நன்றியோடு வண்டு!
ம னதில் ஒரு பொறி தட்டும். பொறி தட்டுகையில் கரு கிட்டும். கிட்டிய கருவை அணைத்து, மனம் அடை காக்கும். அடைகாக்கப்படும் கருவின் வீரியத்திற்கேற்ப அக்கருவிலிருந்து சிறந்ததாய் கதையோ, கவிதையோ, அல்லது கட்டுரைகளோ உருப்பெறும். மனதில் உருப்பெற்றது, எழுதுகையில் உயிர்ப்பெறும். ஆக, எழுதுதல் பிரசவம். சிலருக்கு அது சுகப்பிரசவமாய் அமையும். என்னைப்போல கத்துக்குட்டிகளுக்கோ அது செத்துப் பிழைத்தலுக்குச் சமம். நொந்து பிரசவிக்கும் குழந்தைமேல் பாசம் பொங்கும். அது பேரும் புகழும் பெறவேணும் என பெற்ற மனம் ஏங்கும். ஒவ்வோர் படைப்பும் ஒரு குழந்தையே! "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" இந்தத் தாயின் மனநிலை போன்றுதான் இருக்கும், தன் படைப்புக்கோர் நல்ல பாராட்டு கிடைக்கையில் உவகைக்குள்ளாகும் அதைப் படைத்தவனின் உள்ளமும். நல்ல "பாராட்டு" எது? என்பதில் தெளிவு வேண்டும். ஆழ்ந்து படிக்காது "அருமை" என்பர் சிலர், சிலபல வேற்று காரணங்களுக்காக "கொடுமை" என்பவரும் உளர். தரம் பிரிக்கத் தெரிய வேண்டும். வரிக்கு வரி அலசி ஆராய்ந்து செய்யப்படும்...