வானவில் பூக்கள்! [ஒரு ஆரிய பூ!]
" ந யே ஆயே ஹோ?" எனக்கு நான் மட்டுமே துணையாய், வகுப்பறையில் என் இடத்தில் தனியே அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே எங்கோ எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஒரு இண்ட்டர்வல் சமயத்தில் என் செவியில் விழுந்த ஹிந்தித்தேனைச் சிந்தியது யார் என அதிர்ந்து திரும்ப, அங்கே என் அருகே பூத்திருந்தது ஆரிய பூ ஒன்று! "புதுசா?" என்று தான் அவள் கேட்டிருக்கவேண்டும் என ஊகித்து "ஆம்" என்ற பதிலாய்த் தலையாட்டினேன் திராவிடப் பணிவுடன். "மதறாஸ் கே ஹோ?" -- மீண்டும் தூற்றினாள் தேனினைச் செவியினில்! ஆம் என்பதை இலகுவாய் "ஹாம்!" என்றேன். என் பதில் ஹிந்தியாய் மாறி அவளைச் சென்றடைந்த வேளையில் மனம் " இவள் யாராக இருக்கக்கூடும்?" என்பதை அகழ்வாராய்ச்சி செய்யத்துவங்கியது. அவளோ அகழ்வாராய்ச்சியில் என்னை மூழ்கவிடாமல் அடுத்த தேனினைச் சுரந்தாள் என் மீது தெளிக்க! "மதறாஸ் மேம் கிதற் கே ஹோ? டமிள்நாடு யா பிர் கேரள்?" -- தெளித்திட்டாள் அவள் சுரந்திட்ட தேனினை! ஹிந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் என்பதால், நான் தமிழ் பாதி, கேரளம் பாதி எனும் கதையெல்லாம் கதைக்...