சிறகில் பொதிந்து!
தி டீரென இருண்டது மேகம். அந்த இருளை கிழித்து பளீரென பிறந்தது கண்ணை குருடாக்கும் விதம் ஒரு மின்னல் கீற்று. மின்னல் உண்டாக்கிய மிரட்சியை கூட்டியது செவியை செவிடாக்கும் அளவுக்கு குலை நடுங்கவைக்கும் இடியோசை. மனதை பிடித்தாட்டுகிறது ஒரு பயம். அழத்துவங்கினேன்! அறை கதவைத் திறந்து அம்மா வந்தாள். என் அருகே வந்தவள் என் தலையை வருடி "பயந்திட்டியாப்பா?" என்றாள். நான் பதில் ஏதும் கூறவில்லை, அவள் கரத்தை இறுக பற்றிக்கொண்டேன். என்னை எடுத்து அவள் தோளில் இட்டுக்கொண்டாள். ஆதரவாய் என் முதுகில் தட்டிக்கொண்டே அவள் அறைக்கு என்னை எடுத்துச் சென்றாள். அங்கே அப்பா என்னை பார்த்து சிரித்தார். "ஆண்பிள்ளையே.. பயந்திட்டியா?" - என்றார். அவர் தன் நெஞ்சோடு என் தங்கையை அணைத்து பிடித்திருந்தார். அவர் அருகே சென்றதும் என்னை உச்சி முகர்ந்து, "இதற்க்கெல்லாம் பயப்படலாமோ ஆண் பிள்ளை? உன் தங்கையின் பயத்தையும் போக்கவேண்டிய அண்ணன்காரன் நீ. நீயே பயந்தால் எப்படி?" - என்றார். அம்மா என்னை அவள் அருகில் படுக்க வைத்தாள். அவளின் ஒரு கை என்னை அணைத்திருக்க, அப்பாவின் ஒரு கை என் தலையை வருடி இருக்க, ஓர் அண்ணனாக என...