராட்டினால், அதும் ஒரு திறமையுள்ள பெண் பாராட்டினால், கேட்கவா வேண்டும்?

சிறகின்றிப் பறக்கும் வினோதப் பறவையாய் நானும் மாறி, தறிகெட்டுப் பறந்தேன் உயரே அந்த வானம் ஏறி!

~~~ 0 ~~~

"லைப்ரரீரீரீரீரீ..... லைப்ரரி!"

இது எங்கள் குணாளன் சார் உதிர்த்திட்ட புகழ்மிகு வாசகம். மதிய வகுப்புகளில் முதல் பீரியடில் கிரிஜா மேடம் தான் வரவேண்டும். ஆனால் அன்று கடைசி பீரியடில் வரவேண்டிய குணாளன் சார் வந்து அட்டெண்டென்ஸ் எடுத்தார். அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்த பிறகு,

"கிரிஜா இஸ் ஆன் லீவ் டுடே. சோ, திஸ் ஹவர் ஆல் ஆப் யூ கோ டூ லைப்ரரி!" -- என்றார் அவர்.

"சார் அப்போ நெக்ஸ்ட் ஹவர்?"

-- அடுத்த ஹவர் எடுக்கவேண்டிய புவனா மேடமும் அன்று வரவில்லை என்பதால் அந்த வகுப்பு குறித்து கேட்டான் என் நண்பன் பாபுராதாகிருஷ்ணன் சுருக்கமாக பாபு.

"லைப்ப்...ர்ர்ரரி!" - அதுவும் லைப்ரரிதான் எனும் தொனியில் லைப்ரரிக்கு அழுத்தம் கொடுத்து அவர் கூறிட,

"சார் அப்போ third hour?" என அடுத்த கேள்வியை அவனே வீசினான். Third hour குணாளன் சாரின் வகுப்புதான் என்பதால் அவரிடம் இப்படிக் குறும்பாகக் கேட்டான் பாபு. அவன் இப்படி கேட்பதற்காகவே காத்திருந்தார் போல் குணாளன் சாரும்,

"லைப்ரரீரீரீரீரீ..... லைப்ரரி!" என்று ராகமாகக் கூறிக்கொண்டே வகுப்பை விட்டு வெளியேறினார்.

அவர் இப்படி ராகமாகக் கூறியது அனைவருக்கும் சிரிப்பினை வரவழைக்க, வகுப்பு மொத்தமும் சிரிப்புக்குள் ஆழ்ந்துபோனது. இப்படியாக குணாளன் சாரின் வகுப்பும் கேன்சல் ஆகிவிட, அன்றைய மதிய வகுப்புகள் யாவும் மொத்தமாகக் கேன்சல் ஆகிப்போனது.

மதிய வகுப்புகள் கேன்சல் ஆகிப்போனாலும் வீட்டுக்குப்போக இனி மாலையில் தான் பஸ் உண்டு. ஆதலால் மாலை வரை காலேஜில்தான் பொழுதைக் கழிக்கவேண்டும். லைப்ரரியில் ஜூனியர் பெண்கள் இருப்பார்கள் என எதிர்பார்த்து அங்கே போனால், அங்கோ மாபெரும் வறட்சி, பெண்கள் இல்லாமல் கண்களுக்கேது குளிர்ச்சி? ஆகையால், ஜாகையை எங்கள் பொழுது போக்குக் கேந்திரமான கேண்டீனுக்கு மாற்றினோம். லைப்ரரியில் எதிர்பார்த்துப்போன பூக்கள் யாவும் இங்கே பூத்துப் பொலிவூட்டிக் கொண்டிருக்க கேண்டீன் சொர்கபுரியாகியிருந்தது.

ஸ்ருதியோடும் தாளத்தோடும் அழகாய் பொருந்திய இனிய இசையாக வளர்ந்து கொண்டிருந்த குயிலோடான என் நட்பு எனக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கப் போவது இங்குதான் என்பதை அறியாதவனாக கேண்டீனுக்குள் நுழைந்தேன்.

கேண்டீனில், கல்லூரிப் பாடகன் வஸந்த் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண் டிருக்க, ஒரு பட்டாளமே அவனைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு அவனைச் சாப்பிட விடாமல் கேரோ செய்துகொண்டிருந்தது. அவனோ, எதையும் சட்டை செய்யாமல் சாப்பிடுவதிலேயே கருத்தாக இருந்தான்.

மஞ்சுவும் அங்கிருந்தாள். ஐஸ்கிரீம் குடித்துக்கொண்டிருந்தாள். நான் அவளருகில் சென்று அமர்ந்தேன்.

"இங்கே என்ன உலாத்தீட்டிருக்கீங்க? க்ளாஸ் கட்டா?" -- என்னைக் கேட்டாள் மஞ்சு.

"கிரிஜா மேடம் லீவுடி, க்ளாஸ் கேன்சல் ஆயிடுச்சு. நீ இங்கே என்ன பண்ணிட்டிருக்கே?" என்று கேட்டு, அவள் பதிலுக்குக் காத்திராமல்,

"மதியான நேரத்திலே ஐஸ்கிரீம் குடிச்சா உடம்புக்கு ஆகாது" என்று கூறி, அவளிட மிருந்து ஐஸ்கிரீம் கப்பினை பறித்து நான் பருகத்துவங்கினேன். பறிக்கையில் சில துளிகள் அவள் மீது சிந்திவிட,

"கேட்டா நானே தருவேன்ல, பக்கிரி! ஏன் பிடுங்கறீங்க?" என்று கூறி ஒரு அடியும் வைத்தாள் என் தோள்களில்.

"என்னடா இப்படி பப்ளிக்கா பக்கிரின்னு திட்டுறே?"

-- ஏதோ அவள் என்னை அப்படி விளித்ததற்காக வருத்தப்படுபவன்போல நான் பரிதாபமாகக் கேட்டேன்.

"இன்னும் மோசமா திட்டியிருப்பேன்... உங்க கிளியோபாட்டிரா முன்னாடி மானம் போகவேண்டாமேன்னு தான் இத்தோட விட்டேன்" என்றாள் மஞ்சு.

"என் கிளியோபாட்டிராவா? அது யாரு?" அவளைக் கேட்டேன். மஞ்சு கண்களால் திசைகாட்ட, நான் அத்திசையில் என் பார்வையைத் திருப்பினேன். அங்கே,

பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த என் ஜுனியர் பெண்கள் கூட்டத்தில் பூங்குயிலாளும் பூத்திருக்கிறாள்! நான் அவளைப் பார்க்க, அவள் என்னைப் பார்த்ததும் புருவமுயர்த்தி வருகவென்றாள், நான் புன்னகையுதிர்த்து அவள் வரவேற்புக்கு நன்றி என்றேன்.

"போதும் போதும் கொஞ்சம் அடங்குறீங்களா?!" -- கடிவாளம் போட்டாள் மஞ்சு!

"சரிடி, என் பாட்டி!" -- கடிவாளத்திற்குக் கட்டுப்பட்டேன்.

வஸ்ந்தை இன்னும் யாரும் விட்டபாடில்லை. "சாப்பிடும்போது நல்லா மென்னு முழுங்கனும்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க, அதுக்காக குறைஞ்சபட்சம் இருபத்தியெட்டு தடவையாவது மெல்லணுமாம்." என்று கூறி, வஸந்த் மெல்லுகையில் ஒன்று, இரண்டு, மூன்று என கோரஸாக எல்லோரும் எண்ணத்துவங்கினார்கள்.

கேண்டீனை நடத்துவது எங்கள் கல்லூரி வாட்ச்மேன் தான். அவர் வஸந்தின் இலையில் கொஞ்சம் கூட்டு வைத்துவிட்டு, அவனைச் சாப்பிடவிடாமல் தொந்தரவு செய்பவர் களுக்கு ஒரு திட்டும் வைத்துவிட்டு, வஸந்தைப்பார்த்து,

"நீ திருப்தியா சப்பிடுப்பா" என்று கூற, அவர் கூறியவிதம் கேட்டு அனைவரும் 'கொல்' லெனச் சிரித்தனர்.

வஸந்த் பொறுமை இழந்து கோவம் கொள்ளத்துவங்குகிறான் என்பது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. என்ன கோவம் கொண்டாலும் அவனைக் கேலி செய்யும் நண்பர்கள் அசரப்போவதில்லை என்பதால் தன் கோவத்தை, பாவம் வாட்ச் மேனிடம் கொட்டித் தீர்க்கிறான் அவன்.

"ஆமா, இது ஒரு சாப்பாடுன்னு நாங்க திருப்பத்தியா வேற சாப்பிடனுமாக்கும். எப்பப் பாத்தாலும் சாம்பாரு, பொடலங்கா கூட்டு, வாழக்கா பொறியலு. இத விட்டா, எலுமிச்ச சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம். வாய்க்கு ருசியா வேற எதாவது வைக்கறீங்களா? ஒரு மட்டன் சுக்கா, சிக்கன் சில்லி, மீன் வறுவல், பிரியாணி னு ஏதாவது போடறீங்களா?"

-- என தன் மீது நிலைகொண்டிருக்கும் டாப்பிக்கை மாற்ற முயற்சித்து அதில் வெற்றியும் கண்டான் வஸந்த். அவன் மீது கவனம் கொண்டவர்கள் இப்போது வாட்ச் மேனைப் பிடித்துக் கொண்டார்கள்.

"அது வாஸ்த்தவம் தான் வாட்ச்மேன். ஏதோ நாங்க நல்ல பசங்களா இருக்கப்போக நீங்க ஆக்கிப்போடறத சாப்பிட்டிட்டுப் பேசாம இருக்கோம். அதுக்குன்னு நீங்க எப்ப பாத்தாலும் சைவமா சமச்சுப் போடறது சரியில்லை" என்றொருவன் கூற, இந்தப் பயல்களூக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், வலையில் மாட்டிய வாளைமீன் போல, சிக்கிக்கொண்டார் வாட்ச்மேன் வசமாக.

மாட்டிக்கொண்ட வாட்ச்மேனுக்கு சப்போட்டாக மஞ்சு, "ஏன்? வெஜிட்டேரியன்ல என்ன குறை? நான்-வெஜிட்டேரியனை விட வெஜிட்டேரியன் தான் நல்லது. நீங்க இந்தப் பசங்க சொல்லுறதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க வாட்ச்மேன்" என்று ஆதரவுக் குரல் கொடுத்தாள்.

"வெஜிட்டேரியன்ல என்ன குறையா? எல்லாமே குறை தான். அந்தக் காரம், அந்த மணம், அந்த குணம், அந்த ருசியெல்லாம் நான்வெஜ் போல வருமா?" என வஸந்த் கேட்க,

"காரக்குழம்பு, மிளகுரசம் இதிலெல்லாம் இல்லாத காரமா? குருமாவில் இல்லாத வாசமா? நீ என்னதான் பிரியாணி சாப்பிட்டாலும் அதோட ரசம் சாதமும், தயிர் சாதமும், கடைசியிலே கொஞ்சம் சாப்பிட்டாத்தானே திருப்தி வருது?" என்று மஞ்சு சளைக்காமல் பதில் கூற,

"ஓஓஓ...!" என அவளூக்கெதிராக குரலெழுப்பி தங்கள் எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்கள் அசைவப் பிரியர்கள்.

கிட்டத்தட்ட எல்லோருமே அசைவத்திற்கு ஆதரவாகப் பேச, மஞ்சு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் அவதிப்படுவதைக்கண்டு,

"நீ சரியான சைவ சாப்பாடு சாப்பிட்டதில்லேன்னு நினைக்கறேன் வஸந்த். சைவ சாப்பாடு அசைவத்தையே தூக்கிச் சாப்பிட்டிடும் தெரியுமா?" என்று நான் என் பங்குக்கு மிளகாய்ப்பொடி தூவி இந்த விவாதத்திற்குக் காரம் சேர்த்தேன்.

இதைக்கேட்ட வஸந்த் என்னைப் பார்த்து, "யூ டூ புரூட்டஸ்?" என அலறினான், நான் சைவத்திற்கு ஆதரவளித்துப் பேசுவதை நம்ப இயலாதவனாக.

"நான் சொல்றது உண்மைதானே? நான்-வெஜிட்டேரியன்ல கிடைக்கறதெல்லாம் வெஜ்லயும் கிடைக்குது, வெஜிட்டபிள் பிரியாணி, வெஜிட்டபிள் குருமா ஏன் கொத்து புரோட்டா கூட இப்ப வெஜ்ல கிடைக்குது. என்னதான் சொல்லு, பருப்பு நெய்யுல ஆரம்பிச்சு, காரக்குழம்பு, மோர்க்குழம்பு, சாம்பார் ரசம் னு பயணிச்சு, பாயசம் அப்புறம் ஆயாசமா மோர்சாதம் நு அப்பளத்தோட, பல வகை கறிகாய் பொறியல் கூட்டு ஊறுகாயோட சாப்பிடுற முழு திருப்தி வேற எதுலயும் வராது. மட்டனெல்லாம் எத்தனை கொழுப்பு? சரியா வேகவைக்காட்டி கிருமிகள் வேற நோய் பரப்பும், போறாததுக்கு ஒரு ஜீவனைக் கொன்ற பாவம் வேறு!"

-- என்றெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தூவினேன் மிளகாய்ப்பொடியை.

மஞ்சு கூட என்னை ஆச்சரியத்தோடுதான் பார்த்துக்கொண்டிருந்தாள். "நீ தான் பேசுறியா, நெசமாத்தான் பேசுறியா?" எனும் கேள்விகள் இருந்தது அவள் பார்வையில். நான் ஒரு மாமிசபட்சி என்பதை அறிந்தவள் தானே அவள்!

"சரிதான். ஒரு ஐயர் பெண்ணைத்தான் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும். உங்களூக்கு, இப்படிச் சைவமா சமச்சுப்போட!" என்று கூட்டத்திலிருந்து ஒருவன் கூற நான்,

"சந்தோஷமா கல்யாணம் செஞ்சுக்குவேன். சொல்லப்போனா என் ஆசையும் அதுதான்." என்கிறேன்.

"அடடா! வெறும் பருப்பு நெய்யுக்காக இப்படி ஒரு தீவிர முடிவா?" -- என்று அவனே என்னை மீண்டும் கேட்க,

"அதுக்குன்னு இல்லே, எனக்கென்னமோ அப்படி ஒரு விருப்பம். ஐயர் பொண்ணுங் கன்னா எனக்கு இயல்பாகவே கொஞ்சம் கிரேஸ் உண்டு. ரொம்பப் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனா எனக்குன்னு நான் என் மனசுக்குள்ளே சிருஷ்டித்த என் கற்பனைத் தோழி கூட ஒரு ஐயர் பெண் தான்." என்றேன்.

"அது யாரு?" -- மஞ்சு கேட்கிறாள்.

"சகி! என் மனதின் சகி. எனக்கே எனக்குன்னு நான், என் கற்பனையிலே உருவாக்கிய ஒரு பெண். என் எல்லா எதிர்பார்ப்புகளையும் தன்னுள் கொண்ட என் தோழி, என் கற்பனா புரத்தை ஆளும் இளவரசி!" என்றேன்.

"ஐயர் பொண்ணுங்க மேலே இத்தனை பக்தியா?" வாய்பிளந்து கேட்டான் வஸந்த்.

"பக்தி மட்டுமா? பித்து பிடிச்சு அலையறேன் பித்து. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா கண்டிப்பா அது ஒரு ஐயர் பொண்ணோடதான் நு முடிவே செஞ்சிருக்கேன்! இதுக்காகவே ஒரு ஐயர் பொண்ண தேடிட்டிருக்கேன் காதலிக்க!"

-- என்று நான் கூற, எல்லாரும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் நானும் விழித்துக்கொண்டிருக்க, நல்ல வேளையாக என்னைக் காப்பாற்றினார் நம்பியார் மாமா.

நம்பியார் மாமா, எங்கள் கல்லூரிப் பேருந்தின் ஓட்டுனர். கேண்டீனில் கூட்டமும், கூச்சலும் நிரம்பி வழிவதைக் கவனித்த பிரின்ஸிபால், கூட்டத்தை கலைத்திட வேண்டி, வழக்கமான நேரத்துக்கு முன்னமே ஒரு டிரிப் அடிக்க உத்தரவிட்டிருக்கிறார். இன்னும் பத்து நிமிடத்தில் பஸ் புறப்படும் என நம்பியார் மாமா அறிவிக்க, நாங்கள் ஓடிச்சென்று பஸ்சில் ஏறி அமர்ந்தோம். என் அருகில் வஸந்த் வந்தமர்ந்தான்.

பஸ் புறப்பட்டது. வஸந்த் என்னைப்பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு வீச,

" எதுக்கு இப்போ இப்படியொரு கிருத்ருமப் புன்னகை?"

-- எனக்கேட்டேன் அவனிடம்.

"உங்க குயிலுக்கு ரூட் விடறீங்களா?"

-- ரகசியக்குரலில் அவன் கேட்க, நான் அதிர்ந்து போனேன்.

"எலேய்? என்ன ஆச்சு உனக்கு? ஏன் திடீர்னு இப்படி கேக்குறே?"

"உங்க குயில் தானே உங்க மனதின் சகி? அந்த ஐயர் பொண்ணு?"

"அடப்பாவி! அப்படியெல்லாம் ஏதும் இல்லை. உனக்கு ஏன் இப்படியொரு சந்தேகம் வந்தது?"

"நீங்க தானே உங்க மனதின் சகி ஒரு ஐயர் பொண்ணுன்னு சொன்னீங்க?"

"ஆமாம், சொன்னேன் அதுக்கு என்ன?"

"உங்க குயிலு ஐயர் பொண்ணா இருக்குங்காட்டித்தானே இப்படி இண்டிக்கேஷன் குடுத்தீங்க?!"

"எலேய்.. பாவிப்பயலே!" கிட்டத்தட்ட அலறியேவிட்டேன். தொடர்ந்து, "இவ ஐயர் பெண்ணா? எனக்குச் சத்தியமா தெரியாதுடா" என்றேன்.

"சும்மா டூப் அடிக்காதீங்க!" -- அவன் நான் கூறியதை நம்பத் தயாராக இல்லை.

"சத்தியமா சொல்கிறேன், அவ ஐயருன்னு எனக்குத் தெரியவே தெரியாது. நீ ஏதும் புரளிய கிளப்பி விட்டிடாதே!"

"அப்புறம் ஏன் ஐயர் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். காதலிக்க ஐயர் பெண்ணைத் தேடுறேன்னு எல்லாம் சும்மா அளந்து கொட்டிட்டிருந்தீங்க?"

"நான் பொதுவா ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன்?"

"என்னமோ, எனக்குத் தோணல. அவளுக்கும் தோணியிருக்காது."

-- என்றான் சீரியஸாக.

"ஏண்டா வயித்துல புளியக் கரைக்குறே? அவ நான் சொன்னதையெல்லாம், அவளை குறிவச்சு சொன்னதுன்னு தப்பா எடுத்திருப்பாங்கறியா?"

"அப்படித்தான் எனக்குத் தோணுது"

-- என்று இரக்கமே இல்லாமல் அவன் கூற நான் ஒரு முட்டாள் தனமான கேள்வியை அடுத்து கேட்டேன்.

"அவ கருப்பதானே இருக்கா? அப்புறம் எப்படி அவ ஐயர் பெண்ணா இருக்க முடியும்?" என்று!

"ஐயருன்னா வெள்ளையாத்தான் இருக்கணும்னு யார் சொன்னது? கருப்பான ஐயர்களை நீங்க பாத்ததே இல்லையா? இவ சுத்தமான அக்மார்க் ஐயர் பொண்ணு சந்தேகமே இல்ல" என என் தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாய் வஸந்த் கூற,

சற்றுமுன் வரை வசந்தமாக இருந்த என் நிலை, காலநிலை மாற்றம் கண்டது. தாழ்வழுத்தக் குழப்ப மண்டலம் ஒரு சூறாவளியை தோற்றுவித்து, அதனை என் அடிவயிற்றில் சுழலவைத்தது.

~~~ 0 ~~~

ண்மையில் குயில் ஒரு ஐயர் பெண் என்று நான் அறிந்திருக்கவில்லை. கேண்டீனில் உணர்ச்சிவசப்பட்டு அளந்து விட்ட கதை என்னையே வம்புக்குள் ஆழ்த்திவிட்டதே? நான் தூவிய மிளகாய்ப்பொடி என் மூக்கையே பதம் பார்த்திட்டதே!

ஏதோ ஒரு உற்ச்சாகத்தில் நான் சொன்னது யாவும் தன்னைக் குறிவைத்துத்தான் என குயில் தவறாக எடுத்தாளா இல்லையா என்றெல்லாம் என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால், இந்நிகழ்ச்சிக்குப் பின் குயிலின் முகம் பார்க்கவோ, ஒன்றிரண்டு வார்த்தைகள் அவளிடம் சாதாரணமாகப் பேசவோ கூட எனக்கு மிகவும் சங்கோஜம் என்றாகிப்போனது. குயிலும் கொஞ்சம் வாட்டத்தோடே தென்பட்டாள். ஆதலால், அவளை அவள் போக்கில் விட்டு நான் என் போக்கில் போக, நாங்களிருவரும் பேசியே சில நாட்கள் ஆகிவிட்டிருந்தது.

பழைய கலகலப்பு அவளிடம் இல்லாதது போல் எனக்குத் தோன்றினாலும், அது குற்றமுள்ள என் நெஞ்சு குறுகுறுப்பதன் காரணமாக, எனக்கு மட்டும் தான் அப்படித் தோன்றுகிறது, என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்க,

"என்ன ஆச்சு உங்க கிளியோபாட்டிராக்கு? கொஞ்ச நாளாவே டல்லா இருக்காளே?" -- எனும் கேள்விக் குறியோடு வந்தாள் மஞ்சு.

"அப்படியா? எனக்குத் தெரியலையே? ஏன் என்ன விஷயம்?" என்று ஏதுமறியாதவன் போல பவ்வியமாகக் கேட்டேன் மஞ்சுவிடம்.

"எனக்கென்ன தெரியும்? நீங்கதானே எப்பப் பாத்தாலும் அவளோட ஜோடியா சுத்திட் டிருப்பீங்க? இப்ப கொஞ்ச நாளா அதையும் காணும், ஏதும் சண்டையா?"

"சண்டையா? நான் எதுக்கு சண்டை போடனும்?"

"எனக்கென்ன தெரியும். உங்களூக்குதான் லைசன்ஸ் இல்லாத வாய் ஆச்சே, ஏதாவது ஏடாகூடமா சொல்லியிருப்பீங்க. அவ ஏதோ வருத்தத்துல இருக்கறதப்போலத்தான் எனக்குத் தோணுது." என்று சொன்னாள் மஞ்சு, நான் பிஞ்சு போனேன் பிஞ்சு!

உண்மையில் குயில் ஏதும் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால் அதற்கான விளக்கம் அளித்து, அவள் மனம் வேதனித்திருந்தால் அதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும். விரைவில் இரண்டில் ஒன்று தெரியவேண்டும். இல்லையேல் இந்தக் குழப்பமே என்னை குதறிக் கொன்றுவிடும்.

ஒருநாள் குயில் தனியே கிடைத்தாள்! லைப்ரரி பில்டிங்கின் வராந்தா சுவரில் சாய்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்து அமர்ந்திருக்கிறாள். இதுதான் சரியான சந்தர்ப்பம். இதுதான் சரியான இடமும் கூட! ஒருவேளை அவள் திட்டினாலும் அதிகம் யாருக்கும் கேட்காது. ஆகையால் அவளருகே செல்லலாம் என முடிவெடுத்தேன்.

அவளைப் பார்த்து கை அசைத்தேன், அவளூம் கை அசைத்தாள். புன்னகைத்தேன், அவளூம் புன்னகைத்தாள். அவள் புன்னகைப்பது தைரியம் தர நான் அவளருகில் சென்றேன். புன்னகை மாறா முகத்தோடு என்னைப் பார்த்தவள் வழக்கம்போல் புருவமுயர்த்தி வருகவென்றாள். நானும் பதிலுக்கு புருவத்தை உயர்த்த எத்தனித்து, தோற்று, இறுதியில் இரு கண்களையும் மெல்ல மூடி "சும்மா" என்பது போல் சைகை செய்து வராந்தா திண்ணையில் அவள் அருகில் அமர்ந்தேன்.

"ஏன் இப்படி தனியா உட்கார்ந்திருக்கே?" -- கேட்டேன்.

"சும்மாதான். சில நேரங்கள்ல நமக்கு தனிமை தேவைப்படும் இல்லையா?"

"ஓஹ்... அப்படியா?"

"ஏன் உங்களுக்கு அப்படித் தோணினதில்லையா?"

"உண்டு. மனசு சஞ்சலப்படும்போது, குழப்பத்துல இருக்கும்போது, சோகமா இருக்கும் போதெல்லாம் நான் தனிமையைத் தேடுவதுண்டு" என்று கூறி, தொடர்ந்து அவளிடம், உன் தனிமைக்கு என்ன காரணம்? தெரிஞ்சுக்கலாமா?" எனக்கேட்டேன்.

"நீங்க சொன்ன எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம்."

"ஆட்சேபனை இல்லையின்னா, நான் ஏதும் உதவலாமா? குறைந்தபட்சம் உனக்கும் உன் தனிமைக்கும் இடைஞ்சல் ஆகாம நான் வேணுமின்னா இடத்தைக் காலி செய்யவா?"

-- எனக்கூறி எழுந்திருக்க முயன்றேன்.

"இல்லையில்லை, பரவாயில்லை. நீங்க உக்காருங்க. இப்போ எனக்குத் தனிமை தேவையில்லை." என்றாள் வேகமாக.

"ஏன்? அந்த கொஞ்சம் சஞ்சலம், கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் சோகம் இதெல்லாம் மாறிட்டதா?" -- கேட்டேன்.

"ம்! ஆமா! மாறிட்டது. உங்க உதவியோடத்தான்." என்கிறாள்.

"என் உதவியா? நான் என்ன உதவினேன் அப்படி?"

"உதவினீர்கள். எப்படி என்பது இன்று வேண்டாம். பிறகெப்போதேனும் நிச்சியமாய் கூறுவேன்."

"ஏதோ நல்லது நடந்தால் நல்லதுதான்." என்றேன் நான்.

"நல்லதுதான். அதுதான் நடக்கும்." என்றாள் அவளும்.

என்னிடம் குயில் கோபித்திருப்பது போலேதும் எனக்குத் தோன்றவில்லை. நன்றாகவே பேசுகிறாள். ஆகவே, நான் தன்னிலை விளக்கமளிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ அவசியம் இல்லை. என்னை வீணாகக் குழப்பிவிட்டது இந்த வஸந்தும், மஞ்சுவும்தான். இரண்டு பேரும் பேசி வைத்துச் செய்த கூட்டுச் சதியோ இதெல்லாம்? என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க, குயிலும் ஏதோ யோசனைக்குள் ஆழ்ந்திருந்தாள்.

சில நாழிகை அங்கே மவுனத்தின் இரைச்சல் மட்டுமே கேட்டது. பிறகு அவளே,

"உங்க கிட்டே ஒன்னு கேக்கலாமா?" எனும் கேள்வியினைத் தொடுத்து மவுனத்தை அமைதிப்படுத்தினாள்.

"தாராளமா...!" -- என்ன கேட்கப் போகிறாள்?

"ஐயர் பெண்களை அவ்வளவு பிடிக்குமா?"

-- ஓஹ்! இப்போதுதான் இதுகுறித்த பிரச்சினையே ஆரம்பம் ஆகிறதா? என் இதயம் படபடத்தது! என்ன பதில் சொல்வது? என யோசித்து,

"அதான் அன்னைக்கே சொன்னேனே!" என்றேன் பொத்தாம் பொதுவாக.

"உங்க மனதின் சகி, உண்மை கதாபாத்திரமா? கற்பனையா?"

"கற்பனைதான்!" --அழுத்தம் திருத்தமாக, முத்திரை குத்தப்பட்டதுபோல் கூறினேன்.

"உங்கள் சகி போல் ஒரு பெண் கிடைத்தால் ஏத்துப்பீங்களா?"

-- கேட்டாள். நான் மிகவும் இயல்பான நிலையில் இருப்பதுபோல் நடிக்க முயற்ச்சி செய்துகொண்டிருந்தேன். இதயம் பாழடைந்த பழைய அரசு நகரப்பேருந்துபோல சப்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது.

"அதுதான் அன்னைக்கே சொன்னேனே. கட்டினா ஐயர் பொண்ணுதான்."

என்றேன், கேலி பேசும் தொணியில். உள்ளுக்குள்ளோ உதறல் எடுத்தது.

"முடிவில் மாற்றம் இல்லையே?" தொடர்ந்து கேட்கிறாள். அவள் நோக்கம் என்ன என்று ஏதும் புரியவில்லை. நான்,

"அந்த ஐயர் பொண்ணுக்கும் என்னை பிடிக்கனும் இல்லையா? அதைப் பொறுத்துதான் முடிவு அமையும்."

-- கழுவும் மீனில் நழுவப் பார்த்தேன்.

"அவ விரும்பறான்னு வச்சுக்கோங்க! ஏத்துக்குவீங்களா?"

-- எனக்கேட்டு நான் நழுவாமல் பார்த்துக்கொண்டாள்.

"யார் அவள்?" -- பாவமாய் கேட்டேன்!

"இருக்கான்னு வச்சுக்கோங்க. ஒரு ஐயர் பொண்ணு, உங்கள விரும்புறா, கல்யாணம் செய்துக்குவீங்களா?"

-- என் முன் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அணிவகுத்தது.

"விரும்புறான்னா, கல்யாணம் செய்துக்க வேண்டியதுதானே?"

-- உளறிவைத்தேன்.

"என்ன கஷ்டம் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிப்பீங்களா?"

-- என் உடலுக்குள் திடீரெனப் பரவியது தீயென வெப்பம்!

"சமாளிச்சுதானே ஆகனும்!"

-- எனக்கு நானே ஆறுதல் சொல்வதைப்போல் கூறிக்கொண்டேன்.

"வீட்ல ஏத்துப்பாங்களா?"

-- இந்த உரையாடல் எதில் போய் முடியும் என அறியாமல் தவிக்கிறேன் நான். வாயில் வரும் பதிலை கட்டுப்பாடில்லாமல் சரிபார்க்காமல் உதிர்த்துக்கொண்டிருக் கிறேன்.

"தெரியல... ஏத்துப்பாங்கன்னு தான் நான் நினைக்கறேன்" என்றேன்.

"ஏத்துக்காட்டி என்ன பண்ணுவீங்க?"

"ம்ம்ம்...?"

-- பதிலை யோசிக்க அவகாசம் தேடி கேள்வி சரியாக விளங்காததைப்போல நடித்தேன்.

"வீட்டில ஏத்துக்காட்டி என்ன செய்வீங்க?"

-- அழுத்தமாக அவள் மீண்டும் கேட்கிறாள்,

"என்ன செய்ய முடியும்?" என நான் கூறத்துவங்கியபோதே அவசரமாகக் குறுக்கிட்ட அவள்,

"விட்டிடுவீங்களா?"

-- எனக் கேட்கிறாள் பதட்டத்துடன்.

"அது அவளின் உறுதியைப் பொறுத்தது!"

-- என்கிறேன் நான் பட்டும் படாமலும்.

"அவ உறுதியாகத்தான் இருக்கா!"

-- விடமாட்டேன் என்கிறாள் அவள்!

"யார்?"

"அவதான்....! உங்க காதலி. அவள் உறுதியாகத்தான் இருக்கா. நீங்க என்ன செய்வீங்க?"

-- என் பதில்களில் ஏன் இத்தனை ஆர்வம் இவளுக்கு?

"அவ உறுதியா இருந்தா...."

-- இழுத்தேன். diplomatic ஆக எப்படி பதில் சொல்வது என யோசித்துக்கொண் டிருந்தேன். ஒரு பதிலும் அமையவில்லை.

குயில் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பார்வையை, அதன் கூர்மையை, என்னால் மறக்கவே முடியாது. எதிர்மறையாய் என் பதில் அமையுமானால் என்னை எரிக்கத்தயாராக இருந்ததுபோன்ற ஓர் அக்கினிப் பார்வை அது. நான் அறியாமல், என் புலன் உணராமல் பதில் வந்து வீழ்ந்தது என் உள்ளிருந்து,

"ஏற்றுக்கொள்வேன்!"

அவள் பார்வை குளிர்ந்தது. இதழ்கள் மலர்ந்தது. அகம் சாந்தமடைந்ததை முகம் தெரிவித்தது. தொடர்ந்து கேட்டாள்,

"உங்க கலாச்சாரம் எப்படி? ஒரு ஐயர் பொண்ணுக்கு ஈஸியா மாறிட முடியுமா?"

"அது அந்தப் பெண்ணைப் பொறுத்தது!" எனும் என் பதில் கேட்டு ஏதோ யோசனைக்குள் ஆழ்ந்தாள் குயில். அவள் அடுத்து ஏதும் கேட்டிடுமுன் நான் என் கேள்வியை அவள் மீது வீசினேன்.

"எதுக்கு இப்போ திடீர்னு இந்தக் கேள்வியெல்லாம்?"

"கேட்டேன்! கேட்க தோணுச்சு” என்றவள் தொடர்ந்து "தேங்க்ஸ்" என்கிறாள்.

"எதுக்கு?"

"அந்த ஐயர் பெண்ணை ஏத்துப்பேன்னு சொன்னீங்கள்ல, அதுக்கு!"

".........." -- வெறும் காத்து!

"நான் ஐயர் பொண்ணுன்னு உங்களுக்குத் தெரியாதுல்ல?" -- இதைக்கேட்டவள் என் பதிலுக்குக் காத்திராமல் அவளே தொடர்கிறாள்,

"ஆனா, எனக்கு நீங்க முஸ்லிம்னு தெரியும்!"

-- என்று கூறி கண் அடித்து புன்னகைத்து என்னை குழப்பத்தால் கைமா செய்து விட்டு உற்ச்சாகமாக கிளாசுக்குப் போகிறாள். முதல் முறையாக ஒரு பீதி என்னைப் பிடித்து ஆட்டியது. குயில் என் மீது காதல் கொண்டிருக்கிறாளோ? தவளை தன் வாயால் கெட்டுப்போகுதோ?

அவள் உற்ச்சாகம் ஆகிவிட நான் தான் இப்போது சோர்ந்து போயிருந்தேன்! சோர்ந்து போனது மட்டுமல்ல சொங்கியும் ஆகியிருந்தேன்.

~~~ 0 ~~~

காலேஜ் பஸ்சுக்குக் காத்து நின்றிருந்த ஒரு காலை வேளை. என் பின்னால் வந்த குயில் என் தோளில் தட்டி என்னை அழைத்தாள். திரும்பி பார்த்தால் தாவணி முந்தானையை எடுத்து தலைக்கு முக்காடிட்டு நின்றிருக்கிறாள்.

"ஸலாம் அலைக்கும்" என்றாள். நான் அதிர்ந்து என்னையறியாமலேயே பதில் ஸலாம் கூறினேன்.

அருகில் நின்றிருந்த மஞ்சு என்னை முறைத்தாள். "என்ன இதெல்லாம்?" எனும் கேள்வி இருந்தது அவளின் கண் அசைவில்.

"எனக்கென்ன தெரியும்?" என்றேன் தோள்குலுக்கி!

"என்ன இது முக்காடு?" -- குயிலைக் கேட்டேன்.

"என்னைப் பார்க்க இப்போ எப்படி இருக்கு? ஒரு முஸ்லிம் பெண் போலத் தெரியறேனா?"

-- குயிலின் இந்தக் கேள்வி எனக்குள் பயம் உண்டாக்கி மனதை வருந்த வைத்தது. நான் அவள் அருகே சென்றேன். அவள் தோள்களில் செல்லமாய் ஓர் அடி கொடுத்தேன்.

"முக்காடு போட்டிருப்பது அழகா இருக்கு ஆனா நெத்தியிலே பொட்டு எங்கே காணும்?"

"முஸ்லிம் பெண்கள் பொட்டு வைக்க மாட்டாங்களே!" என்றாள்.

"முஸ்லிம் பெண்களை விடு. நீ, பொட்டு வச்சிட்டு முக்காடு போட்டுப் பாரு, நெத்தியில் பொட்டு இல்லாம முக்காடு போடுறதைவிட இதுதான் அழகா இருக்கும்"

-- என்று கூறி குயிலை பொட்டு வைக்கச் சொன்னேன்.

பொட்டோடு முக்காடும் சேர குயிலின் அழகு கூடித்தான் போனது. குயிலின் இச்செயல் வெறும் விளையாட்டல்ல என என் மனம் எனக்குச் சொன்னது. அதை நிரூபிக்கும் விதமாக குயிலும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் முஸ்லிம் மதம் குறித்த கேள்விகளைத் தொடுக்கத்துவங்கினாள்.

ஒருமுறை நடந்த மதம் சார்ந்த விவாதத்தின் போது நான் கூறிய சில கருத்துக்களை மறுத்தவள் அப்படி ஒன்றும் வேதபுஸ்தகத்தில் சொல்லப்படவில்லை என்றாள்.

"உனக்கெப்படித் தெரியும்?"

-- என நான் கேட்க, அவள் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினாள். அது குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பு. அதை படிக்கத்துவங்கி யிருப்பதாகக் கூறினாள். நாள் ஆக ஆக அவள் எனக்கு மதப்பிரசங்கமே நடத்தத் துவங் கினாள். மற்ற மதங்களோடு ஒப்பிட்டு எல்லாமே ஒன்று தான் என அடிக்கடி சுட்டிக் காட்டுவாள்.

நாளுக்கு நாள் குயிலின் நடவடிக்கைகள் என் கவலையை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இவள் எனக்கு ஏதும் போக்கு காட்டுகிறாளா? இல்லை காதல் ஏதும் செய்து தொலைக்கிறாளா? இல்லை கேலி செய்வதுபோல் அமைந்த என் பேச்சுக்கு பழி வாங்கிக் கொண்டிருக்கிறாளா? ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால், இதற்கு ஒரு முடிவு விரைவில் கட்ட வேண்டும் என்று மட்டும் மனம் தீர்மானம் எடுத்திருந்தது. விரைவில் அதற்கான சந்தர்ப்பமும் வந்தமைந்தது.

அன்றைய தினம், கல்லூரிப் பேருந்து ரிப்பேர் ஆகிவிட, கல்லூரியை விட்டு மூன்று கிலோமீட்டர் தள்ளி உள்ள கிராமத்துக்குச் சென்றுதான் டவுன் பஸ் பிடிக்கவேண்டும் என்ற நிலை. நடக்கத்துவங்கினோம். கூட்டத்திலிருந்து இடைவெளிவிட்டு நானும் குயிலும் தனியே நடந்துகொண்டிருந்தோம். குயில் ஏதோ யோசித்துக்கொண்டே நடக்கிறாள், மனதுக்குள் மெல்லிய குரலில் ஏதோ பாட்டும் பாடுகிறாள். அவளை அழைத்து,

"என்ன இது?" என்றேன்.

"என்னது?"

"நீ இங்கேயே இல்லையே?"

"இல்லையே!"

"அதைத்தான் நானும் சொன்னேன். நீ இங்கே இல்லை. என்ன விஷயம்?"

"எந்த விஷயம்?"

"அடிக்கடி எங்கேயோ தொலஞ்சு போயிடறே? மனசுக்குள்ளே எதையோ யோசிக்கறே, சிரிக்கவும் செய்யறே!" என நான் சொல்லவும் வெட்கம் கொள்கிறாள் குயில்.

"இதப்பாருடா கொடுமைய வெட்கம் வேற வருதா உனக்கு... உண்மையைச் சொல் என்ன விஷயம்?" -- வினவினேன்.

"ஒன்னும் இல்லை... உங்களுக்குத்தான் ஏதோ சும்மா தோணுது."

"சும்மா தோணல, உண்மையிலேயே தோணுது" என்றேன். தொடர்ந்து நானே, "காதலா?" எனக்கேட்டேன்.

அவள் இந்தக் கேள்வியை எதிர்பார்க்காததால் என்னை அதிர்ச்சியாய் பார்த்தாள். அவள் புருவம் வழக்கம்போல் வளைந்து வில் ஆனது. காதல்தான் என அவள் கண்கள் விடை சொன்னது. அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பது உறுதி ஆனது.

ஆனால் யாரோடு என்பதுதான் எனக்கு முக்கியமாகத் தெரியவேண்டும். அவள் காதலன் நான் அல்ல என்பதை உறுதிப்படுத்தியே ஆகவேண்டும்.

"காதலா?"

-- மீண்டும் அழுத்தமாகக் கேட்டேன், பதிலை அவள் வாயிலிருந்தே வரவழைப் பதற்காக.

"இத்தனை நாள் ஆனதா கண்டுபிடிக்க? முன்னமே கேப்பீங்கன்னுல்ல எதிர்பார்த்தேன்!"

-- என்று நான் எதிர்பார்க்காத தொணியில் அவள் பதில் கூற, நான் ஆச்சரியப் பட்டுத்தான் போனேன்.

"முன்பே கண்டுபிடித்ததுதான். ஆனால், எளிதில் கேட்டிட முடியாதில்லையா?"

-- சமாளிக்கும் பதில் உரைத்து மீசையில் மண் இல்லையென்றேன்.

"யார் அவன்? மன்னிச்சுக்கோ யார் அவர்?"

-- என நான் கேட்ட விதம் கண்டு சிரித்தவள்,

"நேரம் வரட்டும் சொல்கிறேன்" என்கிறாள்.

"காதல் வந்தாகிவிட்டதா இல்லையா? காதல் வந்தபின் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். சொல் பரவாயில்லை" என்றேன்.

"சொல்லலாம்! என்ன அவசரம்? எப்படியிருந்தாலும் உங்களுக்குத் தெரியத்தான் போகுது!" என்று அவள் கூறக்கூற என் குழப்பம் அதிர்கரித்துக்கொண்டே இருந்தது.

எப்படியிருந்தாலும் எனக்கு ஏன் தெரியத்தான் போகிறது என்கிறாள்? நான் தான் அவள் காதலன் என்பதாலா?

"எனக்குத் தெரியத்தான் போகிறதென்றால் இப்போதே தெரிவித்துவிடு! அதில் எதற்க்கு தேவையில்லாமல் ஒரு ரகசியம்?"

"இப்ப முடியாது!"

"ஏன்?"

"என் மனசுல மட்டும் தான் இருக்கு. இன்னும் கன்பர்மேஷன் கிடைக்கல!"

--- நான் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறாளோ?

"அதற்கும் ஆள் யாருன்னு சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்? கன்பர்ம் ஆகலையின்னா நான் ஒன்னும் உன்னை கிண்டல் செய்யப் போறதில்லை. உன் அவரிடம் வம்பு வழக்குக்கும் போகமாட்டேன்"

-- என்றேன். அவள் சிரித்தாள்.

அந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? அவளே தொடர்ந்து,

"கன்பர்ம் ஆகும். ஆகாம போகும்னு உங்க வாயால சொல்லாதீங்க." என்கிறாள்.

ஏன்? நான் சொன்னால் என்ன? கன்பர்ம் பண்ண வேண்டியது நான் என்பதாலா?

"நான் இன்னும் அபசகுனமா பேசாம இருக்கணும்னா உன் காதலர் யாருன்னு சொல்லிடு!" என்று நான் சொன்னதற்கு,

"ஏன் இப்படி அடம் பிடிக்கறீங்க?" -- எனக்கேட்டாள்.

அவளுக்கென்ன சுலபமாய் கேட்டுவிட்டாள். என் அவஸ்த்தை எனக்குத் தானே தெரியும்? காதல் செய்யும் நிலையிலா நான் இருக்கிறேன்? என்னால் நல்ல நண்பனாக இருக்க முடியும், ஆனால் நல்ல காதலன் ஆக முடியாது. பொறுப்பும் கிடையாது, பொறுமையும் கிடையாது. மனமோ சஞ்சலம் மிக்கது.

பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வோர் விதத்தில் மனதை ஈர்க்கின்றனர். பிடித்த பெண்களில் பிடிக்காத விஷயமும், பிடிக்காத பெண்களில் பிடித்த விஷயமும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பது எனக்கே தெளிவில்லை.

ஒவ்வோர் விடியலிலும் கொண்ட கொள்கை யும், நம்பும் தத்துவமும் மாறிக்கொண் டிருக்கும் ஒரு நிலையில்லாத கால கட்டத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். காதல் அவஸ்த்தை. நானோ எப்போதும் மகிழ்ந்திருக்க விரும்புபவன். சுதந்திரம் வேண்டும். கையில் யாதொரு பாரமும் இன்றி சுற்றித்திரிய வேண்டும்.

சொல்லப்போனால், கத்துக்குட்டி நான். காதலிக்கும் அளவுக்கெல்லாம் நான் பக்குவப்பட வில்லை என்பதே அப்போது என்னைப்பற்றிய என் சுயமதிப்பீடாக இருந்தது. ஆதலால் தான் இந்த பயம். ஆகவே தான் நழுவப்பார்க்கிறேன். மற்றபடி நீங்கள் வேறேதும் குதுர்க் கமாய் யோசித்து என்னைட் தவறாக நினைத்திடவேண்டாம்.

இப்படி ஒரு நிலையில் இருக்கும் என் மீது குயிலுக்குக் காதலென்றால் அதை முளையிலேயே கிள்ளி எறிதல் அவசியமா இல்லையா? நீங்களே சொல்லுங்கள், நான் அவள் காதலன் யார் என அறிந்துகொள்ள அவசரப்படுவதில் என்ன தவறு?

"அடம் நீயும் தான் பிடிக்கிறாய் யார் என பெயர் சொல்லமாட்டேன் என்று" -- என்றேன் அவளிடம்.

"நான் தான் சொல்கிறேன் என்றேனே?"

"அப்படியென்றால் சொல்"

"நேரம் வரும்போது நானே சொல்கிறேன். அவசரப்படாதீங்க!" என்று கூறி நடக்கத் துவங்கினாள். என் அவஸ்த்தை என்னைக் கோவம் கொள்ளச் செய்திருக்கவேண்டும், மெல்லிய கோவம் என் தலைக்கேறுவதை என்னால் உணர முடிந்தது.

"அப்போ நீ சொல்லப்போறதில்லை இல்லையா?" எனக்கேட்டேன் அவளிடம். என் குரலில் தென்பட்ட எரிச்சலின் தொணியை, கோபத்தின் சாயலை அவள் உணர்ந்தாளா என்பது எனக்குத் தெரியவில்லை!

"இப்போ சொல்லப்போவதில்லை. அது சஸ்பென்ஸ்! இப்பவே சொல்லிட்டா அப்புறம் அதிலென்ன சுவராஸ்யம்?" என்று பதில் வந்தது.

"நான் தானே கேட்கிறேன் என் கிட்டே சொல்றதுக்கு என்ன? இத்தனை தடவை கேட்கிறேன்ல அதுக்கு ஏதாவது மதிப்பு தரணுமா இல்லையா?"

"சரி, அவர் பத்தின ஒரே ஒரு விஷயம் மட்டும் இப்போ சொல்றேன். வேறே ஏதும் இப்போதைக்கு நீங்க கேட்கக்கூடாது"

-- என்று கூறி சற்றி நேரம் மௌனமாய் இருந்துவிட்டு, "அவர் ஒரு முஸ்லிம்." என்றாள்.

"சரி...!"

-- என்றேன். இன்னும் ஏதோ சொல்லப்போகிறாள் எனும் எதிர்பார்ப்புடன்.

"என்ன சரி, அவ்வளோதான் இன்பர்மேஷன்... மேலே ஏதும் கேட்கக்கூடாதுன்னு அப்பவே சொன்னேன்ல?"

"ஏய்... இந்த இன்பர்மேஷன் எனக்கு எதுக்கு? ஆள் யாருன்னு கேட்டா, என்ன மதம் நு மட்டும் சொல்லிட்டு அவ்வளோதான் இன்பர்மேஷன்னு சொன்னா என்ன அர்த்தம்?"

"அவர் ஒரு முஸ்லிம் அப்படீங்கறதே பெரிய இன்பர்மேஷன்னு அர்த்தம். மத்த விஷயங் கள் எல்லாம் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சபிறகு நானே உங்க கிட்டே சொல்லுவேன். நீங்க கேட்காமலேயே சொல்லுவேன்" என்று கூறியவள், ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டு என்னைப்பார்த்து,

"கண்டிப்பா நான் எல்லாம் உங்க கிட்டே சொல்வேன். உங்க கிட்டே சொல்லியே ஆகனும்" என்கிறாள். அவள் கண்கள் பனித்திருப்பதைப்போலத் தோன்றியது. ஆனால், என்னை உறுதிப்படுத்தவிடாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

அவளிடம் ஏதும் கேட்டிருந்திருக்கவே தேவையில்லை. முன்னைக்கு இப்போது என் குழப்பம் இன்னும் அதிகமாகிப்போனதைத் தவிர வேறு விவரங்கள் கிடைக்கவில்லை. அவர் ஒரு முஸ்லிம் என்கிறாள். நானும் ஒரு முஸ்லிம். நான் தான் அவரா?

மனதில் உண்டான சூறாவளி என்னைச் சூழ்ந்து புழுதி கிளப்பிக்கொண்டிருந்தது. அவளோடு நெருங்கிப் பழகும் ஒரே முஸ்லிம் பையன் நான் மட்டுமாகத்தான் இருந்தேன். ஆனால், அவள் என் மேல் காதல் கொண்டிருக்கிறாள் என்பதாய் என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்தவில்லை. ஏதோ விளையாட்டு செய்கிறாள் அதை ஏன் செய்கிறாள் என்பது போன்ற கேள்விகள் தான் என்னை அவஸ்தைக்குள்ளாக்கியது. இருந்தாலும், ஒருவேளை அவள் என்னை காதலித்துவிட்டால் என்னவாவது? இதுதான் மனதுக்குச் சங்கடம் தந்தது.

ஒருவேளை அவள் என்னை காதலிப்பதாகக் கூறினால் என் நிலை என்ன? அவளுக்கு என் பதில் என்ன? எதுவாயினும் செமஸ்டர் எக்ஸாம் முடியும் வரை காத்திருக்கவேண்டும்.

~~~ 0 ~~~

செமெஸ்டர் எக்ஸாம் முடியும் வரை நாள் ஒரு மேனியும் பொழுதொரு அவஸ்தயுமாக நான் பட்ட அவஸ்த்தைகள் என்னோடு போகட்டும் உங்களை நான் பரீட்சை முடிந்த கடைசி நாளுக்கு நேராக அழைத்துச் செல்கிறேன்.

அன்று பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குயில், பஸ்ஸில் கடைசி சீட்டுக்கு அருகில் உள்ள கம்பியில் சாய்ந்தபடி நின்றிருந்தாள். நானும் பஸ் ஏறி அவளின் எதிரே அவளை நோக்கியபடி மற்றொரு கம்பியில் சாய்ந்து நின்றேன்.

"எப்படி எழுதினே பரீட்சையெல்லாம்?" -- கேட்டேன் குயிலிடம்.

"எழுதியிருக்கேன்! நல்லாவா இல்லையான்னு மார்க் வரும்போது தெரியும்" என்றாள். "நீங்க எப்படி எழுதியிருக்கீங்க?" என என்னைக் கேட்டாள்.

"ம்ம்ம்... நானும் எழுதியிருக்கேன். பாஸ் ஆகும் அதிசயம் நடந்திருக்கா இல்லையான்னு ரிசல்ட் வரும்போது தெரியும்"

-- என்றேன். கலகலத்து சிரித்தாள்.

மேலாக இப்படி பேசிச்சிரித்துக் கொண்டிருந்தாலும், என் மனமெல்லாம் அவள் காதலன் யார் என்பதை அறிந்துகொண்டு, அது நான் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலேயே சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. பஸ் புறப்படட்டும், சற்று நேரம் பொறுத்துக் கேட்கலாம் என பொறுமை காத்தேன்.

பஸ் குலுங்கிப் புறப்பட்டது. மேடும் பள்ளமும் நிறைந்த மண் ரோட்டில் ஆடி அசைந்து நகர்ந்த பேருந்து மெயின் ரோட்டில் வேகம் எடுக்க, அதைவிட வேகமாக நான் பொறுமை இழந்துகொண்டிருந்தேன். அவளாக பேச்சை ஆரம்பிப்பாள் என காத்துப் பிரயோஜனம் ஏதும் இல்லை என்பதாலும்,

அவசியம் எனதாகிப்போனதாலும் நானே அவளிடம் கேட்டிடுவது என முடிவு செய்து கேட்க எத்தனித்தபோதுதான் நம்பியார் மாமா சடன் பிரேக் போட்டார்.

‘கிரீச்ச்ச்ச்...’ என்று பெரும் சத்தம் எழுப்பி வண்டி நிற்க, அதில் பிடிவிட்ட குயில் மொத்த மாக என் மீது சாய்ந்தாள். என் மீது சாய்ந்திருப்பதை உணர்ந்துகொண்டவள் பதறி எழுந் திருக்க எத்தனிக்கையில் மீண்டும் கால் இடறி நிலைகுலைய, படிக்கட்டு வழியே வெளியே விழுவதுபோல் போன அவளை வளைத்துப் பிடித்து, என்னோடு சேர்த்து இழுத்து, விழாது தடுத்தேன்.

சில நொடிகளுக்குள் நடந்தேறிய இந்த நிகழ்வு, ஷங்கர் படங்களில் வருவதுபோல் 32 கேமராக்கள் வைத்து Bullet-time effect-ல் படமாக்கப்பட்டு அரை வட்ட வடிவில் காட்டப் படவேண்டிய, காலத்தால் உறைந்துபோன (Frozen in time) காட்சி இது.

சினிமா காதலர்களுக்கு காதல் வர இது போதும். பஸ்ஸிலிருந்து நேராக இயற்கை எழில் பொங்கும் இடங்களூக்குக் குதித்து டூயட் பாடி காதல் வளர்த்து திரும்ப வருவார்கள், ஆனால் இங்கே பாட்டு இல்லை, வெறும் வசனம்தான் கேட்டது. அதும் வசனக்கூச்சல்!

"பாவி! பார்த்துடி! அவர் மட்டும் பிடிக்காதிருந்தால் விழுந்திருப்பே நீ! பரலோகம் பாக்க ஆசையாடி?" -- என கூச்சலிட்டார்கள் அவளின் தோழிகள்.


நான் பிடி தளர்த்தினேன்! அவள் என் அணைப்பிலிருந்து விடுபட்டாள். விழாது தடுத்த தற்கு கண்களால் நன்றியுரைத்தாள்! நான் மதி மயங்கி நின்றிருந்தேன். என் மனதை ஒரு மணம் தாக்கியிருந்தது.

அந்தக் கன நேர ஸ்பரிசத்தில், அவளின் கூந்தல் அலை என் முகத்தை மூழ்கடித்து விலகிய வேளையில் என்னைத்தாக்கி மயங்கவைத்தது அவள் மணமா? இல்லை, காலையில் சூடி தற்போது வாடிப்போயிருக்கும் அவள் கூந்தல் மலர் மணமா?

எதுவாயினும் மனம் கனத்தது. அடி வயிற்றில் திடீரென காஷ்மிர் குளிர். கைகளில் சிறு நடுக்கம். நாக்கு வறண்டு போக, வாக்குகள் ஏதும் உதிர்க்க முடியாத விக்கித்த நிலை எனக்குள். விபத்து நடக்காது காத்தது விபத்தானதோ? விழாது அவளைக் காத்து, இப்போது விழுந்து கிடப்பது நான் தானோ?

விந்தை மனம் அந்த ஒரு வினாடி என்னைச் சினிமாக் காதலன் போல் ஆக்கி அவள் மீது காதலில் விழ வைத்ததா? ஒருவேளை அவள் தன் காதலனாக என் பெயரைக் கூறினால், மகிழச்சியுறத் தயார் ஆனாதா என் உள்ளம் என்பதெல்லாம் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. தெளிவில்லாத குழப்பத்தில் இருந்தேன் என்பது மட்டும் நிச்சியம்.

எது எவ்வாறாயினும் அவள் காதலன் யார் என அறிதல் அவசியமாதலால் அவளிடம்,

"சொல்" -- என்றேன்.

"எதை?" -- கேட்டாள்!

"உன் காதலன் பற்றிய விவரங்களை? பரீட்சை முடிஞ்சபிறகு சொல்லுறேன்னு சொன்னியே, நினைவில்லையா?" -- கேட்டேன்.

"ஓஹ்! இந்த விவரம் தெரிஞ்சுக்கிடத்தான் என்னை விழாமல் பிடிச்சீங்களா? நானும் ஏதோ என் மேலெ இருந்த அக்கறைன்னு தப்பா நினைச்சேன்" -- என வம்புக்கிழுத்தாள்.

"விளையாடாதே சொல்" என்றேன்.

"சொல்லித்தான் ஆகனுமா?" -- கேட்டாள்.

"ஆமாம்" -- என்றேன்!

"சரி! சொல்கிறேன். ஆனா சுலபமா சொல்லிட்டா சுவராஸ்யம் இருக்காது... ஒன்று செய்யுங்களேன், நீங்களே கண்டுபிடியுங்களேன்."

-- என்கிறாள். நானே கண்டுபிடிப்பதா? என்ன சொல்கிறாள் என்று நான் யோசிக்க அவள், உள்ளங்கையை விரல்களால் இறுக்கமாய் மூடி அவள் தன் கையை என் முன்னே நீட்டினாள்.

"இதைத் திறந்தால் அவர் பெயர் இருக்கும்! திறப்பது உங்கள் சாமர்த்தியம்"

-- என்கிறாள். மற்றொரு ஸ்பரிஸமா? மழை பெய்யும் மனதுக்குள் தம் தன தம் தன ராகம் கேட்க அவள் கையைப் பிடித்தேன்.

"உங்க கை ஏன் இப்படி ஜில்லுன்னு இருக்கு?"

-- கேட்டாள். பதில் கூறும் நிலையில் நான் இல்லை. நான் நிற்கும் இடத்துக்கு அருகே உள்ள இருக்கையில்தான் எங்கள் பிரின்ஸிபாலும் உட்கார்ந்திருக்கிறார். அது பற்றியெல்லாம் கவலை இல்லாமல் குயிலின் மிருதுவான கையைப் பற்றி ஒவ்வொரு விரலாய் திறக்க முயல்கிறேன்.

அத்தனைச் சுலபமாக இருக்கவில்லை அவள் விரல்களைத் திறப்பது. பொறுமையிழந்து நான் முரட்டுத்தனமாய் அவள் கரங்களை பற்றி அனைத்து விரலையும் திறந்து அவள் உள்ளங்கையில் அவள் உள்ளம் கவர் கள்வனின் பெயர் பார்த்தேன்!

அதில், "அன்வர்" -- என்று எழுதியிருந்தது. அது என் பெயர் அல்ல. என் மேல் அவள்க்கு காதல் இருக்கக்கூடாதே என்று தொடர்ந்து பிரார்தித்துக் கொண்டிருந்தாலும் அவள் உள்ளங்கையில் என் பெயர் உண்மையிலேயே இல்லாதது கண்டு மனம் மிகுந்த ஏமாற்றம் கொண்டது. மனம் ஒரு குரங்கு.

அவள் கையை இன்னும் விடாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

"என்ன?" -- என கேட்டாள் வழக்கம்போல் ஒரு புருவத்தை உயரே உயர்த்தி.

" ஏன் என் பெயரை ஏன் தப்பா எழுதியிருக்கே?" -- எனக்கேட்டேன். சிரித்துக்கொண்டே என் கையிலிருந்து கையை விலக்கிக்கொண்டவள் என் வயிற்றில் ஒரு குத்தும் விட்டாள். மூன்றாம் ஸபரிசம்?

பஸ் டவுனுக்கு வந்து சேர இருவரும் இறங்கி ஒன்றாக நடந்தோம். கோவையில் பழமுதிர்சோலை எனும் பெயரில் ஜுஸ் கடைகள் எல்லா இடங்களிலும் உண்டு. ஒரு பழமுதிர்ச்சோலைக்குள் புகுந்து இரண்டு மாதுளம் ஜுஸ் வாங்கி அமர்ந்தோம். அவள் பேசினாள்,

"அன்வர் எங்க குடும்ப நண்பர். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் தான் அவர் வீடும் இருக்கு. அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார், நாங்களும் அவங்க வீட்டுக்குப் போவோம். அன்வரோட அப்பாவும் எங்க அப்பாவும் ரொம்ப நாளா நெருங்கிய நண்பர்கள். எங்க குடும்பத்துல எல்லார் கிட்டேயும் அன்பா பழகுவார். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் அவர் என்கிட்டே என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லி என்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுவதாகச் சொன்னார்.”

"............." -- கேட்டுக்கொண்டிருந்தேன்!

“என் சம்மதம் கேட்டார். எனக்கு ஒன்னுமே புரியல. அன்பா பழகிட்டிருக்குற ரெண்டு குடும்பங்களுக்குள்ளே வீணாக மனஸ்தாபங்கள் வந்திடுமேன்னு பயந்தேன். அதனால, அவர் கிட்டே எனக்குச் சம்மதம் இல்லைன்னு சொல்லிட்டேன். யோசிச்சு சொல்லுன்னு சொன்னார். எத்தனை யோசிச்சாலும் என்னால முடியாது, எல்லார் மனசும் வருத்தப்படும், என்னால முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். நான் மறுப்பு சொல்லியும் அவர் கேட்கவில்லை.”

"............."

“ஒரு நாள் திரும்பவும் அவர் இதுபத்தி பேசினப்போ எனக்கு கோவம் வந்தது. என்னை படிப்புல கவனம் செலுத்த விடாம இடைஞ்சல் செய்யறீங்க, இனிமேலும் இந்த விஷயம் பத்தி என் கிட்டே பேசினா உங்க முகத்திலே கூட முழிக்கமாட்டேன்னு, கோவத்திலே ரொம்ப சத்தம் போட்டுட்டேன். பாவம் அவர் மனசு நொந்து போயிட்டார். அவங்களுக்கு மலேஷியால பிஸினஸ் உண்டு. என் படிப்புக்கு இடைஞ்சல் செய்யாம மலேஷியா போகப்போறதா சொன்னார். உன் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம்தான் திரும்ப வருவேன். அன்னைக்கும் உன்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லேன்னா அதுக்கப்புறம் உன்னை தொந்தரவே செய்யமாட்டேன்னு சொன்னார்.”

"............."

"அவரை பத்தி எதுவுமே நினைக்கக்கூடாது, அவர் எண்ணமே மனசுல வரக்கூடாதுன்னு வைராக்யத்தோட இருந்தேன். அப்பதான் நீங்க பழக்கமானீங்க. நீங்க பேசுறது பழகுறது என்னை வம்புக்கு இழுக்கிறது எல்லாமே எனக்கு அன்வரைத்தான் ஞாபகப்படுத்தியது. உங்கமாதிரிதான் அவரும் கலகலப்பா இருப்பார். உங்களைப்போலவே அவரும் ஐயர் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடிக்கடி சொல்லுவார். என்னை மனசுல வச்சு தான் சொல்லிட்டிருந்தார்னு எனக்கு அப்போ புரியல.”

"............."

“நீங்க உங்க மனசுல ஒரு ஐயர் பெண்ணை கற்பனை செஞ்சு அவளை மனசுக்குள்ளே நேசிக்கறதா சொன்னீங்க. இல்லாத ஒரு பெண்ணை கற்பனை செய்தே அவளை நேசிக்க முடியுதுன்னா, உயிருள்ள ஒரு பெண்ணா அன்வர் மனசுல இருக்குற என்னை அவர் எவ்வளவு நேசிக்கனும்னு யோசிக்கத்தோணுச்சு. உங்களோட ஒவ்வொரு செயலும் அன்வரைத்தான் எனக்கு கண்முன்னே கொண்டு வந்தது. பல தடவ உங்க கிட்டே பேசிட்டிருக்கும்போது அவர் கிட்டே பேசிட்டு இருப்பது போலத்தான் தோணும். பல தடவை உங்க கிட்டே பேசினபிறகு என் மனசு சந்தோஷம் ஆயிடறதை உணர முடிஞ்சது!"

"............."

"இந்த சந்தோஷமும், இந்த நேசமும் எனக்கு வாழ்க்கை முழுதும் வேணும்னு தோணுச்சு. அன்வர் கூட இருந்தா என் வாழ்க்கை முழுதும் எனக்கு அந்த சந்தோஷமும் நேசமும் நிச்சியம் கிடைக்கும். இந்த எண்ணங்களெல்லாம் சேந்து எனக்கு அவர் மேல் காதலை உண்டாக்கிடுச்சு. எனக்கு புருஷனா அன்வரைத்தவிர வேற யாரையும் என்னால யோசிக்க முடியல. படிப்பு முடிஞ்சதும் எனக்கு கல்யாணம் செய்ய வீட்ல ஆயத்தமா யிடுவாங்க. இப்போ நான் முடிவு எடுத்தா தான் உண்டு. என்னல்லாம் பிரச்சினை வரப்போதுன்னு எனக்குத் தெரியாது but I love him. I want to live with him."

-- என்று கூறி விசும்புகிறாள். எப்படி ஆசுவாசப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை!

"ஏய் குயிலு" அவளை அழைத்தேன், நிமிர்ந்தாள்.

"நான் என்ன பண்ணினேன் தெரியுமா? நீ என்னமோ என்னைத்தான் காதல் செய்ய றேன்னு தப்பா நினைச்சு நிறைய டூயட் கனவுல பாடிட்டேன். இப்போ அத்தனை ரீலும் வீணா போச்சு. ஹீரோவ மாத்தி திரும்ப ஷுட் பண்ணனும். பாவம் புரோடியூசர், திவால் ஆகப்போறார்."

-- என்றேன்.

அழுகையினூடே சிரித்தாள். எனக்கோ சிரிப்பினூடே அழுகை வந்தது. இப்படி ஒரு ஒப்புக்குச்சப்பான் ஆகிப்போனேனே என்று எண்ணி எனக்கு நானே சிரித்துக்கொண் டேன். சிரிப்பினூடே அழுதும்கொண்டேன்.

வெறுமே ஒரு வேடிக்கைக்குத்தான் இப்படிச் சொல்கிறேன். உண்மையில் நான் குயிலுக்காக மகிழ்ச்சி கொண்டேன்.

"எல்லாம் சரிவரும். எது நடக்கணும்னு விதிச்சிருக்கோ அது நடந்தே தீரும். இப்போ நம்ம ஜுஸ் தீர்ந்துபோச்சு, கிளம்பலாமா?" -- கேட்டேன். கண்ணை துடைத்து, சரியென்று தலையாட்டி எழுந்தாள்.

பழமுதிர்சோலையை விட்டு வெளியே வருகையில் என்னை கை பிடித்து நிறுத்தினாள்,

"என்ன?"

"நீங்கதான் இந்த நல்ல முடிவ எடுக்க வச்சீங்க. உங்கள சந்திக்காம இருந்திருந்தா, அன்வர் என் மேலே வச்சிருக்கும் நேசத்தை ஒருவேளை நான் உணராமலே இருந்திருப்பேன். அது என் வாழ்க்கையில் பெரிய நஷ்டம் ஆகியிருக்கும். உங்களை நான் மறக்கவே மாட்டேன்." என்று உணர்ச்சிவசப்பட்டவள்,

"எனக்காக நீங்க உங்க ஆண்டவன் கிட்டே துவா கேப்பீங்களா? உங்க நல்ல மனசுக்கு நீங்க எனக்காக பிரார்தனை பண்ணினா ஆண்டவன் சீக்கிரம் அதை கபூல் செய்வார்."

-- என்கிறாள் கண்ணில் நீர் நிறைத்து.

"கண்டிப்பா உனக்காக பிராத்திப்பேன். நீ சந்தோஷமா இருப்பே!"

-- என்று அவளை வாழ்த்தினேன். எனக்கும் கண் கலங்கியது.

அவளை வழியனுப்பினேன். நான் என் வழியில் என் பயணத்தை தொடர்ந்தேன். கிளை பிரியும் வாழ்க்கை பாதையில் அதிவேக பயணங்களில் அவ்வப்போது ஆங்காங்கே சந்தித்த சில நண்பர்கள் வழியாக உறுதி செய்யப்பட்டதும் செய்யப்படாததுமாகிய செய்திகள் செவியினில் வந்து விழுந்தது.

அவள் வீட்டில் விஷயம் தெரியவந்தது என்றும், பிரச்சினையாய் இருக்கிறது என்றும், அவனையே அவள் கல்யாணம் செய்துகொண்டாள் என்றும், வேறு கல்யாணம் நடந்திட்டது என்றும் வெவ்வேறு செய்திகள்!

பனிரெண்டு வருடத்திற்கு மேல் ஆயிற்று.....,

நான் பிரார்தித்தால் பலன் இருக்கும் என்று நம்பியிருந்தாள் என் குயில், ஆனால் அவள் வேண்டுகோளின் படி அவளுக்காக நான் மனமுருகி இறைவனிடத்தில் ஒருமுறை கூட பிரார்திக்கவில்லை.

வேண்டுமென்றே செய்ததல்ல வாழ்க்கை பாதையின் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் ஒவ்வொரு பிரச்சினைகள் காத்திருந்தன. முன்னுரிமைகளில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க இயலாதது என்பதை நீங்களும் அறிவீர்கள்தானே? இதில், குயிலும் அவள் பிரச்சினையும் மனதின் அடி ஆழத்தில் எங்கோ தங்கி மங்கிப்போனது.

ஆனால், இப்போது உள்ளம் துடிக்கிறது. அவளுக்காக இறைவனிடத்தே பிரார்திக் காததால் குற்ற உணர்வும் உண்டாகிப்போக மனம் பதறுகிறது....!

என் குயிலே நீ சந்தோஷமாகத்தானே இருக்கிறாய்?

Comments

A Recluse said…
This comment has been removed by the author.
A Recluse said…
Sila samayam vazhkaile nammakku oru naalile neriya neram kidaichirum.. appo adhai pangu podama namakku pidicha ore vishayathile adhai irakki vaikaradhu romba inimaya irukkum.. Appadi kidaicha naal idhu! Ungaloda vanavil pookal le ovoru poovayum nugarndhu, anubavichu, rasichu padichen... Andha pookalin manam en idhayathile irundhu karaya sila kaalam aagalam.. karayamalum pogalam... Unga kavithiran, kaviya thiran ellame romba azhaga marirukku anna... Ungaloda padaipugal idhayathukku nerukamavum iyalbukku pinakkamavum irukku! Innum Innum ezhudha ennoda vazhthukkal anna..!
ஒரு பாலைவனப் பாதையில் பயணிக்கும் யாத்ரீகனின் தாகம் தீர்க்கத் தோன்றிய சோலையாய் என் சின்னப் பெண்ணின் கமெண்ட்ஸ் கிடைத்தது. என் யாத்திரை தொடர ஊக்கம், உற்ச்சாகம், உரம் தந்தாய் சின்னப் பொண்ணே! நான், என் படைப்புகளை இரசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் அதி முக்கிய வாசக வட்டத்தில் நீயும் ஒருத்தி என்பதால், உன் விமர்சனம் எனக்கு அதி முக்கியம். அதை அருளியதர்க்கும், உன் வாழ்த்துக்களுக்கும் என் உள்ளம் கனிந்து மகிழ்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லது பெண்ணே! மிக்க மகிழ்ச்சி!
NRIGirl said…
Takes us to the "then" and "there"... Beautiful writing... Not sure if fact or fiction, but wishing for the best for the 'Quil' along with you. Share more...

~ NRIGirl

Popular posts from this blog

வானவில் பூக்கள்!

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

மன்னிப்பீரா தோணியாரே?