மீண்டும் ஒரு ஜூன் 30!
"நேசமணி ராசாவுக்கும், கூட வந்த மேத்தனுக்கும் ஜே!" -- என்று எழுந்திடும் பெருங்குரல் விண்ணையே பிளந்திடும் என்று என் குடும்பத்துப் பெரியவர்கள் கூற நான் கேட்டதுண்டு. இந்த முத்திராவாக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘நேசமணி ராசாவோடு உடன் வந்த மேத்தன்’ தான் என் வாப்பப்பா! என் தாத்தா. எங்களூர் பக்கம் முஸ்லிம்களை "மேத்தன்" என்றழைப்பது வழக்கம். என் தாத்தா, திரு. M.K பாவா அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்திலிருந்து பிரித்து, தமிழகத்தோடு இணைக்க, மார்ஷல். நேசமணி நாடார் அவர்கள் தலைமையில் நடந்த போராட் -டங்களில், அவரோடு இணைந்து போராடியவர். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் ஒரு முக்கியஸ்தர். அந்தப் போராட்டங்களின்போதுதான் நான் மேலே கூறிய முத்திராவாக்கியம் விண்ணதிரவைக்கும். என் தாத்தா ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. "திங்கள்" எனும் பெயரில் பத்திரிகையும் நடத்தியிருக்கிறார். தமிழ் வித்தகர். ‘கவிமணி’ தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் அருமைச் சீடர்களில் ஒருவர். தெளிந்த சிந்தனையாளர். பண்பாளர். சமூகத்தில் மதிப்போடும், மரியாதையோடும் வாழ்ந்தவர். த...