யவன 'பூ'
ஆகாசவாணி ஒலிபரப்புகள் துவங்குவதற்கு முன்னமே துயிலெழுந்திடுவாள்
அம்மா. வானொலி அம்மாவின் காலைநேரத் தோழி! வானொலி ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும் அம்மாவின்
அடுக்களை வேலைகள் இலகுவாய் நடந்திட. இன்றுவரையில் என் அம்மா 'ஆல் இந்தியா ரேடியோ' வின்
தீவிர நேயர்!
உறக்கம் எழுந்ததுமே உற்சாகமாகிவிடுவது
அம்மாவின் வழக்கம். ஒரு நிமிடம் கூட சோம்பல் கொண்டோ, அரைத்தூக்கத்தை அனுபவித்தோ என்
அம்மா உட்கார்ந்து நான் இதுவரையில் பார்த்ததில்லை. அவளுக்கென்று எப்படி ஒரு வேலை வந்து
சேரும் என்பதும் புதிர்தான். ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்துகொண்டிருப்பாள்!
இப்படிப்பட்ட ஓர் அன்னையின்
செல்ல மகன் நான். ஆனால், அம்மாவின் இந்த அற்புத குணம் எள் அளவு கூட எனக்குக் கிடைத்திருக்கவில்லை.
நான் சோம்பலில் சுகம் காணும் கழுதை. அதுவும், லீவு நாட்களில் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு
வந்திருக்கிறேன் என்றால் நான் கொள்ளும் சோம்பலுக்கு வரம்பும் இருக்காது, வரைமுறையும்
இருக்காது.
"என் செல்லப்பிள்ளே! நேரமாச்சு பாரு எழுந்திருப்பா…!"
என்று மென்மையாகத்தான் துவங்கும் என்னைத்
துயிலெழுப்ப அம்மா பாடும் சுப்ரபாதம்.
"படிச்சு களைச்சு வந்திருக்குற பையனைக் கொஞ்சூண்டு
தூங்கக் கூட விட மாட்டேங்கறயேம்மா! இன்னும் ஒரு பத்தே பத்து நிமிஷம்மா! ப்ளீஸ் மா!"
-- என்று சிணுங்கிக்கொண்டே பத்துப் பத்து நிமிடங்களாக வாய்தா வாங்கி என் தூக்கத்தை
தொடர்வேன் நான். கடைசியில், பொறுமையிழந்து,
"மூஞ்சியில வெயில் அடிச்சாலும் தூங்கிட்டிருப்பியா
கழுதே! படிக்கற பிள்ளைங்க இப்படியா தூங்குறது? இப்போ எழுந்திரிக்கப்போறியா இல்லே மூஞ்சியிலே
தண்ணீய கொண்டாந்து ஊத்தவா?! "
-- என்று அலாரம்போல் பெருங்குரல் எழுப்பி அம்மா அர்ச்சனை செய்யும்போதுதான் என்
பொழுது எனக்கு விடியும். என்னைப் பற்றி அம்மா கவலை கொள்ளும் பல விஷயங்களில் இந்தச்
சோம்பல் பிரதானமானது.
இருப்பினும், நான் என் சோம்பலுக்கு
நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏனென்றால், எனது இந்த சோம்பேறித்தனம் காரணமாகத்தான் அம்மா
என்னிடம் "மதுரிகா" புகழ் பாடினாள். ஆதலினால்தான் "யவனிகா" எனக்குத்
தோழியென்றாகினாள்.
~~~ 0 ~~~
மதுரிகாவை புகழ்ந்து மாளாது அம்மாவுக்கு.
என் சோம்பலைச் சொல்லி என்னைத்
திட்டும் சமயங்களில் கூட தவறாமல் மதுரிகாவின் சிறப்புகளையும் சொல்லிடுவாள் அம்மா.
சமயங்களில் என்னைத் திட்டவேண்டும் என்பதையும் மறந்து மொத்தமாக மதுரிகாவின் புகழ் மட்டுமே
பாடியும் வைப்பாள்.
"இப்படி நீங்க பெருமை பேசற அளவுக்கு அப்படி என்னம்மா
பிரமாதம் அவகிட்டே?" என்று ஒரு முறை கோபமாகக்
கேட்டேன் அம்மாவிடம். கேட்டதுதான் தாமதம், மதுரிகாவின் சிறப்புகளை அடுக்கத்துவங்கினாள் அம்மா.
அவள் விடியற்காலையிலேயே துயிலெழுந்திடுவாளாம்.
அது அதிசிறப்பாம்! எழுந்ததும், எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள, சிறுவாணித் தண்ணீர் வரும்
கார்ப்பரேஷனின் குழாயில், குடம் குடமாக வீட்டுக்குத் தண்ணீர்பிடித்து வைப்பாளாம். அது,
வெகு சிறப்பாம். அதன் பிறகோ, டைப்ரைட்டிங் படிக்கச் செல்கிறாளாம். அது முடிந்தபின்,
டவுனுக்கு வேலைக்குப் போகிறாளாம். வேலைக்குப் போய்வந்த பிறகு மாலைகளில் அக்கம்பக்கத்து
குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கிறாளாம்…. அத்தோடு முடிந்ததா என்றால்? இல்லையாம், டியூஷன்
முடித்த பிறகு முன்னிரவில் கம்ப்யூட்டர் க்ளாசுக்கும் போகிறாளாம்.
இதிலெல்லாம் கூட முற்றுப்பெறுவதில்லையாம்
மதுரிகாவின் பிரமாதங்கள்…, கைவினை பொருட்கள் செய்கிறாளாம், கோலம் அழகாய் இடுகிறாளாம்,
மரியாதை அறிந்தவளாம், அடக்கம் நிறைந்தவளாம், அழகானவளாம், அதிர்ந்து பேசாதவளாம், நிமிர்ந்து
பார்க்காதவளாம், பெண்ணாயினும் அவளிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஏறாளம் உளதாம், ஆஹா…வாம்!
ஓஹோ…வாம்!
தன்னை மறந்து அம்மா, தன் முகத்தில்
பெருமை கொப்பளிக்க, என்னிடம் அந்தப் பெண்ணின் பெருமையை பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ளவே
முடியவில்லை. என்னிடமே, என் அம்மா, என்னைவிடச் சிறப்பென்று மற்றொருவரைக் கூறுவதா? அதுவும்
ஒரு பெண்ணைப் பற்றி?
அவளது பெருமையை என் அம்மா
பேசுவதெல்லாம், அவளின் ‘நிறை’ என்னில் ‘குறை’ யென்று குத்திக்காட்டத்தானோ என்றே எண்ணத்தோன்றியது.
ஒரு பெண்ணோடு ஒப்பிடப்பட்டு நான் சிறுமைப் படுத்தப்படுவதாய் உணர்கிறேன். என் மனம் மிகவும்
காயப்பட்டுப் போனது. இதுவரையில் நான் பார்த்தேயிராத
அந்த மதுரிகா மீது எனக்கு ஆத்திரமும் பொங்கி வந்தது.
இப்படியிருக்க ஒருநாள், அந்த
மதுரிகாவை எனக்குக் காட்டித்தந்தாள் அம்மா!
அழகாகத்தான் இருக்கிறாள் மதுரிகா.
ஆனால், அந்த அழகையும் மீறி, தான் ஓர் 'அழகி' எனும் அலட்டலும், அகம்பாவமும் அவள் முகத்தில்
அப்பட்டமாய் தெரிகின்றார் போல எனக்குத் தோன்றியது.
அவள், முன் நெற்றியில், முடியினை
சற்றே முன்னிழுத்து மேல் எழுப்பி வித்தியாசமாக சிகையலங்காரம் செய்திருந்தாள். அது பார்ப்பதற்கு
பாம்பு படமெடுப்பதைப் போலிருந்ததால் நான் அவளுக்கு நாகலட்சுமி என்றொரு பெயரிட்டேன்.
அவள் அழகுதான், ஆனால் என்னைக்கவரும்
'அம்சம்' அவ்வழகில் இல்லை. அவள் அழகாக இருந்தாலும் என் மனம் அவளில் லயிக்கவில்லை. ஒரு
ஈர்ப்பு உண்டாகவில்லை. தவிர, அம்மா அவளை அடிக்கடி புகழ்வது நான் ஏதோ அந்தப் பெண்ணைவிட
பல படிகள் கீழே இருப்பதாக எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிப்போனது.
இது எனக்கு மிகுந்த வேதனையைத்
தருகிறது.
~~~ 0 ~~~
போத்தனூர்!
கிராமமும் அல்லாத நகரமும்
அல்லாத ஊர் அது. கோயம்பத்தூர் அருகில், கோவையின் பரபரப்பிலிருந்து விலகி இருக்கும்
அமைதியான ஊர். மேற்குத்தொடர்ச்சி மலையின் பாலக்காட்டு கணவாய்க்கு நேர்கோட்டில் அமைந்திருக்கும்
காரணத்தால், மாலை வேளைகளில் குளுகுளுவென குளிர்ந்த காற்று சிலுசிலுவென இங்கு வீசுவதுண்டு.
கோவையை விட குளுமையான தட்பவெட்ப நிலையை கொண்டிருக்கும் போத்தனூருக்கு ஏழைகளின் ஊட்டி
என்றொரு பெயரும் உண்டு.
இந்தப் போத்தனூரில் தான் நாங்கள்
அப்போது வசித்திருந்தோம்.
அன்று,
சிந்தாமணிப்புதூரிலிருந்து
போத்தனூர் செல்லும் 8A நம்பர் பேருந்தில் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில்
மதுரிகாவும் அதே பேருந்தில் ஏறினாள். வேலை முடித்து வீட்டுக்குச் செல்கிறாள் போலும்!
போத்தனூர் வரை இந்த பஸ் செல்லும்
என்றாலும், டவுன்ஹால் (தற்போது நகர்மண்டபம்) நிறுத்தம் நெருங்குகையில் பஸ்சைவிட்டு
இறங்க ஆயத்தமாகிறாள் மதுரிகா. ஏதும் வேலை இருக்கும் அதற்காகத்தான் இங்கே இறங்குகிறாள்
போலிருக்கிறது என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிய மதுரிகாவோ
எங்கும் போகாமல் அங்கேயே நிற்கிறாள்.
அவளின் கண்கள் அலைபாய்கின்றன.
அவைகள் யாரையோ தேடுகின்றன. அந்தத் தேடுதலில் ஒரு பரபரப்பு இருப்பதை நான் கவனிக்கத்
தவறவில்லை. அவளின் பரபரப்பினை கவனித்த எனக்கு, அதில் ஏதோ ஒரு விஷயம் புதைபட்டிருப்பதாகத்
தோன்றவே, அதைத் துப்பறியும் ஆர்வத்தோடு, நிறுத்தத்தைவிட்டு புறப்பட்ட பஸ்சிலிருந்து
தாவி இறங்கினேன் துப்பு துலக்க!
மதுரிகா என்னை பார்த்திடாதவண்ணம்
மறைந்து நின்று அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். அல்லது துப்பு துலக்கிக்கொண்டிருந்தேன்.
அதுவரை யாரையோ தேடிக்கொண்டிருந்தவள்
திடீரென முகம் மலர்கிறாள். ஒரு வெட்கம் கலந்த மகிழ்ச்சி அவள் பார்வையில் சிம்மாசனமிட்டு
அமர்கிறது. அடடே, அதோ அவள் கண்ணம் சிவக்கிறாள்! அடடா, இதோ இவள் கண் ஜாடைகள் புரிகிறாள்!
அவளின் கண் பார்வை பயணித்த
திசை நோக்கி நான் என் பார்வையை பாயவிட்டேன். அது, அங்கே ஒரு ஆடவனின் விழிகளை அவள் பார்வை
தழுவிட்ட விஷயத்தை உளவறிந்து எனக்குச் சொல்லிற்று! அந்த ஆடவனை நான் அறிவேன். போத்தனூரில்
அவனை நான் பார்த்திருக்கிறேன். அமைதியானவன், அதிகம் பேசாதவன், என்றெல்லாம் பெயரெடுத்தவன்
அவன். பார்ப்பதற்கும் நன்றாகத்தான் இருப்பான். இங்கே மதுரிகாவின் விழியோடு விழி சேர்த்து
விஷமம் செய்துகொண்டிருக்கிறான்.
அவனை மட்டும் சொல்வானேன்!
மதுரிகாவும் அவனுக்குச் சற்றும் சளைத்தவள் அல்ல, புன்னகைக்கும் அளவுகளில், புருவத்தின்
சிறு சிறு அசைவுகளில், குறிப்பிட்ட தாள கதியில் இமைகளை இமைப்பதில், அவனுக்கு மட்டும்
விளங்கும் விதத்தில் அவனோடு சில சம்பாஷனைகளைஅவளும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறாள்.
மறைந்து நின்று நானும் இந்தக்
கிளுகிளுப்புகளை பார்த்துக்கொண்டிருக்க, துடியலூரிலிருந்து போத்தனூர் செல்லும் 4ம்
நம்பர் பேருந்து நிறுத்தத்தை வந்து அடைகிறது. அதில் அவர்கள் ஏறினார்கள். நானும் ஏறி,
அவர்கள் எனக்குத் தென்படும் விதமாகவும், நான் அவர்களுக்குத் தென்படாத விதமாகவும் ஓர்
இடத்தில் நின்றுகொண்டேன்.
பஸ்சுக்குள் ஏறிய பின்னும்
தொடர்கிறது இவர்களின் கண்களின் பரிபாஷைகள். பஸ் உக்கடம் தாண்டி, டிராபிக் நெரிசலில்
நீந்தி, ஆத்துப்பாலம் கடந்த பின்னும் கூட ஓயவில்லை இவர்கள் கண்களால் செய்யும் காதல்
சம்பாஷனைகள். யாரும் பார்க்கவில்லை எனும் தைரியத்தில் இவர்களின் நயனங்கள் நாட்டியமாட,
இந்த நாடகத்தை ரகசிய ரசிகனாய் நான் மட்டும் கண்டுகளித்துக் கொண்டிருக்கிறேன்.
'ஆக, இப்படிப் போகிறதா கதை?'
என்று மனதுக்குள் கூறிக்கொண்டு, ஏதோ ஒரு மாபெரும் கண்டுபிடிப்பினை நிகழ்த்திவிட்ட பெருமையில்
எனக்கு நானே ஒரு 'ஷொட்டு' ம் வைத்துக்கொண்டேன்.
அரும் பெரும் மதிப்பு கொடுத்து,
வாய் ஓயாது பெருமை பேசி, ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் மதுரிகாவை வைத்திருக்கும் என் அம்மாவிடம்
இவள் காதல் செய்யும் சங்கதியைச் சொன்னால் என்னவாகும் என்று ஒரு கணம் யோசித்தபோது எனக்கு
சந்தோஷம் பீறிட்டுக்கொண்டு வந்தது. வீட்டுக்குச் சென்றதும் அம்மாவை கட்டிப்பிடித்து
பல முத்தங்கள் வைத்தேன். அம்மாவோ, என் சந்தோஷத்தின் காரணம் என்ன எனப்புரியாமல் என்னை
வினோதமாகப் பார்க்கிறாள்.
"என்னடா ஆச்சு உனக்கு?" என்று என்னைக் கேட்கிறாள். அதற்கு நான்,
"நன்றென்று நினைப்பதெல்லாம் நன்றுமல்ல, பழுதென்று பார்ப்பதெல்லாம்
பாழும் அல்ல!" என்கிறேன்.
"என்னடா உளறிட்டிருக்கே?"
"ஊர் எல்லை வரை ஆட்கள் ஒரு மாதிரி, எல்லை தாண்டிட்டா
முச்சூடும் வேறு மாதிரி! இது புரியாமல் வெளுத்ததை பால்னு நினைச்சிட்டியே என் அம்மா!" – என்றேன்.
"யாரைப்பத்தி சொல்லுறே? புரியும்படியா சொல்லு!" என்று சலிப்போடு கேட்டாள் அம்மா.
"பொதுவா சொல்றேன். ஆட்கள் அப்படித்தானேமா?" என்றேன் பொத்தாம் பொதுவாக!
"ஆட்களைப்பத்தி அன்னேஷனம் நடத்த எனக்கு நேரம் இல்லை.
என்னை விடு எனக்கு நிறைய வேலை இருக்கு!" எனக்கூறி நான் தெளிவான பதில் சொல்லாததற்கு கோபித்துக்கொண்டு அம்மா அவள் வேலையில்
மும்முரமானாள். நான் சொல்லும் விஷயங்களில் பலப்போதும் அர்த்தம் ஏதும் இருக்காது என்பது
அம்மாவின் நம்பிக்கை. அது ஓரளவு உண்மையும் கூட!
எனக்கோ சந்தோஷம் குறைந்தபாடில்லை.
அந்தப் பெண்ணை வென்றுவிட்டதுபோல் ஓர் உணர்வு எனக்குள் கும்மாளமிட்டது. இந்தப் பூனையும்
பால் குடிக்குமா என்பது போல் இருந்துவிட்டு எத்தனை துணிச்சலாய் காதல் செய்கிறாள்? ஆஹா…
ஓஹோ வென எத்தனை புகழ் எத்தனை பெருமை? அவளது காதல் விஷயத்தை மட்டும் நான் இப்போது வெளிப்படுத்தி
விட்டேனென்றால், சிகரமாக உயர்ந்து நிற்கும் அவளது புகழ் சிதறுவது உறுதி, அவள் மீது
வைக்கப்பட்டிருக்கும் மதிப்பு குறைவதும் உறுதி.
ஆனால், பழி தீர்க்க வேண்டி
அம்மாவிடம் நான் அவளின் காதல் பற்றி யாதொன்றும் கூறவில்லை. அவள் இரகசியம் என்னால் வெளிப்பட்டு
பிரச்சினை ஆகக்கூடாதல்லவா? அவள் பிரச்சினைக்கு நான் காரணம் ஆகிவிடக்கூடாதல்லவா? நான்
காதலின் காதலன். ஆதலால் அவர்களின் காதலை மதிக்கிறேன். ஆதலால் இரகசியம் காத்தேன்!
அவள் என் எதிரியான போதிலும்
அவளின் இரகசியத்தை வெளிப்படுத்தாமல் பாதுகாப்பதெல்லாம் “எவ்ளோ பெரிய விஷயம்?” என்று
என் செய்கையை எண்ணி நானே புளங்காகிதம் அடைகிறேன். இதனாலெல்லாம், நான் அவளை விட பல படிகள்
மேலாகத்தான் இருக்கிறேன் என்று உறுதியாக நம்பினேன். இது மனதுக்கு இதம் தந்தது.
அதன்பிறகு சோம்பலைச்சொல்லி
அம்மா என்னைத் திட்டும்போதும் மதுரிகாவின் புகழினை பாடும்போதும்,
"நன்றெல்லாம் நன்றுமல்ல, பழுதெல்லாம் பாழும் அல்ல!" என்று நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அம்மாவுக்கோ ஏதும் புரிந்தபாடில்லை!
~~~ 0 ~~~
"என்னைத் தெரியுமா நான் சிரித்துப்
பழகி மனதை கவரும் இரசிகன் என்னைத் தெரியுமா? உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கலைஞன்
என்னைத் தெரியுமா?
ஆஹா இரசிகன்..! ஆஹா இரசிகன்!
நல்ல இரசிகன்! நல்ல இரசிகன்...!
உங்கள் ரசிகன்..! உங்கள் ரசிகன்!"
-- அம்மாவின்
ஆகாசவாணி உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தது. அப்பா அலுவலகத்திற்கும், நொடிக்கொருமுறை
அம்மாவை எதற்கேனும் அழைத்தவாறு தங்கை கல்லூரிக்கும் தயாராகிக்கொண்டிருக்க, வழக்கம்போல
காலை நேர பரபரப்பினை தனியொருவளாக நின்று சமாளித்துக் கொண்டிருக்கிறாள் அம்மா.
நான் நிதானமாக எழுந்து, சாவதானமாக
பல்விளக்கி, தூக்கம் முற்றிலும் கலைந்திடாதவாறு முகம் அலம்பி, சோம்பலோடு சோபாவில் வந்து
விழுந்தேன். என்னை பார்த்ததும், அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் எனக்காக 'டீ' வைத்தாள்
அம்மா. அதுதான் அம்மா! இரண்டு கைகள்தான் ஆனால் இருபது வேலைகளை ஒரே நேரத்தில் செய்திடுவாள்.
[அந்நாட்களில், இந்தக் காலைநேர
பரபரப்பில் நானும் பங்குகொண்டு, அம்மாவுக்கு எண்ணிலடங்கா தொல்லைகள் கொடுத்ததுண்டு.
எப்போதாவது நேரமாகிவிட்டதென்றால், வெறும் வயிற்றில் பிள்ளைகள் போகக்கூடாது என்பதற்காக
உப்புமா கிண்டிவைப்பாள் அம்மா. அவ்வளவுதான்! உப்புமா ஏதோ உலகமகா தவறு என்பது போலவும்,
உப்புமா கிண்டியது அம்மா செய்திட்ட மாபெரும் குற்றம் என்பதுபோலவும், குறைகள் சொல்லி,
அம்மாவுக்கு என் மீது அக்கறையே இல்லை என்று குற்றமும் சுமத்தி, கேலி செய்து, கோபித்துக்
கொண்டு, சாப்பிடாமலே சென்றுவிட்ட நாட்கள் பல உண்டு. அன்றெல்லாம் அம்மாவின் மனம் என்ன
பாடு பட்டிருக்கும்? என்று, முன்பு செய்திட்ட தவறுகளை இப்போது எண்ணிப் பார்க்கையில்
கண்ணில் நீர் கசிகிறது. அம்மாவை கட்டி அணைத்து கதறி அழுது மன்னிப்பு கோரத் தோன்றுகிறது.
பின்னாட்களில், ஹாஸ்டலிலும், ஹோட்டல்களிலும் மட்டுமே சாப்பிட்டாகவேண்டிய நிலை வந்தபோதுதான்
அம்மாவின் உப்புமாவின் சிறப்பு விளங்கியது. இன்றெல்லாம் நான் அம்மாவின் உப்புமாவுக்கு
தீவிர இரசிகன்… அதுவும் அம்மாவின் மசாலா உப்புமா… அமிர்தம்!]
அம்மா ‘டீ’ கொண்டுவந்து தந்தாள்.
ஒரு கையில் அதை வாங்கி மறு கையால் அம்மாவை அணைத்துப் பிடித்து பாசமாக ஒரு முத்தம் வைத்தேன்.
அவசரகதியில் என்னை உச்சிமுகர்ந்துவிட்டு அடுக்களைக்குள் ஓடினாள் அம்மா.
அப்பா படித்துவிட்டு வைத்திருந்த
செய்தித்தாளையும் அம்மா தந்த தேநீரையும் எடுத்துக்கொண்டு பேப்பர் படிக்க பால்கனிக்குச்
சென்றமர்ந்தேன். தெருவில், மதுரிகா வருவது தெரிந்தது. அவளோடு இரண்டு மூன்று பெண்களும்
உடன் வந்துகொண்டிருந்தார்கள்.
நாணம் தவிர வேறேதும் தன் நயனங்கள்
அறியாது எனும் மட்டில் தன் கண்கள் இரண்டையும் ஏதோ தன் பாதத்திலேயே பதித்திட்டார்போல
குனிந்த தலை நிமிராமல் எத்தனை சாதுப் பெண்ணாக நடந்து போகிறாள்? எனக்கே சந்தேகம் வருகிறது,
அன்று நான் பார்த்தது இவளைத்தானா என்று. "கள்ளத்தின் பெண் வடிவமே... கண்ணுக்குள்
நீ ஒளிக்கும் கள்ளத்தனங்களை நான் அறிவேன். ஆனால், அதை நான் அறிவேன் என நீ அறியாய்...!"
என்று மனதுக்குள் கூறிக்கொண்டு, அட்டகசித்து சிரித்துக்கொண்டேன், மௌனமாக!
மதுரிகாவும் அவளின் தோழியரும்
என் வீட்டைக்கடந்து பஸ் நிறுத்தம் நோக்கிச் செல்கிறார்கள்.
மதுரிகாவின் தோழியரும் அவளைப்போலவே
வேலைக்குச் செல்பவர்கள்தான். இவர்கள் மாத்திரமல்ல இவர்களைப்போல இன்னும் நிறைய இளம்
பெண்கள், பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்க வேண்டிய வயதில் வேலைக்குச் செல்கிறார்கள்.
பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக படிப்பினைத் தொடர முடியாமல், குடும்பச்சுமை குறைக்கத்
தோள் கொடுக்கும் லோவர் மிடில் கிளாஸ் பெண்கள் இவர்கள். அம்மா இவர்களின் பெருமைகளைப்
பேசுவது நியாயமான செயல்தான். எதைப்பற்றியும் கவலையில்லாமல் கனவுகளோடு வலம் வரவேண்டிய
இந்த இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கத்துவங்கிவிட்ட இந்தப் பெண்கள் மீது
அம்மா போல எனக்கும் கரிசனமும் பெருமதிப்பும் உண்டாகிப்போனது.
மீண்டும் மதுரிகா தெருவில்
தென்பட்டாள்.
ஆனால், இப்போது வேறு உடை அணிந்திருக்கிறாள்!
நான் குழப்பமடைந்தேன். இதுவென்ன வினோதம்? மதுரிகா, அவளது வீட்டிலிருந்து பஸ் நிறுத்தத்திற்கு
என் வீட்டைக் கடந்து சென்று ஐந்து நிமிடம் கூட முழுதாக ஆகியிருக்காது. அதற்குள் எப்படி
மீண்டும் வீட்டுக்குப்போய் உடையும் மாற்றி வர முடியும்? அவள் திரும்ப வீட்டுக்குப்
போகும்போது என் கண்ணில் படவும் இல்லையே? என்றெல்லாம் பெரும் குழப்பத்தோடு அவளை பார்த்துக்கொண்டிருக்க, அவள்
என் வீட்டை நெருங்கியபோது தான் புரிந்தது அது மதுரிகா அல்ல அவள் உருவத்தை ஒத்த வேறு
ஒரு பெண் என்று.
ஆனால், அவள் அணிந்திருக்கும்
சல்வார் கம்மீஸ் மதுரிகாவினுடையதுதான். அதில் எனக்கு சற்றும் கூட சந்தேகமே இல்லை. ஏனென்றால்
மதுரிகாவை, நான் துப்பறிந்த அன்று இதே ஆடையைத்தான் அவள் அணிந்திருந்தாள்.
மதுரிகாவின் உடையை இந்தப்
பெண் எப்படி அணிந்திருக்கலாச்சுது? மீண்டும் குழப்பம்!
என் வீட்டைக்கடந்து சென்ற
அந்தப் பெண்ணை இத்தனை குழப்பங்களோடு எனது கண்கள் பின் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில்
பால்கனிக்கு வந்தாள் என் தங்கை!
தலைதுவட்டிய துண்டினை கொடியில்
விரிக்க பால்கனிக்கு வந்தவள், என் கைகள் செய்தித்தாளை விரித்துப் பிடித்திருக்கும்
திசைக்கும், என் கண்கள் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் திசைக்கும் சற்றும் கூட சம்மந்தம்
இல்லாதிருப்பதைக் கண்டு, மெய்மறந்தபடி அண்ணன் அப்படி எதைத்தான் பார்க்கிறான் என்று
அறிய ஆர்வம் கொண்டு, தெருவை நோட்டமிட, அங்கே, அண்ணனின் பார்வை ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து
கொண்டிருக்கிறது எனும் விஷயத்தை கனக்கச்சிதமாக கவனித்துவிட்டாள்.
இதை உணராத நானோ, என் பார்வை
எல்லையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கும், மதுரிகாவின் உடையை அணிந்திருக்கும்
அந்தப் பெண்ணை இன்னும் கொஞ்சம் பார்த்திடவேண்டி, உடலைச் சாய்த்து தெருவை எட்டிப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.
ஆயாசமாகப் பார்த்து முடித்து
திரும்பியபோது நெற்றிக்கண் திறந்தாள் தங்கை.
"என்ன?" கேட்டாள்!
"என்னது?" நான் கேட்டேன்!
"அங்கே என்ன பார்த்திட்டிருந்தே?"
"அதுவா? அது அந்தப் பொண்ணு...!"
"அந்தப் பொண்ணுக்கு என்ன?"
"ஒன்னும் இல்ல... அவள் போட்டிருக்கும் டிரெஸ்..."
"அவ டிரெஸ்சுக்கு என்ன?"
"டிரெஸ்சுக்கும் ஒன்னும் இல்ல... ஆனா... எங்கேயோ பாத்திருக்கேன்."
"அவளையா?"
"இல்ல, அவ போட்டிருக்கும் டிரெஸ்ஸை!"
"என்னது?"
"இல்லை, அவ உடுத்தியிருக்கும் சல்வார் போலவே ஒரு சல்வார்
வேற யாருக்கோ இருக்கு."
"இருந்துட்டு போட்டும்... அதனால என்ன?"
"இல்லே, ஒரே மாதிரி டிரெஸ் எப்படி ரெண்டு பேருக்கு
இருக்கும்னு யோசனை பண்ணிட்டிருந்தேன்!"
"ஏன் ஒரே போல டிரெஸ் ரெண்டு பேருக்கு இருக்கக் கூடாதா?
அவ ஏதோ டிரெஸ் போட்டிட்டுப் போறா அதுல உனக்கு என்ன?"
"ஒன்னுமில்லை… சும்மாதான்.. ஏதோ தெரிஞ்ச டிரெஸ்ஸாச்சேன்னு
பாத்தேன்!" என்று நான் உறள, கண்களை
உருட்டி முறைக்கிறாள் தங்கை. ஆதலால், லாவகமாக விஷயத்தை மாற்றலாம் என நினைத்து அவளிடம்,
"நீ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலையா? டைம் ஆகல?" எனக்கேட்டால் அதற்கும் முறைத்தவள், பற்களை கடித்து நறநறக்கச்செய்கிறாள்!
அப்படி என்ன தவறாக கேட்டுவிட்டேன் என்று நான் யோசிக்கத்துவங்கியபோது,
"நான் ஸ்கூல் முடிச்சு ரெண்டு வருஷம் ஆகுது. இப்போ
நான் காலேஜ்ல படிக்கறேன், ஸ்கூல்ல இல்ல!" என்று எரிந்து விழுகிறாள்.
நிலமை சரியில்லை. எனக்குச்
சாதகமாகவும் இல்லை. ஆதலால், மேற்கொண்டு பேச்சினை வளர்க்காமல் இருப்பதுதான் விவேகம்
எனத்தோன்றவே, கையிலிருந்த பேப்பரையும் என் வாலையும் சுருட்டிக்கொண்டு வீட்டுக்குள்
நுழைந்தேன்.
"ஆஹா ரசிகன்...! நல்ல
ரசிகன்...! இளம் இரசிகன்...! உடை இரசிகன்...!" என்று ஆகாசவாணி பாடிய பாடலை, என்
தங்கை இப்போது என்னை கேலி செய்யும் விதத்தில் பாடுகிறாள். அதுவும் போதாமல், பால்கனியில்
நடந்ததை அப்படியே அம்மாவிடம் ஒப்பிக்கவும் செய்கிறாள் என் அன்புத் தங்கை.
அம்மாவின் கோபப்பார்வையை எதிரிடத்
தயாரானேன். ஆனால், அம்மாவின் கண்களோ கனிவினை வீசியது. அம்மா சொன்னாள்,
"இவ மதுரிகாவோட தங்கச்சி பா! பாவம், வேலைக்கு போற பிள்ளைங்க
இல்லையா? இருக்குற நல்ல டிரெஸ்ஸை அக்காவும் தங்கையும் மாத்தி மாத்தி போட்டுக்குவாங்க.
நல்ல லக்ஷ்ணமான பிள்ளைங்க, என்ன பண்றது? இந்த வயசிலேயே பொறுப்புகளைச் சுமக்குது...."
என்று.
அம்மா சொன்னதைக்கேட்டு என்
மனமும் கனிந்தது.
"இவ பேரு என்னம்மா?"
-- அம்மாவைக் கேட்டேன்.
"மூத்தவ மதுரிகா, இந்த இளையவள் பேரு யவனிகா...!" என்கிறாள் அம்மா.
"யவனிகா..." ஒரு முறை எனக்குள் அந்தப் பெயரை செல்லிப்பார்த்துக்கொண்டேன்….,
அழகான பெயர்.
அன்றிலிருந்து யவனிகாவை கவனிக்கத்துவங்கினேன்.
அம்மா சொன்னது சரிதான். முதல் நாள் அக்கா மதுரிகா அணிந்து செல்லும் உடையை மறுநாள் யவனிகா
அணிந்து செல்கிறாள். இந்தச் செயல் என் மனதினை வருந்த வைத்தது. பொதுவாக, நகையோ, புடவையோ
அல்லது வேறு ஆடைகளோ, பொண்களைப் பொறுத்தவரை, தனக்கென்று எல்லாம் தனியாக வேண்டும் என்றே
நினப்பார்கள். ஆனால் இவளோ, சூழ்நிலைக்கேற்ப தன்னை அனுசரித்து, இயல்பான தன் ஆசைகளையும்
அடக்கி வாழும் விதம் என் மனதை நெகிழச்செய்தது.
நெகிழ்ந்திடும் மனதினில் நிகழ்வது
என்ன?
'காதல்தான்!' என்று அவசரப்பட்டு
முடிவு கட்டிவிட நீங்கள் ஒன்றும் சராசரி வாசகர்கள் அல்ல. நீங்கள் சில்வண்டின் வாசகர்கள்.
சராசரிக்கும் மேலானவர்கள். ஆதலால், நெகிழ்ந்திட்ட மனதில் பிறந்திட்ட உணர்வு, யவனிகா
மீதான பரிவும், கரிசனமும், பச்சாதாபமும்தானே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை நன்கு உணர
உங்களால் இயலும். அப்படித்தானே?
~~~ 0 ~~~
"உன் நாகலக்ஷ்மிக்கு கல்யாணம்
ஆயிடுச்சு!"
-- அடுத்த லீவுக்கு வீட்டுக்கு வந்திருந்தபோது அம்மா என்னிடம்
சுரமே இல்லாமல் இப்படிக்கூறினாள். நாகலக்ஷ்மி என்பது மதுரிகாவின் சிகையலங்காரத்தை
கேலி செய்து நான் அவளுக்கு சூட்டிய பெயர்.
"என் நாகலக்ஷ்மியா? உங்க நாகலக்ஷ்மின்னு சொல்லுங்க.
நீங்கதானே தலையிலே தூக்கிவச்சு கொண்டாடிட்டிருந்தீங்க? இப்ப என்ன ஆச்சு? லவ்மேரேஜ்
பண்ணிட்டு போனதும் இறக்கிட்டீங்களா தரைக்கு?"
"உனக்கெப்படி தெரியும்? அது லவ் மேரேஜுன்னு?"
-- ஆச்சரியமாகக் கேட்டாள் அம்மா.
"எல்லாம் தெரியும். யாரைக்கல்யாணம் பண்ணியிருக்கான்னு
சொல்லட்டுமா?"
-- எனக்கேட்டு மதுரிகாவின் கணவனின் விவரங்களை விலாவரியாக எடுத்துரைத்தேன். அம்மாவுக்கோ
ஆச்சரியம் தாளவில்லை.
"உனக்கெப்படி தெரியும்? இந்த விவரமெல்லாம் உனக்கு யார்
சொன்னாங்க?"
-- எனக் கேட்டாள் அம்மா.
"போன தடவ வந்தப்பவே தெரியும். அவங்க ரெண்டு பேரையும்
நான் டவுன்ல பார்த்திருக்கேன். அப்பவே கண்டுபிடிச்சுட்டேன் அவங்க லவ்வுல இருக்காங்கன்னு."
-- என்றேன்.
"அதுசரி! கள்ளப்பயலே என்கிட்டே நீ இதெல்லாம் தெரிஞ்சமாதிரியே
காட்டிக்கிடலயே?!" எனக்கேட்டு வியப்புற்றாள்
அம்மா.
"அதெப்படி காட்டிக்க முடியும்? நீங்களோ மூச்சுக்கு
முன்னூறு தடவை அவ பரணி பாடிட்டிருந்தீங்க, சரி, உங்க மனசை வீணாக எதுக்கு நோகடிப்பானேன்னு
சொல்லாம விட்டுட்டேன்.” என்று கூறி நானே தொடர்ந்து,
“எத்தனை தடவ அந்தப் பெண்ணோட கம்ப்பேர் பண்ணி என்னை திட்டியிருக்கீங்க?
அவ கிட்டேயிருந்து நான் கத்துக்கவேண்டியதும் நிறைய இருக்குன்னு அடிக்கடி சொல்லுவீங்களே?
இப்போ என்ன சொல்லப்போறீங்க?” எனக்கேட்டேன்.
“இப்போ என்ன சொல்லனும்? அவளுக்கு பிடிச்ச ஆளை அவ கல்யாணம்
செஞ்சுகிட்டா? அதுல என்ன தப்பு? அதனால, அவ நல்ல பெண்ணு இல்லைன்னு ஆயிடுமா?” என்றாள் அம்மா.
“ஓஹ் அப்படியா? அப்படின்னா நானும் அவளைப்போல லவ்வு கிவ்வு
பண்ணட்டுமா? என்று கேட்டதற்கு,
"நீ முதல்ல காலையிலே சீக்கிரம் எழுந்திரிக்கப் பழகு!
மற்றதை பிறகு பாக்கலாம்." என்று கூறி வழக்கம்போல என் மூக்கை உடைத்துச் சென்றாள்
என் செல்ல அம்மா.
மறுநாள்!
ஆச்சர்யத்திலும் ஆச்சரியமாக,
அதிசயத்திலும் அதிசயமாக, அதிகாலையிலேயே எனக்கு முழிப்பு வந்திட்டது. யவனிகாவின் நினைவுதான்
என்னைத் தட்டி எழுப்பியிருக்கவேண்டும். தண்ணீர்க் குழாயடியில் தண்ணீர் பிடிப்பவர்களின்
சப்தம் கேட்டிட, நான் மொட்டை மாடிக்குச் சென்று தண்ணீர் பிடிக்கும் குழாயடி தெளிவாகத்
தெரியும்படி சுவரில் ஏறி அமர்ந்துகொண்டேன்.
சற்று நேரத்தில் கையில் குடத்தோடு
வந்தாள் யவனிகா. வெளிர் நீலத்தில் கத்திரிப்பூ நிற பூக்கள் பதித்த மிடியும், வெள்ளை
சட்டையும் அணிந்திருந்தாள். அவள் பாதங்களில் செருப்பு இல்லை. வித்தியாசமான சுருள்
முடி அவளது. அதில் ஒரு சுருள் அடிக்கடி அவளின் காதருகே புரண்டு வந்து தொல்லை கொடுக்க,
அதை அவள் கை கொண்டு ஒதுக்கிவைத்துக்கொண்டிருந்தாள். யாரோடும் அதிகம் பேசவில்லை. காக்கைக்
கூட்டில் கல் எறிந்ததைப் போல அங்கே தண்ணீர் பிடிப்பவர்கள் கூச்சல் போட்டுக்கொண்டிருக்க,
ஒரு சிறு புன்னகையை மட்டும் உதட்டில் பதித்து அமைதியாக வரிசையில் நிற்கிறாள் யவனிகா.
அவளையே கண் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவள், அழகு செல்வத்தால் செழிப்புற்றிருந்தாள். குடங்களில் தண்ணீர் நிரப்பி, உள்ளங்கையை
மடக்கி குடத்திலிருந்து இரண்டு மூன்று கை தண்ணீரை எடுத்துதிறைத்துவிட்டு, இரண்டு கைகளாலும்
குடத்தை எடுத்து லாவகமாய் அதைச் சற்றே சுழற்றி இடுப்பில் வைத்து, மற்றொரு குடத்தை கையில்
எடுத்து அவள் நடந்து செல்ல, அந்த நடையில், அந்த அழகில் நான் லயித்துப்போனேன்.….!
விடிந்தும் விடியாத காலைப்பொழுது…
சில்லென்று வீசி உற்சாகம் தரும் குளிர் காற்று… பாடிக்கொண்டே ஊர்வலம் நடத்தும் பறவைக்கூட்டங்கள்…
அடிவானின் வெட்கச் சிகப்பு, ஆகாசவாணியின் துவக்க இசை, குடமேந்தி நளினமாய் நடைபோடும்
நான் இரசிக்கும் பெண், என, இவை யாவும் இதமென்றாக, என் மனம் முழுதும் பரவிப்பெருகியது
உற்சாகத் துள்ளல்.
அந்தக் காலைவேளை என் மனதில்
ஆழப்பதிந்து என்னை ஆனந்தத்தில் பொதிந்தது. உலகம் அழகு! அதும் அதிகாலைகளில் உலகம் பேரழகு!
இப்படியாக, காலைப்பொழுதின்
இயற்கை அழகை இரசிக்கத்துவங்கியிருந்த நாட்களில், ஓர் நாளின் மாலைப் பொழுதில், கடைவீதியில்
நான் நின்றிருக்கையில் என்னெதிரே தோன்றினாள் யவனிகா.
தாவணி அணிந்திருக்கிறாள்.
தலையில் கனகாம்பரமும் அதைச்சுற்றி மல்லிகையும் சூடி, அழகு கூந்தலுக்கு மணம் சேர்த்து,
தன் தோற்றத்திற்கு புதுமை சேர்த்து, தனியாக வருபவள் என்னைக் கடந்து சென்று கோவிலுக்குள்
நுழைகிறாள். கோவிலுக்குள் அவள் நுழைவதைக் கண்ட நானும் சற்று நேரத்திற்குள் யாரும் என்னை
கவனிக்காத விதத்தில் கோவிலை நோக்கி முன்னேறினேன்.
கோவிலை அடைந்து, பிள்ளையாருக்கு
பெயருக்கு ஒரு கும்பிடு போட்டு, "அவளை கண்ணில் காட்டப்பா பிள்ளையாரப்பா"
என்றொரு குட்டி வேண்டுதலும் விடுத்து கோயிலைச் சுற்றி வருகிறேன் தேவதை தரிசனத்திற்கு.
அவளைத் தேடிக்கொண்டே கோவில்
கல்மண்டபத்தை அடைந்தேன். மண்டபத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்வதற்காக நான்
திரும்பிய அதே நேரத்தில், மறுபக்கத்திலிருந்து நான் இருக்கும் பகுதிக்கு யவனிகாவும்
நுழைய, என் எதிரே, மிக அருகே…, அவள்!
இருவரும் கிட்டத்தட்ட ஒருவரை
ஒருவர் முட்டிக்கொள்வதைப்போல எதிரெதிரே நின்றுகொண்டிருந்தோம். அன்றுதான் முதல் முறையாக
யவனிகாவை நான் அருகினில் பார்க்கிறேன். திடீரெனத் தன் எதிரில் அதுவும் அத்தனை அருகில்,
ஒரு ஆண்பிள்ளை நிற்பதைக்கண்டு, அதிர்ச்சிகொண்டு பயந்தது போல அவளும் என்னை மிரளப் பார்க்கிறாள்.
அந்த அதிர்ச்சியில், ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவள், அதைச்சொல்ல மறந்து நிற்கிறாள்.
அவளை சந்தித்துப் பேசத்தான்
நானும் வந்தேன் என்றாலும், எதிர்பாராமல் அவள் என் எதிரே தோன்றியதில் நானும் அதிர்ச்சி
கொண்டு பேச்சு வராமால் திக்கித்திணறி நிற்கிறேன். நான் அவளையும், அவள் என்னையும் பார்த்தவண்ணம்
இருக்க, "வழி விடுங்க தம்பி..." என்று அவளுக்கு பின்னால் நின்றிருந்த பாட்டி
இரண்டாம் முறையாக உரக்கக் கூறியபோதுதான் அவளின் தரிசனம் முடித்து விலகி வழி விட்டேன்.
அவள் என்னைக் கடந்து சென்றாள். அவள் போவதைப் பார்த்துக்கொண்டு நான் அங்கேயே நின்றேன்.
மதுரிகாவின் அழகில் இல்லாதிருந்த
என்னைக் கவரும் "அம்சம்" யவனிகாவின் அழகில் எனக்குத் தென்பட்டது. இவளிடம்
தென்பட்ட அந்த "அம்சம்" என்னை இவள்பால் ஈர்த்துச்சென்றது. அமைதியான முகமும்,
நாணம் கலந்தே இருக்கும் அவளது பார்வையும், பூமித்தாய்க்கு வலித்திடுமோ என்று அக்கறை
கொண்டார்போலிருக்கும் அவளின் நடையும் என்னை அவளின் இரசிகன் என்றாக்கியது.
அடடே…, இவளால் என் மாலை உலகும்
அழகென்றானது!
~~~ 0 ~~~
யவனிகாவுடன் நட்பு வேண்டும் என்றொரு எண்ணம் எனக்குள் துளிர்
விட்டது. மற்ற பெண்களின் வாழ்விலிருந்து வேறுபட்டு வாழும் இவளை இன்னமும் அதிகம் தெரிந்துகொள்ள,
இவளை இன்னமும் புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆர்வம் பிறந்தது. இவள் மனதின் ஆசைகள்
என்னவாக இருக்கும், இவளது மகிழ்ச்சிகள் என்ன? இவளின் துக்கங்கள் என்ன? இவளுக்கும் கனவுகள்
உண்டா? தன் நிலை குறித்து இவளுக்கு வருத்தமேதும் உண்டா? உலகை இவள் பார்க்கும் விதம்
என்ன? என்றெல்லாம் எனக்குள் பல கேள்விகள் பிறந்தன. இதற்கான பதில்களை உணர்ந்து அறிய
எங்களுக்குள் நட்பு உண்டாகவேண்டும்.
எந்த நட்பும் ஒரு அறிமுகத்திலிருந்துதான்
துவக்கம் பெறும். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெறும் அந்த அறிமுகம்தான்
ஒருவரோடு ஒருவரை பரிச்சியப்படுத்தும். அந்தப் பரிச்சியம்தான் நாளடைவில் நட்பாக மாற்றம்
கண்டு, உறவினில் ஏற்றம் காணும்.
ஆனால், யவனிகாவோடு எனக்கு
நட்பு உண்டாக, அதற்கான பரிச்சியம் ஏற்பட, பரிச்சியத்திற்கான அறிமுகம் கிட்ட, ஒரு சந்தர்ப்பம்
இயற்கையாக அமையும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆகவே, இயற்கையாக அமைவதைப் போல செயற்கையாக
ஓர் சந்தர்ப்பத்தை நானே ஏற்படுத்திக்கொள்வதென முடிவு செய்தேன். அதற்காக கச்சை கட்டிக்கொண்டு
களத்தில் குதித்தேன்.!
நம்மை அறியும் பல கண்கள் நம்மை
எப்போதும் மொய்த்துக் கொண்டிருக்கும் உள்ளூர் இதுபோன்ற காரியங்களுக்கு ஏற்ற இடமல்ல.
ஆதலால் முதலில், அவள் வேலைபார்க்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆயத்தமானேன். (நம்மை யாரும்
அறியாத இடங்களன்றோ கள்ளத்திற்கு ஏற்ற இடங்கள்?)
ஒரு நண்பனை பார்க்கப் போவதாக
அம்மாவிடம் சொல்லிவிட்டு யவனிகா வேலைக்குச் செல்லும் அதே நேரத்தில் நானும் வீட்டிலிருந்து
புறப்பட்டேன். அவள் ஏறிய பேருந்தில் ஏறினேன். அவள் எங்கே இறங்குவாள் என்பது தெரியாது
என்பதால் அந்தப் பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்கு டிக்கெட் எடுத்தேன். (அப்பா காசை
விரயம் செய்யாத ஆண் பிள்ளைகள் எவரேனும் உளரோ?)
அவள் ஒரு நிறுத்தத்தில் இறங்கினாள்.
ஆனால், அன்று நான் அங்கு இறங்கவில்லை! (கள்ளத்தனங்கள் செய்திடுகையில் அவசியமன்றோ நிதானங்கள்!).
அவள் இறங்கிய இடத்திற்கு அடுத்த நிறுத்தத்தில்தான் எனது நண்பன் ஒருவனின் வீடு இருந்தது.
அங்கு இறங்கி, அவனை சந்தித்து, எங்களின் பழைய நட்பினை தூசு தட்டிப் புதுப்பித்து, இனிமேல்
அவனைத் தவறாமல் அடிக்கடி வந்து சந்திப்பதாக உறுதியும் அளித்து வந்தேன்.
இது எனக்கு இருவிதத்தில் உதவிகரமானது.
முதலாவதாக, அவள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே ‘நண்பனின் வீடு’ என்று எனக்கொரு
‘base’ அமைந்தது. அடுத்து, அம்மாவிடம் ஒரு நண்பனை பார்க்கப் போவதாகக் கூறிய காரணமும்
பொய்யென்றாகாது பாதுகாக்கப்பட்டது. (செய்வது கள்ளத்தனமே ஆயினும் உறுத்தக்கூடாதன்றோ
மனசாட்சிகள்!)
ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு,
அந்த நண்பனுக்கு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றும்விதமாக மீண்டும் அவனை சந்திக்கச்
சென்றேன். என்னை பார்த்த நண்பன் மகிழ்ந்தான். "நல்லவேளைடா நீ வந்தே!" என்றான்.
இவன் ஏன் அளவுக்கு அதிகமாக
மகிழ்ச்சி கொள்கிறான் என்று யோசித்துக்கொண்டே "ஏன் என்ன ஆச்சு?" எனக்கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல்,
"லைப்ரரிக்கு போகலாமா?" என்று என்னைக் கேட்கிறான்.
"படிக்கவா?" எனக்கேட்டேன் அதிர்ச்சிகொண்டவனாக!
அதைக்கேட்டுச் சிரித்தவன்
"இல்லடா, பார்க்க" என்கிறான்
புதிராக. அவன் சொல்வது புரியாமல் விழித்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து அவனே இரகசியக்
குரலில் புதிரவிழ்த்தான்...,
"எதிர் வீட்டில ஒரு பொண்ணு மச்சான். பெங்களூர்ல இருந்து
லீவுக்கு வந்திருக்கு. தினமும் சாயந்திரம் லைப்ரரிக்கு போவா, இன்னைக்கு நானும் போய்
அவளை மீட் பண்ணலாம்னு பிளான் போட்டிருந்தேன். வீட்டிலருந்து எப்படி நழுவுறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன்.
தெய்வமா நீ வந்து நிக்கற. இதை சாக்கா வச்சு உன்கூட வெளியே போறேன்னு சொல்லிட்டு ஈஸியா
கிளம்பலாம்" என்கிறான்.
சும்மாவா ஆடும் சோழியன் குடுமி?
பாவிப்பயல், நான் ஒரு பெண்ணை எனக்குத் தோழியாக்க இவனை கருவியாக்கலாம் என்றெண்ணி இவனிடம்
வந்தால், இவன் ஒரு பெண்ணை இவனுக்குத் தோழியாக்க என்னை கருவியாக்கிவிட்டானே? என்று கருவிக்கொண்டே
சம்மதம் மூளினேன்.
லைப்ரரிக்கு போனோம். ‘எள்’
அவன் மெம்பர்ஷிப் எடுத்தான். அவனோடு சேர்ந்து காய்வதற்காக ‘எலிப்புழுக்கை’ எனக்கும்
மெம்பர்ஷிப் எடுத்து தந்தான். பிறகு ஆளுக்கொரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு,
அந்த பெங்களூர் பெண்ணை கண்டுபிடித்து, அவள் அமர்ந்திருக்கும் மேஜைக்கு எதிர்புறத்தில்
இருவரும் அமர்ந்தோம்.
அந்தப் பெண்ணோ, தன் கண்ணையும்
கருத்தையும் ஒருசேர கையில் வைத்திருக்கும் புத்தகத்தின் மீது மொத்தமாகப் பதித்து உட்கார்ந்திருக்க,
என் நண்பனோ, அவன் கருத்தை பேருக்கு புத்தகத்திலும், கண்ணை மொத்தமாக அவள் மீதும் பதித்து
உட்காருகிறான். நான், எதை எங்கே பதிப்பது எனப் புரியாமல் கையிலிருந்த புத்தகத்தை எதற்கென்றே
தெரியாமல் தாறுமாறாகப் புரட்டிக்கொண்டிருந்தேன்.
அந்தப் பெண், புத்தகத்தின்
பக்கத்தைப் புரட்டும் கனப்பொழுதில், அதாவது, அவள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து
கண் எடுத்து, தலை உயர்த்தி, கண்ணிமைத்து, விரல்களால் பக்கம் புரட்டி, மீண்டும் புதிய
பக்கத்தில் கண்பதிக்க ஆயத்தமாகும் இரண்டொரு வினாடிக்குள்ளாக அவளின் கவனத்தை ஈர்க்கும்
விதமாக என் நண்பன்,
"ஹலோ?" என்கிறான் அவளை நோக்கி! அவனின் ஹலோவுக்கு பதிலாக ஒரு புன்னகையை கொஞ்சமாகச் சிந்துகிறாள்
அவளும் நோக்கி!
மீண்டும் அவள் தன் புத்தகத்தில்
மூழ்கிப்போனாலும், அவ்வப்போது என் நண்பனை கடைக்கண்ணால் நோட்டமிடத்தான் செய்கிறாள்.
இதைக்கண்ட நான், "உன்ன கவனிக்கறாடா!"
என்கிறேன் அவனிடம் இரகசியமாக. "ஆமாடா!
நானும் கவனிச்சேன்." என்கிறான் அவனும் பரவசமாக!
அவள் புறப்பட ஆயத்தமாவதை தன்
ஆறாம் அறிவில் உணர்ந்த நண்பன், அவள் எழும் முன்னே தான் எழுந்து, என்னையும் எழுப்பி,
லைப்ரரி வாசலில் வந்து காத்து நிற்கிறான். அவள் வாசலுக்கு வந்ததும், இவன் அவளருகே சென்று
மீண்டும் "ஹலோ" என்கிறான். அவள்
"ஹாய்" என்கிறாள்.
நான் கொஞ்சம் நாகரீக இடைவெளி
விட்டு அவர்களை விழியினால் கவனிக்காது, செவியினால் மட்டும் கவனித்து ஓரத்தில் ஒதுங்கி
நின்றிருந்தேன். மிஞ்சிப்போனால் அவர்கள் ஒரு பத்து வாக்கியம் பேசியிருப்பார்கள், அதில்
ஐந்துமுறை கொல்லெனச் சிரித்திருப்பார்கள். அவ்வளவுதான்…, நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.!!!
அவளோடான தோழமையை உறுதி செய்து
கொண்டபின், என்னை அழைத்து அவளுக்கு அறிமுகப்படுத்தினான் நண்பன். அறிமுகம் ஆயிற்று.
அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் அனைவரும் அமைதியாக நிற்க, நான் நிலமையை புரிந்துகொண்டு,
"சரி பின்னே! எனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆகுது நான் இப்படியே
கிளம்பறேன்!" என்றேன். இதைக்கேட்ட நண்பன்"ஏய், நான் டிராப் பண்றேண்டா!"
என்கிறான் ஒரு பேச்சுக்கு!
"இல்லைடா, பரவாயில்லை, இதோ இங்கே நடக்கற தூரம்தானே
பஸ் ஸ்டாப்! நான் போய்க்கிறேன். நாளைக்கு மீட் பண்றேன்" என்று நானும் மறுத்தேன் சம்பிரதாயத்திற்கு.
"One second" என்று தன் புத்தம் புதிய தோழியிடம் கூறி, அவளின் அனுமதி
வாங்கி என் அருகே வந்து என் தோளில் கையிட்ட நண்பன், "சாரிடா மச்சான்... தப்பா எடுத்துக்காதே அவ ஆர். எஸ். புரம் போகணுமாம்,
நான் டிராப் பண்றேன்னு சொன்னேன். அதான்…
" என்று, என் செவியினில் வழிந்தான்.
"சேச்சே அதனால என்னடா? நான் தப்பால்லாம் எடுத்துக்கல
நீ போய் ஜமாய்…!" என வாழ்த்தி அனுப்பினேன்.
நெகிழ்ந்த நண்பன் என்னைக் கட்டி அணைக்காத குறையாக "தேங்க்ஸ்டா மச்சான்!" எனக்கூறி அவளோடு பைக் ஏறி பயணமானான்.
நான் பஸ் ஸ்டாப் நோக்கி நடக்கலானேன்!
எத்தனை சுலபத்தில் அந்த பெங்களூர்
பெண்ணோடு நட்பினை ஏற்படுத்திக்கொண்டான் என் நண்பன். ஒரு ‘ஹலோ’, ஒரு ‘ஹாய்’ இதில் இருவரும்
நண்பர்களாகி இதோ பைக்கில் ஊர் சுற்றப் போயிருக்கிறார்கள். பெங்களூர் பெண்ணே இத்தனை
எளிதாகத் தோழியாகிடும்போது நம் போத்தனூர் பெண்ணைத் தோழியாக்குவது கஷ்டமான காரியமா
என்ன? என்றெல்லாம் யோசித்துக்கொண்டே பஸ் நிறுத்தம் நோக்கி பொடி நடை போடத்துவங்கினேன்.
லைப்ரரியிலிருந்து, போத்தனூர்
பஸ் பிடிக்க நான் போகவேண்டிய பஸ் நிறுத்தம்தான், யவனிகா அலுவலகம் செல்வதற்காக
இறங்கும் பஸ் நிறுத்தம் ஆகும். ஆகவே, நான் போகும் வழியில், அந்த வட்டாரத்தில்
எங்கோதான் அவளின் அலுவலகம் இருந்தாகவேண்டும் எனத்தோன்றவே, ஒவ்வொரு கட்டிடமாக
நோட்டமிட்டுக் கொண்டே நடந்தேன். அதில், ஒரு நான்கு மாடி கட்டிடம் என் கவனத்தை
ஈர்த்தது. இதில் யவனிகாவின் அலுவலகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்
என்று பட்சி சொல்லியது.
பட்சி சொல்வதை உதாசீனப்படுத்தக்கூடாதல்லவா?
ஆதலால், அந்த கட்டிடத்திற்கு எதிரே இருந்த பேக்கரியில், டீ மாஸ்டரான மலையாளி சேட்டாவிடம்
“சேட்டா, ஒரு ‘டீ’ லைட்டா!” என்று சொல்லி அமர்ந்தேன். அலுவல்நேரம் தீரும்வரை காத்திருந்தேன்.
சரியாக மணி ஐந்து ஆனதும், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் பணி முடித்து வெளியே
வந்தனர். அதில் யவனிகா தென்படுகிறாளா என கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.
பட்சி சொன்னது ஓரளவுக்கு சரியென்றானது.
யவனிகா தென்பட்டாள்! பட்சி சொன்ன அந்த நான்கு மாடி கட்டிடத்திலிருந்தல்ல, அதற்குப்
பக்கத்தில் இருந்த இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து வெளியே வருகிறாள் யவனிகா. ஆக, அந்த
இரண்டு மாடி கட்டிடத்தில் தான் அவல் அலுவலகம் இருக்கவேண்டும்.
இப்படியாக, யவனிகா வேலை பார்க்கும்
இடத்தைக் கண்டுபிடித்து அவளை என் தோழியாக்கும் முயற்சியின் முதல் ‘படி’ யினை வெற்றிகரமாகக்
கடந்திட்டேன். அடுத்தபடியாக இனி அடுத்த ‘படி’யினைக் கடக்கும் முயற்சியைத் தொடரவேண்டும்.
எப்படி?
எப்படி அறிமுகம் ஏற்படுத்திக்
கொள்வது? என்ன பேசுவது? எப்படி பேசுவது? நேராகப் போய் பேசத் துவங்கிடலாமா? நான் பேசினால்
அவளும் பேசுவாளா? இல்லை முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவாளா? கோவம் கொள்வாளா? நீங்கள்
ஏன் என்னிடம் பேசுகிறீர்கள் என்று கேட்பாளா? அப்படிக் கேட்பாளாயின்…,
“நீ இந்தச் சிறுவயதிலேயே வேலைக்குப் போவதாலும், உன் அக்காவின்
உடையை நீ பகிர்ந்து அணிவதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்து போனதாலும், உன்னோடு நான் நட்பு
வளர்க்க விழைகிறேன். அதற்காகத்தான் பேச நினைக்கிறேன்…!” என்று நான் கூறும் உண்மையை ஏற்பாளா? என்றெல்லாம் எனக்குள்
பெரும் குழப்பம் உண்டாகிப்போனது. ஒருவேளை, பெண்கள் பின்னால் அலைபவன் என்று என்னைப்
பற்றி நினைத்திடுவாளா? என்றொரு பயமும் பீதி கிளப்பியது.
அடுத்த ‘படி’, அப்படியொன்றும்
சுலபமானதாக இருக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும், குழம்பிப் பயன் இல்லை. நட்பு
தேவையெனில் பேசித்தான் ஆகவேண்டும்.
அடுத்த படியேற ஆயத்தமானேன்.
~~~ 0 ~~~
லைப்ரரிக்குப் போகும் வழியில் யவனிகாவின் அலுவலகம் அமைந்திருப்பதும்,
அந்த பெங்களூர் பெண்ணை சந்திக்கச் சென்றபோது என் நண்பன் எனக்கும் சேர்த்து லைப்ரரி
மெம்பர்ஷிப் எடுத்துத் தந்ததும் பெரும் வசதியாகப் போயிற்று.
படிப்பில் பேரார்வமும் பெரும்
அக்கறையும் கொண்ட நல்ல பிள்ளையாகத் திடீரென்று மாறி, அனுதினமும் “படிப்பதற்காக லைப்ரரிக்குப்
போகிறேன்” என்று வீட்டில் காரணம் சொல்லிவிட்டு, யவனிகா வேலைக்குப் புறப்படும் நேரத்தில்
லைப்ரரிக்குப் புறப்படுவதும், அவள் பயணிக்கும் பஸ்ஸிலேயே பயணிப்பதும், அவள் இறங்கும்
நிறுத்தத்தில் இறங்குவதும், அவள் கண்ணில் தென்படுமாறு உலவுவதுமாக என் கள்ளத்தனங்கள்
களமாடியது.
ஒன்று, அவள் அபீஸ் போகும்
நேரம், அல்லது அவள் ஆபீஸ் விட்டு வீடு திரும்பும் நேரம் என இவ்விரண்டில் ஏதேனும் ஒரு
சமையத்தில், காலேஜ் பையன் எனும் பந்தா காட்ட, இருப்பதிலேயே தடிமனான புத்தகத்தை லைப்ரரியிலிருந்து
எடுத்து, கை வலிக்க, சுமக்க முடியாமல் அதைச் சுமந்துகொண்டு, அவளோடு பேசும் ஓர் சந்தர்ப்பம்
அமையப்பெற அல்லது அமைக்கப்பெற அந்தப் பேருந்து நிறுத்தத்தில் கால்கடுக்க நின்றிருந்த
நாட்களை என்னவென்பது?
முன் பின் அறியாத பெண்ணோடு
பேச்சு வளர்ப்பது அப்படியொன்றும் சுலபமான காரியம் அல்ல. என் நண்பன் லாவகமாக ஒரு ‘ஹலோ’
ஒரு ‘ஹாய்’ யில் தோழமை ஏற்படுத்திக்கொண்டான். எனக்கு, யவனிகாவை என் தோழியாக்க ஆர்வம்
இருந்த அளவுக்கு தைரியம் இருக்கவில்லை. தவிர, என் நண்பனுக்கிருந்த லாவகமும், நுணுக்கமும்
இந்த விஷயத்தில் எனக்கு இல்லவும் இல்லை. இதனாலெல்லாம் யவனிகாவை என் தோழியாக்கும் முயற்சி
முன்னேற்றம் காணாதே நின்றிருந்தது. இல்லாத தைரியத்தை வரவழைத்து அவளோடு எப்பாடுபட்டேனும்
பேசிடலாம் என்று துணிந்தபோதெல்லாம் வேறேதும் தடை வந்து தாக்கியது.
ஒருமுறை,
பஸ் நிறுத்தத்தில் அதிகக் கூட்டம் இல்லை. யவனிகா அலுவலகத்திலிருந்து வீடு செல்ல
பஸ்ஸுக்கு காத்திருக்கிறாள். நான், அவளுக்கு மிக அருகில் நிற்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி, பஸ் வரும் முன் ஒரு சின்ன அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டால் என்ன? என்றொரு
யோசனை தோன்றியது.
“போத்தனூர் பஸ் போய்விட்டதா இல்லை இனிமேல்தான்
வருமா” என்று யதார்த்தமாகக் கேட்கலாம்.
அதையே சாக்காக வைத்து, அவளும் போத்தனூர்தான் போகிறாளா? எனக்கேட்டு நானும் போத்தனூர்
தான் போகிறேன் எனக்கூறி ஒரு சம்பாஷனையை வளர்த்து பரஸ்பர பரிச்சியத்தை ஏற்படுத்திக்
கொண்டால் என்ன?
- எனத்தோற்றிய யோசனை, ஒரு சிறந்த யோசனையாகத் தோன்றவே, அதைச்
செயல்படுத்தும் பொருட்டு அவளை அழைத்திட ஆயத்தமானேன்.
"எக்ஸ்க்யூஸ் மீ.....!" என்று நான் அழைத்த
குரல் கேட்டு திரும்பியவளின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. கண்கள் விரிய பிரம்மிப்புடன்,
"ஏய் கவி... என்னடி இந்தப்பக்கம்? பக்கி!
பாத்து எத்தனை நாள் ஆச்சு? எங்கடி இருக்கே இப்ப???"
-- என்றெல்லாம் அவள் கேட்க நான் அதிர்ச்சி கொண்டு குழம்பி
நின்றேன்.

எங்கிருந்துதான் வந்தாள் எனத்தெரியவில்லை. ‘கவி’ எனும் அந்தப்பெண்ணைப் பார்த்ததும்,
யவனிகா, மகிழ்ச்சியோடு அந்தப் பெண்ணருகே சென்று ஆனந்தமாக அளவளாவத் துவங்கிவிட்டாள்.
இதற்குள்ளாக பஸ்ஸும் வந்துவிட, அவளிடம் போய் ‘பஸ் போயிட்டதா?’ எனக் கேட்டு ஒரு சம்பாஷனையை
வளர்க்க நான் போட்டிருந்த திட்டம் ‘புஸ்’ ஆனது.
பின்பு ஒரு முறை,
நிறைய தைரியத்தோடும், துணிச்சலோடும், ‘இன்று இரண்டில் ஒன்று பார்த்திடவேண்டியதுதான்’,
‘அவளோடு பேசிடவேண்டியதுதான்’ எனும் அதி தீவிரத்தோடும் அவள் அலுவலகம் போகும் பேருந்தில்
நானும் பயணித்துக் கொண்டிருந்தேன். அலுவலக நிறுத்தம் நெருங்குகையில், அவள் இருக்கையிலிருந்து
எழுந்து படியருகே வந்து இறங்கத்தயாராக நிற்கிறாள். நானும், எழுந்து அந்தப் படியருகே
சென்றேன். அவளின் அருகே, மிக அருகே நிற்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்தினை நான் பாழாக்கப்போவதில்லை என்று எனக்கே தோன்ற,
"ஹலோ?" என்றேன் மென்மையாக அவளைப் பார்த்து.
அதே வேளையில், “ஹலோ!" என்று
வன்மையான குரலொன்று சத்தமாக என்னை அழைக்க, அந்தப் பேரிரிச்சலில் நான் யவனிகாவை விளித்தது
சுத்தமாக அவளுக்குக் கேட்காமலேயே போய்விட்டது.
என்னை அழைத்தது யார் என்று அறிந்துகொள்ள குரல் வந்த திசை பார்த்தேன்.
"ஹலோ? அண்ணா! என்னங்ணா இந்தப்பக்கம்?
இதென்னங்க உடம்பு ரொம்ப எளச்சாப்ல தெரியுது? சௌக்கியங்களா?" என்றெல்லாம், அடுக்கடுக்காய் கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே,
என்னருகே வந்தான் நான் அறியாத ஆனால் என்னை அறியும் எவனோ ஒருவன். கேள்விகளை கேட்கிறானே
தவிர அக்கேள்விகளுக்கு என் பதிலைப்பெறும் அக்கறை ஏதும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அவனே தொடர்ந்து,
"எங்கீங்ணா வேலை பாக்கறீங்க?" எனக்கேட்டான். இந்தக்கேள்விக்கும் அவன் பதில் எதிர்பார்க்கவில்லை
என்பது எனக்கு பதில்தர அவகாசம் தராமல் அவனே பேச்சினைத் தொடர்வதிலிருந்து தெரிகின்றது.
"என்னிய நியாபகத்துக்கு வரமாட்டீங்குது
இல்லீங்களா? டூசன் சென்ட்டருக்கு வருவீங்கல்லோ? மறந்த்டீங்க பாத்தீங்களா? மாஸ்டர் எப்படீங்க
இருக்காரு? பாத்தா கேட்டதா சொல்லுங்க…! என்றெல்லாம் ஓயாது பேசி, அவனை
என் ஞாபகத்திற்கு கொண்டுவர முயன்று, அது முடியாமல் தோற்றாலும் துவளாமல், அயற்சியும்
அடையாமல் பேச்சினைத் தொடர்கிறான்.
யவனிகா உட்பட அந்த நிறுத்தத்தில் இறங்குபவர்கள் எல்லோரும் இறங்கி, ஏற வேண்டியவர்களும்
எல்லோரும் ஏறியபிறகு, பஸ் புறப்படுகையில், "இங்கீயா
எறங்கறீங்க?" எனக் கேட்கிறான் பாவிப்பயல். யவனிகா இறங்கிச் சென்றுவிட்டிருக்க,
இனி இங்கு இறங்கியும் பயனில்லையாதலால், ”இல்லை"
எனத் தலையாட்டினேன். "சரி அப்ப பாக்கலாங்ணா!
நான் இங்கதான் எறங்கோணும்…" எனக்கூறி ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கி
மறைந்தான் அந்தக் கேள்வியின் நாயகன்.
ஏன் வந்தான், எதற்கு அத்தனை கேள்வி கேட்டான், அதில் என்ன லாபம் கண்டான் என்பதெல்லாம்
அவனுக்கே வெளிச்சம். எனக்கென்று இதுபோன்ற தடைகள் எங்கிருந்துதான் வண்டி கட்டிக்கொண்டு
என்னைத்தேடி வருகிறதோ தெரியவில்லை.
இப்படியெல்லாம் எதிர்பாராத தடைகள் வந்து என் முயற்சிகளைத் தடுக்க, எடுத்த காரியத்தில்
முன்னேற்றம் சற்றும் இல்லாமல் காலம் மட்டும் கடந்து போய்க்கொண்டிருக்க, ஒரு நாள், என்
உத்வேகத்தை முற்றிலும் குலைக்கும் விதம் என் அகமனமே என்னை அசிங்கப்படுத்தியது…,
காலையில் சவரம் செய்கையில், கத்திரிக்கோலால் மீசையை கவனமாக செதுக்கிக்கொண்டிருந்த
வேளையில், சலிப்போடு என் அகமனம், “ஒரு பொண்ணுகிட்ட தைரியமா போய்ப் பேசிட சாமர்த்தியம்
இல்லை, நீயெல்லாம் ஒரு ஆண்பிள்ளை.., உனக்கெல்லாம் ஒரு மீசை.., அது கெட்ட கேட்டிற்கு
அதை அழகு வேறு படுத்தணுமா?“ என்று கேட்டு என்னை அவமானப்படுத்தியது.
சவரக் கண்ணாடி பிரதிபலிக்கும்
என் பிம்பத்தை சோகமாகப் பார்த்தேன். என் பிம்பமும் சோர்வுற்றுதான் இருந்தது. வழக்கமான
உற்சாகம் தென்படவில்லை. முகத்தில் வெளிச்சமும் இல்லை.
நானும் என் பிம்பமும் சற்று
நேரம் தனியாக மனம்விட்டு பேசினோம். யவனிகாவை என் தோழியாக்கும் என் ஆர்வத்தை அலசினோம்.
அதற்கான முயற்சியில் என் சாமர்த்தியம், சாதுர்யம் குறித்தெல்லாம் வெளிப்படையாக ஆராய்ந்தோம்.
இறுதியில், முழு மனதாக என்னால் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. யவனிகா அல்ல, எந்தப் பெண்ணோடும்
தோழமை உண்டாக்குதல் என்பது என்னால் இயலாத காரியம் என்பதே அது.
ஆதலால், யவனிகாவை தோழியாக்கும்
முயற்சியை கைவிடத் தீர்மானித்தேன். என் முயற்சி தோல்வியடைந்ததை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்.
இருந்தாலும் முழுவதும் பக்குவப்படாத
மனம் பாருங்கள், ஏமாற்றமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து என்னைத்தாக்க, எனக்குள் வேதனை
வெடித்தது, மனம் நொந்தது, கோபம் வந்தது. என் தன்மானத்தை நானே உரசிப்பார்த்துவிட்டதால்
ரோஷமும் பொத்துக்கொண்டு வந்திட, வந்த கோவத்தில், அது தந்த வேகத்தில், ஆக்ரோஷமாக சவரக்கத்தி
எடுத்தேன்…,
மீசையை மழித்தேன்!
யவனிகாவை என் தோழியாக்கும்
முயற்சி தோல்வி அடைந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று, என் தோற்றத்திற்கு அருமை சேர்க்க,
என் ஆண்மைக்குப் பெருமை சேர்க்க, என் முகத்திற்கு மெருகு சேர்க்க, ஆசை ஆசையாக நான்
வளர்த்திருந்த சொற்ப மீசையை மழித்து..., ஆண்மகன் என்பதன் பெருமைக்குரிய அடையாளத்தை
இழந்து…,
‘மொழுக்’கென்றானேன்.
~~~ 0 ~~~
'நட்பு என்பது தானாக ஏற்படவேண்டும். அதை நாமாக உண்டாக்க நினைக்கலாயின்
மீசை இழக்க நேரிடும்' எனும் அரிய பாடத்தை என் அனுபவத்திலிருந்து
கற்றுக்கொண்டதன் விளைவாக, யவனிகாவை என் தோழியாக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத்
தீர்மானித்தேன்.
புரட்டப்படாமல் இருக்கும்
லைப்ரரி தடிமன் புத்தகங்களை வாபஸ் கொடுத்துவிட்டு இனிமேல் உருப்படியாக நேரத்தை செலவிட
வேண்டும் என்று முடிவு செய்து லைப்ரரிக்குப் புறப்பட்டேன். யவனிகா ஆபீஸ் போகும் நேரத்தில்
புறப்படவேண்டும் எனும் அவசியம் இனி இல்லாத காரணத்தால் ஆபீஸ் நேர நெரிசலைத் தவிர்க்கும்
விதமாகத் தாமதமாகப் புறப்பட்டேன்.
நான் சென்றுகொண்டிருந்த பேருந்து,
ஒப்பனக்கார வீதி பைசன் நிறுத்தத்தை அடைந்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியாதவிதம்
அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்த நிறுத்தத்தில் நான் சென்றுகொண்டிருந்த அதே பேருந்தில்
ஏறி அமர்கிறாள் யவனிகா!
அவளைப் பார்த்ததும் பன்மடங்காகத்
துடிக்கிறது இதயம். ஆனால், அதை அடக்கு அடக்கு என்கிறது மீசை இழந்ததால் நான் கொண்ட வாட்டத்தைக்
கூட்டி, அவள் நட்பினை நாடுவதில் நாட்டத்தைக் குறைத்திருந்த என் மனது. ஆனாலும் அடங்கவில்லை
இதயத்தின் வேகத்துடிப்பு!
யவனிகா இறங்கும் நிறுத்தத்தில்தானே
லைப்ரரிக்குப் போக நானும் இறங்கியாகவேண்டும். அதைத் தவிர்த்து வேறு எங்கேனும் இறங்கிவிடலாமா
என்றெல்லாம் சிந்தித்தாலும், ‘அது எதற்கு? அதுதான்
அவளைத் தோழியாக்கும் அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்றே! பிறகெதற்கு இப்படியெல்லாம்
யோசித்து சஞ்சலப் படவேண்டும்? அவள் மற்றவர்களைப்போல ஒரு சக யாத்திரிகை அவ்வளவே! நான்
இறங்கவேண்டிய இடத்தில் அவளும் இறங்கினால் எனக்கென்ன போச்சு?’’ என்றெல்லாம் எனக்கு
நானே உறுதி கூறிக்கொண்டேன்.
அந்த நிறுத்தத்தில் அவள்
இறங்க, அவள் பின்னே நானும் இறங்கி அலுவலகம் நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவளைப் பின்தொடர்ந்து
நடக்கலானேன். அவளைப் பின்தொடர்வது அப்படியொன்றும் சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஏனென்றால்,
அடி மேல் அடி வைத்து அத்தனை மெதுவாக நடக்கிறாள் அவள். நானே ஆமை வேகத்தில்தான் நகர்கிறேன்,
அவளோ நத்தை வேகத்தில் ஊர்ந்துசெல்கிறாள். இதில் எப்படி அவளைப் பின்தொடர்வது? அவளைக்
கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதுபோன்ற சூழ்நிலை.
இன்று பரபரப்பில்லை. பேசுவாளோ?
பேச இயலுமோ? என்றெல்லாம் எதிர்பார்க்கும் அவசியமும் அறவே இல்லை. “அவளைக் கடந்து உன் பாதையில் நீ முன்னேறிச் செல்”,
என்று மனம் கட்டளை இட, நானும் அவ்வாறே யவனிகாவைக் கடந்து முன்னேறிக்கொண்டிருந்த அந்த
வேளையில், அவள் தற்செயலாக என்பக்கமாக முகம் திருப்ப, திருப்பியதால் என்னைப் பார்க்க,
அதே க்ஷணத்தில், என்னை பார்த்த அவளை நானும் பார்க்க…,
விழிகளில் விழுந்தன விழிகள்.
அதை உணர்ந்ததும் வேறு வழியின்றி, அழகாய் மலர்ந்தன இதழ்கள்!
'அட, இவனை நான் அறிவேன்!'
எனும் பரிச்சியத்தை அவளின் முகம் பிரதிபலிக்க, அதை அடிபிழறாமல் என் அறிவு மொழிபெயர்க்க,
ஒரு பரிச்சிய புன்னகையை நானும் வீசி,
"ஹலோ!" – என்றேன் அவளைப் பார்த்து.
"ஹலோ!" – என்கிறாள் அவளும் பார்த்து.
அடடே... இன்றைக்கு தடங்கல்
ஏதும் இல்லையே. பதில் தந்த அவள் குரலிலும் தயக்கம் ஏதும் இல்லையே. உற்சாகமானேன். மீசையை
இழந்தது இதற்காகத்தானோ? அது இதற்கான காணிக்கையோ? காணிக்கை செலுத்தாத காரணத்தினால் தான்
இந்தக்காரியம் இதுவரையில் எனக்குக் கை கூடாது போனதோ?
அசுர வேகத்தில், நான் எடுத்திருந்த
தீர்மானங்களில் பல திருத்தங்களைக் கொண்டுவந்தேன். எடுத்திருந்த சில முடிவுகளை தடாலடியாக
மாற்றிக்கொண்டேன். இதோ அவளோடு பேசிட ஒரு சந்தர்ப்பம்
அமைகிறது. என் முயற்சியை மீண்டும் தொடர அந்நொடியில்
தீர்மானித்தேன். மீசை இழப்பதற்கு முன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன் என் கள்ளத்தனத்தை..!
"நீங்க போத்தனூரா?" என்று போலியாய் ஒரு சந்தேக தொணியை குரலில் கலந்து கேட்டேன்.
"ஆமா!" என்றவள் பதில் சொன்னாள். என் சந்தேக
தொணி போலி என்பதை அவள் உணரவில்லை.
"அதானே! நான் உங்களை அங்கே பார்த்ததுபோல் ஒரு ஞாபகம்.
அதுதான் கேட்டேன்!" என்று நான் சொன்னதற்கு,
"நானும் உங்களை பார்த்திருக்கிறேன்!" என்கிறாள் அவள்.
"அப்படியா? நான் கவனிச்சதே இல்லையே!" -- என்று செயற்கையான
ஆச்சரியத்தோடு எனக்கு நினைவில்லாததுபோல் நடித்தேன். அதற்கவள்…,
“கவனிச்சிருக்கீங்க ஆனா மறந்திட்டீங்கன்னு நினைக்கறேன்.
ஒரு தடவ கோயில்ல கூட பாத்திருக்கறோம்…” என்கிறாள்.
அடடே! அன்று கோவிலில் பார்த்ததை
ஞாபகம் வைத்திருக்கிறாளே என்று மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கினாலும் அதை வெளிக்காட்டாமல்,
“கோயில்ல பாத்திருக்கோமா? சுத்தமா எனக்கு ஞாபகமே
இல்லையே..” என்று கொஞ்சம் அதிகமாகவே நடித்தேன்.
பாவம் அவள். நான் நடிப்பது
அவளுக்குத் தெரியாததாகையால் எனக்கு அந்த கோவில் சந்திப்பு உண்மையில் மறந்துவிட்டது
என்று நினைத்து அவஸ்தையுற்றாள். அந்த சந்திப்பினை என் நினைவுக்குக் கொண்டுவரும் பொருட்டு, “ஆமா பாத்தோம்! கோயில் மண்டபத்துல… அன்னைக்கு
கூட நீங்க என்னை வழி மறிச்சீங்க!" என்றாள்.
"வழி மறிச்சேனா? அதும் கோவில்லையா? என்னங்க இப்படிச்
சொல்றீங்க?"
-- என்று நான் முகத்தை பரிதாபமாக
வைத்துக்கொண்டு கேட்க…,
"இல்லே! வழி மறிச்சீங்கன்னா... நான் அப்படிச் சொல்லலே….
நீங்க குறுக்க வந்தீங்க.. குறுக்கேன்னா…. என் எதிரே நின்னீங்க....!"
என்றெல்லாம் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லத்தெரியாமல் அல்லாடுகிறாள். நானோ பெருத்த
அவமானத்திற்குள்ளானது போன்று போலியாய் முகபாவம் காட்ட, அதைக்கண்டு பரிதவித்தவள்…,
"ஆண்டவா... எப்படிச் சொல்றதுன்னு தெரியலையே?" என்று பதட்டம் கொள்கிறாள். அதைப்பார்த்து நான்,
"சரி விடுங்க, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது!" என்றேன். அதைக்கேட்டவள்
பதட்டம் குறைத்தாள். அவள் சொல்லவந்ததை நான் சரியாகப் புரிந்து கொண்டதாக நினைத்து நிம்மதிப்
பெருமூச்சு விட்டு, “தேங்ஸுங்க” என்கிறாள்.
ஆனால் நானோ,
"அதாவது என்னை நீங்க, முரடன், காலிப்பயல், கோவில்ல
உங்களை வழிமறிச்ச ரௌடி அப்படீன்னெல்லாம் சொல்றீங்க, அப்படித்தானே?" எனக்கேட்டேன் விடாப்பிடியாக.
அவள் என்ன சொல்வதென்றறியாது திண்டாடுகிறாள்.
இந்த சம்பாஷனை சீக்கிரத்தில்
முடிந்திடக்கூடாது என்பது என் அவசியம் அல்லவா? ஆதலால், எப்பாடு பட்டாவது இதை வளர்த்தியே
ஆகவேண்டும் எனும் முடிவோடு நானே தொடர்ந்து,
"என்னங்க நீங்க? ஏதோ நம்ம ஊர் பொண்ணாச்சேன்னு பேச்சுக்கொடுத்ததுக்கு
இப்படியெல்லாம் பழி சொல்லிட்டீங்க… சரி விடுங்க! இவ்வளோ சொல்லிட்டீங்க, உங்க பேர் என்ன?
அதைச் சொல்லுங்க!" என்று ஏதோ அவள் என்னை அவமதித்ததற்கு பிராயசித்தம் கேட்பதுபோல
கேட்கிறேன்.
"யவனிகா!" -- என்று அவளும் சிரத்தையாய் பெயர் சொல்கிறாள்.
"யவனிகா!” என ஒருமுறை அவள் பெயரை எனக்குள் சொல்லிக்கொண்டு, இருவினாடிகள் ஏதோ யோசனை செய்வதைப்போல
மௌனத்தில் ஆழ்ந்துவிட்டு, "நல்ல பெயர்!”
என்றேன்.
'தேங்க்ஸ்' என்றாள்.
“யவனிகான்னா என்ன அர்த்தம்?" கேட்டேன்!
"அர்த்தமெல்லாம் யாருக்குங்க தெரியும்? இப்போதைக்கு
என் பேரு அப்படீங்கறதுதான் அதுக்கு இருக்கும் ஒரே அர்த்தம்" என்று அவள் சொன்னதைக்கேட்டு சிரித்த நான்,
"யவனிகான்னா திரைன்னு அர்த்தம்னு நினைக்கறேன்." என்றேன்.
"அட பரவாயில்லையே, பேருக்கு அர்த்தமெல்லாம் தெரிஞ்சு
வச்சிருக்கீங்களே! எப்படீங்க?" எனக்கேட்டாள்.
கஷ்ட்டப்பட்டு அரை நாள் செலவழித்து
லைப்ரரியில் பல புத்தகங்களைப் புரட்டி உங்களை இம்ப்ரெஸ் பண்றதுக்காக தேடிக் கண்டுபிடித்தேன்
என்றா சொல்லமுடியும்? "எப்பவோ எங்கேயோ
படிச்சதாகவோ கேள்விப்பட்டதாகவோ ஒரு சின்ன ஞாபகம். இதுதான் சரியான அர்த்தமான்னு தெரியல,
ஆனா திரைன்னு ஒரு ஞாபகம்" என்றேன்.
"நீங்க சொல்லித்தான் என் பெயருக்கு ஒரு அர்த்தம் இருக்குங்கறதே
எனக்குத் தெரியுது. சரியோ தப்போ ஏதோ ஒரு அர்த்தம் இருக்குதே, அதுவே சந்தோஷமான விஷயம்தான்.
" எனக்கூறிச் சிரிக்கிறாள்.
ஆனால், இம்ப்ரெஸ் ஆனாளா எனத்தெரியவில்லை.
"எங்கே படிக்கறீங்க?"
-- அவள் படிக்கவில்லை வேலைக்குப் போகிறாள் என்றும் தெரியும்.
ஆனாலும் அது எனக்குத் தெரியும் என்று நான் காட்டிக் கொள்ளக் கூடாதல்லவா? உங்களைப்பற்றி
எல்லா விவரமும் தெரியும். உங்களோடு பேசத்தான் பல நாட்களாக லோ லோ என்று அலைந்து கொண்டிருக்கிறேன்,
அதற்காகத்தான் என் மீசையையும் மழித்தேன் என்றா சொல்ல முடியும்? இயற்கையாக அமைவதைப்போல
செயற்க்கையாக ஒரு சந்தர்ப்பத்தை நாமே உண்டாக்கும்போது உதிர்க்கும் வசனங்களில் அதிகக்
கவனம் வேண்டுமா இல்லையா?
"படிக்கலைங்க. வேலைக்குப் போறேன்! கரஸ்ல B.Com பண்ணலாம்னு
இருக்கேன்." என்று என் கேள்விக்கு அவள் பதில் உரைத்தாள்.
"ஏன் கரஸ்ல, ரெகுலர் காலேஜ்ல சேர்ந்து படிக்க வேண்டியதுதானே?
அதுக்குள்ள சம்பாதிக்கனும்னு ஆசை வந்திடுச்சா?" என்று நான் கேட்டதற்கு,
"ஆசை இல்லேங்க... அவசியம் வந்திடுச்சு!"
-- என்று அவள் கூறிய பதில்
ஊசி முனை போல என் இதயத்தைக் குத்தியது. மனம் வருத்தம் கொண்டது. அவளும் இப்படிச் சொன்ன
மறு கனத்திலேயே இப்படியோர் பதிலைச் சொன்னதற்காக வருத்தம் கொள்வதை அவளின் முகபாவத்திலிருந்து
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இருவருக்கும் அது தர்மசங்கடமாகிப்போனது. நல்லவேளையாக
அதற்குள் நாங்கள் அவள் அலுவலகத்தை நெருங்கியிருக்க,
"இதுதான் என் ஆபீஸ்.. இங்கேதான் வேலை பார்க்கிறேன்." என்று அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தைக் காட்டித்தந்தாள்.
"ஓஹ்! அப்படியா?" என்று, என்னமோ அன்றுதான், அவள் சொன்னபிறகுதான், அவளின்
அலுவலகம் அது என்று தெரியவந்தவன் போல ஓர் பொய்யான ஆச்சரியக்குறியை உதிர்த்துவிட்டு.
"அப்போ சரி பாக்கலாங்க, நாளைக்கு சந்திக்கலாம்”
என்றேன்.
"நாளைக்கா? அப்போ தினமும் இந்தப்பக்கம் வருவீங்களா?" எனக்கேட்டு அவள் உண்மையான ஆச்சரியக்குறியை உதிர்த்திட்டாள்.
"தினமும் இல்லை ஆனால் அடிக்கடி வருவேன். இங்கே லைப்ரரி
இருக்குல்ல, அங்கே போய் படிக்கறது வழக்கம். எக்ஸாம்ஸ் வருது. இப்போ ஸ்டடி லீவ் விட்டிருக்காங்க.
லைப்ரரின்னா புக்ஸ் ரெபர் பண்ண வசதி... அதான்!"
-- என்றெல்லாம் வஞ்சகம் இல்லாமல் அள்ளிவிட்டேன்…. வழிசலோடு!
"நீங்க திருச்சிலதானே படிக்கறீங்க?” என்று திடீரென அவள் கேட்க, இது அவளுக்கு எப்படி தெரியவந்தது
என நான் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல், "ஆமா,
ஏன்?" என்றேன்.
"இல்லே! நீங்க திருச்சில படிக்கறீங்கன்னு தெரியும்.
கம்ப்யூட்டர் ரிலேட்டடா என்னமோதானே படிக்கறீங்க?”
“ஆமா, கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ்! ஆனா உங்களுக்கு எப்படி
இதெல்லாம் தெரியும்?"
"உங்க அம்மா சொல்லியிருக்காங்க. எங்க அக்காகிட்டே அவங்க
அடிக்கடி பேசுவாங்க!" என்று அவள் சொன்னதைக்கேட்டு
‘கரெண்ட் அடித்த காக்காய்’ போல் நான் ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“ஓஹ்.. அப்படியா?” என்று மட்டும் கேட்டுக்கொண்டேன்!
“ஆனாலும் அசாத்தியம்தான்….! நான் ஏதோ இவள் என்னை அறிந்திருக்க
வாய்ப்பே இல்லை என்று எண்ணிக்கொண்டு, இவளோடு அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ள பல வியூகங்கள்
அமைத்து, பல தடைகளைச் சந்தித்து, கடைசியில் என் மீசையையும் இழந்து, படாத பாடு பட்டு,
ஒருவழியாக தைரியமாக இன்று ஓர் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டால்..., இவள் என்னைப்பற்றி
ஏற்கனவே அறிந்தும் தெரிந்தும் வைத்திருக்கிறாளே?”
-- என்றெல்லாம் மனதுக்குள்
நான் தீவிரமாக சிந்தித்து திகைத்துக்கொண்டிருக்கிறேன் என்பது முகத்தினில் தெரிந்திடக்கூடாதென்று
உணர்ச்சியில்லா முகம் வைத்து அவளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க, அதை கவனித்தவள்,
“என்னங்க… திடீர்னு அமைதியாயிட்டீங்க?”
எனக்கேட்டதும் சுதகரித்து, யோசனையிலிருந்து
மீண்டெழுந்து, நிலைமையை ஒருவாறு சமாளிக்க…,
"இல்ல, நான் இந்த லைப்ரரிய யூஸ் பண்ணிக்கலாம் இல்லையா? உங்களுக்கு
ஆட்சேபனை ஏதும் இல்லையே?" என்று கேட்டிட, அதைக்கேட்டு அவள்,
"எனக்கா? இதுல எனக்கு என்ன ஆட்சேபனை இருக்கமுடியும்? ஏன்
கேக்கறீங்க?" -
என்று புருவம் நெறித்தாள்.
"இல்ல, திருச்சியில தானே படிக்கறீங்கன்னு நீங்க கேட்ட விதத்த
பாத்தா.. நான் என்னமோ திருச்சியில
படிக்கறதுனால கோயம்பத்தூர் லைப்ரரிய உபயோகிக்கக் கூடதுன்னு சொல்றது போல இருந்தது..."
“சேச்சே! அப்படியெல்லாம் இல்லைங்க, அதெல்லாம் நீங்க தாராளமா யூஸ்
பண்ணிக்கலாம். அப்படியே யாராவது ஏதாவது கேட்டாங்கன்னா என் பேரைச் சொல்லுங்க...” என்று அவள் சொன்னதும்,
“அப்பத்தான் அவங்களுக்கு
நான் தான் அந்த ஆள்னு சரியா அடையாளம் தெரியும். உடனே அவங்க என்னை ஒரு மூலையிலே தள்ளிட்டுப்போயி
மாறுகால், மாறு கை வாங்கிட்டு உங்க காலடியிலே கொண்டுவந்து போடுவாங்க. இதுதான் உங்க
திட்டமா? அப்பத என்னடான்னா கோவில்ல வழி மறிச்சேன்னு
சொன்னீங்க…, இப்ப அதுக்கு பழிவாங்க ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா? எதுவா இருந்தாலும்
பேசி தீத்துக்கலாங்க… அடிப்படையா பாத்தா நான் ஒரு நல்ல பையன்…”
– என்றெல்லாம் நான் சொல்ல, அதைக் கேட்டு அடக்கமாட்டாது சிரிக்கிறாள் யவனிகா.
சிரித்தவாறே, “ஐயோ கடவுளே… தெரியாத்தனமா ‘வழிமறிச்சீங்க’ ன்னு ஒரு வார்த்தைய உபயோகப்
படுத்திட்டேன். அதுக்காக இப்ப நீங்கதான் என்னை பேச்சாலேயே மாறுகால் மாறுகை வாங்கிட்டு
இருக்கீங்க…”
-
என்று கூற, இருவரும் சிரித்தோம்.
அந்த சிரிப்பில் புதிதாய் பார்க்கிறோம் எனும்
இடைவெளி இருக்கவில்லை. முதல் முறை பேசுகிறோம் எனும் தயக்கமும் தென்படவில்லை. இந்த
சந்திப்பின் நினைவுகள், இந்த சந்திப்போடு முடிந்துவிடப் போவதில்லை என்பதையும்
உணர்த்தியது அந்தச் சிரிப்பு!
இன்று, ஒரு முறையேனும்
மீண்டும் அவள் இந்த சம்பாஷணைகளை யோசித்து மனதுக்குள் சிரிக்கக்கூடும் என்று உள்ளம்
உறுதிபடக் கூறியது.
விடைபெற்றுக்கொண்டேன்.
~~~ 0 ~~~
யவனிகாவை அதன் பிறகு பலமுறை சந்தித்தாலும் பரஸ்பரம் ஒரு பரிச்சியம் என்பதைத்தாண்டி நெருக்கமோ,
நட்போ ஏதும் உண்டாகிடவில்லை. ஆதலால், அவளோடான சந்திப்புகள் நாளடைவில் சத்திழக்கத் துவங்கியது.
சத்தில்லாத சந்திப்புகளில் சுவராஸ்யம் இருப்பதில்லை. சுவராஸ்யங்கள் குறைகிறதென்றால்
அதை நாம்தானே ஏதேனும் விதத்தில் சரிப்படுத்தவேண்டும்? சொல்லப்போனால், நம் வாழ்க்கையை
மகிழ்ச்சிகரமாக ஆக்கிக்கொள்ள வேண்டிய பொறுப்பு நமதுதானே?
சத்திழந்த சந்திப்புகள் சக்தியை
இழக்காதிருக்க சுவராஸ்யத்தைக் கூட்டிட என்ன செய்யலாம் என்று மண்டையை உருட்டிக்கொண்டிருந்த
நாட்களில் ஒரு நாள், சேரன் டவர்ஸில் அலைந்துகொண்டிருந்தேன்.
சேரன் டவர்ஸ்!
முதன்முதலாக கோவையில் எஸ்கலேட்டர்
பொருத்தப்பட்ட ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இது. எஸ்கலேட்டரில் நான்கைந்து முறை ஏறி இறங்குவதற்கென்றே
சிலர் அங்கு செல்வதுண்டு. அடியேனும் அக்கூட்டத்தில் ஒருவன்.
அன்று, சேரன் டவர்ஸில் வெறுமே
பொழுதைக் கழிக்க கடை கடையாக ஏறித்திரிந்து கொண்டிருக்க, ஒரு குறிப்பிட்ட கடைக்குள்
நுழைந்தபோது பளிச்சென்று ஒரு யோசனை என் மண்டைக்குள் பிரகாசித்தது. வெறும் பரிச்சியம்
எனும் அளவிலேயே நிலை கொண்டு நிற்கும் யவனிகாவோடான என் உறவில் சுவராஸ்யத்தைக் கூட்ட,
அதை அடுத்த கட்டத்திற்குள் இட்டுச்செல்ல இந்த யோசனை உதவும் எனத்தோன்றவே, அதைச் செயல்படுத்த
தக்க சமயம் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
அன்று,
என் பிறந்தநாள். ஒரு மதிய
வேளை, சாப்பாட்டு நேரம். திடுதிப்பென யவனிகாவின் அலுவலகத்துக்குள் நுழைந்து அவள் எதிரே
நின்றேன். என்னை அங்கே சற்றும் எதிர்பார்க்காதவள் அதிர்ச்சிக்குள்ளானாள். அனிச்சைசெயலாய்
இருக்கையை விட்டு எழுந்து நிற்கிறாள்.
"என்ன இங்கே?" – பதட்டத்துடன் கேட்கிறாள்.
"உங்களைப் பார்க்கத்தான்"
"என்ன ஆச்சு? என்ன விஷயம்?"
"இன்னைக்கு என் பிறந்தநாள். சாயந்திரம் நீங்க வீட்டுக்குப்
போகும்போது உங்களை பஸ்ஸ்டாப்பில் சந்திப்பேன். காபியா? இல்லை ஐஸ்கிரீமான்னு முடிவு
செஞ்சு வையுங்க! இதைச் சொல்லத்தான் வந்தேன்" -- என்றேன்.
"ஐயோ இல்லேங்க... அதெல்லாம் வேண்டாம்!" -- நான் ஊகித்தவாறே மறுத்தாள்.
"வேணுமா வேணாமான்னு நான் கேக்கலையே? ஐஸ்கிரீமா, காபியான்னு
மட்டும் முடிவு பண்ணி சொன்னா போதும்"
"என்னங்க இது? அதெல்லாம் முடியாதுங்க!" - பதட்டத்தோடே பதில் சொல்கிறாள்.
"முடியுமா? முடியாதான்னு முடிவு செய்ய வேண்டியது நான்...
நீங்க முடிவு செய்ய வேண்டியது காபியா இல்ல ஐஸ்கிரீமான்னு மட்டும் தான்" என்று கூறிவிட்டு அவள் அலுவலக அறையை விட்டு வெளியே வந்தேன்.
"ஐயோ ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..." -- எனக்கூறியவாறே அவளும் என் பின்னே வருகிறாள்.
"கொஞ்சம் என்ன கண்டிப்பா நிறையவே கேக்கறேன். சாயந்தரம்
முடிவு பண்ணி சொல்லுங்க!"
-- என்று கூறி அவள் பதிலுக்குக் காத்திராமல் அவளின் அலுவலகம் விட்டு வெளியேறினேன்.
யவனிகா, கையைப் பிசைந்துகொண்டே நின்றிருந்தாள்.
மாலை!
பஸ் ஸ்டாப்புக்கு வந்த யவனிகா
என்னருகே வந்து நின்றாள். அவள் முகத்தில் பதட்டம் தெரிகிறது.
"காபியா? ஐஸ்கிரீமா?" -- கேட்டேன்.
"ரெண்டும் கிடையாது. வீட்டுக்குப் போறேன்!" -- இப்படித்தான் சொல்லவேண்டும் என்று பலமுறை ஒத்திகை பார்த்தார்
போல பதில் சொல்கிறாள்.
"வீட்டுக்குத்தான் போகப்போறோம். அதுக்கு முன்ன காபியா,
இல்ல ஐஸ்கிரீமான்னுதான் கொஞ்சம் சொல்லுங்களேன்!"
"ஏன் இப்படி வம்பு பண்ணறீங்க? ப்ளீஸ், யாராவது பாத்தா
பிரச்சினையாகிடும்!"
"காபியா? ஐஸ்கிரீமா? ன்னு சொல்லுறதுல என்ன பிரச்சினை?
நீங்க சொல்லுங்க, என்ன பிரச்சினை வருதுன்னு நானும் பாக்கறேன்" -- என்றேன் விடாப்பிடியாக.
இதற்குள் பஸ் வந்துவிட, "சரி, பஸ் வருது இப்ப போகலாம், மத்ததை நாளைக்கு
பேசிக்கலாம்." என்று கூறி, அவள் பஸ் ஏறச்செல்ல, நான் நின்ற
இடத்திலேயே நகராமல் நின்றிருந்தேன். "நீங்க
வரலியா?" என்று அவள் கேட்டதற்கும் பதில் ஏதும் கூறாமல் நான் அவளைப்
பார்த்தவாறே நின்றிருக்க, எனக்கும் 4ம் நம்பர் பேருந்துக்கும் இடையே தவிப்போடு
நின்றவள், வேறு வழியின்றி பஸ்ஸில் ஏறாமல் மீண்டும் என்னருகே வந்து என்னைப்
பார்க்காமல், வேறெங்கோ பார்த்தபடி கோபத்தோடு நிற்கிறாள்.
நான் மீண்டும் அவளிடம், "காபியா? இல்ல ஐஸ்கிரீமா?"
என்று கேட்டதுதான் தாமதம்,
"காபியும் கிடையாது ஐஸ்கிரீமும் கிடையாது.
உங்க கூட தனியா எல்லாம் வரமுடியாது, இங்க பாருங்க, இப்படி என்னை வற்புறுத்தாதீங்க.
அடுத்த பஸ்ல நான் வீட்டுக்கு போகத்தான் போகிறேன்." என்கிறாள்.
“அப்ப, காபியா? ஐஸ்கிரீமா? ன்னு
சொல்லமாட்டீங்களா? “
"என்னங்க புரியாத மாதிரி கேக்கறீங்க? பாக்கும்போது
உங்க கூட பேசறேங்கறதுக்காக உங்க கூட காபி குடிக்க வந்திடுவேன்னு நீங்க எப்படி முடிவு
செய்யலாம். எனக்கு இதெல்லாம் பிடிக்காது. நீங்க ரொம்ப பிரெண்ட்லியா பேசறீங்கன்னுதான்
நானும் பேசறேன். நீங்க இப்படியெல்லாம் செஞ்சா அப்புறம் நான் பேசுறதை நிறுத்தவேண்டியிருக்கும்..."
-- என்றெல்லாம் அவள் பொறிந்து தள்ளிக்கொண்டிருந்தபோது. நான் வாங்கி வைத்திருந்த
இரண்டு வாழ்த்து அட்டைகளை அவள் முன் நீட்டினேன்.
ஒன்றில் நுரை ததும்ப காபி
நிறைந்திருக்கும் இரண்டு கோப்பைகளில் காபி நுரையில் சிரிக்கின்ற முகம் போன்று டிக்காஷனால்
வரையப்பட்டிருக்கும் படமும், மற்றொன்றில் ஒரு குழந்தை ஐஸ்கிரீம் குடிப்பதைப் போன்ற
படமும் பதித்த பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அது.
சேரன் டவர்ஸில் கிரீட்டிங்கார்டு
கடையில், இந்த கார்டுகள் கண்ணில் பட்டபோதுதான், இதை வைத்தே அவளிடம் ஒரு விளையாட்டு
செய்து சுவராஸ்யத்தை ஏற்படுத்தினால் என்ன எனும் யோசனை தோன்றியது. கிரீட்டிங் கார்டினை
பார்த்த யவனிகா வாயடைத்து நிற்கிறாள். என்னைப் பார்க்கிறாள். அவள் பார்வையில் வெறுமை.
நான் குரலில் கொஞ்சம் வருத்தத்தின் தொணி கலர்ந்து, அவளை பார்க்காமல், அந்த கார்டுகளை
மட்டும் பார்த்தவாறு பேசத்துவங்கினேன்..,
"என் பிறந்தநாளுக்கு எனக்கு கிரீட்டிங்கார்டு தரும்
அளவுக்கெல்லாம் நீங்க என்னை பிரெண்டா நினைச்சிருக்கீங்களான்னு தெரியல. ஆனா, உங்க கிட்டேயிருந்து
கிரீட்டிங்ஸ் எதிர்பார்க்கும் அளவுக்கு நான் உங்களை ஒரு நல்ல பிரெண்டா நினைச்சிருக்கேன்.
அதுதான் நானே எனக்கு பிடிச்ச ரெண்டு கார்டு வாங்கி வந்தேன்."
".........." -- அவள் ஏதும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருக்க,
நான் அந்த இரண்டு கார்டையும் அவள் கைகளில் திணித்து,
"உங்க கையெழுத்து மட்டும்தான் வேணும். காபியோ ஐஸ்கிரீமோ
எந்த கார்டு உங்களுக்குப் பிடிச்சிருக்கோ அதில உங்க கையெழுத்தைப் போட்டுத் தாங்க! இதை
நீங்களே எனக்காக வாங்கித்தந்ததா நான் நினைச்சுக்கறேன்." -- என்றேன்.
"சாரிங்க..." என்கிறாள்.
"பிறந்தநாளுக்கு சாரி சொல்லமாட்டாங்க... விஷ் பண்ணுவாங்க..."
"ப்ளீஸ் என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. நான் நீங்க
காபி சாப்பிட...."
"இல்லை பரவாயில்லேங்க... விடுங்க." -- என்று அவளை முழுதாகச் சொல்லவிடாமல் குறுக்கிட்டுக் கூறி
அங்கிருந்து புறப்பட்டேன்.
என்னை அழைத்தாள். நான் நிற்கவில்லை.
செயல்படுத்த நினைத்த யோசனையை அழகாக செயல்படுத்திய திருப்தியோடு, என்னை நானே புகழ்ந்துகொண்டு,
அவள் அழைப்பது காதில் விழாததுபோல் ரோட்டைக்கடந்து சென்றுவிட்டேன்.
சினிமா வசனம் போல, நான் உதிர்த்த
வசனங்களை யோசித்தால் எனக்கே சிரிப்புத்தான் வருகிறது. ஆனாலும் வேறு வழியில்லை. ஏனென்றால்,
ஏதேனும் விதத்தில் மனதில் ஒரு தாக்கம் ஏற்படவேண்டும் அப்போதுதான் நட்பு மலரும்.
யவனிகா, என்னுள் பல தாக்கங்ளை
ஏற்படுத்தியுள்ளாள். குடும்பத்திற்காக பொறுப்பேற்று உழைக்கத் துவங்கியதும், அக்காளின்
உடையை பகிர்ந்து அணிந்து கொள்வதும், இந்தக்காலத்து பெண்களிடம் அரிதாகிப்போன நாணம் கொண்டிருப்பதும்,
ஏன், நான் காபி அருந்தத் தனியே அழைக்கிறேன் என்று நினைத்து என் மீது அவள் சீறி விழுந்ததும்
கூட என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்கங்கள்தான் அவளை என் தோழியாக்கவேண்டும்
என்று என்னை உந்துகின்றது.
இப்படியோர் தாக்கத்தை நான்
அவளிடம் ஏற்படுத்த எனக்கு சந்தர்ப்பங்கள் அமையவில்லை. ஆயினும் அவள் நட்பு எனக்குத்
தேவை. ஆதலால், அவள் தோழமை எனக்குத் தேவை என்பதை அவளுக்கு உணர்த்த குறுக்குவழியில் இப்படியெல்லாம்
ஏதாவது செய்தால்தான் உண்டு.
இந்தச் சூழலில் ஒரு ‘பிரிவு’
வேண்டும். அது தாக்கத்திற்கு உரமிடும். மேலும் பரீட்சையும் நெருங்கி வருகிறது. ஆதலால்
யவனிகாவை சந்திப்பதற்கு தற்காலிகத் தடை போட்டுவிட்டு, தேர்வுக்கான தயாரெடுப்புகளில்
கவனத்தை திருப்பினேன். அவளை சந்திக்காமல், அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் பரீட்சை எழுத
கல்லூரிக்குச் சென்றுவிட்டேன்.
மீசையைத் தியாகம் செய்து உண்டாக்கிய
பரிச்சியத்தில் ஏதேனும் முன்னேற்றம் இருக்குமா? நான் எதிர்பார்க்கும் நட்பு அமையுமா?
என்பதற்கான முடிவுகள் தேர்வுக்குப் பின்தான் தெரியவரும்.
தற்போது பரீட்சை நேரம்!
~~~ 0 ~~~
தேர்வுகள் முடித்து, புதிதாய் வளர்த்திய மீசையோடும் யவனிகாவை
சந்திக்கும் ஆசையோடும் ஊர் வந்தேன்.
அவளை சந்திக்கச் சென்றேன்.
அவள் ஆபீஸ் விட்டு வரும் நேரம் பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றேன். அன்றைய அந்த நிகழ்ச்சிக்குப்
பிறகு, அதற்குப் பிறகான இடைவெளிக்குப் பிறகு, என்னை யவனிகா எப்படி எதிர்கொள்வாள்? அல்லது,
அவளை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்றொரு பதட்டமும் பரபரப்பும் தயக்கமும் என்னை
ஆட்கொண்டது.
அவள் வந்தாள். நான் அங்கே
நிற்பதைக்கண்டதும் ஆச்சரியத்தோடும் புன்முறுவல் பூத்தவாறும் என்னருகே வந்தாள். என்
போல அவளிடம் பதட்டம் இருக்கவில்லை. பரபரப்பும் இல்லை. அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் பரீட்சைக்கு
சென்றுவிட்டதால் ஒருவேளை கோபிப்பாளோ என எண்ணியிருந்தேன். அவளிடம் கோவம் இல்லை. அன்று
அவள் என்னிடம் கோபித்துக் கொண்டதை எண்ணி வெட்கமுறுவாளோ? என்று நினைத்திருந்தேன். அவளிடம்
வெட்கத்திற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. ஒருவேளை, அன்றைய நிகழ்ச்சிகளை மனதில் வைத்து
மொத்தமாக என்னைத் தவிர்த்துப்போவாளோ என்று கூட எதிர்பார்த்திருந்தேன். அவள் என்னைத்
தவிர்க்கவில்லை.
இயல்பாக, வெகு இயல்பாக முன்
போலவே இப்போதும் இருக்கிறாள். நலம் விசாரித்தாள். பரீட்சைகள் எப்படி எழுதியிருக்கிறேன்
என்று கேட்டறிந்துகொண்டாள். அதன் பிறகு ஏதும் பேசவில்லை. எனக்கும் என்ன பேசுவதென்று
தெரியவில்லை.
யாதொன்றும் பேசாது அவள் என்னருகே
நின்றிருந்தாலும் அவ்வப்போது என்னை ஓரக்கண்ணால் பார்க்கிறாள். மனதுக்குள் எதையோ யோசனை
செய்கிறாள். எங்களின் கடந்த சந்திப்பின் நிகழ்ச்சிகளைத்தான் நினைத்துப்பார்க்கிறாளோ…?
அவள் உதடுகளில் பரவி விரிகிறது ஒரு மந்தகாசப் புன்னகை! ஆனாலும், அவள் புன்னகைப்பதை
நான் பார்த்திடாதிருக்க உதடுகளை பற்களால் கடித்துப் பிடித்துக்கொண்டு, வேறு திசை நோக்கி
முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்கிறாள் என்றாலும், அவள் உதட்டில் புன்னகை மறைந்தபாடில்லை…!
“என்ன சிரிப்பு?” என்றேன் அவளைப் பார்த்து. அதற்கவள், “ஒன்னுமில்லையே…”
என்று பதில் தருகிறாள் சிரித்துக்கொண்டே….,
"’சிரிக்கலைங்கறதையே சிரிச்சிட்டுதான் சொல்லறீங்க….
என்ன விஷயம் சொல்லுங்க…!" என்று நான் கேட்டதற்கு,
"நீங்களும் தான் சிரிக்கறீங்க…!" என்கிறாள் அவள் என்னைப் பார்த்து.
“நீங்க சிரிப்பை அடக்க படும் பாட்டைப் பாத்துதான் எனக்கு
சிரிப்பு வருது. நீங்கதான் எதையோ நினச்சு நினச்சு அடக்கமுடியாம சிரிச்சிட்டிருக்கீங்க…
அது என்னன்னு சொல்லுங்க….!" என்று நான் சொன்னதும், ஓரிரு வினாடி ஏதும் பேசாமல்
தயங்கி நின்றவள், சட்டென என்னப்பார்த்து..,
"உங்களுக்கு காபி பிடிக்குமா இல்ல ஐஸ்கிரீம் பிடிக்குமா?" – என்று கேட்கிறாள்!
நான் பதிலேதும் சொல்லாமல்
அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"இல்ல, ரெண்டுமே பிடிக்கும்னு தெரியும். ஆனா எது அதிகமா
பிடிக்கும்... காபியா இல்ல ஐஸ்கிரீமா? அது தெரிஞ்சா அந்த கிரீட்டிங்கார்டுல கையெழுத்துப்போட
வசதியா இருக்கும் அதுக்காகத்தான் கேக்கறேன்…"
-- என்று கேலி செய்யும் தொணியில் அவள் கேட்க, இவள் என்னை கேலி பேசுவாள் என்று
நான் எதிர்பார்த்திராததால் இவளின் கிண்டல் பேச்சினை சமாளிக்கத்தகுந்த பதில் சொல்ல இயலாமல்
நான் தவித்துக்கொண்டிருந்தேன். அவளோ என்னை விடுவதாக இல்லை.
"காபியா.. ஐஸ்கிரீமா?" என்று மீண்டும் கேட்டவள் என் முகத்தையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கிறாள்.
"என்ன பதில் சொல்ல மாட்டேங்கறீங்க?" என்றவளிடம்,
"கிண்டலா?" எனக்கேட்டேன்….!
"இல்லை.. சீரியஸாதான் கேக்கறேன். சொல்லுங்க காபியா
ஐஸ்கிரீமா?" என்கிறாள் மீண்டும்.
"வேணாம்... வீணா வம்பை வளக்காதீங்க!" என்று நான் சொல்லவும், நான் அதைச் சொல்லி முடிப்பதற்குள்..,
"அப்ப நீங்க வளக்கலாமா வம்பை?" எனக்கேட்கிறாள் என்னிடம்.
"நான் எங்கே வம்பு வளத்தேன்?"
"பின்னே? அன்னைக்குச் செய்தது வம்பில்லையா? இன்னைக்கு
எனக்குப் பிறந்தநாள்… காபியா? ஐஸ்கிரீமா? முடிவு பண்ணுன்னு சொன்னா, யாரா இருந்தாலும்
என்ன நினைப்பாங்க? தனியா டைம் ஸ்பெண்ட் பண்ண காபியோ ஐஸ்கிரீமோ சாப்பிடக் கூப்பிறதாத்தானே
நினைப்பாங்க. நான் என்ன கனவா கண்டேன் காபி, ஐஸ்கிரீம் போட்டோ போட்ட கிரீட்டிங் கார்டு
பத்தி பேசறீங்கன்னு? அதும், கிரீட்டிங் கார்டு பத்தி ஒன்னுமே சொல்லாம வேணுமின்னிக்கே
என்னை வம்பிழுக்கனும்னு டபுள் மீனிங்ல பேசினீங்க..!"
"டபுள் மீனிங்னா... ஐஸ்கிரீம் பார்லர் போலாம், காபி
சாப்பிடப் போலம் அப்படீங்கற மீனிங்லயே பேசினீங்கன்னு சொல்ல வந்தேன். கிரீட்டிங் கார்டு
பத்திதான் சொல்றீங்கன்னு முதல்லயே சொல்றதுக்கு என்ன?"
-- என்று அவள் சொன்னது கேட்டு நான் சிரிக்க, நான் சிரிப்பதைக் கண்டதும் அவள்,
"இதைத்தான்… இதைத்தான் சொன்னேன் வம்பிழுத்தீங்கன்னு.
உங்க சிரிப்பே சொல்லுது நீங்க வேணுமின்னே வம்பிழுத்திருக்கீங்கன்னு….! இதுல என் மேலே
பழி வேற... கிரீட்டிங் தரும் அளவுக்கு பிரெண்டா நினைக்கலை அது இதுன்னு... என்கிட்டே
பெர்த்டேன்னு சொன்னதே அன்னைக்கு மதியம்தான், அதுவும் சாயந்திரம் காபியா ஐஸ்கிரீமான்னு
முடிவு பண்ணுங்கன்னு மொட்டையா சொல்லி ஒரு குழப்பத்தையும் உண்டாக்கிட்டீங்க… அப்புறம்
எப்படி என்மேலே நீங்க பழி சொல்ல முடியும்?"
என்றெல்லாம் ஒரே மூச்சில்
அவள் சொல்லக்கேட்டு, "சரி சரி விடுங்க..."
என்று நான் சொன்னதையும் பொருட்டாக்காமல் அவளே தொடர்ந்து…,
"அதென்னங்க பிறந்தநாளுக்கு அப்படி ஒரு கார்டு? வேற
கார்டே கிடைக்கலியா? டீ, காபி, ஐஸ்கிரீம் நு திண்பண்டம் போட்டோ போட்ட கிரீட்டிங்கா
பிறந்தநாளைக்கு வாங்குவாங்க? ஏன்? ரொம்ப பசியில இருக்கும்போது போய் வாங்கிட்டீங்களா..." என்றெல்லாம் கூறி கேலி செய்து என்னை அவள் அன்றைக்கு ஒருவழி
ஆக்கிவிட்டாள்.
இதற்குப் பிறகான சந்திப்புகளில்,
யவனிகா பேசும் விதத்தில் ஒரு நெருக்கத்தை என்னால் உணர முடிந்தது. ஒருவர் மீது ஒருவருக்குள்ள
நம்பிக்கை, எதையும் சுட்டிக்காட்டும் சுதந்திரம், எதையும் தட்டிக்கேட்கும் உரிமை, என
இவை யாவும் அவள் பழகும் விதத்தில் தென்பட்டது. பழகப் பழக அவளைப்பற்றி நானும் அதிகம்
அறிந்துகொண்டேன். அவளைப்பற்றி அதிகம் அறிய அறிய அவள் மீதான என் மதிப்பும் பல்கிப் பெருகியது.
அவள் ஒரு சராசரி பெண் அல்ல.
பெண்களிடம் இயல்பாக இருக்கும் சில மனோபாவங்கள் அவளிடம் இருக்கவில்லை. அவளின் நிலை குறித்து
குறையேதும் அவள் கொண்டிருக்கவில்லை. வீணான கவலைகளோ தேவையில்லாத கண்ணீரோ அறவே இல்லை.
அவசியம் இல்லாத விஷயங்களுக்காக அவள் தன்னை அலட்டிக்கொள்வதே இல்லை.
வாழ்வை அந்த நொடியில், அந்த
தருணத்தில் நேரிட்டு வாழவேண்டும் எனும் கொள்கை கொண்டவள். 'நேற்று' என்பதில் திருப்தியும்,
'நாளை' என்பதில் நம்பிக்கையும், 'இன்று' என்பதில் ஆனந்தமும் கண்டு வாழ வேண்டும் என்பாள்.
"உங்க சம்பளத்துல உங்களுக்குன்னு ஒரு டிரெஸ் எடுத்துக்கக்கூடாதா?
ஏன் மதுரிகாவோட டிரெஸ்ஸையே நீங்களும் போட்டுக்கறீங்க?" என்று ஒருமுறை நான் கேட்டதற்கு,
"அது மதுரிகாதுன்னும் இல்லை. என்னதுன்னும் இல்லை. அவ
சம்பளம், என் சம்பளம்னு தனியா பாக்குறதும் இல்லை. வேலைக்குப் போட்டிட்டுப் போக நல்ல
துணிகள் ரெண்டு பேருமே எடுத்திருக்கோம். ரெண்டு பேரும் அதை மாத்தி மாத்தி போட்டுக்கறோம்.
அவ்வளவுதான்."
- என்றாள்.
"சிக்கனமா?" எனக்கேட்டேன். "அதில்
தப்பென்ன?" என்றாள்!
"பொதுவுடமை பேசறீங்களே? நீங்க என்ன கம்யூனிஸ்ட்டா?" என்றவளைச் சீண்டினேன்.
அதற்கு,
"இல்லையே. என் அக்காவுக்கு மட்டும்தான் என் துணியை
போட்டுக்க குடுப்பேன். பக்கத்து வீட்டு கஸ்தூரிக்கு கொடுக்க மாட்டேன். அவளுக்கும் கொடுத்து,
அவளதையும் போட்டுக்கிட்டா அப்போதானே அது பொது உடமை." என்று அவள் பதில்
சொன்னாள்.
எந்த விஷயத்தைக் கொண்டும்
இவள் சுய பச்சாதாபம் கொண்டதில்லை. அவள் மேல் பச்சாதாபம் கொள்வதையும் இவள் விரும்புவதில்லை.
அவள், பொருளாதார வசதிகள் குறைந்தவள் என்றொரு பரிதாபத்தை நான் அவள் மீது கொண்டிருந்தேன்.
அப்படி பரிதாபம் கொள்வதில் அர்த்தம் இல்லை, அது அவளுக்குப் பிடிப்பதும் இல்லை, என்பதை
அவளிடம் பழகத்துவங்கிய பிறகு புரிந்துகொண்டேன். அது புரிந்ததும், அவள் மேல் பரிதாபம்
கொள்ளும் மனப்பான்மையை என் மனதிலிருந்து தூக்கி எறிந்தேன்.
ஒரு அற்புதத் தோழியாய் ஆகினாள்
யவனிகா. மரியாதையோடு அவளை அழைக்கும் விதம் மாறி நானறியாமலேயே அவளை ஒருமையில் அழைக்கத்
துவங்கியிருந்தேன். யவனிகா, அவளின் குடும்ப விஷயங்களையும் என்னோடு பகிர்ந்துகொள்ளத்
துவங்கினாள்.
அக்கா மதுரிகா குறித்தும்,
அக்காளின் கணவர் குறித்தும், அவர்களுக்கிடையேயான அன்பு குறித்தும், மதுரிகாவுக்கு நல்லதோர்
வாழ்க்கை அமைந்தது குறித்தும், ஒரு மகனின் ஸ்தானத்தில் இருந்து மதுரிகாவின் கணவர் அந்தக்
குடும்பத்தை கவனித்துக் கொள்வதைக் குறித்தும், சொல்லிச் சொல்லி சிலாகித்துப் போவாள்.
அவள் அவளின் மச்சானுக்கு சூட்டும்
புகழாரங்ளைத் தாங்க முடியாமல், “உங்க அக்காவோட
பெருமைய கேட்டுக் கேட்டே கடைசியில எனக்கு அவளை பிடிக்காம போயிடுச்சு… இப்போ நீ அவ புருஷனோட
பெருமைய சொல்லிச் சொல்லியே அவர் மேலேயும் எனக்கு எரிச்சல் உண்டாகும்படி செஞ்சிட்டிருக்கே….!”
– என்பேன்!
நான் இப்படி சொல்வதைக் கேட்டு
சிரிப்பாள். “ஆமா கொஞ்சம் ஓவராவே அவங்களை பத்தி
சொல்லி போர் அடிக்கறேன்ல….?” என்று சொன்னாலும் சுற்றி வளைத்து மீண்டும் அதே விஷயங்களைத்தான்
திரும்பவும் சொல்லத் துவங்குவாள்!
அவளோடான என் தோழமையை நான்
மிகவும் இரசித்தேன். ஒவ்வொறு விடுமுறைக்கு வரும்போதும் கல்லூரியில் நடந்த விஷயங்களை
அவளிடம் சொல்வேன். என் கல்லூரித்தோழிகள் பற்றி, ஜூனியர் பெண்களிடம் நான் செய்யும் குறும்புகள்
பற்றியெல்லாம் நான் சொல்வதை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருப்பாள்.
ஒருமுறை அவளிடம், அவளைத் தோழியாக்க
நான் பட்ட பாடுகளையும், என் மீசை தியாகத்தையும் கூறினேன். இரசித்து சிரித்தாள். என்னைப்போல
ஒரு கள்ளனைப் பார்த்ததில்லை என்றாள். முதல்முறையாக "திருடா" என்றென்னை ஒருமையில்
அழைத்தாள்.
இப்படியாக, இவளை இப்படியோர்
தோழியாக்க நான் மேற்கொண்ட தௌத்யம் முழு வெற்றி கண்டது.
~~~ 0 ~~~
“Every good thing has to
come to an end…..” யவனிகாவோடான என் நட்பும் இதற்கு விதிவிலக்கல்ல….!
அன்று யவனிகாவை சந்தித்தபோது
அவளிடம், “One good news, one bad news, ரெண்டும்
இருக்கு. மொதல்ல எதைச்சொல்லட்டும்?” எனக் கேட்டேன்!
“நல்லதுக்கே முதலிடம் கொடுப்போம், கெட்டதை பின்னுக்குத்
தள்ளுவோம். நல்ல விஷயத்தையே மொதல்ல சொல்லுங்க” என்றாள்!
"அந்த அமெரிக்கன் கம்பெனி இன்னிக்கு கூப்பிட்டிருந்தாங்க,
வேலை கன்பர்ம் ஆயிடுச்சு. விசா பேப்பர்ஸ் அனுப்பியிருக்காங்களாம்…. ஸ்டாம்பிங் ஆனா
உடனே கிளம்பறமாதிரி இருக்கும்…."
யவனிகா மகிழ்ந்தாள், கை கொடுத்து
பாராட்டு தெரிவித்தாள். "எல்லாம் என்
பிரார்தனையின் பலன்!" என்றாள். பிறகு,
“Bad news என்ன?” எனக்கேட்டு ஆர்வமாய் என்னைப் பார்த்தாள்.
நான் அடுத்த சேதி சொன்னேன்.
"நான் அமெரிக்கா போகப்போறதால ஊருக்கே போய் செட்டில்
ஆயிடலாம்னு வீட்ல முடிவு செஞ்சிருக்காங்க…”
"கேரளாவுக்கா?"
"ஆமா..!" – என்று நான் சொல்லக்கேட்டதும்,
“உங்களுக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்தை கெடுக்கற அளவுக்கு
நீங்க சொல்லப்போற bad news இருக்காதுன்னு நெனச்சேன்….” எனக்கூறியவள் ஏதோ சிந்தனைக்குள் ஆழ்ந்தாள்.
அவள் முகம் சற்றே வாட்டம்
கொண்டதை நான் கவனிக்கத் தவறவில்லை. எங்கள் தோழமையின் முடிவுரைக்கான முகவுரை எழுதப்படுவதை
இருவரும் உணர்கிறோம்! ஏதும் பேசாது இருவரும் மௌனமானோம். மௌனம் சூழ்நிலையின் இறுக்கத்தைக்
கூட்டியது. ஆகவே, அதைத் தவிர்க்கும் விதமாக நானே பேச்சு வளர்த்தேன்....,
"நேத்து ஒரு படம் பாத்தேன்… அதுல கதாநாயகிய பாத்தப்போ
எனக்கு உன் ஞாபகம்தான் வந்தது. படத்துல அவளுக்கும் உன்னப்போல ஒரு அக்கா… உன் மச்சான்
போலவே ஒரு அக்கா புருஷன்…” என்று நான் சொல்லவும்,
“அப்படியா… கதை என்ன?” எனக்கேட்டாள் யவனிகா!
“வேணாம்… நான் கதை சொல்லமாட்டேன். நீ வருத்தப்படுவே..!”
என்றேன் வேண்டுமென்றே அவள் ஆர்வத்தைக் கூட்ட.
அவள் ஆர்வமும் கூடியது. கதையைச் சொல்லியே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தினாள்….!
“சுருக்கமா.. செல்றேன்” என்றேன். “சரி”
என்று சம்மதித்தாள். நான் கதை கூறினேன்!
“கதாநாயகி உன்னைப் போல அழகான பொண்ணு…. உன் அக்காவ போலவே
அழகாகவே அவளுக்கு ஒரு அக்கா… உன் மச்சான போலவே அவ அக்காவுக்கு ஒரு புருஷன்… கதாநாயகன்
என்னைப் போலவே அழகா ஒரு பையன்… ஒரே ஒரு வித்தியாசம் நான் உனக்கு பிரெண்டு… அந்த கதாநாயகன்
உன்னைப் போல அழகான அந்த பொண்ணுக்கு காதலன்….”
“……..”
“சந்தோஷமா போயிட்டிருக்கற கதையிலே ஒரு ட்விஸ்ட்… உன்னைப்போலவே
அந்தப்பொண்ணும் எப்ப பாத்தாலும் அவங்க அக்கா புருஷன பத்தி ஆஹா ஓஹோ ன்னு புகழ் பேசறதும்
அவரை பாசமா கவனிச்சுக்கறதுமா இருப்பா. என்னைப் போலவே, அந்த ஹீரோவுக்கும் அவ அவங்க மச்சான
பத்தி பெருமை பேசறது பிடிக்காது…..”
--- என்று நான் சொன்னதும் புன்னகை பூத்த யவனிகா உதட்டை கடித்துப் பிடித்துக்கொண்டு
என்னைப்பார்த்து கிண்டலாக தலையாட்டுகிறாள். நான் அதை கவனிக்காததுபோல் மேலே தொடர்ந்தேன்…,
“என்னைப்போல அழகா இருக்கும் அந்த ஹீரோவ, உன்னைப்போல அழகா
இருக்கும் அந்த ஹீரோயின் பொண்ணுகிட்டே, பழகவிடாம உன் அக்கா புருஷன் போல இருக்கும் அந்த
வில்லன் சதி பண்ணறானோன்னு அந்த ஹீரோக்கு சந்தேகம்…”
-- தலையை இப்போது பலமாக ஆட்டுகிறாள் யவனிகா….!
“அந்த சந்தேகம் உண்மைன்னு அந்த ஹீரோ கண்டுபிடிச்சடறான்….
அந்த ஹீரோக்கும் அந்த மச்சானுக்கும் முட்டிக்குது…. உன்னைப் போல அழகா இருக்கும் அந்த
ஹீரோயின் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தவிக்கறா… இப்படி இருக்க அந்த அக்கா புருஷன்
என்ன செஞ்சான் தெரியுமா?” எனக்கேட்டு நான் நிறுத்த,
“என்ன செஞ்சார்?” என்று வேண்டுமென்றே ‘செஞ்சார்’ என மரியாதை சேர்த்து அதற்கு ஒரு அழுத்தம் கொடுத்து
கேட்கிறாள் யவனிகா!
“பாவிப் பயலான அந்த மச்சான் உன்னைப்போல இருக்கும் அந்த அழகான
ஹீரோயின் மேலே ஆசைப்பட்டு அவளை கல்யாணம் செஞ்சுக்கறதுக்காக அவளோட அக்காவ கொலை செஞ்சிடறான்.
அப்புறம் அந்த ஹீரோ தான் அந்த முரட்டு அக்கா புருஷன் அந்த அழகான பொன்ண கல்யாணம் பண்ணாம
காப்பாத்தறான்…!” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்
போதே என்னை அடிக்க வந்தவள்….,
“இது வேணுமின்னிக்கே….
என்னை வம்புக்கு இழுக்கறதுக்காக நீங்களா உண்டாக்கி சொல்றீங்க. இது கண்டிப்பா சினிமா
கதையெல்லாம் இல்லை…..” என்கிறாள்.
“அடப்பாவமே…. உண்மையிலேயே இது நான் நேத்து பாத்த சினிமா
கதை. படம் பேர் ‘ஆசை’ கே. ஜி. காம்ப்ளெக்ஸ்ல ஓடிட்டிருக்கு…” என்றேன்.
நானே தொடர்ந்து…., “அந்தப் படம் பாத்ததுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப
பயம்மா இருக்கு. அந்த ஹீரோயின் போலவே நீயும்
உங்க மச்சான புகழறதையும் அவர் மேலெ கொட்டற பாசத்தையும் பாத்தா எனக்கு ஒரே கலவரமா இருக்கு…
எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ….”
– என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லவும், அதைக்கேட்டு யவனிகா,
“அடப்பாவி… அவர் எங்க அக்கா புருஷன், எனக்கு அவர் அண்ணன்
மாதிரி!” – என்கிறாள்!
“அண்ணன் மாதிரியோ அப்பா மாதிரியோ…! அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ ஜாக்கிரதயா இருந்துக்கன்னு
மட்டும்தான் என்னால சொல்ல முடியும். ஏன்னா, என்னால அந்தப் படத்துல வரும் ஹீரோ மாதிரி
கிளைமாக்ஸ்ல வந்து உன்னை காப்பாத்த முடியாது. ஏன்னா, நான் அந்த சமயத்துல அமெரிக்கால
இருப்பேன்….” என்றெல்லாம் நான் கூற,
"ஒரு நல்ல மனுஷனை நீங்க என்னல்லாம் சொல்றீங்க? அவரைப்போல
ஒரு ஜென்டில்மேன் யாரும் கிடையாது தெரியுமா?" என்றாள்!
"இதேதான்! அந்தப்படத்திலயும் இப்படியேதான் அந்தப் பொண்ணு
கடைசிவரைக்கும் சொல்லிட்டிருந்தா! கிளைமாக்ஸ்ல தான் அவளுக்கு அவ மச்சானோட சுயரூபமே
தெரிஞ்சது. படத்துல அவ பேர் யமுனா… உன் பேரு யவனிகா… பேர் கூட பாத்தியா கிட்டத்தட்ட
ஒரே மாதிரி இருக்கு?"
-- என்றெல்லாம் கூறி நான் கலாட்டா செய்ய, என் கலாட்டாக்களை இரசித்து சிரித்துக்
கொண்டிருந்தாலும் நான் ஊரை விட்டுப் போகிறேன் எனும் வருத்தம் உள்ளுக்குள் அவளுக்கு
இருக்கத்தான் செய்தது. ஆனால் அவள் அதை காட்டிக்கொள்ளவில்லை. அவள் வருந்துகிறாள் என்று
நான் அறிந்திருந்தாலும் நானும் அவளிடம் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை.
ஓரிரு வாரங்களுக்குள் நாங்கள் வீடு மாற்றிக்கொண்டு ஊருக்குச்
சென்றுவிட்டோம்.
யவனிகாவோடு அவ்வப்போது ஊரிலிருந்து
போனில் பேசி வந்தேன். அமெரிக்கா செல்ல விசா கிடைத்து புறப்படவேண்டிய நாளையும் முடிவு செய்து டிக்கெட்
எடுத்தபிறகு கோயமுத்தூர் சென்றேன். லக்ஷ்மி காம்ப்ளெக்சில் சந்திக்கலாம் என்று முடிவு
செய்திருந்தோம். நான் அங்கு சென்று காத்திருக்க சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்தாள்
யவனிகா!
“கொஞ்ச நேரம் உக்காந்து பேசற மாதிரி எங்கேயாவது போகலாம்….” என்றாள்!
அதற்குத் தோதாக இடம் தேடி
காம்ப்ளெக்ஸுக்குள் நுழைந்தோம். அன்னபூர்ணா ஹோட்டலும் இரண்டு கடை தள்ளி ஒரு ஐஸ்கிரீம்
பார்லரும் இருந்தது. அங்கே நின்று யவனிகாவை பார்த்து,
“கொஞ்ச நேரம் உக்காரத் தோதான இடம்னா இதுல ஏதாவது ஒரு கடைக்குள்ளேதான்
போகணும்…. நீ சொல்லு…. காபியா? ஐஸ்கிரீமா?” எனக்கேட்டேன்.
அவள் சிரித்துக்கொண்டே…,
“காபின்னா அன்னபூர்ணாக்கு போகணும்… அங்கே ஒரே கூட்டமா இருக்கும்….
அதனால, ஐஸ்கிரீம்…” என்றாள். ஐஸ்கிரீம் பார்லருக்கும்
நுழைந்து அமர்ந்தோம்.
யவனிகா, ஒரு gift pack ஐ எடுத்து
“இது என் ஞாபகார்த்தமா நீங்க அமெரிக்கா போகும்போது
கொண்டுபோக….” என்று கூறி என்னிடம் நீட்டினாள்.
“ஓஹோ… இப்படியெல்லாம் வேற இருக்கா? நான் ஒன்னும் வாங்கிட்டு
வரலியே?” என்று கூறிக்கொண்டே அந்த
gift pack ஐ பிரித்துப் பார்த்தேன். அது, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த ‘வந்தே மாதரம்”
CD.
“உண்மையிலேயெ, இங்கிருந்து போகும்போது இந்த ஆல்பத்த வாங்கிட்டு
போகணும்னு நினைச்சிருந்தேன். கரெக்டா அதையே நீ வாங்கி தந்திருக்கே…” என்று நான் கூறியது உண்மையான உண்மை.
நான் நினைத்திருந்த ஒன்றையே
அவளும் வாங்கித்தந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த gift pack ஐ முழுதாகப் பிரித்து
சிடி-யை பார்த்துக்கொண்டிருந்தபோது,
“இந்தாங்க…
உங்களுக்கு ஒரு சர்ப்பரைஸ்!” என்றபடி ஒரு கார்டினை எடுத்து நீட்டினாள்.
“அட, இது என்ன? உனக்கு பிறந்தநாளா? இப்போ இந்த கார்டுல நான்
கையெழுத்துப் போட்டு தரணுமா? மீண்டும் காபியா? ஐஸ்கிரீமா? எபிஸோடா?” என்றெல்லாம் கேட்டுக்கொண்டே கவரைப் பிரித்து கார்டினை எடுத்தேன்.
அது கிரீட்டிங் கார்டு அல்ல… கல்யாண பத்திரிகை…
"என்னது இது?" புரியாமல் கேட்டேன்.
"பத்திரிகை! கல்யாணம் பேசி முடிச்சிருக்காங்க. உங்களுக்குத்தான்
முதல் பத்திரிகை வைக்கறேன்." என்று கூறினாள் பொறுமையாக...,
"அடிப்பாவி... எவ்வளோ முக்கியமான விஷயம், இவ்வளோ சாவகாசமா
சொல்றே? நான் போன் பண்ணப்ப கூட ஏதும் சொல்லவேயில்லையே!"
"போன்ல சொன்னா இந்த ஆச்சரியத்தையும், உங்க எக்ஸ்பிரஷனையும்
பாக்க முடியாதுல்ல, அதும் இல்லாம முக்கியமான விஷயங்களை நேர்ல சொல்றதுதானே முறை அதான்
போன்ல சொல்லலை…” -- என்றாள்.
நான் பத்திரிகையை படிக்கத்
துவங்க, திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாய் அவளைப் பார்த்து, "ஏய்.. இரு இரு எனக்கு ஒரு சந்தேகம்!" என்று கிட்டத்தட்ட அலறினேன்!
"என்ன?" என்று என் அலறலில் நடுங்கிப்போனவளாகக் கேட்டாள் யவனிகா.
"மாப்பிள்ளை உங்க மச்சான் இல்லையே?" என்று நான் கேட்டதும்
அடக்கமாட்டாது சிரிக்கிறாள். பிறகு, என் கையைப் பிடித்து கிள்ளியவள் "ஆனாலும் உங்க கொழுப்பு அளவே இல்லாம கொழுக்குது...!"
என்கிறாள்.
"அப்போ மாப்பிள்ளை அவர் இல்லையா? அப்பாடி இப்பத்தான்
நிம்மதி ஆச்சு. இனிமே உன் மச்சான் உன்னை தொந்தரவு செய்வாரோன்னு நான் பயப்படத் தேவையில்லை.
நிம்மதியா அமெரிக்கா போகலாம் " என்று நான் சொல்லக்கேட்டு
மீண்டும் சிரித்தவள், "அவர் எனக்கு எப்பவும்
எந்த தொந்தரவும் தந்ததில்லே.. நீங்க தைரியமா அமெரிக்கா போகலாம்." என்கிறாள்.
பத்திரிகையை பார்த்தேன். மாப்பிள்ளை
நிறைய படித்திருக்கிறார். நல்ல வேலையிலும் இருக்கிறார்.
"உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா? உனக்கு சந்தோஷம்தானே?" -- கேட்டேன்.
"எனக்கு ரொம்பவும் சந்தோஷம். ஏன்னா எங்க அப்பாவும்
அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. அக்காவுக்கு நல்ல வாழ்க்கைதான் அமஞ்சது, ஆனாலும்
அது அவளா தேடிக்கிட்ட வாழ்க்கை. தன் பொண்ணுக்கு தான் அலஞ்சு திரிஞ்சு அவளுக்கு பொருத்தமான
ஒருத்தரை கண்டுபிடிச்சு கட்டி வச்சோம் அப்படீங்கற திருப்தி அக்கா கல்யாணத்துல எங்க
அப்பாக்கு கிடைக்கல. அக்காவால கொடுக்க முடியாத அந்த சந்தோஷத்தையும், திருப்தியையும்
எங்க அப்பாக்கு நான் கொடுத்திருக்கேன். அவங்க முகத்தில இப்போ நெறஞ்ச சந்தோஷத்த பாக்கறேன்.
அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம்…”
- என்று அவள் சொன்னதை ஆமோதித்தேன்.
"அது உண்மைதான். நீ சொல்றதை என்னால புரிஞ்சுக்க முடியுது.
ஆனா, உனக்குன்னு சில விருப்பங்கள் இருக்கும் இல்லையா? உன்னை கல்யாணம் செய்துக்கப் போறவரை
உனக்கும் பிடிக்கனும் இல்லையா?" எனக்கேட்டேன்.
“அவரைப்பத்தி எனக்கு அதிகமா தெரியாதுதான். ஆனா, ஒருத்தரை
நமக்கு பிடிக்கும்னு நாம மனப்பூர்வமா நம்பினா, கண்டிப்பா அவங்களை நமக்கு பிடிக்கும்.
அவங்க கிட்டே குறையிருந்தாலும் அந்த குறைகளோடேயே அவங்களை ஏத்துக்க முடியும். எனக்கு
அவரை கண்டிப்பா பிடிக்கும்னு நான் நம்பறேன் தவிர என்னால விட்டுக்கொடுத்து போக முடியும்னும்
நம்பிக்கை இருக்கு…"
– என்றாள் என் மனதில் இவள் இன்னும் ஒரு படி உயர்ந்தாள்!
நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். யவனிகாவின் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகத்தான்
அமையும் என்று உள்ளம் சொன்னது. நான் மகிழ்ந்தேன்.
“நீ சந்தோஷமா இருப்பே… எனக்கு நம்பிக்கை
இருக்கு…!” என்றேன் அவளைப் பார்த்து.
"சரி சரி என் கதையை விடுங்க…, அம்மா எப்படி இருக்காங்க?
அங்கே வீடெல்லாம் செட் பண்ணியாச்சா?" என்று என் சேதிகளை கேட்கத் துவங்கினாள்.
"அம்மா அப்பாவை நினைச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்கு.
என்னை விட்டுட்டு எப்படி இருக்கப்போறாங்கன்னு தெரியலை. அம்மாகிட்டே சண்டைகள் போடாம
நான் எப்படி இருக்கப்போறேன்னும் புரியல. வெளியே காட்டிக்காட்டியும் உள்ளுக்குள்ளே மூணு
பேருமே ரொம்பவும் கஷ்ட்டப்படறாங்க. அதும் அம்மா, அடுக்களையிலே தனியா நிக்கும்போதெல்லாம்
நான் போறதை நினைச்சு அழுதுகிட்டேதான் இருக்காங்க...!” என்று நான் கூற,
“இங்கேயும் அதே கதைதான்… சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும்,
அம்மா அப்பாக்கு மனசுக்குள்ல நிறைய வருத்தம் இருக்கு. வீட்டுக்குள்ள நுழையும்போதே அப்பா
யவனிகா ன்னு கூப்பிட்டிட்டே தான் நுழைவாங்க…, அதுவும், அக்கா கல்யாணம் ஆனபிறகு அப்பாக்கு
என் கிட்டேதான் நெருக்கம் ஜாஸ்த்தி… என்ன செய்யறது பொண்ணா பொறந்தா பாதியிலெ போய்த்தானே
ஆகணும்?” என்று அவள் சொன்னதற்கு,
“நான் ஆணாகத்தானே பொறந்தேன்… எனக்கு என்ன அப்பா அம்மா கூடவே
இருக்கவா விதிச்சிருக்கு? காலம் என்னையும் கண்காணாத இடத்துக்கு கொண்டுதானே போகுது?”
என்றேன் நான்.
சற்று நேரம் ஏதோ சிந்தனையில்
ஆழ்ந்திருந்துவிட்டு…, “ஒரு தடவ… ஒரே ஒரு தடவ…
திரும்ப சின்னப்பிள்ளையா ஆக முடியும்னா எவ்வளோ நல்லா இருக்கும்…. ஒவ்வொரு நிமிஷத்தையும்
அனுபவிச்சு அப்பா அம்மா கூட வாழனும்…” என்றாள் யவனிகா!
“அப்படி மட்டும் முடியும்னா…. தேவையில்லாம… எங்க அம்மா கிட்டே
நான் போட்ட சண்டைய எல்லாம் தவிர்த்திட்டு, அவங்க மனச கஷ்ட்டப்பட வச்ச என் கிறுக்குத்தனத்த
எல்லாம் திருத்திட்டு அவங்கள சந்தோஷமா வச்சிப்பேன்… எனக்காக எங்கப்பா அலஞ்ச அலச்சல்
எத்தனை? பட்ட கஷ்ட்டங்கள் எத்தனை… ஒரு விஷயம் கூட என்னால அவர் பெருமை படற மாதிரி நான்
நடந்துகிட்டதில்லை யவனிகா…. இன்னொரு சந்தர்ப்பம் கிடைச்சா இந்தக்குறையெல்லாம் நிவர்த்தி
செய்து வாழனும்…!” என்று நானும் சொல்ல…,
“எல்லாரும் அப்படித்தான்… அம்மாகிட்டே நான் போடாத சண்டையா…
அடுப்பாங்களையே கதின்னு கிடப்பாங்க… லீவு நாள்ல கூட அவங்களுக்கு கையுதவி செஞ்சதில்ல.
காய்கறி நறுக்கித்தாடியம்மான்னு கேப்பாங்க… கதை புஸ்த்தகம் படிக்கற சுவராஸ்யத்தில ஏதாவது
காரணம் சொல்லி தட்டிக்கழிப்பேன்…. இல்லாட்டி சண்டைக்கு போவேன்…”
“நானும் அப்படித்தான்… இப்போ யோசிச்சா எனக்கே கஷ்ட்டமா இருக்கு,
நல்ல தண்ணி பிடிக்க மாடிக்கும் கீழைக்குமா எத்தனை நடை தன்னந்தனியா குடம் குடமா எங்க
அம்மா சுமப்பாங்க தெரியுமா? ஒரு குடம் எடுத்து தாடா கண்ணு…. ன்னு கேப்பாங்க… வெட்டியா
டிவி பாத்திட்டு இருந்தாலும் அவங்களுக்கு உதவினது இல்ல… அப்படியே போனாலும்… சின்ன குடத்தை
எனக்கு தந்திட்டு பெரிய குடத்த அவங்களே எடுத்துக்குவாங்க…. எனக்கு முதுகு கிதுகு பிடிச்சுக்குமோன்னு
நெனச்சு அப்படி செய்வாங்க….”
“ஆனா அவங்க மனசுல நாம செஞ்ச தப்புகள் எதுவுமே தங்கியிருக்காது…..
நம்மை பத்தின நல்ல விஷயங்கள் மட்டும்தான் நம்ம அப்பா அம்மா மனசுல எப்பவும் இருக்கும்….”
“உண்மைதான்… இத்தனை நாள் கூடவே இருந்தப்போ அருமை தெரியல…
இப்போ அவங்களை விட்டு எங்கேயோ தூரமா போய் தனியா இருக்கணும் அப்படீங்கும்போது இன்னும்
கொஞ்ச நாள் கூடவே இருக்கணுங்கற ஆசை வருது….”
என்றெல்லாம் நாங்கள் இருவரும்
வீட்டு விஷயங்கள் பேசிக்கொண்டிருக்க, எனக்கு அப்போது அந்த நிமிஷத்தில் அம்மாவை பார்க்கவேண்டும்
என்று தோன்றியது. ஒரு குழந்தையைப் போல் மனதுக்குள் ஏக்கம் வந்தது….!
அம்மா ஒரு தேவதை. பிள்ளைகள்
நாங்கள்தான் அவள் வாழ்க்கை, அனுதினமும் அடுக்களைக்குள் எங்களுக்காகவே உழைத்து உழைத்து
ஓடாய்த் தேய்கின்ற ஜீவன். அம்மா, அப்பாவை பிரிந்து ஓரிரு நாட்களுக்குள் வெகுதூரம் பயணப்பட
இருக்கிறேன் எனும் உண்மை திடீரென்று எனக்கு உறைக்க என்னை அறியாமல் என் கண்கள் நிறைந்தது....
நான் கலங்குவதைக் கண்ட யவனிகா என் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டாள்….
“என்ன ஆச்சு?” எனக்கேட்டாள்.
“ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல இருக்கேன் யவனிகா… மூணு மாசத்துக்கு
மேல அம்மா அப்பாவ விட்டு தனியா பிரிஞ்சு நான் இருந்ததே இல்ல, எப்படி நான் எல்லாரையும்
விட்டுட்டு இத்தனை தூரம் போய் வருஷக்கணக்கா தனியா இருக்கப்போறேன்னும் தெரியல…”
-- என்றெல்லாம் நான் கூறுகையில்
என் மனதில் ஏக்கம் வெடித்தது.
என் கரங்களை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொண்டு,
என் கைகளின் மீது தன் நெற்றியைச் சாய்த்து ஒன்றிக்கொண்டாள் யவனிகா. அவளே தொடர்ந்து,
“உங்களுக்கே இப்படின்னா என்
நிலமைய யோசிச்சு பாருங்க… என்னை வேரோட பறிச்சு வேற எடத்துல நடப்போறாங்க… காலம் பூரா
என்னைப் பெத்தவங்களை பிரிஞ்சுதானே நான் இருக்கணும்..?” எனக்கூறி விசும்புகிறாள்!
இது எங்கள் நட்பின் உச்சநிலை.
இருவருக்கும் ஒரே நிலை. இருவரும் புலம் பெயர்கிறோம், இருவரும் உறவுகளை விட்டுப் பிரியப்போகிறோம்.
நான் நாடு விட்டுப் போகப்போகிறேன். அவள் வீடு விட்டுப் போகப்போகிறாள். நாங்களும் ஒருவரை
விட்டு ஒருவர் பிரியப்போகிறோம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல்.
சற்று நேரம் இருவரும் ஏதும் பேசாது மௌனத்தில்
ஆழ்ந்திருந்தோம். பிறகு, யவனிகா நிமிர்ந்து என்னைப் பார்த்து…,
“இதுநாள் வரைக்கும் பழகின உரிமையில உங்க கிட்டே ஒரு விஷயம்
சொல்லத் தோணுது... நான் அதை உங்க கிட்டே சொல்லலாமா?” எனக்கேட்டாள்!
“உரிமை எடுத்து சொல்லக்கூடிய விஷயங்களுக்கு அனுமதி
தேவையில்லை யவனிகா. நீ தாராளமா சொல்லலாம்...” என்றேன்.
யவனிகா சற்றே யோசனைக்குள் ஆழ்ந்துவிட்டு என்னிடம்,
“உங்க அம்மாவ எனக்கு ரொம்ப
பிடிக்கும். அக்கா கிட்டே அவங்க அடிக்கடி பேசுவாங்க. நானும் பேசியிருக்கேன்… எப்பவும்
பாசமா பேசுவாங்க…! அவங்கள எப்பவும் நீங்க சந்தோஷமா பாத்துக்கணும்…” என்றாள். நான் தலையாட்டினேன். அவளே தொடர்ந்து…,
“அவங்க பக்கத்துல நீங்க வந்திடணும்ணு
எப்போ அவங்க எதிர்பாக்கறாங்களோ அப்போ நீங்க அவங்க கிட்டே வந்திடனும். உங்களை அப்படி
வரவிடாம உங்க வேலையோ, வாழ்க்கை வசதிகளோ எதுவுமே தடையா இருக்கக் கூடாது… உலகத்துல எந்த
மூலைக்கு போனாலும் உங்க வேர் இங்கே இருக்குங்கறத நீங்க மறக்கக்கூடாது…. “
“…………” நான் கேட்டுக்கொண்டிருந்தேன்!
“எங்க அப்பா அம்மா முகத்துல
நான் பாக்கற திருப்தியையும் சந்தோஷத்தையும் உங்க அப்பா அம்மா முகத்தில நீங்களும் பாக்கணும்.
அதை மீறின ஒரு சந்தோஷம் எப்பவும் உங்களுக்கு தேவையில்லை…!"
-- என்றெல்லாம் கூறினாள்.
நான் அவள் கூறியபடி நடந்துகொள்ள மனப்பூர்வமாக முயற்சிப்பேன் என்று அவளுக்கு உறுதியளித்தேன்.
ஒருவரின் மீது ஒருவர் உரிமையெடுக்கும்
நிலை நட்பின் முழுமை நிலை.
இங்கே, என் மீது உரிமை எடுத்து
யவனிகா இந்த விஷயங்களைச் சொல்கையில் இவளோடான என் நட்பு முழுமையடைவதாய் உணர்கிறேன்…!
நேரமாகிவிட்டிருந்தது…. பிரிவின்
சோகத்தில் அதிகம் ஆழ்ந்துபோகாமல் இருவரும் சுதாகரித்து புறப்படத் தயார் ஆனோம்.
"இனிமே எப்போ பாக்கப்போறோம்னு தெரியலே. இனிமே போன்ல
பேசறதும் கஷ்ட்டம்தான்."
-- என்றாள். ஆமோதித்தேன். அவளே தொடர்ந்து,
"உங்க வாழ்க்கையிலே இனிமே நடக்கப்போற எல்லா நல்ல காரியங்களுக்கும்
என் வாழ்த்துக்கள்!" என்றாள்.
"உன் வாழ்க்கையிலே இனிமே நடக்கப்போற எல்லா துக்கங்களுக்கும்
என் அனுதாபங்கள்… உன் கல்யாணத்துக்கு என் வாழ்த்துக்கள்…."
-- என்று நானும் சொன்னேன்.
இறுக்கமாக என் கைபற்றி கைகுலுக்கி.
“ஏர்போர்ட்ல அழக்கூடாது. என் ப்ரெண்டா சமத்தா
எல்லாரையும் சிரிக்கவச்சிட்டுப் போகனும்!” என்றாள்.
"முயற்சி பண்ணுவேன்…!" என்றேன்.
"உங்களால் முடியும்!" என்றாள்….!
கண்ணீர் சிந்தாமல்… உணர்ச்சிவசப்படாமல்…
சோகத்தில் மூழ்காமல்… சிரித்த முகத்தோடு எங்கள் கடைசிச் சந்திப்பினை முடித்து விடைபெற்றுக்
கொண்டோம்.
பிரிந்தோம்!
யவனிகாவுடனான என் நட்பு நான்
என்றும் கட்டிக்காக்கும் என் பெருமை. ஒரு ஆணும், ஒரு பெண்ணும், காதல் எனும் உணர்வு
துளியும் இல்லாமல் பழக முடியாது என்று யார் சொன்னது?
முடியும். அதற்கு நானும், யவனிகாவும் சாட்சி!
[இன்னும் நுகர்வேன்!]
செப்டம்பர் 04, 2013
Comments