கருப்'பூ'!
அ வள் ஒரு கருப்பழகி! நான் பார்த்த அந்த கருத்த பெண் உண்மையில் பேரழகி! நீங்கள் ஊதாப்பூ பார்த்திருக்கக்கூடும். இவள் நான் கண்ட கருப்'பூ'! கருப்பின் அழகை கவனித்ததுண்டா? கருப்பின் காந்த சக்தியையும், அதன் ஈர்ப்பினையும் உணர்ந்ததுண்டா? எல்லா நிறங்களையும் தன்னுள்ளே அடக்குவது கருப்பின் இயல்பல்லவா? இந்த இயல்பு இருப்பதால்தானோ என்னவோ கருப்பின் மீது எனக்கு மதிப்பு அதிகம். கருப்பின் மீது மதிப்பு அதிகம் என்பதால் தானோ ஏனோ, இந்த கருப்புப் பெண்ணை பார்த்ததுமே என் மனதுக்குப் பிடித்தும்போனது. "அண்ணா! அந்த பொண்ண பாருங்களேன். எத்தனை களையான முகம்? கருப்புன்னாலும் அழகா இருக்கால்ல?" -- இப்படித்தான், காலேஜ் பஸ்ஸில் காலேஜுக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு இனிய நன்நாளின் இளம் காலைப்பொழுதில், என் காதைக் கடித்து, அந்தக் கருப்பழகி மீதான கவனஈர்ப்புத் தீர்மானத்தை, என் கவனத்திற்குக் கொண்டு வந்தாள் என் அருகே அமர்ந்திருந்த மஞ்சு. மஞ்சு - என்னை அண்ணா என்றழைக்கும் தோழிகளில் ஒருத்தி. மஞ்சு காட்டிய பெண்ணை வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தேன். மாநிறத்துக்கும் சற்றே குறைவான நிறமாயினும் ஒரு பிரத்யே...